ஆரோக்கிய வாழ்வு பாகம்-1

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய இறைவனை இறைஞ்சுகிறேன். இன்று ஆரோக்கிய வாழ்வு என்ற தலைப்பில் எனது கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று மூட்டு வலி, கழுத்துவலி மற்றும் இடுப்பு வலியால் பல மக்கள் அவதிப்படுகின்றனர். அதற்கான காரணங்களையும், தீர்வுகளையும்  அலசுவோம். அன்று ஒரு நாள்  எனது உதவியாளர் பணிக்கு வந்திருந்தார். அமரச் சொன்னேன். நானோ குதிகாலால் நடந்து வந்தேன். என்னைப் பார்த்ததும், ‘ஏன் அப்படி நடந்து வருகிறீர்கள்?’ என்றார். அமர்ந்தவுடன் எனது காலைக் காட்டி, ‘கால் மற்றும் பாதத்தின் அடிப்பகுதியிலும் எண்ணெய் தேய்த்திருக்கிறேன். ஆதலால் கீழே எண்ணெய் படாதவாறு அப்படி நடக்கிறேன்’ என்றேன். ‘உனது அன்னைக்கு மூட்டு வலி என்றாயே! கவனமாகக் கேள்’ என்றேன்.

மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி ஏன் ஏற்படுகிறது தெரியுமா? உராய்வு(Friction) தான் முக்கிய காரணம். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது சாலைகள் மேடு பள்ளமாக இருப்பதால் அதிக உராய்வு ஏற்படுகிறது. இதனால் எலும்பின் இணைப்புகள் உள்ள பகுதி அதிகமாகத் தேய்கிறது. அதனால் தான் வலி ஏற்படுகிறது. இதை எப்படி குறைப்பது என்று ஆலோசித்தால் (1) நெடுந்தூர வாகன பயணங்கள் குறைக்க வேண்டும். (2) உராய்வை குறைக்க மூட்டு இணைப்புகளிலும் உடலிலும் எண்ணெய் சத்தை அதிகப்படுத்த வேண்டும். எலும்புகள் பலவீனமடைவதற்கும், தேய்வதற்கும் இன்னொரு முக்கிய காரணம் உடலில் விட்டமின் D குறைபாடு ஆகும். ஆக விட்டமின் D  அளவையும் அதிகப்படுத்த வேண்டும். இவற்றை நாம் செய்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, எலும்புகள் எளிதாக உடைந்து போதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

சூரிய ஒளியிலிருந்து நேரடியாக விட்டமின் D கிடைக்கிறது என்ற கருத்து தவறானது. சூரிய ஒளி நமது தோலில் உள்ள  கொழுப்பு படலத்துடன் சேரும் போது விட்டமின் D உருவாகிறது. உடலால் ஈர்க்கப்படுகிறது. குளித்து உடலை நன்கு சுத்தப்படுத்திக் கொண்டு சற்று உலர்ந்தவுடன் லேசாக உடம்பின் அனைத்து பாகத்திலும் எண்ணெய் படுமாறு தேய்ப்பது மிக நல்லது. அதனால் தோலிலுள்ள சிறு துவாரங்கள் மூலம் எண்ணெய் உள்ளே செல்கிறது. மேலும்  உள்ளங்கால், உள்ளங்கை, பிறப்புறுப்பின் மேற்பகுதி, பிறப்புறுப்பை சுற்றியுள்ள பகுதி மற்றும் தொப்புள் போன்றவற்றில் எண்ணெய் சற்று அதிகம் தேய்க்கும் போது இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் உடலின் பல உள் உறுப்புகள் மேம்படுகின்றன. பல நோய்களிலிருந்து குணம் கிடைக்கிறது. பாதத்தில, எண்ணெய் போட்டுக் கொண்டு எப்படி வேலைகள் செய்வது என்று நீங்கள் கேட்கலாம். சளித் தொல்லை இல்லாதவர்கள்  தூங்கும் போது பாதத்திற்கு தேங்காய்  அல்லது நல்லெண்ணெய் தேய்த்து கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் சிறந்தது. சளித் தொல்லை உள்ளவர்கள் பாதத்தில் எண்ணெய்  தேய்த்துக் கொள்ளும் போது சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து காலை நீட்டி வைத்துக் கொண்டு பாதத்திற்கு நன்றாக எண்ணெய் தேய்த்து அழுத்தி பிடித்து விடலாம். உட்கார்ந்து கொண்டு செய்யக் கூடிய வேலைகளை செய்து கொண்டிருக்கலாம் அல்லது தொலைக்காட்சி இரசிக்கும் போதோ, புத்தகம் வாசிக்கும் போதோ எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம். பாதம், உள்ளங்கை மற்றும் தொப்புளில் இருக்கும் எண்ணெய் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஊடுருவிச் செல்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதனால் மூட்டு, இடுப்பு, கழுத்து வலி பெருமளவு குறைகிறது.

இது எப்படியென்றால் நாம்  இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் உராய்வைக் குறைக்க எண்ணெய் அல்லது மசகு களிம்பு (Grease) உபயோகிக்கிறோம். அதனால் இயந்திரங்களின் பாகங்களில் தேய்மானம் குறைந்து நெடுங்காலம் உழைக்கிறது. தோலில் எண்ணெய் பசை அதிகரிக்கும் போது விட்டமின் D அதிக அளவில் உருவாகிறது. இது எலும்பு வளர்ச்சிக்கும், எலும்பை வலுப்படுத்துவதற்கும் மிகவும் உதவுகிறது.

மேலும் எண்ணெய் சத்துள்ள உணவுப் பொருட்கள் உட்கொள்வதை அதிகரிப்பதன் மூலமும் தேவையான மாற்றங்கள் நடைபெறுகின்றன. உதரணமாக தினமும் ஒரு கையளவு வேகவைத்த நிலக்கடலை, அதிக பட்சம் ஒரு மூடி தேங்காய் துருவல், அல்லது தேங்காய், இட்லி, தோசை சாப்பிடும் போது இட்லி பொடியுடன் தூய்மையான நல்லெண்ணெய் எடுத்துக்  கொள்வது மிகவும் நல்லது அல்லது எள்பொடி அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடலில் தேவையான கொழுப்புச் சத்து கிடைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தவிர்த்துவிட்டு செக்கிலிருந்து நேரடியாக கிடைக்கும் எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதிகளவு வெண்டைக்காய் உட்கொள்வது எலும்பு சேருமிடங்களில் உராய்வினால் ஏற்படும் தொல்லைகளை பெருமளவு குறைக்கிறது. நிலக்கடலை தினமும் சாப்பிடுவதால் சிலருக்கு பித்தத்தின் சீற்றம் அதிகமாகி தலைவலி, வாந்தி அல்லது மனக் குழப்பம் ஏற்படலாம். இதைத் தவிர்ப்பதற்கு நிலக்கடலை சாப்பிடுவதற்கு 5 நிமிடங்கள் முன்னர் 1 குவளை எலுமிச்சை சாறு(பாதி எலுமிச்சை சாறு, ஒரு குவளைத் தண்ணீர், தேவையான அளவு உப்பு) அருந்தலாம் அல்லது வேர்க்கடலை சாப்பிட்ட பின் ஒரு கைப்பிடி அளவாவது மாதுளை முத்துக்கள் சாப்பிடலாம்.

அடுத்து எண்ணெய்க் குளியல். இதற்கு நல்லெண்ணெய் (எள் எண்ணை) உபயோகப்படுத்துவது சிறப்பு. வாரத்திற்கு இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறப்பானது. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியல் செய்வது நலமென்று சொல்கிறார்கள். காலை வேளையில் மிதமான சூட்டில் உடல் முழுவதும் அதாவது காலிருந்து தலை வரை நன்றாக நல்லெண்ணெய் தேய்த்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நல்லெண்ணெய் உடலில் உள்ள துவாரங்கள் வழியே நன்றாக ஊடுருவ வழி செய்ய வேண்டும். எண்ணெய் நன்றாக உடலில் ஊடுருவுவதால் தோலடியில் உள்ள கொழுப்பு படலத்தின் செறிவு அதிகப்படுகிறது. அதன் பிறகு மிதமான சூட்டில் குளிக்க வேண்டும். உடலின் மேல் புறம் உள்ள எண்ணெய் அகற்றப்படுவதற்கு சீயக்காய், பச்சை பயிறு மாவு அல்லது கடலை மாவு தேய்த்து குளிக்கலாம். சோப்பு அல்லது ஷாம்பு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த எண்ணெய் குளியல் கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி மற்றும் சளிப் பிரச்சனைகளைக் குறைக்க வழி வகை செய்கிறது. உன் அம்மாவையும் செய்து பார்க்கச் சொல். நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றேன். இந்த நல்லெண்ணெய் உடலில் தேய்த்துக் கொண்டு முடிந்தால் காலை சூரிய ஒளியில் நடமாடினால்  மிகவும் நல்லது. விட்டமின் D உற்பத்தி மிக அதிகமாகும். எலும்புகள் உறுதியாகும். எலும்புத் தேய்வு கண்டிப்பாய் குறையும் என்றேன்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்  போது என்னுடைய முன்னாள் மாணவியும், தீவிர விசுவாசியுமான முதுநிலை மருத்துவர் திருமதி.தாரகேஸ்வரியைத் தொடர்பு கொண்ட போது விட்டமின் D எலும்புகளுக்கும் பற்களுக்கும் மிகவும் நல்லது நீரிழீவு நோய்க்கும் நல்லது என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றார். ‘நான் ஏற்கனவே இதை உணர்ந்திருக்கிறேன்’ என்றேன். 

அன்பு நெஞ்சங்களே! இப்படி எண்ணெய் சத்துக்களை அதிகமாக உண்டு இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் என்னாவது என்ற சந்தேகம் சிலருக்கு எழலாம். மேற்கூறிய எல்லாமே நல்ல கொழுப்பைத் தான் உடலில் அதிகரிக்கும். கெட்ட கொழுப்புதான் இரத்த நாளங்களில் படிகிறது. தினமும் மூன்று முதல் ஐந்து பூண்டரிசிகள் காலை உணவுடன் எடுத்துக் கொண்டால் இப்பிரச்சனையும் தீர்ந்துவிடும். பூண்டு உட்கொள்வது வாயுத் தொல்லைகளுக்கும் மிகவும் நல்லது. வாயுவினால் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகள் இதனால் குணமாகும். நாம் நன்றாக எண்ணெய் தேய்த்து உடலில் ஊறவைத்து குளிக்கும் போதும், குளித்தபின் உடலின் பாகங்களுக்கு எண்ணெய் தேய்க்கும் போதும் இந்த கொழுப்பு படலத்திற்கு தேவையான எண்ணெய் கிடைக்கிறது. மேலும் கொழுப்பு சத்துள்ள தாவர உணவுகளை தேவையான அளவு உண்டால் போதும் இந்த கொழுப்பு படலத்தின் செறிவு இன்னும் அதிகரிக்கிறது. தோலுக்கடியில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாடும் சிறப்பாக அமைகிறது. இந்த கொழுப்பு படலத்தின் செறிவு அதிகமாக விட்டமின் D நம் உடலுக்கு கிடைப்பதும் அதிகமாகிறது. தினமும் முப்பது முதல் அறுபது நிமிடங்கள் காலை, மாலை வேளைகளில் நமது உடலில் சூரிய ஒளி படுவது மிகவும் நல்லது. சுறுசுறுப்பு அதிகமாகும். கால்சியம் சத்து அதிகமுள்ள பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், ஆரஞ்சு, சோயா, கீரைகள், முட்டை, முட்டைகோஸ், கேழ்வரகு, பீன்ஸ், எள், பாதாம், அத்தி மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு முதலியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.  இந்த விட்டமின் D யினால்தான் உணவுப் பொருட்களிலுள்ள கால்சியம் உடலால் நன்கு கிரகிக்கப்படுகிறது. விட்டமின் D குறைந்தால் எவ்வளவுதான் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலும் உடல் குறைந்த அளவே கால்சியத்தை கிரகிக்கிறது. மீதமுள்ள கால்சியம் வெளியேற்றப்படுகிறது. விட்டமின் D உடலில் அதிகமானலும் நச்சுத் தன்மை ஏற்பட்டு பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.

இன்று சிறுவயதிலேயே கழுத்துவலி, இடுப்பு வலியால் பலர் அவதிப்படும் சூழலும் உள்ளது. காரணம்

(1) பாலர் வகுப்புகளிலேயே பள்ளிக்காக அதிக தூரம் பயணம் செய்வதால் சாலைகளின் மேடு, பள்ளங்கள் உராய்வை அதிகரிக்கின்றன.
(2) புத்தகப் பையின் சுமை
(3) தரமான உணவுப் பொருள் கிடைக்காமை
(4) போதுமான அளவு சூரிய ஒளி கிடைக்காமை.
கொரோனா கால கட்டத்தில் வலைதள வகுப்புகளாலும் பலர் பாதிக்கபட்டனர். மேலும் உட்காரும் நிலை சரியில்லை என்றாலும் கழுத்துவலி, மற்றும் இடுப்பு வலியால் அவதிப்பட நேர்கிறது. பெரியவர்களும்கூட  அளவுக்கு அதிகமான எடையைத் தூக்கும் போது கழுத்துவலி மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுகின்றனர்.
அன்பு நெஞ்சங்களே! உங்கள் குழந்தைகளை அருகிலுள்ள பள்ளியிலேயே சேருங்கள். அருகில் நல்ல பள்ளி இல்லையென்று வெகு தொலைவு அனுப்ப நேர்ந்தால் உங்கள் வீட்டை பள்ளிக்கருகில் தற்காலிகமாக மாற்றிக் கொள்வது நல்லது. சிறு வயதிலேயே எண்ணெய் குளியலை பழக்கப்படுத்துங்கள், வழக்கப்படுத்துங்கள். பள்ளி நிர்வாகங்கள் புத்தகப் பையின் சுமையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. இன்றைய மாணவர்களே நாளைய இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கின்றனர். ஆதலால் அவர்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. பள்ளி நிர்வாகங்களும், அரசாங்கமும் இவ்விடயத்தில் தகுந்த நடவடிக்கைகளை  எடுத்தால் வருங்கால தலைமுறையினரின் ஆரோக்கிய மேம்பாடு சிறக்கும். நன்றி! வணக்கம்! அடுத்த பதிவில் சந்திப்போம்.

குறிப்பு: மேற்கூறிய சில உணவுப் பொருட்களில் சிலருக்கு ஒவ்வாமை இருந்தால் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்