Click ▶ for audio
அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பு வணக்கங்கள். இன்று நிம்மதியாக வாழ்பவர் மிகச்சிலரே. பலர் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி செய்வதறியாது தவிக்கின்றனர். அறிவியல் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க மனப் பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தற்கொலைகளும், மணமுறிவுகளும் மிக வேகமாக அதிகரிக்கின்றன. யாரிடமாவது ஆலோசனை கேட்கலாமென்றால் பெரும்பாலோர், ஆலோசனை கூறினால் தமக்கு என்ன லாபம் என்பதிலேயே குறியாக உள்ளனர். அதிலும் சிலர் எந்த வழியைக் கூறினால் அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்குமோ அந்த வழியைத் தான் கூறுகின்றனர். அதைப் பின்பற்றி வருபவர்கள் தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்குண்டுள்ளனர்.
பெற்றோர்களும் அவர்கள் பாவ புண்ணியத்திற்கேற்ப தன் மைந்தர்களுக்கு வழிகாட்டுகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் மைந்தர்களுக்கு தன்னை அறியாமல் தவறாகவே வழிகாட்டுகின்றனர். பேராசிரியர்களும், ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதைப் பகிர்ந்து கொள்ளும் போது எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றது. கல்லூரியில் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. எனக்குக் கிடைத்ததோ 83 சதவிகித மதிப்பெண்கள். அதுதான் வகுப்பில் முதல் மதிப்பெண். எனக்கு அடுத்ததாக வந்த நண்பர் 65 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருந்தார். சுமார் 18 சதவிகித மதிப்பெண்கள் வித்தியாசம். கல்லூரி முதல்வரும் எங்கள் துறையைச் சார்ந்தவர். என்னை தனது அறைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார். அங்கு சென்றதும், ‘உன்னால் IAS தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும். அதற்கு தயார் செய்’ என்றார். அதற்கான ஏற்பாடுகளில் முழு முயற்சியுடன் இறங்கினேன். அதன் பிறகு நான் பல பிரச்சனைகளை எதிர் கொண்டேன். தீவிரமாக ஆராய்ந்தபின் IAS எனக்கு உகந்ததல்ல என்று உணர்ந்தேன். ஆம், எனது கல்லூரி முதல்வர் அவர் அறியாமையால் என்னைத் தவறாக வழி நடத்தினார்.
இதைப் போல் தான் அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரது தந்தை வங்காளத்தில் பிரபல மருத்துவர். அரவிந்தரை ஏழு வயதாக இருக்கும் போதே ICS படிக்க வேண்டும் என்று இங்கிலாந்திற்கு அனுப்பினார். அன்றைய ICS தான் இன்றைய IAS. 14 வருடங்கள் இங்கிலாந்தில் கல்வி கற்ற அவர், தனக்கு ஏற்பட்ட மனக்குழப்பத்தினால் நாடு திரும்புமாறு தந்தையால் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் அந்த துறை தனக்கு உகந்ததல்ல, ஆன்மீகத் துறையே உகந்தது என உணர்ந்து இறுதியில் பாண்டிச்சேரி சென்று ஆன்மீகப் பணியில் ஈடுபட்டதை அறிந்திருப்பீர்கள். ஆம், அவர் தந்தை அவரது அறியாமையால் மகனுக்கு தவறாக வழிகாட்டினார். இதனால் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் ஏராளம். இப்படி பல உதாரணங்களை எம்மால் கூற முடியும். ஆதலால் தங்கள் மைந்தர்களின் பிற்கால படிப்பை, துறையை, துணையை முடிவு செய்வதில் பெற்றோர்கள் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். பெற்றோர் தமது மைந்தர்கள் தங்கள் குறிக்கோளை உணரச் செய்யும் பயிற்சிகளை அளிக்க வேண்டும். நீங்கள் யாரைக் கேட்டாலும் குறிக்கோளை முடிவு செய்து கொள்ளுங்கள். கடினமாக முயலுங்கள் என்பர். இது தவறு.
பெரும்பாலான இளைஞர்களும் தனக்கு உகந்த துறை மற்றும் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தவறாகச் செயல்படுகின்றனர். இதனால் வாழ்க்கை முழுவதுமே துன்பத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் முற்கால தீவினையே. அன்பு நெஞ்சங்களே! உங்களில் பலருக்கு கூட இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். உங்கள் மைந்தர்களாவது சரியான துறையை தேர்ந்தெடுக்க உதவுங்கள். உங்களுக்கு உகந்த துறையை, துணையைத் தேர்ந்தெடுப்பதில் மூன்று பேர் சரியாக வழிநடத்த முடியும். அவர்களைப் பற்றி கூறுகிறேன். இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.
முதலாவதாக ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். அதாவது நேர்மையான வாழ்க்கை வாழ்தல், அனைவருக்கும் நன்மையே செய்தல், எப்போதும் உண்மையே பேசுதல், எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல் போன்ற குணங்களைப் பெற்றிருப்பவர்கள். இப்படிப்பட்டவர்களைக் காண்பது மிகவும் அரிது. உங்கள் பெற்றோர் இந்நிலையில் இருந்தால் மட்டுமே அவர்களால் மிகச் சரியாக வழிகாட்ட முடியும்.
ஒரு நாள் சென்னை சாலிகிராமத்தில் மிக குறைந்த கட்டணம் வாங்கிக் கொண்டு தரமான சிகிச்சை அளித்து வந்த மறைந்த மருத்துவர் திரு. தட்சிணாமூர்த்தி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம் ‘சில பத்தாண்டுகளுக்கு முன் மருத்துவர் திரு. குருசாமி அவர்கள் வாழ்ந்து வந்தார். நோயாளிகள் தூரத்தில் வரும்போதே அவர்களின் முகத்தையும் அசைவையும் கணித்தே மருந்துச் சீட்டை எழுதிவிடுவாராம்’ என்றார்.
அதைப் போல் ஒவ்வொருவருக்கும் ஒரு அதிர்வெண் உண்டு. சில மந்திர உச்சாடனம் சிலருக்கு உகந்ததாக இருக்கும். ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் உங்கள் முகத்தைப் பார்த்தே உங்களுக்கு உகந்தது எது என்று சொல்லிவிடுவர். அப்படிப்பட்டவர்களைக் காண்பது மிகவும் அரிது. அவர்கள் சரியாகச் சொன்னாலும் பின்பற்றுவது உங்கள் மனோநிலையைப் பொருத்தது. உங்களால் பின்பற்ற முடியலாம் அல்லது பின்பற்ற முடியாமலும் போகலாம்.
இரண்டாவது மிகச் சிறந்த மனோவசிய நிபுணர் (Hypnotist) உங்களை அறிதுயில் (ஆழ்ந்த தூக்க) நிலைக்கு கொண்டுபோய் உங்களுக்கு உகந்தது எது என்பதை வெளிப்படுத்த முடியும். ஆனால் அவர் நல்லவராகவும், வல்லவராகவும் அமைய வேண்டும். அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதும் மிகவும் கடினம். அவர் சரியில்லை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு காலியாகும். நோயின் தாக்கமும் அதிகரிக்கும். அவர்கள் சரியாகச் சொன்னாலும் நீங்கள் பின்பற்றுவது மிகவும் கடினம்.
மூன்றாவதாக நீங்களே உங்களுக்கு உகந்ததை உணர முடியும். அதற்கான பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பிறர் சொல்வதைவிட நீங்கள் உணர்ந்தால் அதை முழுமையாக நம்புவீர்கள். அதற்கான பயிற்சிகள் குறித்து விளக்கமாகக் காண்போம்.
தினமும் மூன்று வேளை தேவையான அளவு சத்துள்ள உணவு (அரைவயிறு உணவு, கால்வயிறு தண்ணீர், கால்வயிறு காற்று) சாப்பிட வேண்டும். கோடை காலத்தில் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். குளிர்காலத்தில் 1 முதல் 2 லிட்டர் போதுமானது. அனைத்து சுவை காய்கனிகளும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுவைக்கும் தனித்தன்மை உண்டு. சில சுவைகள் உடம்பில் அதிகமானாலும் நோய். குறைவானாலும் நோய். இதைப்போல் அனைத்து நிற காய், கனிகளும் உட்கொள்ள வேண்டும்.
வாலிப வயதில் தினமும் கண்டிப்பாக எட்டு மணிநேரத் தூக்கம் அவசியம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிகத் தூக்கம் தேவை. உடலோ மனமோ பலகீனமாயிருந்தாலும் அதிகத் தூக்கம் தேவை.
தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி தேவை (நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு போன்றவை). தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி முக்கியம். தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சியையே இரசிக்க வேண்டும். அறவே விட்டுவிடுவது மிகவும் நல்லது. கெட்ட எண்ணங்கள் நிகழ்வுகள் மனதில் நுழைவது இதனால் குறைக்கப்படும். நேர்மையாக சம்பாதியுங்கள். (மற்றவர்களைக் கெடுத்து சம்பாதிப்பது அந்நேரம் வெற்றியைக் கொடுத்தாலும் பிற்காலத்தில் வீழ்த்திவிடும்). நேர்மையாக சம்பாதிப்பதில் குறைந்த பட்சம் 10 சதவிகிதமாவது சமூகப் பணிக்கு செலவிடுங்கள். உறவினர்கட்கு, நண்பர்கட்கு, சுற்றத்தினருக்கு, எளியவர்கட்கு, நல்லவர்களுக்கு மற்றும் பிற உயிரினங்களுக்கு முடிந்தவரை உதவுங்கள். மக்கள் உங்களை வாழ்த்துவர். உயிரினங்கள் வாழ்த்தும். இயற்கை சமநிலையை மேம்படுத்த உதவுங்கள். இயற்கை மகிழும். இறைவன் மகிழ்வான்.
மேலும் ‘இறைவா எனக்கு எது நல்லதென்று உனக்குத் தெரியும். அதையே நான் அடைந்திடச் செய்’ என்று தீவிரமாகத் தியானியுங்கள். தேவையாயின் தினமும் மனம் ஒன்றி பன்முறை எழுதுங்கள். இந்த எண்ணங்கள் வலிமைப்படும் போது மனம் உங்களை சிறப்பாக வழிநடத்தும். ஏனென்றால் மனதில் ஆழப்பதிந்த எண்ணங்களே புறச் சூழலை நிர்ணயிக்கின்றன. (பூசலார் நாயனார் வரலாறு இதற்கு மிகச் சிறந்த உதாரணம்). ஆம், வலிமையான எண்ணங்கள் வலிமையற்ற எண்ணங்களை அழுத்தி மேலெழும்புகின்றன. உங்களை சிறப்பாக வழிநடத்துகின்றன. மேற்கூறியவற்றை தீவிரமாகச் செயல்படுத்தினல் நான் கூறிய அனைத்தும் உண்மை என்பதை நீங்களே உணர்வீர்கள். ஏனென்றால் இம்முறை பல வருடங்களாக எனது பல மாணவர்களாலும், சீடர்களாலும் பின்பற்றப்பட்டு அவர்களின் நிம்மதியான வாழ்விற்கு உதவியிருக்கின்றது. பூசலார் நாயனாரைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பினால் நமது வலைதளத்தில் அக (மானசீக) வழிபாடு என்ற தலைப்பிலமைந்த கட்டுரையை உள்வாங்குங்கள். பயிற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
1 thought on “வழிகாட்டி மூவர்”