Click ▶ for audio
சில வருடங்களுக்கு முன் ஒரு தம்பதியர் என்னைக் காண வந்தனர். அவர்கள் கண்களில் கண்ணீர் கசிந்துக் கொண்டிருந்தது. ‘என்ன விஷயம். சொல்லுங்கள்’ என்றேன்.
‘என் பெண் தன் தோழியிடம், ‘நீ அதிக மதிப்பெண் பெறுகிறாய். என்னால் முடியவில்லை. என் அப்பா என்னை எப்போதும் திட்டுகின்றார். அடிக்கின்றார். முன்பு என் அப்பாவை மட்டும்தான் எனக்குப் பிடிக்காது. இப்போது என் அம்மாவையும் பிடிக்கவில்லை. நான் ஏன் உயிர் வாழ வேண்டும்’ என்று அடிக்கடி கூறுகின்றாளாம். என்ன செய்வதென்று புரியவில்லை. நீங்கள் ஏதாவது வழி கூறுங்கள்’ என்றார்.
‘அவளை எனக்குத் தெரியும். உடலும், மனமும் மிகவும் பலவீனமாக உள்ளன’ என்றேன். உடலையும், மனத்தையும் வலுப்படுத்த, வளப்படுத்த, வேண்டிய பயிற்சி முறையைக் கூறி ‘பின்பற்றச் செய்யுங்கள்’ என்றேன். ‘உங்கள் அணுகுமுறை சரியில்லை. அதையும் மாற்றிக் கொள்ளுங்கள்’ என்றேன். மேலும், ‘நீங்கள் அவள் நடவடிக்கையால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றீர். உங்கள் தொழில் என்ன?’ என்றேன். ‘வியாபாரம் செய்கிறேன்’ என்றார். ‘ஏதாவது மக்கள் சேவையில் ஈடுபடுகின்றீர்களா?’ என்றேன். ‘இல்லை’ என்ற பதில் கிடைத்தது.
நான் அவரிடம், ‘நாம் பலரும் அறிந்தோ, அறியாமலோ பல தவறுகளைச் செய்கின்றோம். ஆதலால் நாம் பாதிக்கப்படுகின்றோம். எனவே தங்கள் மாத வருமானத்தில் ஒரு பகுதியை மக்கள் சேவைக்குச் செலவிடுங்கள். அவர்கள் உங்களை வாழ்த்துவர். அந்த எண்ணங்களின் சக்தி உங்களை உயர்த்தும், மகிழ்விக்கும். ஆம், நீங்கள் மற்றவர்களை மகிழ்வித்தால், இயற்கை உங்களை மகிழ்விக்கும்.’
‘மேலும், நீங்கள் ஒரு வியாபாரி. தரமான பொருளை நியாயமான விலைக்குக் கொடுக்கும் போது மக்கள் உங்களை வாழ்த்துவர். நான் கூறியவற்றைப் பின்பற்றினால், விரைவில் உங்கள் மகள் மாறிவிடுவாள்’ என்றேன். அவரிடம், ‘உடனடியாக சென்னை இராமகிருஷ்ணா மடத்தின் முகவரியைக் கொடுத்து, கூடிய விரைவில் ஒரு நல்ல தொகையை நன்கொடையாகக் கொடுங்கள். பின்னர் மாதந்தோறும் உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து வாருங்கள்’ என்றேன். மறுமுறை அவர் என்னைச் சந்தித்த போது நான் கூறியபடிச் செய்ததாகவும், தற்போது பிரச்சனைகள் தீர்ந்துவிட்டன என்றும் கூறினார்.
உங்களுக்கு உதவும் சிலர்…
அன்னை குழந்தைக்கு உணவூட்டுவதைக் கவனியுங்கள். சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைக்கு, அங்கு வரும் அணில், ஆடு, மாடு, பூனை, நாய், காக்கை, குருவி போன்ற உயிர்களைக் காட்டி அன்னை உணவூட்டுகின்றார். ஆம்! விலங்கினங்கள் உதவுகின்றன. எத்தனை அன்னையர் அண்டை வீட்டில் தன் குழந்தையை விட்டுவிட்டு, வீட்டு வேலையை கவனிக்கின்றனர்.
நீங்கள் புதிதாக ஒரு ஊருக்குச் செல்கின்றீர். அங்குச் சரியான முகவரியைக் கண்டுபிடிக்க பலர் உங்களுக்கு உதவுகின்றனர். உங்கள் வளர்ச்சிக்காக பெற்றோர் மட்டுமின்றி, உற்றார், உறவினர், நண்பர்களிடம் உதவி பெறுகின்றீர். நடந்து செல்லும் சாலை, அருகில் நிழல் கொடுக்கும் மரங்கள், மின் கம்பங்கள் எல்லாம் எப்படி வந்தது? நாட்டிற்குப் பலர் கட்டும் வரிப் பணத்தினாலன்றோ? பள்ளி, கல்லூரிகளில் சிறந்த ஆசிரியர்களில் பலர் தான் வாங்கும் ஊதியத்திற்கும் அதிகமாக, உங்கள் முன்னேற்றத்தையேக் குறியாகக் கொண்டு உழைக்கின்றனரே. இன்னும் எத்தனையோ?
எண்ணங்களின் சக்தி
உங்கள் வெற்றியை நிர்ணயிப்பதில் உங்கள் எண்ணமும், மற்றவர்களின் மனத்தில் உங்களைப் பற்றிய எண்ணத்தின் தாக்கமும் பெரும் பங்கு வகிக்கின்றன. மேற்கூறிய இரண்டும் ஒரே திக்கில் பயணிக்கும் போது பெரும் வெற்றியைக் குவிப்பீர்.
‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்றான் வள்ளுவன்.
எந்நோற்றான் கொல் எனுஞ்சொல்’
ஆம், மகனுடைய கடமை, இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்று பிறரும், இவனைப் பெற நாம் என்ன தவம் செய்தோமோ? என்று பெற்றோரும் போற்றும் படியாகத் தன்னை மாற்றிக் கொள்வதேயாகும்.
ஆனால், இன்றைய இளைஞர்கள், மாணவர்கள் பலர் கடினமாக உழைப்பதில்லை. நேரத்தை வீணாக்குகின்றனர். அந்நேரத்தில் வீட்டிலுள்ள பெரியோர்கள் ஏதாவது வேலை கொடுத்தால், ‘என்னால் முடியாது, எனக்கு வேலையிருக்கின்றது’ என்று தன் வேலையில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். பெற்றோர்களோ, ‘நாம் இவனுக்காக மாடாய் உழைக்கிறோம். இச்சிறு வேலையைக் கூட செய்ய மறுக்கின்றானே. இவனெல்லாம் பிற்காலத்தில் என்ன கிழிக்கப் போகின்றான்’ என்று மனத்தால் சபிப்பர்.
இதைப் போலவே பலர், சிறு வயதில் கற்பித்த ஆசிரியரை வழியில் சந்திக்க நேர்ந்தால் எதுவும் தெரியாதது போல் தலையைத் திருப்பிச் செல்வர். ஆசிரியரோ, ‘இவனை உருவாக்கவா நாம் இவ்வளவு கஷ்டப்பட்டோம்’ என்று மனம் குமுறுவார். இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணத் தாக்குதல்கள் சோதனையான காலக்கட்டத்தில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தி தோல்வியைக் கொடுக்கும்.
மாறாக, பெற்றோர், பெரியோர், ஆசிரியர், நல்லோர் போன்றோருக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான, தேவையான ஆசைகளைப் பூர்த்தி செய்தால், அதனால் ஏற்படும் எண்ணத் தாக்கம் உங்கள் மனத்தை வளப்படுத்தும். மனக்குழப்பத்தைத் தீர்க்கும். மேல் நிலைக்கு உயர்த்தும். வெற்றிக்கு வழிகாட்டும்.
இராமனும், கர்ணனும்
இராவணன் மாவீரன். சிறந்த சிவ பக்தன். அவனை வெல்வது மிகவும் கடினம். அவனை அழிக்க இராமனுடைய சக்திகள் போதாது. ஆதலால் காட்டில் வசிக்கும், உண்மையே பேசும் ஞானிகள், ரிஷிகள், பெரியோர்களுக்குச் சேவை செய்து அவர்களின் ஆசீர்வாத பலத்துடன் இராவணனை அழிப்பதற்காகவும் இராமன் காட்டிற்கு அனுப்பப்பட்டான். அதற்குக் கைகேயியின் வேலைக்காரி ஒரு கருவியாகச் செயல்பட்டாள்.
கர்ணன் மாவீரன். மிகுந்த பலசாலி. சிறந்த கொடையாளி. பலமுறை பெரியோர்களை, நல்லோர்களை அவமதித்ததால் சபிக்கப்பட்டதன் (எதிர்மறை எண்ணங்கள்) விளைவே அவனது அழிவிற்குக் காரணம்.
கொடுக்கும் மனம் வேண்டும்
மனமிருந்தால் வழியுண்டு என்பது பொன்மொழி. ஆம் உதவுவதற்கு மனம் மிகவும் முக்கியமானது. இதை எழுதும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. மூன்று பேர் சேர்கின்றனர். அவர்களிடம் விலை மதிப்பு மிக்க பொருட்கள். அதில் ஒரு பகுதியைக் கடவுளுக்குக் கொடுக்க வேண்டும். முதலாமவர், ‘ஒரு சிறிய வட்டம் வரைவோம். நம்மிடம் உள்ள பொருட்களை மேலே தூக்கி வீசுவோம். வட்டத்தினுள் விழுவதை கடவுள் எடுத்துக் கொள்ளட்டும்’ என்றாராம். இரண்டாமவர், ‘பெரிய வட்டம் போடுவோம். மேலே தூக்கி வீசுவோம். வட்டத்திற்கு வெளியில் விழுவதை கடவுள் எடுத்துக் கொள்ளட்டும்’ என்றாராம். மூன்றாம் நபரோ அதி புத்திசாலி. ‘நீங்கள் கூறியபடி வேண்டாம். மாறாக, அனைத்து பொருட்களையும் மேலே வீசுவோம். கடவுளுக்குத் தேவையானதை மேலே பிடித்துக் கொள்ளட்டும்’ என்றாராம். வேடிக்கை தானே. இப்படித்தான் பலரது மனநிலையும். அதிலிருந்து வெளியே வாருங்கள். கொடுங்கள், கொடுக்கப்படுவீர்கள். உதவுங்கள், உதவப்படுவீர்கள்.
உதவும் சில வழிமுறைகள்
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பர் பெரியோர்.
‘ஈயென இரத்தல் இழிந்தன்று
என்பது பழந்தமிழ் பாடலொன்றின் சில வரிகள்.
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’
‘’எனக்கு இலவசமாகக் கொடு’ என்று கேட்பது மிகவும் இழிவானது. அப்படிக் கேட்பவருக்கும் கொடுக்க மறுப்பது அதை விட இழிவானது. கேட்காமலேயே குறிப்பறிந்துக் கொடுப்பது உயர்வானது. அப்படிக் கொடுப்பதையும், வாங்க மறுப்பது இன்னும் உயர்வானது’ என்பதே இதன் பொருள். ஆம், ஒருவரின் தேவையறிந்து உதவுவதே பெரிய சேவை. ‘நாங்கள் எப்படியெல்லாம் உதவுவது’ என்று நீங்கள் கேட்கின்றீர். சில வழிமுறைகளைக் கூறுகின்றேன்.
அதிகம் சம்பாதிப்பவர்கள் பணம் கொடுத்து உதவலாம். மாத வருமானத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு, அத்தியாவசியமாகத் தேவைப்படும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு கொடுத்துதவலாம். வார விடுமுறை நாட்களில் ஏதாவது சேவை நிறுவனங்களுக்குச் சென்று உடலுழைப்பை நல்கலாம்.
நீங்கள் உடுத்திய பழைய ஆடைகள், உங்கள் அண்டை அயலாரிடம் சேகரிக்கப்பட்ட ஆடைகள், மாத்திரை, மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை அனாதை இல்லங்களுக்குக் கொடுக்கலாம். உங்கள் தெருக்களில், நண்பர்களிடம் பணம் வசூலித்து, உங்கள் செலவைச் சிக்கனப்படுத்தி, மீதமுள்ள பணத்தை வழங்கலாம். பெரியவர் சாலையைக் கடக்க முயன்று தடுமாறும் போது ஓடோடிச் சென்று உதவலாம். மாலை வேளைகளில் ஏழை மாணவர்களுக்கு, முதியோர்களுக்கு இலவசமாகக் கற்பிக்கலாம்.
வீட்டில் பெற்றோர் செய்யும் வேலைகளுக்கு உதவலாம். அண்டை வீட்டுப் பெரியோர், நல்லோருக்கு அவர்களின் வேலைகளை முடிப்பதற்கு உதவலாம். சாலையில் செல்லும் போது முட்கள், கற்கள், வாழைப் பழத்தோல் கிடந்தால் அவற்றை அப்புறப்படுத்தி ஓரத்தில் போடலாம். இதனால் பலர் பயனடைவர்.
‘குருசேவை கோடி புண்ணியம்’ என்பேன். உங்களை உயர்த்துவதற்கு உண்மையாக உழைத்த ஆசிரியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யலாம். நீங்கள் கற்ற கல்வி நிலையங்களின் தேவையை அறிந்து அவற்றை பூர்த்தி செய்ய உதவலாம். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு போன்றவற்றை ஊட்டும் பயிற்சிகளை அளித்து இளைஞர்களை மேம்படுத்தலாம். பறவைகள், விலங்கினங்கள் போன்றவற்றிற்கு உங்களால் முயன்ற உதவியைச் செய்யலாம்.
‘அறியாமையே பெரும்பாவம்’ என்றார் விவோகானந்தர். மக்களுக்குத் தேவையான அறிவையும், ஞானத்தையும் வழங்கலாம். ‘மீனைக் கொடுப்பதற்கு பதில் மீன் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்பது சீனப் பழமொழி. ஆதலால், மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம். வேலை வாய்ப்புகளைத் தடுப்பவர்க்கெதிராக அணி திரளலாம்.
இயற்கையை மாசுபடுத்துவதை, சிதைப்பதை முடிந்த அளவு குறையுங்கள். இயற்கை மகிழும். இன்னும் எத்தனையோ வழிகள். ஆம் பிறரை மகிழ்வித்தால், நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்.
தயாள உள்ளங்கள்
சில வருடங்களுக்கு முன்பு சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு உதவுவதற்காக நாட்டின் மூலை, முடுக்கெல்லாம் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். வண்டி, வண்டியாக உணவுப் பொருட்கள், ஆடைகள் தேவையான உபகரணங்கள் குவிந்தன. அரசு உதவி செய்யுமென்று எதிர்பாராது பல சேவை நிறுவனங்கள் அரும்பணியாற்றின. சேவாபாரதி, இராமகிருஷ்ணா மிஷன் போன்றவை பெரும் பணியாற்றின. அத்தயாள உள்ளங்களை வாழ்த்துவோம்.
ஒரு நாள் அதிகாலையில் சாலை ஓரமாக நடந்துக் கொண்டிருந்தேன். வழியில் ஒருவர் பொறை என்ற உணவுப் பொருளை தெருநாய்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச தூரம் சென்றதும் மறுபடியும் இதே போன்று இன்னொரு காட்சி. எனது உள்ளத்திலோ மிகவும் மகிழ்ச்சி. ஏமாற்றுப் பேர்வழிகள் பலர் இருந்தும், இப்படிப்பட்ட தயாள உள்ளங்களால்தானே நாடு இன்னமும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றது.
இறைவன், ஒரு மனிதன் எவ்வளவு கொடுக்கின்றான் என்பதை மட்டுமல்ல, எந்தச் சூழ்நிலையில், எந்த மனநிலையில் கொடுக்கின்றான் என்பதையும் கணக்கில் கொள்கிறான். கோடி, கோடியாக வருமானம் வருபவர்கள் இலட்சக் கணக்கில் நன்கொடை அளிப்பதில் வியப்பில்லை. கடன் தெல்லையால் அவதிப்படும் ஒருவர், பிரதிபலனை எதிர்பாராது நன்கொடை அளிப்பது இன்னும் சிறப்பானது. இதை எழுதும் போது மகாபாரதக் கதையொன்று நினைவுக்கு வருகின்றது.
மகாபாரத யுத்தம் முடிந்து தர்மர் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது மிகச் சிறப்பாகத் தான, தர்மங்கள் செய்துக் கொண்டிருந்தார். உணவு வகைகளும், பொன்னும் பொருளும், நவரத்தினங்களும் கேட்பவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீரிப்பிள்ளையொன்று கீழே சிந்திய உணவுப் பொருட்களில் உருண்டது. புரண்டது. தர்மனை நோக்கி, நீ செய்ததெல்லாம் ஒரு தானமா? இதெல்லாம் ஒரு ஏழை பிராமணன் செயலுக்கு ஈடாகுமா? என்று எக்காளமிட்டது.
அவையோர் என்னவென்று வினவ கீரிப்பிள்ளை பேசிற்று. ‘ஒரு பிராமணன் ஒருநாள் முழுவதும் பசியால் அலைந்து திரிந்து தனக்குக் கிடைத்த மாவினை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அவற்றை நான்காகப் பிரித்து, ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டு, மற்றவற்றை தன் மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்குக் கொடுத்தான். அவர்களுக்குக் கடுமையான பசி. அவர்கள் யாருமே அன்றைய காலையிலிருந்து உணவு உட்கொண்டிருக்கவில்லை. அவர்கள் மாவை உண்ணவிருந்த சமயம், ஒரு சந்நியாசி பசியால் அங்கு வந்தார். பிராமணன் தன் பங்கை அவருக்குக் கொடுத்தான். அவரது பசி தீரவில்லை. மனைவியின் பங்கையும் கொடுத்தும் பசி தீராமையால் மகனையும், மருமகளையும் கொடுக்கச் சொன்னான். சந்நியாசி பசி தீர்ந்து அவர்களை வாழ்த்திச் சென்றார். அன்றிரவு பசிக் கொடுமையால் அனைவரும் உயிரிழந்தனர். அவர்களது ஆன்மாக்கள் பிரம்மத்துடன் ஐக்கியமாயின. ஆம், சொர்க்கத்திற்குச் சென்றனர். நான் அவர்களது கையிலிருந்து கீழே சிந்திய மாவில் உருண்டுப் புரண்டேன். என் உடலில் மாவு ஒட்டிய பகுதிகள் பொன்னிறமாக மாறின. ஆனால், நீ செய்த யாகத்திலும் புரண்டேன். என் உடலைப் பார் எந்த வித மாற்றமுமில்லை. அதனால் தான் அப்படிக் கூறினேன்’ என்றது.
இயற்கையின் ஒரு இரகசியம்
உதாரணமாக மாதம் நீங்கள் 20,000 ரூபாய் சம்பளம் பெறுவதாகக் கொள்வோம். முதலில் நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் இவ்வளவுதானே கொடுக்கிறார்கள். அதற்கு இவ்வளவு உழைப்பு போதுமானது என்ற எண்ணம் கூடாது.
உங்கள் வருமானத்தில் குறைந்தது இரண்டு சதவிகிதம், அதாவது மாதம் ரூ. 400 ஏதாவது சேவை நிறுவனத்திற்கு நன்கொடை அளியுங்கள். நீங்கள் வழக்கமாகக் கொடுக்க ஆரம்பித்தால் முதலில் பல தொல்லைகள் வரும். உங்கள் செலவுகள் திடீரென்று அதிகமாகும். அதையும் சமாளித்து நீங்கள் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தி விடக் கூடாது. சில மாதங்களில் இயற்கை உங்களுடன் ஒத்துழைக்க ஆரம்பிக்கும். இப்படி இரண்டு, மூன்று வருடங்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்து, பின்னர் உங்கள் நன்கொடையை இரண்டு மடங்காக உயர்த்தினால் உங்கள் வருமானமும் இரண்டு மடங்காகும். ஆம், நீங்கள் கொடுக்கும் நன்கொடை உங்கள் வருமானத்தில் இரண்டு சதவிதமாகும். இந்த வெற்றி முறை என்னுடைய பல பழைய மாணவர்களால் செயல்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்களும் முயன்று பார்க்கலாமே.
ஆம் இளைஞர்களே! மற்றவர்களை, இயற்கையை நீங்கள் மகிழ்வித்தால், இயற்கை உங்களை மகிழ்விக்கும். ஏழைகளுக்குச் செய்யும் உதவியே இறைவனுக்குச் செய்யும் உதவி. அதற்காக மற்றவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வது உங்கள் கடமையன்று. தேவையைப் பூர்த்தி செய்வதே கடமை. ஏனெனில் ஆசைக்கு அளவில்லை. நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Excellent point sir. I totally agree!!
தங்கள் கருத்துக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
அருமையான உரை ஐயா.. ஆழ்ந்த கருத்துக்கள்
தங்கள் பாராட்டுக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
Nice examples quoted for better understanding sir…Thanks a lot for sharing sir…
தங்கள் கருத்துக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
Naanum enathu sampalathil 2 sathavikitham tharmam saikirean aiyya.
Nanri mikavum nalla pathivu
Nanri vaalka valamudan…
தங்கள் கருத்துக்கு நன்றி சீடரே! மேன்மேலும் எங்கள் பதிவுகளை தொடா்ந்து உள்வாங்கி வாழ்வில் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இன்னும் மேன்மை அடைவீர்கள் வாழ்த்துக்கள்.