எப்படி சமாளித்தீர்கள் – பாகம் 1

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். இந்த நாள் நமக்கு இனியதாக அமைய இறைவனை இறைஞ்சுகிறேன்.

கொரோனா தீநுண்மி பரவிய காலம் மார்ச் மாதம் 2020ம் வருடம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது உங்களுக்கு தெரியும். எனது மாணவர்களிடம், ‘பொது முடக்கம் இதற்கு தீர்வல்ல. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுதான் தீர்வு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொண்டே உங்கள் வேலையைச் செய்யுங்கள் என்று கூறி நோய் எதிர்ப்பு சக்தியை எப்படியெல்லாம் அதிகரிப்பது என்று விளக்கிக் கூறினேன். மேலும் நான் தினமும் காலையும் மாலையும் வழக்கப்படி கல்வி நிலையம் வருவேன். எனக்கு தீநுண்மி பற்றி பயமில்லை. விருப்பப்பட்டவர்கள் என்னிடம் வந்து கற்றுக் கொள்ளலாம்’ என்றேன்.

நாட்டில் கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். அரசு அதிகாரிகள் அரசின் கீழ் வேலை செய்பவர்கள் மட்டும் பெரும்பாலும் சம்பளம் பெற்றார்கள். பல தொழில்கள் முடங்கின. ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பலர் தனது வாகனங்களை விற்று நடந்து செல்ல ஆரம்பித்தனர். சிலர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியர்கள் பலர் வலைதள வகுப்புகள் ஆரம்பித்தனர். பள்ளிகளும் இதே வேலையைச் செய்தன என்பதை அறிவீர்கள்.

என்னையும்  வலைதள வகுப்புகள் ஆரம்பிக்க மாணவர்களும் பெற்றோர்களும் வேண்டினர். வற்புறுத்தினர். நானோ, வலைதள வகுப்புகள்  மாணவர்களின் கண், காது, மனம் மற்றும் உடலை மிகவும் பாதிக்கும். ஆதலால் வகுப்புகள் நடத்த விருப்பமில்லை என்றேன். எனது வருமானம் பூஜ்யம் ஆயிற்று. இச்சூழ்நிலையில் பலர் என்னிடம் ‘எப்படி சமாளிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர். யோகா நிபுணரும், நண்பருமான திரு.பழனிவேல் இருமுறைக்கு மேல் கேட்டுவிட்டார் என நினைக்கிறேன். அவரிடம் ‘எப்படியோ சமாளிக்கிறேன்’ என்ற பதிலைக் கொடுத்தேன். மற்றவர்களிடம் பெரும்பாலும் புன்னகையுடன் நிறுத்திக் கொண்டேன். இப்போது ‘எப்படிச் சமாளித்தீர்கள்?’ என்று கேட்ட அனைவருக்கும் பதிலளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.

கொரோனா காலத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே கல்வி நிலையம் நடத்துவதில் பல தொல்லைகள். எனக்கும் உடல் நலம் மற்றும் மன நலம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது என்று பகிர்ந்திருந்தேன். ஆதலால் கல்வி நிலையம் நடத்துவதில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை. வருமானம் ஏற்கனவே குறைந்திருந்தது. ஆனாலும் வரவும் செலவும் சரியாக இருந்தது. ஏற்கனவே சில லட்சங்கள் கடன் இருந்தது. தாம்பரம் அருகில் எனக்கிருந்த சுமார் 3600 சதுர அடி மனையை விற்றுவிடலாம் என்று திட்டமிட்டுச் செயல்பட்டேன். அது சில காரணங்களால் தாமதமாகிக் கொண்டே வந்தது.

கொரோனா பொது முடக்கம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வியாபாரம் செய்துவரும் எனது தம்பி ஒரு நாள், ‘அண்ணா! நேற்று இரவு கனவில் நீங்கள் வந்தீர்கள். எனக்கு பணம் தேவைப்படுகிறது என்று கேட்டீர்கள். பணம் அனுப்பவா?’ என்றார். நான் அப்படி நினைக்கவில்லையே எனக்கு அத்தியாவசியத் தேவையென்றால் சொல்கிறேன் என்றேன்.

சில நாட்களில் பொது முடக்கம் அறிவித்தனர். மாணவர்கள் யாரும் வகுப்பிற்கு வரவில்லை. நான் யாரிடமிருந்தும் இலவசமாகவோ  அல்லது கடனாகவோ எந்த உதவியையும் பெற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்திருந்த நேரம். ஏனேனில், நாம் எவ்வளவு உதவி பெற்றுக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமது பாவச்சுமை மாறுபடுகிறது. நீங்கள் அதிக உதவி பெற்றால் அதிக பாவம் உங்களை அடைகிறது. இதை ஏற்கனவே நான் உணர்ந்திருக்கிறேன். பாவச் சுமை அதிகரிக்கும் போது பிறவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தொல்லைகளும் அதிகரிக்கின்றன.

இப்போது ‘அண்ணா! கனவில் வந்தீர்கள்’ என்றார் தம்பி. ஆம் எனது சார்பில் இறைவனே என் உருவத்தை கனவில் காட்டியிருக்கிறார் என்று புரிந்தது. பணம் வாங்கிக் கொள்ளலாமா? என யோசித்த போது பல வருடங்களுக்கு முன்பு அம்மா, அப்பா, தம்பிகளுக்கு நான் செய்த உதவிக்கு கைம்மாறாக எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்று உணர்ந்தேன்.  ஆம், உனது தம்பி உனக்கு பல இலட்சங்கள் தர வேண்டியிருக்கிறது என்று மனம் பதிலளித்தது.

உடனே தம்பியிடம் மாதத்திற்கு 40,000 ரூபாய் வீதம் ஒரு வருடத்திற்கு அனுப்பு. அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்றேன். அவரும் ஐந்து மாதம் அனுப்பினார். அப்புறம் அனுப்பவில்லை. யாரிடமும் கெஞ்சுவதோ பிடுங்குவதோ எனக்கு வழக்கமில்லை. விட்டுவிட்டேன். சில மாதங்களுக்கு முன்பு தான் ஊரில் என் பெயருக்கு இருந்த நிலத்தை தம்பியருக்கு 8 லட்சம் கொடுங்கள் என்று பேசி 7 லட்சம் பெற்றுக் கொண்டு 1 லட்சத்தை அம்மாவிற்கு கொடுத்துவிடுங்கள் என்றேன். அதில் சில லட்சங்கள் கடன் கொடுத்துவிட்டு மீதி இருந்த பணம் செலவாகிக் கொண்டிருந்தது. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நான் சேமித்திருந்த பணத்தில் திரும்பப்பெற முடிந்த  அனைத்தையும் திரும்பப் பெற்றேன். சில காப்பீடுகளை பணம் செலுத்தாமல் அப்படியே விட்டுவிட்டேன். இதில் சில லட்சங்கள் எனக்கு கிடைத்தன.

அமெரிக்காவிலிருந்து எனது சீடன் திரு.விஜய் பேசினார். நீங்கள் வலைதள வகுப்புகள் நடத்தமாட்டீர்கள். கண்டிப்பாக  நீங்கள் கஷ்டப்படுவீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? என்றார். நான் மட்டுமல்ல, பலரும் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். நான் சமாளித்துக் கொள்வேன். எனக்கு நீ அனுப்ப நினைக்கும் பணத்தை நான் கூறும் ஆசிரமங்களுக்கும், மடங்களுக்கும், கோவில்களுக்கும் அன்னதானத்திற்காக அனுப்பிவிடு என்று கூறி அனுப்பச் செய்தேன்.

என்னுடைய இன்னொரு மாணவி கண் மருத்துவர் திருமதி.வித்யா என்னை தொலைபேசியில் தோடர்பு கொண்டார். ‘ஐயா, உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்க எனக்கு விருப்பம். அனுப்பட்டுமா?’ என்றாள். ‘நீ எங்கிருந்து பேசுகிறாய்?’ என்றேன். ‘நான் மதுரையிலிருந்து பேசுகிறேன்’ என்றாள். ‘மதுரை மீனாட்சிக்கே கொடுத்துவிடு’ என்றேன். அவளும் பணத்தை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டேன் என்றாள்.

இப்படி எனது சீடர்களும், முன்னாள் மாணவர்களும் எனக்கு கொடுக்கவிருந்த பல லட்சங்களை இந்தியாவின் பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும், கோவில்களுக்கும் அன்னதானம், மருத்துவம் மற்றும் கல்வி சேவைக்காக அளிக்கச் செய்தேன். எனக்கும் புண்ணியம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

யாரிடமிருந்தும் எந்த உதவியும் பெற்றுக் கொள்ளாதே என்று இறைவனால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டேன். அதை முழுமையாக செயல்படுத்துவது என்று முடிவெடுத்தேன். என்னிடம் கடன் பட்டவர்களைத் தவிர மற்றவர்களிடம் பெற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்தேன். ஏனென்றால் பிறரிடம் உதவி பெற்றால் அதற்கு பிரதியாக அவருக்கு உடனே உதவிட வேண்டும். இல்லையென்றால் அவர் செய்த பாவத்தில் ஒரு பகுதி நம்மை அடைகிறது. யாரிடமிருந்து உதவி பெறுகிறோமோ அவருடைய கெட்ட குணங்களில் ஒரு பங்கு நம்மைப் பற்றிக் கொள்கிறது. உதாரணமாக காம இச்சை அதிகம் உள்ளவனிடம் உதவி பெற்றால் நமக்கும் காம இச்சை அதிகரிக்கிறது. திருடனிடம் உதவி பெற்றால் நமக்கும் திருடும் எண்ணம் மேலோங்குகிறது. இதை நான்  ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன். காலம் வரும் போது அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் யாரிடமிருந்தும் உதவி பெற்றுக் கொள்ளக் கூடாதா? எப்படி  இது சாத்தியம்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. யாரிடமும் உதவி பெற்றுக் கொண்டால் உடன் அதற்குச் சமமாகவோ, அல்லது அதைவிட அதிகமாகவோ திரும்பிக் கொடுத்துவிடுங்கள். நல்லவர்களிடம் அதாவது குணத்தால், வாழ்க்கை முறையால், செயல்களால் உயர்ந்தோரிடமிருந்து உதவி பெற்றுக் கொள்ளுங்கள். தவறில்லை. ஆனாலும் அதற்கு தகுந்த அளவு அல்லது அதற்கு அதிகமாக அவர்களுக்கும் உதவுங்கள்.

என்னிடம் கடன்  பெற்றவர்களிடம் கடனை  திருப்பிக் கொடுக்குமாறு கேட்டேன். கடன் பெற்ற பலரில் ஒருவர் மட்டுமே திருப்பிக் கொடுத்தார். மற்றவர்கள் என்னிடம் பணமில்லை என்று மறுத்தனர். வாங்கிய கடனை, உதவியை ஒவ்வொருவரும் திருப்பிக் கொடுத்துதான் ஆக வேண்டும். உடனே கொடுத்துவிட்டால் வட்டி கிடையாது. எவ்வளவு காலம் அதிகமாகிறதோ அதற்கு கூட்டுவட்டியுடன் கொடுக்க வேண்டியிருக்கும் அல்லது அடுத்தடுத்த பிறவிகளில் பலமடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். வாங்கியதை திரும்பிக் கொடுக்கும் வரை பிறவிப் பிணி தொடர்ந்து கொண்டேயிருக்கும். யாருமே இதிலிருந்து தப்ப முடியாது. அதனால் தான் யாரிடமும் நாம் பணம் பெற்றுக் கொள்ளக் கூடாது என நினைத்து சொத்துக்களை விற்க முடிவு செய்தேன். ஏனெனில் நாம் பூமியை விட்டு மறையும் போது பாவ புண்ணித்தை மட்டுமே எடுத்துச் செல்கிறோம். சொத்து, நகை, மனைவி, மக்கள் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம். ஆம், பின்னால் விடுவதை கொஞ்சம் முன்னால் விட்டுவிட்டேன். அவ்வளவே.

ஏற்கனவே பகிர்ந்திருந்த சுமார் 3600 சதுர அடி கொண்ட ஒரு மனையை ஒருவர் மூலமாக விற்றேன். கிட்டதட்ட எனக்கிருந்த சுமார் 15 லட்ச ரூபாய் கடனனைத்தையும் அடைத்தேன். மீதமிருந்த பணத்தைக் கொண்டு சமாளித்து வருகிறேன். மேலும் சில காலங்கள் வீட்டிலேயே சில மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினேன். என்னுடைய உடல், மன ஆரோக்கியம் முன்னேறி வருகிறது. சீக்கிரம் இறையருளால் பழைய நிலைக்கு மேம்படுவேன் என்று நம்புகிறேன். ஆம், அன்பு நெஞ்சங்களே! கடினமாக, நேர்மையாக உழையுங்கள், பிறரிடம் கடனோ, இலவசமாகவோ பெறாது சிக்கனமாக வாழுங்கள். நல்லவர்களுக்கு உதவுங்கள். உதவக் கூடியவர்களுக்கு உதவுங்கள். மேன்மையடைவீர்கள். உதவக்கூடியவர் அல்லது உதவக்கூடாதவர்கள் எப்படி அறிந்து கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். நமது வலைதளத்தின் ‘வழிகாட்டி மூவர்‘ என்ற பதிவை உள்வாங்கி செயல்படுத்துங்கள். படிப்படியாக உணர்ந்து கொள்வீர்கள். நன்றி. வணக்கம். அடுத்து பதிவில் சந்திப்போம்.