அக (மானசீக) வழிபாடு

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் எனது வணக்கங்கள்.  வழிபாட்டின் மூன்று வகைகளைப் பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.  இன்று அக வழிபாடு என்ற தலைப்பில் எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

திருநின்றவூர் = திரு + நின்ற + ஊர்.  எவ்வளவு அழகான பெயர்.  சென்னையிலிருந்து அரக்கோணம் தொடர்வண்டி மார்க்கத்தில் ஆவடி கடந்து பட்டாபிராமிற்கு அடுத்த ஊர் திருநின்றவூர்.

திருநின்றவூர் நாயகனைக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? பூசலார் நாயனார் தான் அவர்.  திருநின்றவூரில் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூசலார் சிறந்த சிவபக்தர்.  ஆனால் பரம ஏழை.  சிவனுக்கு திருநின்றவூரில் கோவில் கட்ட விரும்பி பலரிடம் பணம் வேண்டினார்.  பலரும், ‘நீயோ பரதேசி’ என்று அவரிடம் பணம் கொடுக்க மறுத்தனர்.

அந்த காலகட்டத்தில் பல்லவ மன்னன் ஒருவன் சென்னை பல்லவபுரத்திலிருந்து கற்களைக் கொணரச் செய்து காஞ்சியில் சிவனுக்கு கோவில் கட்டிக் கொண்டிருந்தான்.  பல்லவபுரம் சென்னையில் எங்கிருக்கிறதென்று உங்களுக்கு புரிகிறதா?  பல்லவபுரம் என்ற பெயர் மருவி இன்று பல்லாவரம் ஆயிற்று.  மன்னனிடம் சென்று பணத்திற்காக யாசித்தார்.  அவனோ, ‘கோவில் கட்டுவது, கோவில் பழுதுபார்ப்பது எங்கள் வேலை.  நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.  நீங்கள் செல்லுங்கள்’ என்று கூறி செலவுக்கு சிறிது பணம் கொடுத்து திருப்பி அனுப்பினான்.

செய்வதறியாது திகைத்த பூசலார் திருநின்றவூர் சென்றார். தன் சீடனொருவனை துணைக்கழைத்து தினமும் மனதிற்குள் தியானிக்க ஆரம்பித்தார்.  மனதிற்குள்ளே கோவில் அமைக்கும் இடத்தை தேர்வு செய்தார்.  மனதிற்குள்ளே பூமியில் எல்லைக் கோடுகள் வரைந்தார்.  நூல் பிடித்து அளந்தார்.  அஸ்திவாரம் தோண்டினார்.  மனதிற்குள்ளே கோவில் வளர்ந்தது.  சிறிது சிறிதாக வளர்ந்தது.  கிட்டதட்ட ஒரு வருடம் கடந்தது.  மனதிற்குள் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.  குடமுழுக்கிற்கு ஒரு சிறந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்.

அதே நேரத்தில் கற்களால் காஞ்சிபுரத்திலும் மிகவும் கம்பீரமாக கோவில் கட்டி முடிக்கப்பட்டது.  மன்னனது ஆஸ்தான சோதிடர்களும் குடமுழுக்கிற்கு பூசலார் தேர்ந்தெடுத்த நாளையே முடிவு செய்தனர்.

குடமுழுக்கிற்கு சில நாட்களுக்கு முன் மன்னனுடைய கனவில் சிவபெருமான் தோன்றி, ‘மன்னா! நீ முடிவு செய்த அதே நாளில் திருநின்றவூரில் என் பக்தனொருவன் கோவில் கட்டி முடித்து குடமுழுக்கு செய்ய திருவுளம் கொண்டுள்ளான்.  ஆகவே நீ கட்டிய கோவிலுக்கு அன்று வர முடியாது.  ஆதலால் நீ குடமுழுக்கிற்கு வேறு ஒரு நாளை நிர்ணயம் செய்’ என்றார்.

மன்னனுக்கோ வியப்பு.  என்னை விட சிறந்த பக்தனா?  அதுவும் என் நாட்டில் எனக்குத் தெரியாமல் கோவில் கட்டிக்கொண்டிருக்கிறானா?  ஒற்றர்கள் என்ன வேலை செய்து கொ்ணடிருக்கின்றனர் என்ற எண்ணங்கள் மேலோங்கின.  அந்த பக்தனைக் காணவேண்டும்.  குடமுழுக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மன்னனுக்கு ஏற்பட்டது.

அமைச்சர்கள் படைத்தலைவர்கள் புடைசூழ குடமுழுக்கில்  கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்திலிருந்து திருநின்றவூரை நோக்கிப் பயணித்தான் மன்னன்.  திருநின்றவூரை நெருங்க நெருங்க மன்னனுக்கு வியப்பு.  தொண்டை நாட்டின் மற்ற பகுதிகளில் கடும் வறட்சி.  ஆனால் திருநின்றவூர் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது.  என்ன காரணம் என்ற எண்ணம் மேலோங்கியது.  வீரர்களைப் பணித்தான் மன்னன்.  காரணம் அறியச் சென்ற வீரர்கள் திரும்பி வந்து, ‘மன்னா! பூசலார் என்றொரு பக்தர் குளம் வெட்டினாராம். அதிலே நிறைய தண்ணீர் கிடைக்கிறது.  அதனால்தான் இவ்வளவு செழிப்பு’ என்ற செய்தியைத் தெரிவித்தனர்.

பரிவாரங்களுடன் திருநின்றவூரை அடைந்தான் மன்னன்.  அங்கே புதிதாக கட்டப்பட்ட எந்தக் கோவிலும் இல்லை.  என்ன? சிவன் சொன்னது பொய்யா? என் கனவு பொய்யா? இருக்காது.  தீர விசாரியுங்கள் என்றான் மன்னன். வீரர்கள் விசாரித்தனர்.  மக்கள் மறுபடியும் பூசலாரைக் கைகாட்டினர்.  அருகே சென்றான் மன்னன்.

கண்ணை மூடி தியானித்துக் கொண்டிருந்தார் பூசலார்.  இன்னும் அருகே சென்றான்.  குடமுழுக்கிற்கான மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தது மன்னன் காதில் விழுந்தது.  சிறிது நேரத்தில் கண் திறந்தார்.  மன்னன் அவர் அடி பணிந்தான்.  வணங்கினான்.  திருநின்றவூரில் தங்கி ஒரு பெரிய கோவிலைக் கட்டி பூசலாரிடம் ஒப்படைத்து குடமுழுக்கு நடத்திவிட்டு காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்று தான் கட்டிய கோவிலுக்கு பூசலாரை வைத்துக் கொண்டே குடமுழுக்கு செய்தான்.  திருநின்றவூரில் மன்னன் கட்டிய அக் கோவில்தான் இன்று இருதயீஸ்வரர் கோவில் என்ற புகழ்பெற்ற சிவாலயம்.

தெற்கே திருவில்லிபுத்தூரில் தோன்றிய கோதை நாச்சியார் ரங்கநாதரைத் தியானித்து அவருடன் இரண்டறக் கலந்தது அக வழிபாட்டின் மூலமே.  வடக்கே ராஜபுதன அரசகுமாரி மீரா கிருஷ்ணனையே தியானித்து இறுதியில் துவாரகையில் கிருஷ்ணனுடன் சங்கமித்ததும் அக வழிபாட்டினாலேயே.

அக வழிபாட்டின் மேன்மை உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.  ஆம், அகத்தில் ஆழமாக பதியப்பட்ட எண்ணங்கள்  புறச்சூழலை உருவாக்கின.  திரும்ப திரும்ப ஒரே நிகழ்வைக் கனவு காணும் போது அது நடந்து விடுகிறது.  இது நன்மையிலும் முடியலாம் அல்லது தீமையாகலாம்.  அது நமது குறிக்கோளைப் பொருத்தது.  இதை எழுதும் போது எனது மனம் பின்னோக்கிப் பயணிக்கிறது.

மகாபாரத காலம்.  தான்தான் சிறந்த சிவ பக்தன் என்று பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கு செருக்கு.  இதை அழிக்க நினைத்தார் பகவான் கிருஷ்ணன்.  அர்ச்சுனனை, ‘வா! என்னோடு’ என்று சிவனை வழிபட கயிலாயத்திற்கு அழைத்துச் சென்றார்.  அங்கே சென்ற அர்ச்சுனன் வியப்படைந்தான்.  ஆம், ஆயிரக்கணக்கில்   மலர்கள் சிவன் மீது விழுந்து கொண்டே இருந்தன.  அதை சிவ கணங்கள் கூடை கூடையாக அள்ளிச் சென்று கொண்டிருந்தனர்.  ‘இது என்ன? எப்படி சாத்தியம்?’ என்று கிருஷ்ணனை வினவினான் அர்ச்சுனன்.  பகவான் கிருஷ்ணனோ, ‘பூமியில் ஒரு பக்தன் ஆழ்ந்த தியானத்திலிருந்து சிவன் மீது மலர்கள் விழுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறான்.  அதன் சக்தியால் சிவன் மீது மலர் மழை பொழிந்து கொண்டிருக்கிறது’ என்றார்.

அர்ச்சுனன், ‘அப்படியொரு பக்தன் பூமியில் இருக்கிறானா?  அவனை உடனே காண வேண்டும்’ என்றான்.  பகவான் கிருஷ்ணன் அவனை ஒரு நதிக்கரைக்கு அழைத்துச் சென்றார்.  தூரத்திலிருந்தபடியே, ‘அதோ, முட்டளவு நீரில் நின்று கொண்டு தியானித்துக் கொண்டிருக்கிறானே அவன்தான்’ என்றார்.  அருகில் சென்று காணும் ஆர்வம் அர்ச்சுனனுக்கு தோன்றியது.  அருகில் சென்றவன் வெட்கமுற்றான்.  அவனது கர்வம் அகன்றது.  அங்கே தியானித்துக் கொண்டிருந்தது அவனுடைய அருமை அண்ணன் பீமன்.  மனோசக்தியால் இது சாத்தியமே! ஆம் அன்பு நெஞ்சங்களே!  அக வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்தது.  ஆனால் மனதை மிக ஒருமைப்படுத்த முடிந்தவர்களுக்குதான் இது சாத்தியம்.  மற்றவர்களுக்கு ஆரம்ப நிலையில் உருவ வழிபாடு அல்லது இசை வழிபாடுதான் சிறந்த பலனைக் கொடுக்கும்.  உங்களுக்கு எது உகந்ததோ அதை தீவிரமாக பின்பற்றி பயனடையுங்கள்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.