Click ▶ for audio
அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். இன்று நம்மை பல பிரச்சனைகள் சூழ்ந்துள்ளன. ஆட்சியாளர்களில் பலர் மக்களை சுரண்டுவதிலும், தவறாக வழிகாட்டுவதிலும், மக்கள் சொத்தைக் கொள்ளையடிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். காரணம் வழிகாட்டுவதற்கும், நெறிப்படுத்துவதற்கும் தகுந்த வழிகாட்டிகள் இல்லை. அந்தக் காலத்தில் பெரும்பான்மையான அரசர்கள் தகுதி வாய்ந்த அரசகுருவின் வழிகாட்டுதலால் செவ்வனே ஆட்சி புரிந்தனர். மாதம் மும்மாரிப் பொழிந்தது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஆனால் இன்றைய நிலையென்ன? ஒரு பக்கம் மழையால் பேரழிவு. மறுபக்கம் கடும் வறட்சி. மக்களின் தவறான போக்கினால் இயற்கையும் மக்களை வஞ்சிக்கிறது. தண்டிக்கிறது. ஆம். மக்களையும் ஆட்சியாளர்களையும் நெறிப்படுத்துவதற்கும், நிம்மதியான வாழ்க்கைக்கு வழி காட்டுவதற்கும் தகுந்த குரு தேவை.
ஆத்ம ஞானம்
ஆன்மாவைப் பற்றிய ஞானம், ஆன்மாவின் மூலம் கிடைக்கும் ஞானம் ஆத்ம ஞானம். ஒவ்வொரு மனிதப் பிறவிக்கும் ஒரு காரணமுள்ளது. பிறப்பின் காரணம் ஆன்மாவில் பொதிந்துள்ளது. காரணம் மட்டுமல்ல, நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வும் ஆன்மாவில் பொதிந்துள்ளது. அதைப் பற்றிய அறிவே ஆத்மஞானம். அதை உணர்பவனே ஆத்ம ஞானி.
ஆன்மா பாவ புண்ணிய எண்ணங்களை சுமந்து வருகிறது. சுமந்து செல்கிறது. உடலைக் கருவியாகக் கொண்டு உலக இயக்கத்தில் பங்கு வகிக்கிறது. தன் கடமை முடிந்தவுடன் அல்லது தன் கடமையைச் செய்ய இந்த உடலுக்கு தகுதியில்லை என்று தெரிந்ததும் உடலை விட்டு விலகுகிறது. இதுவே மரணம். இதைப் பற்றிய புரிதலும் ஆத்ம ஞானமாகும். கடுமையான தியானத்தின் மூலமும், ஆத்ம விசாரணை மூலமும் ஆத்மாவைப் பற்றிய புரிதல் அதிகமாகும். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த ஆத்மஞானி பகவான் அரவிந்தர்.
குருவருள்
குருவருளே திருவருள் என்பர் பெரியோர். குருவருள் கிடைக்காதவனுக்கு, குரு விரோதிக்கு கண்டிப்பாக இறையருள் கிடைக்காது. குருவருளால் பிறவிப் பெருங்கடலையும் தாண்டிவிடலாம். குருவே சரணம் என்று அவரையே முழுமையாக, பூரணமாகச் சரணடையும் போது குருவருளும் அதனால் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்.
துரோணர் மீது கொண்ட பற்றினாலே அனைத்து ஆயுதப் பிரயோகங்களும் சீடன் அர்ச்சுனனுக்கு பரிபூரணமாகக் கிடைத்தன. அவனால் மிக சிறந்த வில்லாளியாக பரிணமிக்க முடிந்தது. கர்ணன் கொடை வள்ளல். மிக்க பலசாலி. விஜயனைவிட சிறந்த வில்லாளி. குருவின் சாபத்தினாலே அவன் தோற்கவேண்டியதாயிற்று. இன்னும் சில உதாரணங்களால் குருவருளின் மேன்மையை விளக்குகிறேன்.
மத்திய இந்தியாவில் பாண்டுரங்க பக்தர் நாமதேவர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவனை பாமாலைகளால் பூஜித்தவர். அவரிடம் பலர் தன் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வருவதுண்டு. அவருக்கு பல சீடர்கள். அவர்களுள் ஒருத்தி ஜனாபாய். குரு சேவையே தலையாயக் கடமையாகக் கொண்டவள். குருவைப் பார்க்க வருபவர்களுக்கும் குருவுக்கும் உணவு சமைப்பது, விறகு கொணர்வது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தாள். பாண்டுரங்க பக்தையான ஜனாபாய் பாண்டுரங்கன் மீது பல பாக்களைப் பாடுவதுண்டு.
ஒரு நாள் மகான் ஞானேஸ்வர் பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கன் சன்னதிக்குச் சென்றார். பாண்டுரங்கனும் அவரும் நேரடியாகப் பேசுவது வழக்கம் (தமிழகத்திலும் காஞ்சி வரதராஜ பெருமாளிடம் திருக்கச்சி நம்பிகள் நேரடியாகப் பேசுவதுண்டாம்). பகவான் பாண்டுரங்கன் உட்கார்ந்து எழுதிக் கெண்டிருந்தார். ஞானேஸ்வரரைக் கண்டதும் கைகளை பின்னால் கொண்டு சென்றார். ஞானேஸ்வரருக்கோ மிகுந்த வருத்தம். பாண்டுரங்கனிடம் காரணம் கேட்க அவரோ, ‘ஞானேஸ்வரா, உனக்கும், நாமதேவருக்கும் பல சீடர்கள் உள்ளனர். நீங்கள் பாடுவதை அவர்கள் எழுதிக் கொள்கின்றனர். ஆனால் எனது பக்தை ஜனாபாய் எப்போதுமே நாமதேவருக்கும், அவர் சீடர்களுக்கும் தொண்டு செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு எழுதுவதற்கு நேரமில்லை. ஆதலால், அவள் பாடுவதை நான் எழுதிவைக்கிறேன்’ என்று கூறினாராம். என்னே அவள் குருசேவையின் மகிமை!
விவேகானந்தர் 1893ம் ஆண்டு சிகாகோ நகரில் நடந்த சர்வசமய மாநாட்டில் இந்து மதப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அவருக்கு பெரிய சபைகளில் பேசிப் பழக்கமில்லை. அவரை பேச அழைத்தபோதெல்லாம் நடுக்கத்துடன் ‘அப்புறம் பேசுகிறேன்’ எனத் தட்டிக் கழித்தார். கடைசியில் அவர் மட்டுமே பேச வேண்டியிருந்தது. வேறு வழியில்லாது தனது குருவான இராமகிருஷ்ணரை மனதில் தியானித்தார். குருவருளால் ஒரு அதிசயம் நடந்தது. எல்லோரும் சீமான்களே! சீமாட்டிகளே! என்று பேசிய போது ‘அமெரிக்க நாட்டின் சகோதர சகோதரிகளே’ என முழுங்கினார். அங்கு எழுந்த கரவொலி வெகு நேரம் நீடித்தது. மிகவும் அழகாக, தெளிவாக கம்பீரமாகப் பேசினார். அடுத்த நாள் எல்லா பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தியாக விவேகானந்தரைப் பற்றிய செய்திகளே வெளியாயின. ஒரே நாளில் குருவருளால் உலகப்புகழ் பெற்றுவிட்டார்.
சத்குருவின் முக்கியத்துவம்
சத்குரு சத்தியத்தின் வடிவம். உண்மையே பேசுபவர். சத்தியத்தின் மூலம் சித்தம் தூண்டப்பட்டு ஆனந்தத்தை அனுபவிப்பவர். சத்சித் ஆனந்த வடிவமானவர். ஒருவருக்கு நன்மை, இன்னொருவருக்கு தீமையாகலாம். சத்குரு நன்மை, தீமையை உணரக்கூடியவர். ஆத்ம ஞானமும், பிரம்ம ஞானமும் கைவரப் பெற்றவர். மக்களுக்கும், ஆள்பவர்களுக்கும் சிறப்பாக வழிகாட்ட சத்குருவால்தான் முடியும். சத்குரு ஒருவருக்கு அரசாங்கத்தின் பாதுகாப்போ, சிறப்பு அதிரடிப் படையோ தேவையில்லை. இறைவனே சத்குருவை பல வழிகளிலும் காப்பாற்றுகிறான்.
உலகத்தில் தோன்றிய சத்குருக்களில் மிகவும் மேன்மையானவர் பகவான் கிருஷ்ணர். அதனால்தான் 5000 வருடங்கள் கடந்தும் இன்னும் நிலைத்து வாழும் பகவத் கீதையை அவரால் உபதேசிக்க முடிந்தது. உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கிருஷ்ணரின் கீதையும், வள்ளுவரின் திருக்குறளும் இணைந்து சிறப்பான தீர்வைக் கொடுக்க முடியும். கிருஷ்ணருக்குப் பிறகு ஆதிசங்கரரின் பங்களிப்பு அளவிடற்கரியது.
கற்றவரோ, கேட்டவரோ, அறிந்தவரோ, தெரிந்தவரோ, புரிந்தவரோ சத்குருவாக முடியாது. இயற்கையின் இரகசியங்களை உணர்பவரே சத்குருவாக பரிணமிக்க முடியும். இயற்கையின் இரகசியங்களை அறிவதற்கு இறைவனின் அருளும் கடுமையான பயிற்சிகளும் தேவை.
சீடனின் சரணாகதி
குருவை முழுமையாக நம்பி தன்னை முழுமையாக குருவிடம் ஒப்படைப்பதே சரணாகதி. குரு விஷத்தைக் கொடுத்து சாப்பிடச் சொன்னாலும் சாப்பிடுவதே பூரண சரணாகதி. அவர்கள் பெரும் பேறு மகத்தானது.
ஆதி சங்கரர் ஒரு சமயம் கங்கைக் கரையில் தன் சீடர்களுடன் முகாமிட்டிருந்தார். அவருக்கு சனந்தனர் மீது மிகுந்த அன்பு உண்டு. இது மற்ற சீடர்களை பொறாமையுறச் செய்தது. சங்கரர் இதைப் புரிந்து கொண்டார். கங்கையிலோ பெரு வெள்ளம். மறுகரையிலிருந்த சங்கரர் சீடர்களிடம், ‘எனது வேட்டி அவசரமாக வேண்டும் எடுத்து வாருங்கள்’ என்றார். மற்ற சீடர்கள் திகைக்க, குருவின் வார்த்தையை கேட்ட சனந்தனர் வேட்டியை எடுத்துக் கொண்டு குருவை நோக்கி ஓடினார். ‘சனந்தனா! எப்படி இங்கே வந்தாய்? திரும்பிப்பார்’ என்று கூற கங்கையின் ஒரு கரையிலிருந்து மறுகரை வரை அவர் பாதம் பட்ட இடத்திலெல்லாம் பல தாமரைகள் மலர்ந்திருந்தன. (அதனால் தான் பத்மபாதர் என்று அழைக்கப்பட்டார். பத்மம் என்றால் தாமரை என்று பொருள்). ஆம், பூமித்தாய் தாமரை மலர்கள் மூலம் அவர் பாதங்களை தாங்கிக் கொண்டாள். மற்ற சீடர்கள் வெட்கித் தலை குனிந்தனர். பிற்காலத்தில் சங்கர மடமொன்றின் பீடாதிபதியாக சனந்தனர் நியமிக்கப்பட்டார்.
அகத்தியர் சித்தர்களில் தலை சிறந்தவர். மகா சித்தரான ஆதி சித்தர் சிவனின் நேரடிச் சீடர். அகத்தியரிடம் ஒரு ஊமைச் சிறுவனை வேலைக்காக ஒளவை கூட்டி வந்தாள். அவன் குரு சொல்வதையெல்லாம் செய்தான். அவனுக்கு மூலிகைகளின் தன்மையையும் அது கிடைக்கும் இடங்களையும் கூறி பறித்து வரச் செய்தார் அகத்தியர். பாண்டிய மன்னர் ஒருவர் கூன் முதுகால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அகத்தியரை அணுகினார். அரண்மனையிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டு மருந்து தயாரிப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டது.
ஒரு வாணலியில் மருந்து வெந்து கொண்டிருந்தது. மூலிகைச்சாறு கொதித்துக் கொண்டிருந்தது. ஊமைச் சிறுவன் மேலே பார்த்தான். நெருப்பை அணைத்தான். உள்ளே வந்த அகத்தியர் நெருப்பு அணைக்கப்பட்ருப்பதைப் பார்த்து கோபத்துடன் சீடனை நோக்க மேலே காட்டினான் சீடன். மேலே வளைந்த மூங்கில் ஒன்று நிமிர்ந்து கொண்டிருந்தது. சரியான பக்குவத்தை உணர்ந்து நெருப்பை அணைத்த சீடனைப் பாராட்டினார் அகத்தியர். மன்னனுக்கு சிகிச்சை அளிக்கபபட்டு மன்னன் கூன் முதுகு நிமிர்ந்தது.
இன்னொரு தடவை மூளையில் புகுந்த தேரையை நீக்குவதற்காக ஒரு புலவருக்கு கபால சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. கபால ஓட்டை அறுவை சிகிச்சையால் நீக்கினார் அகத்தியர். தேரை மூளையை இறுகப் பற்றியிருந்தது. தேரையை எடுத்தால் மூளை சிதைவுறுமே என்றெண்ணி என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார் அகத்தியர். அருகிலிருந்த ஊமைச்சீடன் ஓடோடிச் சென்று ஒரு பெரிய பாத்திரம் நிறைய தண்ணீர் கொணர்ந்து தேரையின் கண்ணில் படும்படி வைத்து கையால் நீரை அலம்பினான். தண்ணீர் சத்தம் கேட்ட தேரை தண்ணீரில் குதித்தது. சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. ஊமைச் சீடனை கட்டியணைத்து ஆனந்தப்பட்டார் குரு. பிறகு அவனுக்கு சிகிச்சை அளித்து பேசச் செய்தார். அவரே பிற்காலத்தே சித்தர் தேரையராக சிறப்பு பெற்றார். மேற்கூறிய சீடர்களின் சிறப்புக்கு காரணம் பூரண சரணாகதியால் கிடைத்த குருவருளன்றோ!
பிரம்ம இரகசியம்
பிரம்மம் பல இரகசியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பிரம்மத்தில் பொதிந்துள்ள, பிரம்மத்திலிருந்து வெளிப்படும் இரகசியம் பிரம்ம இரகசியமாகும். பிரம்மம் என்றால் இயற்கை என்று பொருள் கொள்ளலாம். இயற்கை உண்மை மயமானது. யார் எப்போதும் உண்மையே பேசுகிறார்களோ அவர்கள் மூலம் தன் இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. எப்போதும் உண்மையே பேசுபவர்கள் ஆழ்ந்த தியானத்தின் மூலம் பிரம்ம இரகசியங்களை வெளிப்படுத்த முடியும்.
சில வருடங்களுக்கு முன் சூரிய கதிர்களில் ஓம் என்ற சப்தம் பொதிந்துள்ளது என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். ஓங்கார மந்திரத்தை முறையாகச் சொன்னால் இயற்கையிலிருந்தும், சூரியனிலிருந்தும் நாம் சக்தியை எளிதாகக் கிரகிக்கலாம். இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். இதை நம் முன்னோர்கள் தியானத்தின் மூலம் வெகு காலத்திற்கு முன்பே உணர்ந்தனர். தன் வாழ்க்கையிலும் சீடரக்ளின் வாழ்க்கையிலும் மந்திர உச்சாடனத்தைச் செயல்படுத்தினர். இது மட்டுமல்ல கோள்களைப் பற்றியும், அதன் இயக்கத்தையும் தியானத்தின் மூலமே கண்டறிந்தனர். மறுபிறவி, கூடுவிட்டு கூடுபாய்தல் போன்ற எல்லாமே பிரம்ம இரகசிய வெளிப்பாடுகள்தான்.
சித்த மருத்துவம் பிரம்ம இரகசியத்தின் வெளிப்பாடுதான். சித்தர் அகத்தியர் பல நோய்களுக்கு தியானத்தின் மூலமே மருந்துகளை கண்டுபிடித்தார். அவர் ஒரு பிரம்மஞானி.
இயற்கையின் சில இரகசியங்கள் கனவுகள் மூலமும் வெளிப்படுவதுண்டு. புகழ்பெற்ற தனிம வரிசை அட்டவணை (Periodic Table) நமக்கு கிடைத்தது கனவின் மூலமே. மென்டலீவ் வேதியியலில் நாட்டம் கொண்டவர். தனிமங்களை வரிசைப் படுத்துவதில் அவருக்கு சில பிரச்சனைகள். இதைத் தீர்ப்பது எப்படி? என்று ஆழ்ந்து யோசித்தார். ஒரு நாள் அவருக்கு கனவில் ஒரு அட்டவணை வெளிப்பட்டது. அருகில் இருந்த தாளில் இதைக் கிறுக்கினார். மறுநாள் விழித்ததும் அதைப்பற்றி யோசித்து முழுமைப் படுத்தினார். அழியாப்புகழ் பெற்றார். இதுவும் பிரம்ம இரகசியம் தான்.
ஆம் நமது ஆட்சியாளர்கள் இயற்கையை உணரும் மிகச் சிறந்த குருமார்களின் ஆலோசனையின்படி ஆட்சி நடத்தினால் மக்கள் நிம்மதியாக வாழ்வர்.
ஆம் அன்பு நெஞ்சங்களே! உங்களுக்கும் சிறந்த வழிகாட்டிகள் கிடைத்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள். அப்படித்தானே. கிடைக்கும் வரை நமது வலைதளத்தல் வெளியிடப்பட்டுள்ள ‘வழிகாட்டி மூவர்’ என்ற பதிவைச் செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.