மனிதர்கள் ஐந்து வகை

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். ஒரு நாள் திருமணமான என் உறவுக்காரப் பெண் ஒருத்தி சில பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டி என்னைச் சந்தித்தாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘நீ பெண்ணல்ல’ என்றேன். அதிர்ச்சியுடன் என்னை நிமிர்ந்து நோக்கினாள். மறுபடியும், ‘நீ பெண்ணல்ல, ஆண்மை கலந்த பெண்’ என்றேன். மறுபடியும் விளித்தாள்.

ஐந்து வகை மனிதர்களைப் பற்றிக் கூறுகிறேன் கவனமாகக் கேள் (1)ஆண் (2)பெண் (3)ஆண்மை கலந்த பெண் (4)பெண்மை கலந்த ஆண் (5)ஆணும், பெண்ணும் அற்றவர்கள் அல்லது மூன்றாம் பாலினம் என்று கூறப்படுபவர்கள். பெண்களின் குணங்களில் சிலவற்றை ஆண்கள் பெற்றிருந்தால் அவர்கள் பெண்மை கலந்த ஆண்கள். ஆண்களின் குணங்களில் சிலவற்றை பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் ஆண்மை கலந்த பெண்கள்.

நம் எல்லோருக்கும் தெரிந்த சிலரைக் கூறுகிறேன். மகாபாரதத்தில் கிருஷ்ணன், கர்ணன் போன்றோர் ஆண்கள். கிருஷ்ணனின் மனைவி ருக்மணி, துரியோதனன் மனைவி பானுமதி போன்றோர் பெண்கள். காண்டீபன் என்று புகழப்படும் அர்ச்சுனன் பெண்மை கலந்த ஆண். திரெளபதி, அர்ச்சுனன் மனைவி சுபத்திரை போன்றோர் ஆண்மை கலந்த பெண்கள். அதிலும் திரெளபதி ஆண் தன்மை அதிகம் உடைய பெண். ஆம் ஆண்மை கலந்த பெண்களில் சிலர் பெரும் சாதனைகளைப் படைக்கிறார்கள்.

இன்று அறிவியலின் தாக்கத்தால் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆண்மை  கலந்த பெண்கள் மற்றும் பெண்மை கலந்த ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைவது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் கேட்டினை உருவாக்கும்.

ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆண் தைரியம் மிக்கவன். பெண் பொறுமையும், பணிவும், பரிவும் உடையவள். சங்க இலக்கியங்கள் சொல்வது போல் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற குணங்கள் உடையவள். இப்பெண்கள் கணவருக்காகவும், மைந்தர்களுக்காகவும் தன்னை தியாகம் செய்வர். இங்கே மிகச் சிறந்த குழந்தைகள் உருவாக்கப்படுகின்றனர்.

ஒரு பெண்மை கலந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மணவாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும். இவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மிகவும் போற்றத்தக்கவாறு வாழ்வர்.

ஒரு பெண்மை கலந்த ஆணும், ஆண்மை கலந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குள் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். ஆனாலும் குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் தொடரும்.

ஆணும், ஆண்மை கலந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் பெரும்பாலும் மணமுறிவில் தான் முடியும். அல்லது கொலை, தற்கொலையில் கூட முடியலாம். இவர்கள் காதலித்தாலும் பெரும்பாலும் தோல்வியில் தான் முடியும். அப்படியே காதலில் வென்றாலும் மணவாழ்க்கை பெரும்பாலும் மோசமானதாகவே அமையும்.

கூறியதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண், ‘என் மணவாழ்வில் எப்போதும் பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் இருக்குமா?’ என்றாள். ‘ஆம்’ என்றேன் புன்னகையுடன். காரணம் அவள் ஆண்மை கலந்த பெண். அவள் கணவனோ பெண்மை கலந்த ஆண். அவளை பல சேவை நிறுவனங்களுக்கு நன்கொடைகள் அளிக்குமாறு கூறினேன். அவளும் செய்திருப்பாள் என்று நம்புகிறேன்.

பெண்மை கலந்த ஆண்கள் மற்றும் ஆண்மை கலந்த பெண்கள் எப்படி உருவாகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு ஊழ்வினைதான் காரணம். முந்தைய சில பிறவிகளில் ஆணாகப் பிறந்து இப்பிறவியில் பெண்ணாகப் பிறப்பவர்களுக்கு ஆண்களின் குணங்கள் அதிகமாக அமைந்திருக்கும். இவர்கள் ஆண்மை கலந்த பெண்கள். இப்பெண்கள் கணவனையும் குழந்தைகளையும் ஆதிக்கம் செய்யவே விரும்புவர்.  அதைப்போல் முந்தைய சில பிறவிகளில் பெண்களாகப் பிறந்து தற்போது ஆணாகப் பிறந்தால் பெண் குணம் அதிகமாக அமையும். இவர்கள் பெண்மை கலந்த ஆண்கள். இவர்கள் சில நேரம் ஆதிக்கம் செலுத்தினாலும் சில நேரங்களில் ஆண்மை கலந்த பெண்ணிடம் அடங்கியும் நடந்து கொள்வர். எப்படி பெண்கள் ஆண்களிடம் அன்புடன் அடங்கி நடப்பார்களோ அப்படியே பெண் தன்மை மிக அதிகமாக உடைய ஆண்களும் ஆண்மை கலந்த பெண்களிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவர். இதை நீங்கள் பல இடங்களில் கண்டிருக்கலாம்.

திருமணப் பொருத்தம் கணிக்கும் போது சாதகப் பொருத்தம் மட்டுமில்லாமல் ஆண் மற்றும்  பெண் வளர்ந்த சூழ்நிலையையும் பெற்றோர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரே சாதியாக இருந்தாலும் கூட வளரும் சூழ்நிலையைப் பொறுத்து குணம் மாறுபடுகிறது. ஆம் பெற்றோர் மற்றும் சுற்றத்தினரின் நடவடிக்கைகள் ஒரு மனிதனின் குணங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்று சாதகப் பொருத்தம் பார்த்து பெற்றோரால் நிர்ணயிக்கப்படும் திருமணங்களில் கூட தற்கொலை, மணமுறிவு ஏற்படுவதற்கு ஊழ்வினையும் வளரும் சூழ்நிலைகளுமே முக்கிய காரணம்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் வரன்களின் குணங்களும், பழக்க வழக்கங்களும் மிகச் சிறப்பாக இருந்தன. ஏனெனில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. இப்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்து  பெரும்பாலும் தனிக்குடித்தனங்களாகிவிட்டன. ஆதலால் குழந்தைகளின் குணநலன்களை நிர்ணயிப்பதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், தொலைக்காட்சி, வலைத்தளங்கள், இணையம் போன்றவை பெரும் பங்கு வகிக்கின்றன. ஆதலால் வரன் தேர்ந்தெடுப்பதில் குடும்ப பாரம்பரியத்தை விட வளரும் சூழ்நிலையை கவனிப்பது மிகவும் சிறப்பானது. புண்ணியச் செயல்களை அதிகரித்து பாவச் செயல்களைக் குறைத்தால் பிரச்சனைகளை குறைக்க முடியும்.

இதை எழுதும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. எனது அப்பா அந்தக் கதையை கூறியதாக எனது தங்கை என்னிடம் கூறினார். அதைப் பற்றி உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு மன்னன் நாட்டை மிகச் சிறப்பாக ஆண்டுகொண்டிருந்தான். அவனுக்கு வெகுகாலம் குழந்தைப் பேறு இல்லை.  குழந்தை வேண்டி தான, தருமங்களைச் செய்தான். யாகம் நடத்தினான். புண்ணித்தின் பலனால் குழந்தை பிறந்தது. சோதிட மேதை ஒருவரை வரவழைத்தான் மன்னன். இளவரசன் பிறந்த நேரத்தை சொல்லி  சாதகம் கணிக்கச் சொன்னான். அவரோ, ‘மன்னா! இளவரசர் பிறந்தது பரணி நட்சத்திரம். ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வர்’ என்பது முதுமொழி.  ஆகவே தங்கள் மகன் பல நாடுகளை வென்று பெரும் புகழ் பெற்ற பேரரசனாகத் திகழ்வார்’ என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த துணி வெளுப்பவனுக்கோ மிக்க மகிழ்ச்சி. தனது மகனும் பேரரசன் ஆவான் என நினைத்தான். ஏனெனில் அவனுக்கும் அதே நாளில் அதே நேரத்தில் ஒரு மகன் பிறந்திருந்தான். உடன் ஓடிப்போய் தன் மனைவியிடம் தெரிவித்து மகிழ்ந்தான். மறுநாள் சோதிட மேதையைச் சந்தித்தான். அவரோ துணி வெளுப்பவரிடம்,  ‘அரசன் மகன் பல நாடுகளை வென்று பேரரசன் ஆவான். ஆனால் உன் மகனுக்கோ மேலும் பல ஊர்களிலிருந்து வெளுப்பதற்கு துணிகள் கிடைக்கும்’ என்றார். ஆம், வளரும் சூழ்நிலை ஒரு மனிதனின் குணங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஒரு நாள் என் மகளிடம் சில பிரச்சனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவள் என் தோழி வீட்டிலும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி பிரச்சனைகள். அப்பா வெளிநாட்டிலிருப்பதால் ஒத்துப்போகிறது என்ற தொனியில் பேசினாள். நான் இக்கட்டுரையைக் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். ‘இப்படி எழுதினால் சிலர் கோபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடுமே’ என்றாள். ‘நான் என் கடமையைச் செய்கிறேன். சிலர் கோபிப்பார்கள் என நினைத்து என்னால் உணர்ந்த உண்மைகளை எழுதாமல் இருக்க முடியாது. ஏனெனில் இக்கருத்துகள் பலருக்கு உபயோகமாக இருக்கும். பெற்றோர்களுக்கு தம் மைந்தர்களுக்கு தகுந்த வரன்களை முடிவு செய்வதிலும் உபயோகமானதாக இருக்கும்’ என்றேன். ‘காதலர்களுக்கும் தகுந்த துணையைத் தேடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ‘பெரும்பாலும் மேற்கூறியது போலவே நடக்கும். ஆனால் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்’ என்றேன். மேலும் ‘எல்லாம் பாவ, புண்ணிய விளையாட்டுக்களே. எந்த அளவுக்கு புண்ணியத்தை அதிகப்படுத்தி, பாவத்தைக் குறைக்கின்றனரோ அந்த அளவுக்கு தகுந்த, நல்ல வரன்கள் அமையும்’ என்றேன். எனது உதவியாளரும் இக்கட்டுரையை வாசித்துவிட்டு இதை வாசிக்கும் சிலர் கோபப்படலாம் என்ற தொனியில் பேசினார். நானோ, ‘நாம் உணர்ந்த உண்மைகளை உரக்கச் சொல்ல வேண்டியது நமது கடமை. நம்மைப் புரிந்து கொண்டு நம்முடன் பயணிப்பவர்கள் பயணிக்கட்டும். புரியாது நம்மை விட்டு விலகிச் செல்வோர் விலகட்டும்’ என்றேன். ஏனென்றால் இழப்பு அவர்களுக்கு தான்.
ஆம், அன்பு நெஞ்சங்களே புண்ணியம் தரும் செயல்களை அதிகப்படுத்துங்கள். பாவச் செயல்களைக் குறையுங்கள். உங்கள் எண்ணங்களில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வாழ்வு சிறக்கும். வாழ்த்துக்கள். நன்றி வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.