பந்தம்

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்கங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பு வணக்கங்கள். இன்று கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்து தனிக் குடித்தனம் அதிகரித்துவிட்டது. ஒரு வீட்டில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே. அவர்களின் படிப்பு, வேலை என்று பல இலட்சங்கள் செலவாகிறது. மிகவும் கடினமாக உழைத்து அவர்களுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. குழந்தைகள் நன்றாக வளர்ந்தால் பரவாயில்லை. மைந்தர்கள் தவறான பாதையில் சென்றாலோ அல்லது அவர்களுக்கு ஆபத்து என்றாலோ பெற்றோர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். ஆதுவும் ஒரே ஒரு குழந்தை என்றால் கடும் மன உளைச்சல். பாசத்திற்கும் ஓர் எல்லை உண்டு. அதிக பாசமும் ஆபத்தைத்தான் கொடுக்கும். உனக்கு இவ்வளவு செலவு செய்து படிக்க வைத்தேனே! நீ இப்படி இருக்கிறாயே! என்ற புலம்பல்கள் பல இடங்களில் கேட்கின்றன. காரணம் அறியாமையே!

ஒரு உண்மை நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதை ஆழ்ந்து உள்வாங்கினால் உங்கள் மனது இலகுவாகிவிட உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு குருவும், அவரது சிஷ்யையும் ஒரு நாள் வாழ்க்கைத் தத்துவங்களை விவாதித்துக் கொண்டிருந்தனர். வாழ்க்கை என்றால் என்ன? பிறப்பு இறப்பு பற்றிய உரையாடல் தொடர்ந்தது. குருவின் துணைவியார் பிரசவத்திற்காக தாய் வீடு சென்றிருந்தார். திடிரென்று தொலைபேசி சிணுங்கியது. தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தார் குரு.

உங்களுக்குப் பெண்குழந்தை பிறந்திருக்கிறாள். எப்போது பார்க்க வருகின்றீர்கள்’ என்று எதிர்முனையிலிருந்து குரல் கேட்டது.

‘எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வருகிறேன். கண்டிப்பாக இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். விடுமுறை நேரத்தில் வருகின்றேன்’ என்றார் குரு.

தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.

‘உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. மகிழ்ச்சியாக இல்லையா? குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இல்லையா?’ என்றாள் அருகிலிருந்த சிஷ்யை.

‘இல்லை’ என்று தலையசைத்தார் குரு.

‘என்ன நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்’ என்றாள் சிஷ்யை.

‘நீங்கள் என்னிடம் கற்க வருகின்றீர்கள். ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ வருடங்கள் என்னிடம் கல்வி, ஞானம், பயிற்சியைப் பெற்று என்னிடமிருந்து விலகிச் செல்கின்றீர். நீங்கள் பிற்காலத்தில் மாபெரும் செயல்களைச் செய்தால் நான் மகிழ்வேன். நீங்கள் பல தவறுகள் செய்து சமுதாயத்தை பாழடித்தால் நான் மிகவும் வருத்தப்படுவேன். 

அதைப் போலவே குழந்தை இங்கு வந்து பிறந்துள்ளாள். ஐந்தோ, பத்தோ, பதினைந்தோ, இருபதோ, இருபத்தைந்தோ வருடங்கள் என்னிடம் இருந்து, அவளுக்குத் தேவையான கல்வி, ஞானம், பயிற்சிகளைப் பெற்றபின் என்னை விட்டு விலகப் போகிறாள். இதற்காக நான் ஏன் சந்தோஷப்பட வேண்டும். என்னிடம் பெற்ற பயிற்சியை, அறிவைக் கொண்டு எதிர்காலத்தே மக்களுக்கு பயனுள்ள பலவற்றைச் செய்தால் சந்தோஷப்படுவேன் அல்லது வருத்தப்படுவேன். அவ்வளவே’.

‘குருவே அவள் உங்கள் மகளல்லவா?’ என்றாள் சிஷ்யை.

‘உலகில் ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு உயிர்க்கும் அடுத்த உயிர்க்கும் எந்த பந்தமும் இல்லை. நம் செயல்களின் விளைவுகளை எந்த நாட்டில, எந்த மாநிலத்தில், எந்த மதத்தில், எந்த சாதியில், யாருக்கு மகனாய், மகளாய், குருவாய், சிஷ்யனாய், சிஷ்யையாய், நண்பராய் பிறந்தால் நாம் அனுபவிக்க முடியுமோ அந்த பந்தத்தை இயற்கை அளிக்கிறது. ஆம், நம் செயல்களின் விளைவைக் கொண்டே எல்லாம் நிர்ணயிக்கப்படுகிறது.  அவள் செய்த செயல்களின் விளைவை அனுபவிப்பதற்காக இங்கு வந்து பிறந்திருக்கிறாள். நான் செய்த செயலின் விளைவை அனுபவிப்பதற்காக அவளுக்குப் பிறப்புக் கொடுத்திருக்கிறேன். ஆதலால், அவள் என்னிடம் வந்து பிறந்த காரணத்தால் அவளுடைய உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவது என்னுடைய கடமை. அவ்வளவுதான்’.

‘இதைப்போலதான் கணவன், மனைவி தொடர்பும். ஒருவன் தன் செயல்களின் விளைவை யாரை மனைவியாக அடைந்தால் அனுபவிக்க முடியுமோ அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். அதைப் போலவே ஒரு பெண் தன் செயல்களின் விளைவுகளை யாரை கணவனாக அடைந்தால் அனுபவிக்க முடியுமோ அவனை கணவனாக அடைகிறாள். ஆதலால் ஒவ்வொருவரின் கடமையும், தன்னைச் சுத்தப்படுத்தி, மேம்படுத்துவதுடன் அடுத்தவர் மேம்பாட்டுக்கும் உதவி செய்வதே’ என்றார் குரு. ‘தங்கள் விளக்கத்துக்கு நன்றி’ என்றாள் சிஷ்யை

 ஆம்! அன்பு நெஞ்சங்களே! உங்கள் செயல்களின் விளைவுகளை எந்த பந்தத்தைக் கொடுத்தால் நீங்கள் அனுபவிக்க முடியுமோ அந்த பந்தத்தை இயற்கை கொடுக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு புண்ணியச் செயல்களை அதிகரித்து பாவச் செயல்களை குறைக்கிறீர்களோ அந்த அளவு உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். மகிழ்ச்சியாக வாழலாம். புண்ணியங்களை அதிகரிக்க அதிகரிக்க உங்கள் மைந்தர்களின் செயல்களிலும் சிறந்த மாற்றங்கள் ஏற்படும். 

ஆம். செயல்கள் நன்றாக அமைந்தால் விளைவுகளும் நன்றாகவே அமையும். செயல்கள் மோசமானதாய் அமைந்தால் விளைவுகளும் மோசமாகவே அமையும். செயல்கள் மோசமாக அமைந்து விளைவுகள் நன்றாக அமைந்தால் அந்த நல்ல விளைவும் பிற்கால அழிவிற்கே. செயல்கள் நன்றாக அமைந்து விளைவுகள் மோசமாக அமைந்தால் அந்த மோசமான விளைவுகளும் பிற்கால நன்மைக்கே. ஆதலால் விளைவுகளைப் பற்றி கவலைப்படாது நல்ல செயல்களையேச் செய்திடுவீர். 
ஆம் நீங்கள் பிறரை மகிழ்வித்தால் இறைவன் உங்களை மகிழ்விப்பான். இதைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ள நம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘மகிழ்வித்து மகிழுங்கள்’ என்ற பதிவை உள்வாங்கி, செயல்படுத்துங்கள். வாழ்க வளமுடன். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.