யாரைத் தேடுகிறாயோ?

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். சில மாதங்களுக்கு முன்பு காலை வழக்கமான நடைப் பயிற்சியின் போது ஆழ்வார்திருநகரில் காந்திஜி சாலையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும், பலரது துன்பங்களைப் போக்கிக் கொண்டிருக்கும் சிந்தாமணி விநாயகரை வழிபட்டுத் திரும்பினேன். தெரிந்த அன்பர் ஒருவர் என்னை நோக்கிப் புன்னகைத்தார்.

‘ஐயா, எனது மருமகன் உங்களை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறான். முன்பு வெளிநாட்டில் இருந்து வந்த போது தங்களைச் சந்திக்க வந்திருந்தாராம். ஆனால் தாங்கள் தங்கள் அலுவலகத்தைக் காலி செய்துவிட்டதால் உங்களைச் சந்திக்க முடியவில்லை. உடனே வெளிநாடு திரும்ப வேண்டியிருந்ததால் திரும்பிவிட்டதாகக் கூறினார். நான் அவரிடம், ‘நடைப் பயிற்சியின் போது நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறோம். உனக்கு நான் உதவுகிறேன்.’ என்று கூறினேன். தயவு செய்து அவரை இந்த எண்ணில் தொடர்பு கெள்ளுங்கள்’ என்று கூறி ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு விலகிச் சென்றார்.

எனது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அவர் எனது முன்னாள் மாணவர். எனது கல்வி நிலையத்தில் சில காலம் வேலை செய்தவர்.  கல்வி நிலையத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போது யோகாசனங்கள் கற்றுக் கொள்வதற்காக அவரை ஒரு யோகாசன நிபுணரிடம் அனுப்பினேன். பின்னர் தகவல் தொழில் நுட்ப பணியில் சேர்ந்து செயல்பட்டார். பல நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக பயணம் செய்தவர். சில வருடங்களுக்கு முன் அவரின் சில பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி என்னைச் சந்தித்தார்.

நானும் உடல், உள்ளத்தை மேம்படுத்தக் கூடிய சில பயிற்சி முறைகளைக் கூறி செயல்படுத்தச் செய்தேன். மேலும் ‘நாம் பிற்காலத்தில் நாட்டுக்கு பல சேவைகள் செய்ய வேண்டியுள்ளது. அப்போது நமக்கு நிறைய பணம் தேவைப்படும். ஆதலால் உனது பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பித்து உனது வருமானத்தில் குறைந்தது பத்து சதவிகிதத்தை அந்த வங்கிக் கணக்கில் செலுத்திவிடு. நாம் தேவைப்படும் போது அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்’ என்றேன். அவரும் செயல்படுத்தினார். அவர் பிரச்சனைகளும் குறைந்தன. ஒரு தடவை வெளிநாட்டில் இருந்து வந்த போது என்னிடம் ஒரு காசோலை புத்தகத்தைக் கொடுத்து, ‘உங்களுக்குத் தேவையான பணத்தை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். ஆனால் நான் அதை உபயோகிக்கவில்லை. வெளிநாடு சென்ற பிறகு பல வருடங்கள் என்னைச் சந்திக்கவில்லை. மேலும் அவரைப் பற்றி பல நினைவுகள் என்னை ஆட்கொண்டன.

நான் உறையும் வீடு போய் சேர்ந்ததும் அவருடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். என் குரலைக் கேட்டதும், ‘நீங்கள் யார்? எனக்குத் தெரியவில்லையே’ என்றார். ‘என்னை அதற்குள் மறந்துவிட்டாயா? பல வருடங்கள் நாம் பேசிக் கொள்ளவில்லை. அதனால் மறந்துவிட்டாயா?’ என்றேன். ‘மறுபடியும் நீங்கள் யார்? எனக்கு புரியவில்லையே’ என்றார். ‘நீ யாரைச் சந்திக்க வேண்டும் என்று தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறாயோ அவரே நான்’ என்றேன். அவர் புரிந்து கொண்டார். ‘சார்! சார்! நீங்களா பல வருடங்களாக நாம் பேசவில்லையாதலால் உங்கள் குரல் பிடிபடவில்லை’ என்ற தொனியில் பேசினார். ‘உங்களைச் சீக்கிரம் சந்திக்க வேண்டும்’ என்றார். ஆம், பல இளைஞர்கள் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி என்னைச் சந்திப்பதுண்டு. அவர் என்னிடம் தொலைபேசியில் பேசும் போதே அவர் குரலில் வெளிப்பட்ட கெட்ட அதிர்வுகள் என்னைத் தாக்கின. தொலைபேசி வாயிலாகவே இதை உணர முடிந்தது.

பாவச் சுமை அதிகமாக இருக்கிறது என்று உணர்ந்தேன். உடனடியாக புண்ணியத்தை அதிகரிக்க வேண்டும். பல சேவை நிறுவனங்கள், ஆசிரமங்களின் பெயர்களைக் கூறி உதாரணமாக சென்னை ராமகிருஷ்ணா மடம், தஞ்சை ராமகிருஷ்ணா மடம், வங்காளத்திலுள்ள பேலூர் ராமகிருஷ்ணா மடம், மந்த்ராலயா இராகவேந்திரர் கோவில், சிருங்கேரி சாரதா பீடம். சென்னையில் மிகச் சிறப்பாக அன்னதானம் செய்து வரும் அருட்பெருஞ்ஜோதி அன்னதான மிஷன் மற்றும் சில ஆலயங்கள் போன்றவற்றிற்கு அன்னதானம், ஆரம்பக்கல்வி மேம்பாட்டிற்காக நன்கொடைகள் அளிக்கச் செய்தேன்.

வங்கிக் கணக்கில் சில லட்சங்கள் குறைந்தது. அதன் பிறகு அவரை தொலைபேசியில் தோடர்பு கொள்ள செய்தி அனுப்பினேன். அவரும் தொடர்பு கொண்டார். அப்போது அவரிடம் இருந்து வெளிப்பட்ட அதிர்வுகள் என்னைப் பாதிக்கவில்லை. அதன் பின் நேரடியாக என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கினேன். ஆம்! புண்ணியச் செயல்களை அதிகரிக்க அதிகரிக்க நம்மிடம் இருந்து வெளிப்படும் எண்ண அதிர்வுகள் செம்மையாகின்றன. நமக்கும், சுற்றத்தினருக்கும் அதிக நன்மைகளை அளிக்கின்றன. நம் எண்ண அதிர்வுகள் செம்மையாகும் போது பல வித நோய்களிலிருந்தும் நாம் பாதுகாக்கப்படுகிறோம். ஏனெனில் பல நோய்களுக்கு  காரணமே மோசமான எண்ண அதிர்வுகள்தான்.

அவர் என்னைச் சந்தித்த போது வெளிநாட்டில் இருதய அறுவை சிகிச்சை செய்ததையும், பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் குடும்பப் பிரச்சனைகளைப் பற்றியும் பேசினார். இன்னும் ஒரு வருடத்திற்குள் சென்னையில் வந்து வசிக்கப்போவதாகக் கூறினார். அவரிடம் பல்வேறு பயிற்சி முறைகள் கூறி பின்பற்று என்றேன். மறுபடியும் வெளிநாடு சென்றார். மீண்டும் அவரை பல சேவை நிறுவனங்களுக்கு பணம் அனுப்பச் செய்தேன். ஆம் அவரின் புண்ணியமும் பயிற்சியும் அதிகரிக்க அதிகரிக்க அவரது பல்வேறு பிரச்சனைகள் தீர்ந்து வருகின்றன். உடல் பூரண குணமடைந்துவிட்டதாகக் கூறினார். மேலும், குடும்பப் பிரச்சனைகள் குறைந்து வருவதாகக் கூறினார். எனக்கும் மகிழ்ச்சி. இச்செயல்களால் எனக்கும் நன்மை. ஏனென்றால் புண்ணியச் செயல்கள் செய்யத் தூண்டுபவர்க்கும் புண்ணியம் கிடைக்கும். மற்றும் அவர்களின் பாவச் சுமைகளை நானும் தாங்கிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து நானும் விடுபடுகிறேன்.

இதை உள்வாங்கிக் கொண்டிருக்கும் போது, ‘ஏன் உங்கள் அலுவலகத்தை காலி செய்தீர்கள்?’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கும் பதில் கூறுகிறேன். கொரோனா தொற்று உலகெங்கும் பரவியது. அரசாங்கங்களும் மருத்துவர்களும் அறியாமையால் பெரும் பீதியைக் கிளப்பினர். முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பலரும் வலைதள வகுப்புகள் ஆரம்பித்தனர். ‘அதனால் இளைஞர்களின் உடல் மற்றும் மனம் கடுமையாக பாதிக்கப்படும். அச்செயல்களை என்னால் செய்ய முடியாது’ என்று கூறி வகுப்புகள் நடத்தவில்லை. எனக்கோ கடுமையான பொருளாதார இழப்பு. வாடகை கொடுக்க முடியவில்லை. இடத்தை காலி செய்யச் சொன்னார்கள். காலி செய்துவிட்டேன். ஏன் இந்த நிலைமை என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் விதியின் விளையாட்டு. அதற்கான காரணங்களை பிற்காலத்தில் பகிர்ந்து கொள்வேன்.
ஆம், அன்பு நெஞங்சங்களே! உங்கள் தொழிலை நேர்மையாகச் செய்யுங்கள். பிறரிடம் வேலை செய்பவர்கள் வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாக உழையுங்கள். வியாபாரிகள் தரமான பொருட்களை குறைந்த லாபம் உங்களுக்குக் கிடைக்குமாறு விற்பனை செய்யுங்கள். விவசாயிகள் இயற்கை விவசாயத்தைச் செம்மையாகச் செய்யுங்கள். மருத்துவர்கள் தரமான சிகிச்சையை அளித்து நியாயமான  பணத்தை கட்டணமாகப் பெறுங்கள். தான, தர்மங்களை முயன்றளவு அதிகப்படுத்துங்கள். தகுந்த, தேவையான உணவு அருந்துங்கள். உடல், மனப்பயிற்சிகளை செம்மைப்படுத்துங்கள். உங்கள் பிரச்சனைகளில் இருந்து மெல்ல மெல்ல வெளிவருவீர்கள். வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.