அரசியல் தரத்தை மேம்படுத்துவோம்!

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய இறைவனை இறைஞ்சுகிறேன். இன்று அரசியல் தரத்தை மேம்படுத்துவோம்  என்ற தலைப்பில் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு நாள் சென்னை வளசரவாக்கத்தில் முனைவர் இராதாகிருஷ்ணன் சாலைக்கருகில் அமைந்துள்ள பெரியார் பூங்காவில் நடைப்பயிற்சிக்காகச் சென்றிருந்தேன். சுத்தமான காற்று மக்களைத்  தழுவிச் சென்றது. உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அருகில் இருவர் பேசிக் கொண்டிருப்பது காற்றில் கலந்து காதில் விழுந்தது. ‘அரசியல் ஒரு சாக்கடை!’ என்று ஒருவர் அடுத்தவரிடம் கூறினார். அவரும் அதை ஆமோதித்தார்.

ஆம்! நாட்டில் பெரும்பாலோர் மனநிலை இப்படித்தான் உள்ளது. நல்லவர்கள் அரசியலுக்கு வராது விலகிச் செல்வது தவறல்லவா? நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால்தானே நாடு சிறக்கும். மக்களும் மேன்மை அடைவர். சுயநலமுடையவர்களும் மக்களைச் சுரண்டுபவர்களும் ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்திருந்தால் அவர்கள் தன் சுய லாபம் ஒன்றிலேயே குறியாக இருப்பர். மக்கள் நலன் புறந்தள்ளப்படுமே! அதுதானே இன்று நம் நாட்டில், மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதைப் பகிர்ந்து கொள்ளும் போது எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.

ஒரு நாள் வகுப்பறையில் மாணவர்களின் குறிக்கோள்  பற்றி பேசிக் கொண்டிருக்கையில் ‘எத்தனை பேர் பிற்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகிறீர்கள்?’ என்றேன். யாரும் கையை உயர்த்தவில்லை.

நானோ, நல்லவர்கள் அனைவரும் அரசியலை விட்டு விலகியே இருந்தால் நாடு எப்படி மேம்படும். அரசியல் தரம் என்னாவது. சேவை , தியாகம், அர்ப்பணிப்பு உணர்வு, நேர்மை போன்ற குணங்கள் உடைய வல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் தானே மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர். அரசியல் ஒரு சாக்கடை என்று கூறியே அதை விட்டு விலகுகிறார்கள். தற்போது அரசயில்வாதிகளே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். சுயநலமே குறிக்கோளாகக் கொண்டவர்களை, நம்மை ஆள அனுமதித்தால் நாம் யார்? சற்று சிந்தியுங்கள்.

முற்காலத்தில் இந்தியாவில் எவ்வளவு சிறப்பான அரசியல் தலைவர்கள் ஆட்சி செய்தனர் என்பதுதான் தெரியுமே. சுதந்திர இந்தியாவில் சிதறிக்கிடந்த பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல், நாட்டுக்காகவே வாழ்ந்த லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற எத்தனையோ தலைவர்களால் இந்தியா சிறப்புற்றது. தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் காமராஜ், ராஜகோபாலச்சாரியார் போன்றோர் எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தனர் தெரியுமா? தமிழ்நாட்டில் பல்வேறு அணைகள் பெருந்தலைவர் என்று புகழப்பட்ட காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான் கட்டப்பட்டது. எவ்வளவு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு மக்கள் சிறப்புற்றனர் என்று தெரியுமே. அதன் பிறகு வந்த  அரசியல்வாதியினரில் பெரும்பாலோர் நாட்டைச் சுரண்டுவதிலேயே குறியாக உள்ளனர். மிகச் சிலரே நல்லவராக உள்ளனர். இந்நிலை மாற வேண்டாமா? அதனால் தகுதியுள்ள நம் மாணவர்கள் பிற்காலத்தில் அரசியலுக்கு வந்து நாட்டைச் சிறப்பிக்கலாமே!

உடல் வலுவும், மன வலிமையும் உள்ள நேர்மையாக வாழ்க்கை நடத்தும் நல்லவர்கள் அரசியலுக்குத் தேவை. அதற்காக எல்லோரையும் நான் அரசியலில் ஈடுபடுங்கள் என்று கூறவில்லை. உங்களுக்கு அரசியல் உகந்தது என்றால் நீங்கள் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டும். பகவான் கிருஷ்ணன் கீதையில் சுயதர்மத்தைப் பற்றி பேசுகிறார். அதாவது ஒவ்வொருவருக்கும் ஒரு துறை, தொழில் உகந்தது (Suitable). அதலிருந்து நீங்கள் விலகக் கூடாது.

நடிகர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் அடிக்கடி நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு தடவை நான் எனது முன்னாள்  மாணவனும் ரஜினியின் தீவிர விசிறியுமான ஒருவரிடம், ‘ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதல்ல. ஏனெனில் அரசியல் தலைவருக்கு முதல்  தகுதி உடல் வலிமை மற்றும் மன வலிமை. அவருக்கு இரண்டும் இல்லை. ஆதலால் கூட இருப்பவர்கள் அவரை வீழ்த்திவிடுவார்கள். தவறாக வழிநடத்திவிடுவார்கள். இப்போது இருக்கும் நல்ல பெயர் கெட்டுப்போகும் என்று நான் கூறியதாக அவரிடம் சொல்’ என்றேன். எனது முன்னாள் மாணவரும் ‘உங்கள் செய்தியைக் கண்டிப்பாக அவரிடம் சொல்கிறேன்’ என்றார்.

மாணவர்களே! அரசியலை நீங்கள் சுயலாபத்திற்காகவோ, சம்பாதிப்பதற்காகவோ உபயோகப்படுத்தக் கூடாது. அரசியலுக்கு வரும் முன்னரே தேவையான அளவு சம்பாதியுங்கள். அரசியலை மக்கள் சேவையாகவேச் செய்ய வேண்டும். அல்லது சுய தொழிலில் ஈடுபடுங்கள். தொழிலையும் நன்கு கவனித்துக் கொண்டு அரசியல் சேவையும் செய்யுங்கள். ஆம்! நன்கு படியுங்கள். நிறையச் சம்பாதியுங்கள். அப்புறம் அரசியல் சேவை என்றேன். எல்லோரையும் கூறவில்லை. யாருக்கு அரசியல் உகந்ததோ அவர்கள் பிற்காலத்தில் அரசியலில் ஈடுபடுவது நாட்டை மேம்படுத்தும் என்றேன்.

‘இன்று உங்களைச் சுற்றி நடப்பவைகளைக் கவனித்துப் பாருங்கள். கொலை, தற்கொலை, மணமுறிவு, விபத்துகள், பல்வேறு குற்றச் செயல்கள். ஆம், மக்களில் பலர் வாழ்வில் நிம்மதியற்று தவிக்கின்றனர். இதற்கு காரணம் தவறானத் துறையை தேர்வு செய்தல். துறை தவறாகும் போது, நாம் செய்யும் வேலைகளும் தவறாகின்றன. வாழ்க்கை துணைவரும் பெரும்பாலும் தவறாகின்றார். ஆதலால் உங்களுக்கு எந்த துறை உகந்ததென்று உணருங்கள். அதற்கான பயிற்சி முறைகளை நாம் ஏற்கனவே உங்களுக்குக் கொடுத்துள்ளோம். அரசியல் உகந்ததென்றால் அரசியலில் ஈடுபடுங்கள். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய முடியும். நீங்களும் நிம்மதியாக வாழலாம்’ என்றேன்.

இப்படி பல வகுப்பறைகளில் பேசியுள்ளேன். சில இடங்களில் மாணவர்களிடமிருந்து ‘ஐயா இப்படிப் பேசுகிறீர்கள். ஏன் நீங்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது?’ என்ற கேள்வி எழுவதுண்டு. ‘நான் ஒரு குரு. நான் ஒரு வழிகாட்டி. எனக்கு அரசியல் உகந்ததல்ல என்பதை ஏற்கனவே நான் உணர்ந்துள்ளேன். ஆனால் நன்மைகள் செய்வதற்கு உங்களை வழிநடத்த என்னால் முடியும்’ என்று கூறுவதுண்டு.

அன்பு நெஞ்சங்களே! உங்கள் குழந்தைகளுக்கு எந்த துறை உகந்ததென்று ஆராயுங்கள். நம் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடே சுதந்திரம், மனோ சக்தியின் மகத்துவம், மகிழ்வித்து மகிழுங்கள், நீ நீயாகவே இரு, வழிகாட்டி மூவர் போன்ற பதிவுகளை உள்வாங்குங்கள். அதன் செயல்முறைகளை சிறுவயதிலேயே செயல்படுத்துங்கள். பழக்கப்படுத்துங்கள். வழக்கப்படுத்துங்கள். பிற்காலத்தில் அவர்களுக்கு உகந்த துறையை, துணையை கண்டிப்பாக சரியாக முடிவு செய்வர். இதை நாம் உறுதியாக கூறுகிறோம்.

உங்கள் மைந்தர்களின் நிம்மதியான வாழ்க்கைதானே உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும். ஆம் அரசியல் வாழ்க்கை உகந்ததென்றால், அங்கே மகிழ்வுடன் அனுப்புங்கள். ‘அரசியல் ஒரு சாக்கடை’ என்று கூறி அவர்களை தடுக்க நினைக்காதீர். அப்போது தான் வளமான, வலிமையான, நிம்மதியான நாட்டினை நாம் உருவாக்க முடியும். தங்கள் மைந்தர்களின் வளமான வாழ்விற்காக இதனைச் செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.