Click ▶ for audio
அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பு வணக்கங்கள். இன்று நம் நாட்டில் மணமுறிவுகளும், தற்கொலைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டே வருகின்றன. இதற்கு மூல காரணங்களில் ஒன்று தகுதியில்லாதவர்களை காதலிப்பது. மனப்பக்குவம் இல்லாத நிலையில் காதலிப்பது மற்றும் திருமணம் செய்வது பெரும்பாலும் தோல்வியில் முடிவடைகிறது. சிலர் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். துணைக்கு தகுதியில்லை என்று தெரிந்தவுடன் பெற்றோரிடம் சொல்லவும் தயக்கம். தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். குடும்ப நல நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன. அறிவியல் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தற்கொலைகளும், மணமுறிவுகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மக்கள் நிம்மதியிழந்து வருகின்றனர். காரணம் அறிவியல் வளர்ச்சியால் புற வளர்ச்சி அதிகமாகிவிட்டது. அகவளர்ச்சியை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் இன்னும் மனபாதிப்புகள் அதிகரிக்கும். இவர்கள் தங்கள் பாதிப்பிலிருந்து வெளிவர இறைவனை இறைஞ்சுவோம்.
இன்றைய கல்வி முழுமையானது அல்ல. மாணவர்கள், இளைஞர்கள் பலர் தேவையானவற்றை படிக்கவில்லை. தேவையில்லாத பலவற்றை படித்துக் கொண்டிருக்கின்றனர். குணங்களை மேம்படுத்தும், வாழ்க்கையை வளப்படுத்தும் கல்வி முறைகள் தான் இன்றைய தேவை.
கொரோனா வைரஸ் பிரச்சனையை உலகம் சரியாக கையாளவில்லை. தொற்று நோய்களுக்கு மருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே. அந்த வழி செல்லாமல், மாணவர்களை வீட்டில் இருக்கச் செய்து வலைதளங்கள் மூலம் வகுப்புகள் நடத்தச் செய்ததும் மன அழுத்தத்தால் சிலரை காதல் வலையில் வீழ்த்திவிட்டது. அது மட்டுமல்ல பல மாணவர்களின் கண்களும், காதுகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை சின்மயா பள்ளி மாணவி போன்று பலரின் மரணத்திற்கு வலைதள வகுப்புகள்தான் மூல காரணம். எனது அனுபவங்களில் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.
சில வருடங்களுக்கு முன் ஒரு இளம் பெண் என்னை சந்திக்க வந்திருந்தாள். தாய் அவளை கவனிக்கும் நிலையிலில்லை. அப்பா கடமையே கண்ணானவர். தனது அலுவலக வேலையை மிகச் செம்மையாக, நேர்மையாக செய்தவர். தன் மகளுக்கு செய்ய வேண்டிய உதவிகளை செய்தார். ஆனால் தேவையான நேரத்தை அவர் ஒதுக்கவில்லை. வருங்கால பாதுகாப்பு பற்றிய பயம் அவள் மனதில் இருந்தது. அவள் அடிக்கடி அவளது பிரச்சனைகள் பற்றி என்னிடம் விவாதிப்பது வழக்கம். நானும் அவளுக்கு ஆறுதல் சொல்வது வழக்கம். இப்படி பல இளம் பெண்களும், ஆண்களும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டி என்னை அடிக்கடி சந்திப்பது வழக்கம். பல மணி நேரங்கள் இதற்காக நான் செலவழிப்பதுண்டு.
ஒரு நாள் அவள் என்னிடம், ‘நான் மாலையும் கழுத்துமாக வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்றாள்.
‘நான் காதலுக்கு விரோதியல்ல. ஆனால் உனக்கு இப்போது அது தேவையா என்று யோசித்துப் பார். பெற்றோர்கள் உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பர். உன்னை பற்றி என்னவெல்லாம் கனவு கண்டிருப்பர். அவர்களுக்கு விரோதமாக நீ முடிவெடுத்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும். அவர்கள் உன்னை சபிப்பார்கள். நீ நிம்மதியாக வாழ முடியும் என்று நினைக்கிறாயா? பெற்றோர் மற்றும் நல்லவர்கள் உன்னை வாழ்த்தினால்தான் நீ நிம்மதியாக வாழ முடியும்’ என்றேன். மேலும் ‘உன் அப்பாவிற்கு இவ்விஷயம் தெரிந்து உன்னை, ‘வீட்டைவிட்டு வெளியேறு மகளே’ என்றால் நீ என்ன செய்வாய்? அல்லது நீ காதலித்தவன் உன்னை கைவிட்டுவிட்டால் நீ என்ன செய்வாய்? முதலில் உன்னை உயர்த்திக்கொள். நன்றாகப் படி, நல்ல வேலையில் சேர்ந்து பணம் சேர்ப்பாய். சிறந்த அனுபவங்களை பெற்றிடு. நல்லது எது, கெட்டது எது என்று அப்போது நீ புரிந்து கொள்வாய். உன்னை வளப்படுத்துவதும், வலுப்படுத்துவதும் தற்போதைய கடமை. உனக்கு இந்த வயதில் என்ன தேவையோ அதைக் காதலி. புத்தகங்களை காதலி. மதிப்பெண்களை காதலி. எப்போது சுயமாக நீ சம்பாதித்து உன் தேவையை பூர்த்தி செய்கிறாயோ அப்போது யாரை காதலிப்பது, யாரை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்யலாம்’ என்றேன்.
அவளுக்கு ஒரு கால கட்டத்தில் தந்தைக்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் இருந்தது. இது எனக்கு தெரிய வந்ததும் நான் அவளிடம் அது தவறு. கண்டிப்பாக பெற்றோர் சம்மதத்துடன் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அந்தப் பெண் மிகவும் நல்லவள். பிறருக்கு உதவும் சுபாவம் கொண்டவள். நண்பர்களும் சரியாக அமையவில்லை. தனிமை மற்றும் எதிர்கால பாதுகாப்பு பற்றிய பயமே அவளை அப்படியொரு நிலை எடுக்கத் தூண்டியது. அவளுக்கு சில யோகாசனங்கள் கற்றுக் கொடுத்து பயிற்சி செய்யச் சொன்னேன். மேலும் அவள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பயிற்சிகளை அளித்தேன். அவளும் ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்யத் துவங்கினாள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் மாறிக் கொண்டிருந்தாள்.
அவள் ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு தடவை தேர்வின் போதும் அவளுக்கு பல தொல்லைகள் ஏற்பட்டன. அதனால் பயம். ஏனெனில் அவளுக்கு அந்த துறை உகந்தது கிடையாது. ஒவ்வொரு முறையும் ‘என்னை வாழ்த்துங்கள்‘ என்று என்னிடம் வந்தாள். நான் வாழ்த்திய பிறகு தான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். அடிக்கடி, ‘ நான் சாக வேண்டும்’ என்ற தொனியில் புலம்பிக் கொண்டிருந்தாள். பொறியியல் கல்லூரியில் படித்த காலங்கள் முழுவதும் பல பிரச்சனைகளுடன் கடந்தது. இறுதியில் தந்தை நிச்சயித்த வரனையே திருமணம் செய்ய முடிவெடுத்தாள். திருமண அழைப்பிதழுடன் என்னை சந்தித்தாள். ‘நீங்கள் என்னை வாழ்த்த வேண்டும்’ என்று வாழ்த்து பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றாள். பெற்றோர் சுற்றத்தினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களுடன் திருமணமும் சிறப்பாக நடந்தது.
இப்பெண் அனுபவித்த பிரச்சனைகளுக்கு மூல காரணங்கள் 1. தனிக்குடித்தனம். கூட்டுக் குடும்ப வாழ்வு என்றால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் பெரும்பாலும் தலையெடுக்காது. 2. அவள் ஒரே பெண். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் என்றால் தனிமை வாட்டாது. 3. கல்லூரியில் அவள் தேர்ந்தெடுத்த துறை தவறானது. அதனால் கல்லூரியில் படித்த காலம் முழுவதும் மனக்குழப்பங்கள், பல மனப்பிரச்சனைகள்.
இப்பெண்ணைப் போன்ற பல பெண்கள் இன்று இப்படிப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் போலிச் சாமியார்களிடம் மாட்டிக்கொண்டு பணத்தையும் நிம்மதியையும் இழந்துத் தவிக்கின்றனர். பெற்றோர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படிப்பட்ட போலிச் சாமியார்களை நீங்களும் அறிந்திருப்பீர்களே! ஆதலால் அன்பு நெஞ்சங்களே சிலவற்றை முடிவு செய்யும் போது மேற்கூறிவற்றையும் கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஆம் இளைஞர்களே! எப்போது நீங்கள் சுயமாக சம்பாதித்து மற்றவர்களை சாராது உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்கிறீர்களோ அப்போது உங்கள் திருமணத்தை பற்றி முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு முன்னர் காதலிப்பது மற்றும் திருமணம் செய்வது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைகிறது. ஆதலால் இளைஞர்களே! உங்கள் தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது சிறப்பானது. பெற்றோர்களும் தம் மைந்தர்களுக்கு குடும்ப வாழ்க்கைக்கான தகுதியிருந்தால் மட்டுமே திருமணம் செய்விக்க வேண்டும் அல்லது தகுதி வரும் வரை தாமதிக்க வேண்டும். திருமணத்திற்கான தகுதிகளைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ள நமது வலைதளத்தின் “கல்யாணம் கட்டிக்கலாமா!” என்ற கட்டுரையை உள்வாங்குங்கள். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள்..நன்று
தங்கள் கருத்துக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!