Click ▶ for audio
திரு.கிருஷ்ணதாசன்
சில வருடங்களுக்கு முன் என்னிடம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்குச் சில நாட்களுக்கு முன் இலட்சுமி என்ற பெண் அழுது கொண்டே வந்தாள். ‘என்ன விஷயம்’ என்றேன்? ‘நான் மறுபிறவி எடுக்க வேண்டும்‘ என்று கூறி, மீண்டும் அழுதாள். ‘உன் பிரச்சனையைச் சொல். எனக்குத் திருப்தியாயின், நானும் உனக்கு உதவுகிறேன். கவலையை விடு. காரணத்தைச் சொல்’ என்றேன்.
‘அம்மா, எப்போதும் ‘உன் தங்கையைப் பார். பள்ளியில் முதல் மாணவி. எல்லா போட்டிகளிலும் பரிசு வாங்கிக் குவிக்கின்றாள். நீயோ, எதற்கும் லாயக்கில்லை. வீட்டு வேலைகளையும் ஒழுங்காகச் செய்வதில்லை’ என்று திட்டுகிறார். பிறகு நான், ஏன் வாழ வேண்டும். அடுத்த பிறவியிலாவது நிம்மதியாக வாழலாமே. எதையாவது சாதிக்கலாமே. ஆதலால், உடனே தற்கொலை செய்து விட்டு, அடுத்தப் பிறவி எடுக்க விரும்புகிறேன்’ என்று கூறி அழுதாள்.
நானோ, சாதனையாளர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளைச் சொல்லி, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் எடுத்துரைத்தேன். மேலும் எனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளையும் அவளுக்குக் கூறினேன். ‘அத்தகைய பிரச்சனைகளுடன் ஒப்பிடும் போது உன் பிரச்சனை தூசிக்கு சமம்’ என்றேன். மேலும், ‘நீ சொல்வது இயற்கைக்குப் புறம்பானது. அடுத்த பிறவிச் செயல்கள் பெரும்பாலும் இறக்கும் போது எப்படிப்பட்ட எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்துமோ அதைப் பொறுத்தது. ஆதலால், உன் முடிவு தவறானது. உன் விருப்பத்திற்கேற்ப பிறவி கிடைக்காது. உன் செயலுக்கேற்பதான் பிறவி. ஆதலால், பயிற்சியால் உடலையும் மனத்தையும் வலுப்படுத்து, வளப்படுத்து. தொடர் பயிற்சிகள் மூலம் உன்னை மேம்படுத்தினால் பிற்காலத்தே பல சாதைனகள் புரியலாம். அல்லது அடுத்த பிறவி மிகவும் சிறப்பாக அமையும்.
நீ உன்னை எதற்குத் தகுதியுடையவளாக ஆக்கிக் கொள்கிறாயோ இயற்கை உனக்கு அதைக் கொடுக்கும். ஆதலால் உன் தகுதியை வளர்த்துக் கொள்.
தற்கொலை கோழைத்தனம். தற்கொலை எண்ணத்தை உதறிவிட்டு பயிற்சிகளை மேற்கொள். கண்டிப்பாக சாதிப்பாய்’ என்று கூறினேன்.
‘நான் என் காலிலேயே நிற்க விரும்புகிறேன்‘ என்றாள். ‘உன் காலில் தானே நிற்கிறாய்’ என்று கூறிச் சிரித்தேன். ‘என் தாய், தந்தையினர் உட்பட எவரையும் சார்ந்திருக்க விரும்பவில்லை’ என்று கூறினாள். அன்று அவள் மிகவும் அழகான, விலை உயர்ந்த ஆடை, நகைகள் அணிந்திருந்தாள்.
‘நீ உன் காலிலேயே நிற்க வேண்டும், தனியாக இயங்க வேண்டும். அப்படித்தானே. இந்த ஆடைகள், அணிகள், உன் பெற்றோர் உனக்குக் கொடுத்தது. அவற்றைக் கழற்றிவிடு. பெற்றோரிடம் கொடுத்துவிடு. பெற்றோர் கட்டிய வீட்டில் வசிக்கக் கூடாது, வெளியே வந்துவிடு. பிறகு உன் காலிலேயே எப்படி நிற்பது என்பதைப் பற்றி பேசுவோம்’ என்றேன்.
அவள் என்னை முறைத்து, ‘அது எப்படி முடியும்’ என்றாள். ‘ஆம். முடியாதுதான். யாரும் தனித்தியங்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் பிறரைச் சார்ந்திருக்கின்றோம். உதாரணமாக, நீ உடையணிய துணி நெய்பவரை, துணிக் கடைக்காரரை, தையல் காரரைச் சார்ந்திருக்க வேண்டும். உண்பதற்கு விவசாயியை, மளிகைக் கடைக்காரரை, காய்க்கறிக் கடைக்காரரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இப்போது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டாய். இன்னும் நான்கைந்து வருடங்கள் மேற்படிப்புக்காக பெற்றோரைச் சார்ந்துதான் ஆக வேண்டும். படிப்பு முடிந்தபின், நன்றாக சம்பாதித்தால், பணத்திற்காக பிறரைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், அந்தப் பணத்தை நீ சாப்பிட முடியாது. அந்தப் பணத்தை கொண்டு பிறவற்றை வாங்குவதற்கும், நீ மற்றவரைச் சார்ந்துதான் ஆக வேண்டும்’ என்றேன்.
உலகில் எந்த மனிதனும், நிறுவனமும், நாடும் தனித்தியங்க முடியாது என்று பலவாறு விளக்கினேன். ‘ஆம். பயிற்சியால் உன்னை மேம்படுத்து. பிற்காலத்தில் நிறைய சாதிக்கலாம்’ என்றேன். கிட்டதட்ட மூன்றரை மணி நேரம் கடந்தது. அவள் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்தாள். நன்றி கூறி விடை பெற்றுச் சென்றாள்.
சில நாட்களில் அவள் அம்மா என்னைச் சந்தித்து. ‘நல்ல நேரத்தில் கடவுள் போல் என் மகளைக் காப்பாற்றினீர். வீட்டில் ‘எனக்கு நிம்மதியில்லை. தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ என்று கத்திக் கொண்டிருந்தாள். பல நாட்களாக இந்த மனநிலை. வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. திடீரென்று ‘எங்கள் இயற்பியல் ஆசிரியரைச் சந்தித்து விட்டு வருகின்றேன்’ என்று கூறி உங்களிடம் வந்தாள். இப்பொழுது மிகவும் அமைதியாக, நான் கூறும் வேலைகளையெல்லாம் நன்றாகச் செய்கின்றாள். உங்களுக்கு மிக்க நன்றி’ என்று கூறிச் சென்றார். இப்பொழுது அந்தப் பெண் பொறியியல் பட்டதாரியாக தன் கணவனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறாள்.
இந்தப் பிரச்சனைகட்கெல்லாம் காரணம் பெற்றோர்களே! அவளுடைய தங்கையை மிகவும் உயர்த்திப் பேசி, அவளைத் தாழ்த்தியதால் வந்த மன அழுத்தத்தின் விளைவே இது. எப்போதும் குற்றம் சுமத்திப் பேசியதன் விளைவு. இப்படிப்பட்ட மனப் பிரச்சனைகள் இப்போது மிகவும் அதிகமாகிவிட்டன. ஊடகங்களின் தாக்கமும் மனப் பிரச்சனைகளை மேலும் அதிகப்படுத்துகிறது. இப்படிப்பட்ட மனப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தான் பெரும்பாலும் போலி ஆன்மீகவாதிகளின் வலையில் மாட்டிக் கொள்கின்றனர்.
பிரச்சனைகளுக்குத் தீர்வு
ஒவ்வொரு மனிதனும் ஞாபசக்தி, மனம் குவிதல், கிரகித்தல், உடல் ஆரோக்கியம், ஆளுமை ஆகியவற்றில் வேறுபடுகின்றான்.
பெற்றோர் தன் குழந்தைகளுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும்.
பெற்றோர் மைந்தர்களிடம் பொய் சொல்லிக் கொண்டு மைந்தர்களை ‘பொய் சொல்லக் கூடாது’ என்று திட்டுவதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பெற்றோர்கள் மைந்தர்களின் முன் புகைத்துக் கொண்டு அவர்களிடம் ‘புகைபிடித்தல் கூடாது’ என்று கூற உரிமையில்லை.
முதலில் பெற்றோர்கள் பொய் சொல்வதையும், புகைபிடித்தலையும் நிறுத்தினால் தான் அவர்களுக்கு திட்டுவதற்கு தார்மீக உரிமை உள்ளது. இதைப் போல் தான் அசிரியர்களும்.
இதை எழுதும் போது சில நினைவுகள் என்னை ஆட்கொள்கின்றன. எனது பெண் அப்போது ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் என்னிடம், ‘அப்பா! எங்கள் ஆசிரியை மிக நீளமாக நகம் வளர்த்துக் கொண்டு, எங்களை எப்படி நகம் வெட்டச் சொல்லலாம்‘ என்றாள். நான் சிரித்துக் கொண்டே, ‘தவறுதான். நான் உங்கள் ஆசிரியையிடம் பேசுகிறேன். நகம் வளர்ப்பது நல்லதல்ல. இதனால் பல நோய்க் கிருமிகள் சாப்பிடும் போது வாய்க்குள் செல்லலாம். உன் மீதும் தெரியாமல் கீறிக் கொள்ளலாம். நகம் வெட்டுதல் நல்லதுதானே’ என்றேன். நகம் வெட்டப்பட்டது.
இன்னொரு நாள், அப்போது என் மகனுக்கு சுமார் 5 வயது இருக்கும். என் மகனிடம் ‘மகனே! தொலைக்காட்சி பார்ப்பது மனதுக்கும் உடலுக்கும் நல்லதல்ல. அதைத் தவிர்க்கலாமே’ என்றேன். ‘அப்பா! நீங்கள் மட்டும் தெலைக்காட்சி பார்க்கலாமா? நான் பார்க்கக் கூடாதா?‘ என்றார். நானோ, ‘நான் செய்திகள் மட்டும் தான் கேட்கிறேன், பார்க்கிறேன். நீயும் வா என்னுடன், செய்திகள் அறிந்துகொள். நல்லதுதானே’ என்றேன். அவரோ, ‘நீங்கள் உங்களுக்கு விருப்பமானதைப் பார்க்கிறீர்கள். நான் எனக்கு விருப்பமானதைப் பார்க்கிறேன்’ என்றார். நான் சிரித்துக் கொண்டே, ‘சரி, நான் இனி தெலைக்காட்சிப் பார்ப்பதில்லை. நீயும் நிறுத்திவிடு’ என்று பார்ப்பதை தவிர்த்தேன். பல நாட்கள் கடந்தன. நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். செய்திகளை செய்தித்தாள்கள் மூலமாக அறிந்து கொண்டேன். மகனோ, சில நாட்களில் என்னிடம் கெஞ்ச ஆரம்பித்தார். ‘சரி, நல்ல நிகழ்சிகளை மட்டும் குறைந்த நேரம் பார்த்துக் கொள். மற்றபடி நண்பர்களுடம் விளையாடு. நாமும் வீட்டில் மற்ற விளையாட்டுகளை விளையாடலாம்’ என்றேன். ஆம், குழந்தைகள் பெற்றோர்களைக் கண்கானித்துக் கொண்டே இருக்கின்றனர். இன்னொரு நிகழ்வு. ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு பையனுக்கு உடம்பு சரியில்லை என்று அழைத்துச் சென்றனர். அவரோ, அடுத்த நாள் அழைத்து வருமாறு கூறினார். அடுத்த நாள் அழைத்து வந்தபோது ‘சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தச் சொல்லுங்கள்’ என்றார். ‘இதை நேற்றே என்னிடம் கூறியிருக்கலாமே’ என்று கேட்ட போது, ‘நேற்று நீங்கள் வரும்போது என் முன்னால் சர்க்கரை இருந்தது. நேற்று சொல்லியிருந்தால், ‘இவர் மட்டும் சாப்பிடலாம். நான் மட்டும் சாப்பிடக் கூடாதா’ என்று குழந்தை நினைக்கும்’ என்றார். ஆம்,
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக நடந்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் மாதிரியாக நடந்துக் கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் பயிற்சியால் தன் குழந்தைகளின் உடலையும், மனத்தையும் வலுப்படுத்த, வளப்படுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. சிலர் படிப்பில் சிறந்து விளங்குவர். சிலர் விளையாட்டில் சிறந்து விளங்குவர். சிலர் ஓவியம் வரைவதில் சிறந்து விளங்குவர். இப்படிப் பல. எதில் ஈடுபாடு அதிகமோ அந்தத் துறையில் அவர்களை வழிநடத்த வேண்டும்.
அதுதான் பெற்றோர் கடமை.
மேலும், நல்ல உணவு, நல்ல தூக்கம், சிறந்த உடல், மன மூச்சுப் பயிற்சிகளும் தேவை.
சிறு வயதிலேயே சிறந்த எண்ணங்களை மனத்தில் விதைத்து குழந்தைகளை ஊக்கப்படுத்தி வளர்க்க வேண்டும். வெற்றி பெற்றால், போற்றிப் பரிசளிக்க வேண்டும். தவறு செய்தால் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உடல், மன அளவில் வேறுபடுவதால் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடக் கூடாது. ஒரு மனிதனை அவனுடன்தான் ஒப்பிட வேண்டும். மாணவியையும் நேற்று எப்படி இருந்தாள்? இன்று எப்படி? என்று தான் ஒப்பிட வேண்டும். நேற்றையை விட இன்றைய மதிப்பெண்கள் அதிகம் பெற்றால் வளர்ச்சியே. இந்த வழியில் சென்றால் மேற்கூறிய பிரச்சனைகளை தடுக்க முடியும்.
மேலும் பக்கத்து வீட்டுப் பையன் பொறியியல் கல்லூரியில் படிக்கிறான், என் பையனையும் அங்குதான் சேர்க்க வேண்டும், எதிர்த்த வீட்டு பெண் மருத்துவம் படிக்கிறாள், என் பெண்ணையும் அவள் படிக்கும் கல்லூரியிலே சேர்க்க வேண்டும் என்ற பெற்றோரின் எண்ணம் தவறானது. தனது மைந்தர்களின் உடல்நிலை, மனநிலை, தனது பொருளாதார நிலை போன்றவற்றிற்கு எத்துறை உகந்தது என்று ஆராய்ந்து அத்துறைக்கு அனுப்ப பெற்றோர்கள் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து துறைகளிலும் நல்லவர்களும், வல்லவர்களும் தேவை. அப்போதுதான் அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். இயற்கை சமநிலை பாதுகாக்கப்படும். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.