Click ▶ for audio
அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் எனது வணக்கங்கள். இன்று உண்மையான மகிழ்ச்சி என்ற தலைப்பில் உங்களிடம் எனது எண்ணங்களை சிறிது பகிர்ந்து கொள்கிறேன். உண்மையான மகிழ்ச்சி எங்கிருக்கிறது? உழைத்து சம்பாதிப்பதில் இருக்கிறது. இவ்வுலகில் இரண்டு விதமாக சம்பாதிக்கலாம். ஒன்று உழைத்து சம்பாதிப்பது. மற்றொன்று அடுத்தவரை ஏமாற்றி, திருடி, மக்களை சுரண்டி சம்பாதிப்பது. மற்றவரை ஏமாற்றி சம்பாதிக்கும் போது நமது மனசாட்சியே நம் மீது குற்றம் சுமத்தும். அதனால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. ஆனால் கடுமையாக உழைத்து சம்பாதிப்பதனால் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.
அடுத்து நாம் உண்மையாக உழைத்து சம்பாதிப்பதில் ஒரு பகுதியை இழந்து அதை நாம் மீண்டும் பெறும் போது நமது மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும். இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன். ஒருவர் ஒரு சந்நியாசியிடம் சென்று தான் மிகழ்ச்சியாகவே இல்லை என்றும் ஆனால் தனக்கு நிறைய சொத்துக்கள் இருக்கிறதென்றும் கூறினார். அதற்கு சந்நியாசி, ‘உன்னிடம் இருக்கும் விலையுயர்ந்த நகைகளை ஒரு பையில் மூட்டை கட்டி என்னிடம் எடுத்து வா’ என்றார். அவர் வந்தவுடன் சந்நியாசி அந்த மூட்டையை பிடிங்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினார். அந்த நபருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவரும் அந்த சந்நியாசியை துரத்த ஆரம்பித்தார். சந்நியாசி அவரை நீண்ட நேரம் அலையவிட்டு கடைசியில் அந்த நபரிடம், ‘இந்தா பெற்றுக்கொள்’ என்று மூட்டையைக் கொடுத்தார். ‘அப்பா! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா?’ என்றார் அந்த நபர்.
அடுத்து நம் உறவினர்கள், நண்பர்கள் அல்லது நமக்கு வேண்டியவர்களை நீண்ட காலத்திற்குப் பிறகு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக நம் பழைய நண்பர்களை சந்திக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்.
நமது முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள் சிறந்த குறிக்கோளை அடைவதாகக் “கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்!” என்று இளைஞர்களை ஊக்குவித்தார். நமது நீண்ட நாள் கனவை நேர்மையான வழியில் உழைத்து நனவாக்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!
ஒவ்வொருவருடைய தேவையும் மாறுபடும். மிக அவசியமான தேவையை பூர்த்தி செய்யும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். உதாரணமாக, வெயிலில் வெகு தூரம் பயணம் செய்பவனுக்கு மரநிழலில் இளைப்பாரும் போது மிகவும் மகிழ்ச்சி. தாகத்தில் தவிப்பவனுக்கு தண்ணீர் கிடைத்தால் மகிழ்ச்சி. இதே போல் அதிக பசியோடு இருப்பவனுக்கு உணவு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாகயிருக்கும்.
ஒரு முறை நாவுக்கரசர் வெயிலில் திருப்பைஞ்ஞிலி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் கடுமையான தாகம், பசி. தண்ணீர் கிடைக்காமல் மயங்கி கீழே சாய்ந்தார். அப்போது ஒருவர் அவரை எழுப்பி அவருக்கு உணவு கொடுத்து தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டினார். நாவுக்கரசரும் உணவு உட்கொண்டு தண்ணீரும் பருகி பசியாறினார். மிகவும் மகிழ்ந்தார். வந்தவரை வாயாற வாழ்த்தினார்.
ஒரு முறை அரசர் கிருஷ்ணதேவராயர் தனது அரசவையில், ‘எது உண்மையிலேயே மகிழ்ச்சியை தரும்’ என்று வினவினார். ஒருவர் குழந்தையை கொஞ்சுவது அதிக மகிழ்ச்சியை தரும் என்றார். மற்றொருவரோ உணவு உண்பது மகிழ்ச்சியை தரும் என்றார். இன்னொருவர் அதிக பணம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார். இப்படி பலர் பலவிதமாக பதில் சொல்ல தெனாலிராமன் மட்டும் அமைதியாக இருந்தார். அரசர் தெனாலிராமனிடம், ‘நீ ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறாய். உன் கருத்தை கூறு’ என்றார். தெனாலிராமனோ, ‘எனக்கு மலம் கழிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தரும்‘ என்றார். இதைக் கேட்டதும் அனைவரும் ஆரவாரம் செய்தனர். அரசர் கிருஷ்ணதேவராயருக்கு கோபம் தலைக்கேறியது. அவர் தெனாலிராமனிடம், ‘நீ இதை இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரூபிக்க வேண்டும். இல்லையேல் உனக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்’ என்றார். அவரும் ஏற்றுக் கொண்டார்.
தெனாலிராமன் தனது வீட்டில் மிக விரைவாக ஒரு கழிப்பறையை கட்டி முடித்தார். ஒரு நாள் அரசரை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தார். அரசர் உண்ணும் உணவில் பேதி மருந்தை கலந்தார். பின்பு அரசர் உண்ணும் சமயத்தில் மெல்ல அந்த அறையின் வெளியே சென்று தெனாலிராமன் கதவை பூட்டினார். அரசருக்கு பாதியிலேயே வயிறு தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. உடனே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது தான் அவர் கதவு பூட்டப்பட்டிருந்ததை உணர்ந்தார். அவர் விரைவாக கதவை பல முறை தட்டியும் தெனாலிராமன் கதவை திறக்கவேயில்லை. பிறகு சிறிது நேரம் கடந்த பிறகு தான் கதவை திறந்தார். மன்னர் கழிவறைக்கு ஓடோடி சென்றார். கழிவறையை விட்டு வெளியே வந்ததும் தெனாலிராமனிடம் அரசவையில் அவரை திட்டியதற்கு மன்னிப்பு கேட்டு, தெனாலிராமன் சொன்னது தான் சரியென்று ஒத்துக் கொண்டார். பிறகு தெனாலிராமனுக்கு பல பரிசுகள் கொடுத்தார். ஆம், அந்த நேரத்தின் தேவையைப் பூர்த்தி செய்தல் மிகவும் மகிழ்வைக் கொடுக்கும்.
அடுத்து நாம் நேர்மைான வழியில் சம்பாதித்த பொருளை தேவையானவர்களுக்கு கொடுக்கும் போது நமக்கு அளவில்லா மகிழ்ச்சி கிடைக்கிறது.
ஒரு கதையொன்று நினைவிற்கு வருகிறது. ஒரு செல்வந்தர் ஒரு சந்நியாசியிடம் சென்றார். அவர் அந்த சந்நியாசியிடம், ‘எனக்கு நிறைய சொத்துக்கள் இருக்கிறது, செல்வத்திற்கு பஞ்சமேயில்லை. ஆனால் மனதில் நிம்மதியே இல்லாமல் வாழ்கிறேன்’ என்றார். அதற்கு அந்த சந்நியாசி, ‘உங்களிடம் உள்ள செல்வத்தை கொண்டு நல்லவர்களுக்கு, தேவையானவர்களுக்கு உதவுங்கள். உங்கள் மனதில் நிம்மதி பிறக்கும்’ என்றார். செல்வந்தரோ, ‘நான் எப்படி கொடுப்பது. அதெல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து. நான் தரமாட்டேன்’ என்றார். சந்நியாசி அவரிடம் ஒரு ஐம்பது பைசா நாணயத்தைக் கொடுத்து, ‘நீங்கள் முதலில் இறந்து சொர்க்கத்திற்கு சென்றால் இந்த ஐம்பது பைசாவை எடுத்துச் செல்லுங்கள். நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன். நான் முதலில் இறந்து சொர்க்கம் சென்றால், நீங்கள் வரும் போது இதை எடுத்து வந்து என்னிடம் ஒப்படையுங்கள்’ என்றார். இதைக் கெட்ட செல்வந்தர், ‘என்ன! இந்த ஐம்பது பைசாவை எப்படி சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்’ என்றார். அதற்கு சந்நியாசி, ‘இந்த ஐம்பது பைசாவையே உங்களால் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் நீங்கள் சம்பாதித்த சொத்துக்களை எப்படி எடுத்துச் செல்ல முடியும். இருக்கும் வரையில் பிறருக்கு உதவி செய்து நிம்மதியடையுங்கள்’ என்றார். அவரும் தனது சொத்துக்களைக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட்டார்.
இன்னொரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன். நைஜீரியாவின் மாபெரும் கோடீஸ்வரர்களில் ஃபெமி ஒடிடோலாவும் ஒருவர். தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது ஒருவர் அவரிடம், ‘எப்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தீர்கள்’ என்ற அர்த்தத்தில் கேட்டார்.
முதலில், மகிழ்ச்சி செல்வம் சேகரித்தல் என்று நினைத்தேன். ஆனாலும் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. இரண்டாவது விளையுயர்ந்த பொருட்கள் வாங்குவதில் மகிழ்ச்சி என்று நினைத்தேன். இதுவும் மகிழ்ச்சி தரவில்லை. மூன்றாவது பெரிய தொழிலதிபரானால் மகிழ்ச்சி என்று நினைத்தேன். நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்காவின் 95% டீசல் விநியோகம் என்னுடையது. மேலும் நான் ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் கப்பல் உரிமையாளர். இதிலும் மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
நான்காவது எனது நண்பர் 200 ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மற்றும் என்னிடம் நீங்களே கொடுத்துவிடுங்கள் என்றார். அதை என் கைகளாலேயே கொடுத்ததும் அந்தக் குழந்தைகளின் முகத்தின் மகிழ்ச்சியைக் கண்டு மிகவும் சந்தோஷமடைந்தேன்.
ஒரு குழந்தை எனது காலை கட்டிக் கொண்டது. வேறு ஏதாவது வேண்டுமா என்று வினவ, ‘உங்களது முகத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். சொர்க்கத்திற்கு வந்ததும் மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்வேன்’ என்றது. ‘இந்த நிகழ்வுதான் என் வாழ்க்கை பாதையை மாற்றிவிட்டது’ என்றார்.
ஆம்! அன்பு நெஞ்சங்களே! நேர்மையாக சம்பாதியுங்கள். உங்கள் தேவை போக (தேவைதான் ஆசையல்ல) மீதியை தேவையானவர்களுக்கு கொடுங்கள். அப்போது மேலே கூறியவையெல்லாம் உண்மை என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Excellent
தங்கள் பாராட்டுக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
கொடுப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் பதிவுகளை வரவேற்கிறோம். என்றென்றும் கடைபிடிப்போம்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
அவசியமான-அவசரமான
மிகத் தேவையான பதிவு..
நன்றி அய்யா
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!