Click ▶ for audio
அன்பு நெஞ்சங்களுக்கு உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பு வணக்கங்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை. அதற்கு முந்தைய நாள் குருப்பெயர்ச்சி பூஜைகள் பல கோவில்களில் நடந்தன. குருப்பெயர்ச்சிக்கான கோவில் பிரசாதம் மேசையில் இருந்தது. எனது முன் அமர்ந்திருந்த மாணவர்களிடம் அதனைக் காட்டி ‘குருப்பெயர்ச்சி பிரசாதம் வந்திருக்கிறது’ என்றேன். பிரசாதத்தையும் விநியோகித்தேன்.
‘மாணவர்களே! குருப்பெயர்ச்சி என்றால் என்ன தெரியுமா?’ என்றேன்.
‘குருவை வழிபடும் நாள்’ என்றான் ஒரு மாணவன். ‘குருவைத் தேடும் நாள்’ என்றான் இரண்டாமவன். ‘குருவைக் காணும் நாள்’ என்றான் மற்றொருவன். ‘நேர் ஆற்றல் எதிர் ஆற்றல் மாறும் நாள்’ என்றான் இன்னொருவன். இப்படிப் பல பதில்கள். நான் சிரித்துக் கொண்டே, ‘பேசுகிறேன் கேளுங்கள்’. ‘பெயர்ச்சி என்றால் இங்கு இடப் பெயர்ச்சி என்று பொருள். அதாவது குரு என்ற வியாழ பகவான் (வியாழன் கோள்) ஒரு ராசி மண்டலத்திலிருந்து இன்னொரு ராசி மண்டலத்திற்கு இடப் பெயர்வதே குருப் பெயர்ச்சி. ராசி மண்டலம் என்பது விண்மீன்கள் கூட்டமாகும். அதாவது சில விண்மீன்களை கோடிட்டு இணைத்தால் அவை சில வடிவங்களில் தோன்றுகின்றன. அவைதான் சிம்மம், மீனம், கும்பம், தனுசு போன்ற பன்னிரண்டு ராசி மண்டலங்கள். உருவத்தை வைத்து பெயர் கொடுத்தார்கள்.
சந்திரன் என்ற துணைக்கோள் பூமியைச் சுற்றி வருகிறது. பூமி, சந்திரனுடனும் மற்றும் பல கோள்களும் அவற்றின் துணைக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவை எல்லாம் சேர்ந்ததே சூரிய குடும்பம். இச்சூரிய குடும்பம் நமது விண்மீன் மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது. நமது விண்மீன் மண்டலம் (Galaxy) பால்வெளி விண்மீன் மண்டலம் (Milkyway Galaxy) என்று அழைக்கப்படுகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி (1011) நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு சூரியனே. இந்த விண்மீன் மண்டலம் பிரபஞ்ச (UNIVERSE) மையத்தைச் சுற்றி வருகிறது. நமது விண்மீன் மண்டலத்தைப் போல் பிரபஞ்சத்தில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி (1011) விண்மீன் மண்டலங்கள் உள்ளன. இவை அனைத்துமே பிரபஞ்ச மையத்தைச் சுற்றி வருகின்றன. ஆக, நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) தோராயமாக 1022 ஆகும். அதாவது பத்தாயிரம் கோடியையும் பத்தாயிரம் கோடியையும் பெருக்கினால் எத்தனை வருமோ அதுதான்.
நியூட்டனின் நிறை ஈர்ப்பு விசையைப் பற்றி படித்திருப்பீர்கள். அதாவது ஒவ்வொரு நிறையும் (mass) அடுத்த நிறையை கவர்ந்திழுக்கிறது. அதைப் போல் பூமிக்கும் மற்ற கோள்களுக்கும் உள்ள ஈர்ப்பு விசையால் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் கவரப்படுகின்றன. இவை இரத்த ஓட்டத்திலும், எண்ணங்களிலும் மாற்றத்தை உருவாக்குகின்றன. இப்படி சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையும் மனித எண்ணங்களிலும், குணங்களிலும் மாற்றத்தை உருவாக்குகின்றன. இதை நம் முன்னோர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே உணர்ந்திருந்தனர்.
இப்படி புதன், வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய், வியாழன் போன்ற கோள்களின் ஆதிக்கத்தைப் பொருத்து புதன் திசை, சுக்கிர திசை, செவ்வாய் திசை, வியாழ திசை என்று கூறுவது மரபு. ஆக கோள்கள், சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் அமையும் நிலை ஆகியவை நமது எண்ணங்கள், செயல்கள் மற்றும் குணங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில நேரங்களில் விளைவுகள் நன்றாகவும் சில நேரங்களில் விளைவுகள் மோசமானதாகவும் இருக்கும். இந்த விளைவுகளை அலசி ஆராய்வதே சோதிடக்கலை’ என்றேன்.
ஆம், அன்பு நெஞ்சங்களே! நட்சத்திரங்கள் வெகு தொலைவில் உள்ளன. அதை ஒப்பிடும் போது குரு, சனி போன்ற கோள்கள் அருகில் உள்ளன. குரு எப்படி ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து இன்னொரு நட்சத்திரக் கூட்டத்திற்கு இடம் பெயர முடியும். இதென்ன அபத்தம் என்று சிலர் நினைக்கலாம். பூமியில் இருந்து பார்க்கும் போது அப்படித் தோன்றுகிறது. அவ்வளவே!
சோதிடக்கலையில் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தைக் கணித்து மனிதனின் செயல்பாடுகள் எப்படி அமையும் என்று சொல்கிறார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். சில சோதிடர்கள் மிகச் சரியாக கணிப்பார்கள். சோதிடத்தை வியாபாரமாகக் கொண்டவர்களால் பெரும்பாலும் சரியாக கணிக்க முடியாது. பிறக்கும் நேரத்தில் கோள்கள், மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் நிலையைப் பொருத்து இராசி கணக்கிடப்படுகிறது. குழந்தை பிறக்கும் நேரம் எதைப் பொருத்து அமைகிறது என்று யோசித்தால் (1) தாய் கருவுறும் நேரம் (2) தாய் வசிக்குமிடம் (3) கர்ப்ப காலத்தில் தாயின் செயல்பாடுகள் (4) கர்ப்ப காலத்தில் தாயின் எண்ணங்கள் போன்றவை பெரும்பாலும் காரணம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இயற்கையாக பிறந்த குழந்தைக்குத்தான் சோதிடப் பலன் மிகச் சரியாக அமையும். செயற்கையாக, அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதகப் பலன் மிகச் சரியாக அமையும் என்று சொல்ல முடியாது. இன்று மருத்துவர்கள் பலர் நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்கிறார்கள். சோதிடர்களுள் சிலரும் இதைப் பரிந்துரைக்கின்றனர். இது மிகவும் தவறானது. இவர்களின் சாதகப் பலன் பெரும்பாலும் தவறாகவே அமையும்.
சோதிடக்கலை பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே உருவானது. அக்காலத்தே எங்கும் நடந்தே சென்றனர். பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது பெரும்பாலும் உள்ளுரிலோ அல்லது எளிதாக நடந்து செல்லும் தொலைவிலேயோ இருக்கும். பிரசவ காலத்தில் ஒரு ஊரிலும் கர்ப்ப காலத்தில் பக்கத்து ஊரிலுமிருந்தாலும், ஊர்கள் அருகருகே இருப்பதால் ஈர்ப்பு விசையின் தாக்கம் ஒரே மாதிரியாக இருக்கும். ஆதலால் சாதகப் பலன் சரியாகவே அமைந்தது. ஆனால் தற்போதைய நிலை அப்படி அல்ல. மேலும் கர்ப்ப காலத்தில் ஐந்து மாதங்கள் ஒரு இடத்திலும் மற்ற ஐந்து மாதங்கள் அந்த இடத்திலிருந்து வெகு தூரத்திலும் உதாரணமாக ஐந்து மாதங்கள் சென்னையிலும் அடுத்த ஐந்து மாதங்கள் டெல்லியிலும் வசிக்க நேர்ந்தால் அந்த சாதகப் பலன் சரியாக அமையும் என்று சொல்ல முடியாது. இன்று ஐந்து மாதங்கள் இந்தியாவில் ஐந்து மாதங்கள் அமெரிக்காவில் என்று வசிக்கும் பெண்ணின் குழந்தைக்கு சாதகப் பலன் கண்டிப்பாகத் தவறாகத்தான் அமையும். ஏனெனின் கோள்கள், மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் நிலை மற்றும் ஈர்ப்பு விசைகள் இடத்திற்கு இடம் மாறுபடும். அதனால் தான் இன்று சாதகம் பொருந்தினாலும் மணவாழ்வில் பல பிரச்சனைகள்.
இதைப் பகிர்ந்து கொள்ளும் போது என் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. வெளிநாட்டில் வசித்து வரும் எனது சீடர்களில் ஒருவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தபோது, ‘பிரசவத்திற்காக இந்தியாவிற்கு அவளது தாய் வீட்டிற்கு அனுப்பலாமா’ என்றான் சீடன். நானோ, ‘அவள் அம்மாவை அங்கே வரச்செய்து பிரசவம் பார். ஏனெனில் சோதிடர்கள் பிறந்த இடத்தையும் நேரத்தையும் வைத்தே சாதகம் கணிப்பார்கள். பிரசவ காலத்தில் ஒரு இடத்திலும் கர்ப்பகாலத்தில் வேறு இடத்திலும் இருந்தால் சாதகப்பலன் சரியாக அமையாது. பிற்காலத்தில் சாதகத்தை வைத்து முடிவு செய்யும் போது சிக்கல்கள் ஏற்படும்’ என்றேன். எனது கருத்தை அவனும் ஏற்று செயல்பட்டான்.
அதெப்படி கோள்களின் ஈர்ப்பு மனிதனைப் பாதிக்கும் என்று நீங்கள் கேட்கலாம். நீங்களே பலரிடம் விசாரித்துப் பாருங்கள். பெளர்ணமி நாட்களில் மனக் குழப்பம், மன அழுத்தம், குற்ற சம்பவங்கள், கொலை, தற்கொலை, மரணம், மாரடைப்பு, பாம்பு மற்றும் விஷப்பூச்சி கடிகள் போன்றவை அதிகரிப்பதை புரிந்து கொள்வீர்கள். மேலும் கடலில் அலைகள் ஆக்ரோசமாக எழும்புவதையும் நீங்கள் கண்டிருக்கலாம். இதற்கு காரணம் பூமிக்கும் சந்திரனுக்கும் ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றமே.
ஆம், மாதத்தின் மிகவும் மோசமான நாள் பெளர்ணமி. அதற்கு முந்தைய நாளும், பிந்தைய நாளும் மேற்கூறிய விளைவுகள் சற்று குறைவாக இருக்கும்.
சூரியன், சந்திரன், கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையில் நமக்கு ஏற்படும் கெட்ட விளைவுகளின் மோசமான தாக்கத்தை முறையான உணவுப் பழக்கம், தூக்கம், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனப் பயிற்சிகளின் மூலம் சிறிதளவு குறைக்க முடியும். நேர்மையான, உண்மையே பேசும் அர்ச்சகர்கள், சாஸ்திரிகள் மூலம் பூஜை மற்றும் பரிகாரங்கள் செய்வதன் மூலம் ஓரளவு குறைக்க முடியும். பூஜை, பரிகாரம் என்று ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல்களும் செயல்படுகிறது என்று கேள்விப்படுகிறேன். ஆதலால் சாஸ்திரிகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகச் செயல்படுங்கள். மேலும் புண்ணிச் செயல்களை அதிகரித்து பாவச் செயல்களை குறைப்பதன் மூலம் உருவாகும் எண்ணங்களின் தாக்கம் கெட்ட விளைவுகளின் தாக்கத்தை மேலும் குறைக்கும். முயன்று பாருங்கள். வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Scientific approach
Thank you Mr.Jeyaraj!
நல்ல ஆன்மீக தகவல் ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஜோதிடத்தையும் திறம்பட ஆய்வு செய்து எழுத்து உருவம் கொடுத்த உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி
அன்புடையீர்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!
அன்புடன்,
கிருஷ்ணதாசன்