Click ▶ for audio
உலகின் தொன்மையான மொழிகளாம் தமிழையும், வடமொழியையும் (சமஸ்கிருதம்) பின்பற்றுவதில் காலம் காலமாக சண்டை, சச்சரவுகள் வளர்ந்துக் கொண்டே வருகின்றன. கோவிலில் அர்ச்சனைகள், குடமுழுக்குகள் தமிழ் முறைப்படி செய்வதா அல்லது வடமொழி முறைப்படி செய்வதா? என்பது இன்றும் பிரச்சனைக்குரியதாகவே உள்ளது. எங்கெங்கும் மொழிப் பிரச்சனைகள். அதற்கு மூல காரணம் அறியாமையே!
சில மாதங்களுக்கு முன்பு மாமன்னன் இராஜராஜன் என்று புகழப்படும் அருண் மொழித் தேவன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலின் குடமுழுக்கு தமிழ் முறைப்படி செய்வதா? அல்லது சமஸ்கிருத முறைப்படி செய்வதா? என்ற பிரச்சனை நீடித்தது. கடைசியில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு முறைகளிலும் குடமுழுக்கு நடைபெற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
வடமொழியையும், தென்மொழியையும் கற்றுணர்ந்த பெரியோர்கள், ‘இரண்டுமே சிறந்த மொழிகள்தான்‘ என்பர். பன்மொழிப் புலவன் பாரதியோ, ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்‘ என முழங்கினான். அவனுக்கு வடமொழி, தென்மொழி இரண்டிலுமே மிகுந்த தேர்ச்சி உண்டென்பது பலருக்கும் தெரியும்.
உண்மையிலேயே கடவுள் மொழி தமிழா அல்லது சமஸ்கிருதமா?
வரலாற்றின் சில பதிவுகளைக் காண்போம்.
ஒளவையார் சிறந்த விநாயக பக்தை. இளமையில் பேரழகி. அவர் அழகினால் உந்தப்பட்ட பலர் ஒளவையைச் சுற்றி சுற்றி வந்தனர். தொல்லை கொடுத்தனர். அவருக்கோ புலனின்பங்களில் நாட்டமில்லை. விநாயகரை வேண்டி வயோதிக உருவத்தைப் பெற்றார். ஒளவை விநாயகரைத் துதித்தது தமிழ் மொழியிலன்றோ!
கேரளாவில் நாராயண பட்டர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். ‘நாராயணீயம்‘ என்ற நூலை எழுத திருவுளம் கொண்டார். குருவாயூரப்பனே அவர் முன் தோன்றி நாராயணீயத்தைத் திறம்பட எழுதி முடித்தார். அவர் குருவாயூரப்பனிடம் வேண்டியது மலையாளத்திலன்றோ? வடமொழிக்கும் தென்மொழிக்கும் பிறந்த குழந்தையன்றோ மலையாளமொழி.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடியார்களில் ஒருவர். சிவனைத் தன் தோழனாகவே பாவித்தவர். ஒரு நாள் சிவனைத் தரிசித்தபின் அவினாசித் தெருவொன்றில் நடந்துக் கொண்டிருந்தார். ஒரு வீட்டிலிருந்து மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டது. பக்கத்து வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது. அங்கு சென்ற சுந்தரர் காரணத்தை வினவினார். அவர்களோ ‘பக்கத்து வீட்டுப் பையனுக்கு பூணூல் தரிக்கும் விழா. மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். எங்களுக்கும் அதே வயதில் ஒரு பையன் இருந்தான். மூன்று வருடங்களுக்கு முன் குளத்தில் குளிக்கும் போது முதலை அவனை விழுங்கிவிட்டது. அவன் இப்போது இருந்திருந்தால் நாங்களும் மகிழ்ந்திருப்போம்’ என்றனர். சுந்தரரோ ‘வாருங்கள் என்னோடு. அந்தக் குளத்தைக் காட்டுங்கள்’ என்றார். மூவரும் குளக்கரையை அடைந்தனர். செந்தமிழால் அவினாசி சிவனைத் தொழுதார். வேண்டினார். உடன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வறண்டு, வெடித்திருந்த குளத்தில் திடீரென தண்ணீர் வந்தது. தாமரை, அல்லி, குவளை போன்ற நீர்த்தாவரங்கள் வந்தன. முதலை வந்தது. முதலை வாயிலிருந்து மூன்று வருட வளர்ச்சியோடு பையனும் வெளிப்பட்டான். எல்லோரும் மகிழ்ந்தனர். சுந்தரரின் பக்தியைப் போற்றித் துதித்தனர். சுந்தரர் இறைவனைத் துதித்தது சுந்தரத் தமிழிலன்றோ!
ஒரு நாள் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் மகன் ஸ்ரீசந்த் பாதயாத்திரையின் போது இமாச்சலத்தின் ரவி ஆற்றைக் கடக்க விரும்பினார். ஆற்றின் கரையிலோ படகில்லை. அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆறு தழுவிக் கொண்டிருந்த பெரிய கல்லின் மீது ஏறினார். ‘நான் உண்மையான சாதுவானால் கல்லே நீ என்னை அக்கரை சேர்ப்பாயாக’ என்றார். அக்கல் படகைப்போல் மிதக்க ஆரம்பித்தது. அவரை மறுகரை சேர்த்தது. அவர் பேசியது பஞ்சாபி மொழியன்றோ!
இயேசு ஒரு நாள் தன் சீடர்களுடன் படகில் பயணித்துக் கொண்டிருந்தார். திடீரென்று பலத்த காற்று வீசியது. படகு அங்குமிங்கும் ஆடியது. சீடர்கள் பயந்தனர். ‘இயேசுவே காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று அலறினர். ‘ஏன் இப்படிக் கத்துகிறீர்கள்?’ என்ற இயேசு, கடலைப் பார்த்து ‘கடலே அமைதியடைவாய்’ என்று கூறினார். கடலும் அமைதி அடைந்தது. இயேசு பேசியது எபிரேயமும் கிரேக்கமும் கலந்த அராமிக் மொழியன்றோ!
துக்காராம் தீவிர பாண்டுரங்க பக்தர். அவர் மீது பொறாமை கொண்ட சிலர், கோவில் சிலையை ஒளித்து வைத்துவிட்டு, துக்காராம் திருடியதாக பழி சுமத்தினர். மன்னர் சத்ரபதி சிவாஜி விசாரணைக்காக கோவிலுக்கு வந்தார். துக்காராம் தன்னை மறந்து இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். சிலையோ மறைத்து வைத்த இடத்திலிருந்து வெளிப்பட்டு முன்னர் இருந்த இடத்தில் வந்து நிலைகொண்டது. மக்கள் துக்காராமின் பக்தியை வியந்தனர். மன்னர் சிவாஜியோ அவர் கால்களில் மண்டியிட்டார். துக்காராம் இறைவனைப் பாடியது மராட்டிய மொழியிலன்றோ!
துளசிதாசர் ‘இராமசரிதமானஸ்‘ என்ற இராம காவியத்தை இந்தியில் எழுதினார். அவர் இராமாயணத்தை மேடையில் இசைக்கும் போது அனுமனும் வயோதிக பிராமண உருவுடன் இராமகாதையைக் கேட்பது வழக்கம். அனுமனின் மூலமாக இறுதியில் இராம தரிசனம் கிடைத்தது. அவர் பேசியது இந்தி மொழியன்றோ!
வேதவியாசர் மகாபாரதக் காவியத்தை எழுதத் திருவுளம் கொண்டார். இறையருளால் விநாயகப் பெருமானே அவர் முன் தோன்றி வியாசர் பாடப்பாட எழுதி முடித்தார். வியாசர் பெருமான் இறைவனை இறைஞ்சியது வடமொழியான சமஸ்கிருதத்திலன்றோ.
ஒருநாள் சில ஆன்மீக அன்பர்கள் எம்மை நாடினர். ‘சில வருடங்களாக ஒழுங்காக மழை பெய்யவில்லை. மாணிக்கவாசகர் பதிகங்களைப் பாடினால் மழை பெய்யும். அவ்விழாவிற்கு நீங்களும் நிதியுதவி செய்ய வேண்டும்’ என்றனர். நான் நிதியை அவர்களிடம் கொடுத்துவிட்டு ‘மாணிக்கவாசகர் பதிகத்தை அவர் பாடினால் தான் மழை வரும். நீங்கள் பாடினால் மழை வராது. ஏனெனில் அவர் எப்போதும் உண்மையே பேசினார். அதனால்தான் திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்‘ என்று போற்றப்படும் திருமறையை அவரால் பாட முடிந்தது. அவர் எப்போதும் உண்மையே பேசியதால் அவர் வேண்டியவுடன் மழை பொழிந்தது. ஆனால் நீங்கள் எப்போதும் உண்மையா பேசுகிறீர்கள்?’ என்றேன்.
இதுவரை நாம் பல உதாரணங்களைக் கண்டோம். வெவ்வேறு இடங்கள். வெவ்வேறு மதங்கள். வெவ்வேறு மொழிகள். வெவ்வேறு பக்தர்கள். ஆனால், அவர்களைத் தீர ஆராய்ந்தால் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை புலப்படும். ஆம்! அவர்கள் அனைவருமே நேர்மையானவர்களாக, உண்மை பேசுபவர்களாகத் திகழ்ந்தனர்.
ஒருவன் பல வருடங்கள் தொடர்ந்து உண்மையே பேசினால், அவன் பேசுவது எல்லாம் உண்மையாகிவிடும்.
இதுவே இயற்கையின் நியதி.
இதற்கு மொழி பேதமில்லை. எல்லா மொழிகளும் இறைவனுக்குத் தெரியும்.
சில பேச்சாளர்கள் மேற்கூறிய நிகழ்வுகளை, ‘மக்களை நல்வழிப்படுத்த கூறப்பட்ட கதைகள். உண்மையல்ல’ என்கின்றனர். இது அவர்களின் அறியாமையாகும். அவர்கள் எப்போதும் உண்மையே பேசினால் மேற்கூறிய நிகழ்வுகள் உண்மை என்பதை உணர்வர். அன்புத் தமிழ் நெஞ்சங்களே, நீங்கள் விரும்பினால் இதைச் சோதனை செய்யலாம். குறைந்தது ஐந்து வருடங்களாவது தொடர்ந்து உண்மை பேசி வந்தால், பேசியதைச் செயல்படுத்தி வந்தால் கண்டிப்பாக நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடும். முயற்சித்துத்தான் பாருங்களேன்!
ஆம். கடவுள் மொழி இந்தியோ, தமிழோ, அரபுவோ, மராத்தியோ, கிரேக்கமோ, சமஸ்கிருதமோ அல்ல. நாம் எம்மொழியில் பேசினாலும் எப்போதும் உண்மையே பேசினால் இறைவன் அதற்கு செவி சாய்ப்பார்.
குடமுழுக்கு, அர்ச்சனையின் போது தமிழிலும் பாடலாம், வடமொழியையும் உபயோகப் படுத்தலாம். ஆனால், அர்ச்சகர்கள், சாஸ்திரிகள் நேர்மையானவர்களாக உண்மை பேசுபவர்களாகத் திகழ வேண்டும். தமிழும், வடமொழியும் மிகத் தொன்மையானவை. இலக்கண, இலக்கிய வளம் வாய்ந்தவை. உலக முன்னேற்றத்திற்கான அனைத்து கருத்துக்களும் இவற்றில் உண்டு. ஆனால், கடவுள் மொழி என்று சிந்திக்கும் போது அது தமிழோ அல்லது சமஸ்கிருதமோ அன்று.
உண்மையே கடவுள் மொழி! ஆம், உண்மையே கடவுள் மொழி!
நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Dear Sir,
This is a very relevant topic especially in today’s day and age. Thanks very much for your simple and nice explanation! Hope this message reaches lot of people and makes them to think hard and broaden their understanding. Nandri!!
தங்கள் பாராட்டுக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
அருமை
அன்புடையீர்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!
அன்புடன்,
கிருஷ்ணதாசன்
மிக சரியாக சொன்னீர்கள். உண்மை. பாராட்டுக்கள்
அன்புடையீர்,
தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!
அன்புடன்,
கிருஷ்ணதாசன்
உண்மைதான் கடவுள் மொழி என்பதைப் படித்ததும் பரவசமடைந்தேன்.திராவிடம் என்ற ஏமாற்று வழியைக் கையாண்டு, தமிழைக் காக்க வந்த தமிழ்த்தாயின் புதல்வர்கள் தாங்கள்தான் என அரசியல் பண்ணிய தெலுங்கர்களை தமிழன் தலையில் சுமந்ததால் வந்த வினைதான் தமிழா, சமஸ்கிருதம் என்ற பாகுபாடு.
அன்புடையீர்,
தாங்கள் தென் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தங்கள் பரவசத்தால் மகிழ்ச்சியுற்றேன். தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
கிருஷ்ணதாசன்