நானே எல்லாவற்றையும் செய்கிறேன்!

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

நண்பர்  ஒருவர் எனது பள்ளி, மற்றும் கல்லூரித் தோழர்.  ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.  சமூக சேவை, மத நல்லிணக்கத்தில் நாட்டம்  உள்ளவர்.  வாலை குரு சுவாமிகளின் தீவிர பக்தர்.  நமது கிருஷ்ணா ஆளுமை வளர் நிலைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலருடன் விருகம்பாக்கம் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவிலில் உழவாரப் பணிகள் செய்த போது அவரும் முழு ஈடுபாட்டுடன் எங்களுடன் பங்கேற்றார்.  அவர் நிர்வாக வணிகவியலில் முதுநிலை பட்டம் பெற்று சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார்.  அவரது ஆலுவலகத்தில் ஒரு நாள் ஒரு சித்தர் சுவாமிகளைச் சந்தித்தேன்.  இருவரும் ஒருவருக் கொருவர் வணங்கிக் கொண்டோம்.  சுவாமிகள் ‘உங்கள் வயது என்ன?’ என்றார்.  நானோ, ‘தெரியாது’ என்றேன்.  கலகலவென்று சிரித்து, ‘உங்கள் ஆன்மாவின் வயதைக் கேட்கவில்லை, இந்த உடம்பின் வயது என்ன?’ என்றார் மறுபடியும்.  நானும் இப்பிறவியில் இந்த உடல் பூமிக்கு வந்து எத்தனை வருடங்களாகிறதென்று சொன்னேன்.

சுவாமிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ‘எல்லாம் இறை செயல் என்கிறோம்.  ‘நல்லதை இறைவன் செய்கிறான்.  கெட்டதையும் அவன்தான் செய்கிறான்‘ என்கிறோம்.  உங்களுடைய கருத்து என்ன’ என்றார் சுவாமிகள்.  ‘தாங்கள் கேட்ட இதே கேள்வியை என்னுடைய சிஷ்யை திருமதி. பிரியதர்ஷினி சில வருடங்களுக்கு முன் என்னைக் கேட்டாள்.  சில மாணவர்களும் கேட்டார்கள்.  நானும் இதே கேள்வியை என்னுள் எழுப்பியிருந்தேன்.  அவர்களுக்கு சொன்ன பதிலை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.  இறைவன் பதில் என்ன தெரியுமா? 

”நானே எல்லாவற்றையும் செய்கிறேன்.  நல்லவற்றையும் நானே செய்கிறேன்.  கெட்டவற்றையும் நானே செய்கிறேன்.  பயிற்சியால் மேம்பட்டவர்கள் மூலம் நல்ல செயல்களையும், பயிற்சியின்மையால் கீழ்மையடைந்தவர்கள் மூலம் கெட்ட செயல்களையும் நானே செய்கிறேன்.  நீ உன்னை பயிற்சியால் மேம்படுத்திக் கொண்டால் நல்ல செயல்களை உன் மூலம் செய்கிறேன்.  உனக்கு பேரும் புகழும் கிடைக்கும்.  பயிற்சியின்மையால் உன்னை தாழ்த்திக் கொண்டால், கெட்ட செயல்களை உன் மூலம் செய்கிறேன்.  பேரும், புகழையும் இழக்கிறாய்.  துன்பத்தையும் அனுபவிக்கிறாய்.  ஆதலால் பயிற்சியால் உன்னை மேம்படுத்திக் கொள்வது உன் கடமையாகிறது”.

ஆம், நல்லவன் ஒருவனுக்கு உதவ இன்னொரு நல்லவனை தூண்டுகிறார்.  சில உதாரணங்களைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.  சுவாமி விவேகானந்தர் ஒரு தடவை தொடர் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.  அழுக்கான உடை, கடுமையான பசி.  எதிரே உட்கார்ந்திருந்த இருவர் இவரை கேலி செய்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு கூடையில் ஒருவர் உணவு, பழங்களுடன் வந்தார்.  அவர் விவேகானந்தரைப் பார்த்து ‘சுவாமி, உங்களுக்குத் தான் உணவு கொண்டு வந்திருக்கிறேன்’ என்றார்.  இவரோ, ‘என்னப்பா, எனக்கு உன்னைத் தெரியாதே.  நான் அழைக்கவில்லையே’ என்றார்.  வந்தவரோ, ‘நான் மதியம் சாப்பிட்டு கண்ணயர்ந்தேன்.  அப்போது இராமபிரான் என் கனவில் தோன்றி, உங்கள் முகத்தைக் காட்டி, ‘எனது பக்தன் தொடர் வண்டியில் பசியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கு உணவு கொடுக்க வேண்டியது உன் கடமை’ என்று கூறி மறைந்தார்.  ஆதலால் உங்களுக்கு எடுத்து வந்தேன்’ என்றார்.  இதைக் கேட்டு விவேகானந்தர் மகிழ்ந்தார்.  ஏற்கனவே அவரை கேலிச் செய்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம் மன்னிப்புக் கோரினர்.  இப்படி பல உதாரணங்கள் என்னால் கூற முடியும்.

என் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளில் ஒன்றை மட்டும் தற்போது உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.  சுமார் 31 வருடங்களுக்கு முன் பள்ளி ஒன்றில் முதுநிலை இயற்பியல் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  கல்வி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துவதில் மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வது வழக்கம்.  இதனால் சில மாணவர்கள் என்னை வெறுத்தனர்.  பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் என் பெயர் பிரபலமாகி வருவதைக் கண்டு, ஏற்கனவே அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சில ஆசிரியர்கள் மனதிற்குள் புழுங்கினர்.  அவர்களில் ஒருவர் என் மீது வெறுப்புற்று மாணவர்களைத் தூண்டிக் கொண்டே இருந்தார்.  ஒரு நாள் உணவகம் ஒன்றில் இந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர் கூடி, என்னை அடிப்பதற்க்காக விவாதித்துக் கொண்டிருந்தனறாம்.  அப்போது அங்கே சென்ற கராத்தே பயிற்சி அளிக்கும் ஒருவர், இதனை கவனித்திருக்கிறார்.  அவர் அந்த மாணவர்களிடம், ‘உங்கள் இயற்பியல் ஆசிரியர் செய்வதெல்லாம் உங்கள் நன்மைக்காகவே.  இப்போது உங்களால் புரிந்துக் கொள்ள முடியாது.  யாராவது அவர் மீது கை வைத்தால், உங்களைத் தொலைத்துவிடுவேன்‘ என்று கண்டித்திருக்கிறார்.  ஆம், மாணவர்களின் முயற்சி திட்டமிடுவதோடு நின்றுவிட்டது.  என்னைக் காப்பாற்ற கராத்தே ஆசிரியரைக் கருவியாக இறைவன் உபயோகித்திருக்கிறான்.  அந்த மாணவர்களில் சிலர் பிற்காலத்தில் தங்கள் செயலுக்காக வருந்தினர்.  அவர்களில் சிலர் இன்றும் என்னுடன் நட்புடன் உள்ளனர்.  ஆனால் தூண்டிய ஆசிரியர் இப்போது எங்கிருக்கிறாரென்று தெரியவில்லை.

இதைப் போலவே கெட்டவன் ஒருவனை தண்டிக்க கெட்டவனை தூண்டுகிறார்.  நம் நாட்டில் கடந்த ஐந்து வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டை நீங்கள் கூர்ந்துக் கவனித்தால் பல விஷயங்கள் உங்களுக்கு புரியவரும்.

இப்போது கொஞ்சம் பின்னோக்கிப் பயணிப்போம். குருசேத்திரப் போர்க்களம்.  பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் போர் ஆரம்பித்துவிட்டது.  கெளரவப் படைகளுக்கும் பாண்டவப் படைகளுக்கும் இடையில் தேரை நிறுத்தினார் பகவான் கிருஷ்ணன்.  காண்டீபன் என்று புகழப்பட்ட அர்ச்சுனன் எதிரே நோக்குகிறான்.  சித்தப்பா, பெரியப்பா, அண்ணன் தம்பியர், மைத்துனர்கள், தாத்தா, குரு போன்ற உறவினர்களை காண்கிறான்.  இவர்களையா நாம் அழிக்கப் போகிறோம்?  இவர்களுடனா சண்டையிட வந்துள்ளேன்? என மனம் கலங்குகிறான்.  அவன் கையிலிருக்கும் புகழ்பெற்ற காண்டீபம் நழுவுகிறது.  மனம் சோர்வடைகிறது.  இதை கண்ணுற்ற பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு பல வழிகளிலும் உபதேசம் செய்கிறார்.

‘அர்ச்சுனா! நீ சத்திரியன்.  கெட்டவற்றை அழித்து நல்லதை நிலைநாட்ட வேண்டியது உன் கடமை.  அதிலிருந்து பின்வாங்குவது உனக்கு தீராப் பழியைத் தரும்.  அவர்கள் அனைவரும் கெட்ட சக்திகளின் பின் அணி திரண்டிருக்கிறார்கள்.  மேலும் நீயே எல்லாவற்றையும் அழிக்கப் போகிறாய் என்று நினைக்காதே.  நானே எல்லாவற்றையும் செய்கிறேன்.  நீ ஒரு கருவி மட்டுமே. எனக்கு உதவியாக போர் செய்தால் பேரும் புகழும் கிடைக்கும் அல்லது ‘நீ கோழை,  பயந்துவிட்டாய்’ என்று உன் பகைவர் உன்னை இகழ்வர். பேரும் புகழையும் இழப்பாய்.  மேலும் நீ இதைச் செய்யாவிட்டால் நான் இன்னொருவரை கருவியாக உபயோகிப்பேன். அவ்வளவே’ என்று கூறி அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசித்தார்.  அவனும் காண்டீபத்தை கையிலெடுத்தான்.  இயற்க்கைச் சமநிலையை, நீதியை நிலைநாட்டினான்.

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் அண்ணாமலையாரை தரிசிக்க திருவண்ணாமலை சென்றிருந்தேன்.  தரிசித்துவிட்டு மலை ஏறி இறங்கினேன்.  அங்கே ஒரு சாது ஒருவர் ஒரு பாறையில் உட்கார்ந்திருந்தார்.  நானும் அவரும் உரையாடிக் கொண்டிருந்தோம்.  அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘இந்த வருடம் கண்டிப்பாக எனது புத்தகத்தை வெளியிடுகிறேன்’ எனச் சூளுரைத்தேன்.  அவரோ சிரித்துக் கொண்டே ‘‘எல்லாம் அவன் செயல்’.  அவன் எப்போது நினைக்கிறானோ, அப்போதுதான் உங்களால் வெளியிட முடியும்’ என்றார்.  ஆம், என்னால் முடியவே இல்லை.  கிட்டத்தட்ட மூன்று நான்கு முறை முயற்சித்தும் புத்தகம் வெளிவரவில்லை.  பல தடைகளையும் தாண்டி எனது புத்தகம், 2018ம் வருடம் தான் எந்தவித பிரச்சனையுமின்றி வெளிவந்தது.  அது கருவிலிருந்து வளர்ந்த காலம் சுமார் 22 ஆண்டுகள்.  ஆம்! எல்லாவற்றையும் இறைவனே செய்கிறான்.  

எல்லாவற்றையும் இறைவன் செய்கிறான்.  ஆதலால் தவறு செய்துவிட்டு இறைவன் மேல் பழிபோடலாம் என்று நினைக்க வேண்டாம்.  பயிற்சியால் உங்களை மேம்படுத்துவது உங்களது கடமை.  அப்போது உங்கள் மூலம் நல்ல செயல்களை செய்கிறான்.  பயிற்சியின்மையால் உங்களை தாழ்த்திக் கொண்டால் உங்கள் மூலம் கெட்ட செயல்கள் நடைபெறுகிறது.

மைந்தர்களை பயிற்சியால் மேம்படுத்துவது பெற்றோர் கடமை.  நாட்டின் குடிமக்களை பயிற்சியால் மேம்படுத்துவது அரசின் கடமை.

எவ்விதமான பயிற்சிகள் தேவை என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். 

தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனஒருமைப்பாடு, சேவை மனப்பான்மை, உண்மை, நேர்மை போன்ற குணங்களை மேம்படுத்தும் பயிற்சியால் நல்ல செயல்கள் நடைபெறுகிறது.  ஆதலால் இளைஞர்களே, இக்குணங்களை மேம்படுத்திக் கொள்வது உங்கள் கடமையாகும்.

ஆம்! உங்கள் செயல்கள் நன்றாக அமைந்தால், கண்டிப்பாக விளைவுகளும் நன்றாகவே அமையும்.  செயல்கள் மோசமாக அமைந்தால், விளைவுகளும் மோசமாகவே அமையும்.  செயல்கள் நன்றாக அமைந்து, விளைவுகள் மோசமானால், அந்த மோசமான விளைவுகளும் பிற்கால நன்மைக்கே.  செயல்கள் மோசமாக அமைந்து விளைவுகள் நன்றாக அமைந்தால், அந்த நல்ல விளைவுகளும் பிற்கால அழிவிற்கே.  ஆதலால், இளைஞர்களே! பயிற்சியால் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.  விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாது, நல்ல செயல்களையே செய்திடுங்கள்.  நலம் பெறுவீர்.  நன்றி.  வணக்கம்.  வாழ்த்துக்கள்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.