நம்பும் நல்லோர் கெடுவதில்லை

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பு வணக்கங்கள்.

இறைச்சக்தி பரந்து, விரிந்து, எங்கும், எப்பொழுதும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. நம் செயல்களை, வார்த்தைகளை, எண்ணங்களை தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக்கிறது. காலம் வரும் போது விளைவுகளைக் கொடுக்கிறது. நல்லவர்களுக்கு கெட்ட செயலின் விளைவுகள் சீக்கிரம் தாக்கும். கர்மா சமப்படுத்தப்படுகிறது. கெட்டவர்களுக்கு மிகவும் தாமதமாக வட்டியுடன் கிடைக்கும். அவ்வளவே!

இறைவனை முழுவதும் நம்பும் நல்லோர் என்றுமே கெட்டதில்லை. தோற்றதில்லை. நாவுக்கரசர், பிரகலாதன் போன்றோர் எவ்வளவு துன்பத்திற்குள்ளாயினர். இறுதியில் காப்பாற்றப்பட்டனர். உயர்த்தப்பட்டனர். அவர்கள் பெயர் வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கிறது. இப்படி பல உதாரணங்களைக் கூறலாம்.

சில மாதங்களுக்கு முன் எனக்குத் தெரியவந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட விரும்புகிறேன்.

42 வயதுடைய ஒருவர் பல நிறுவனங்களில் வேலை தேடி அலைந்தார். மகன் படிப்பு மற்றும் வீடு கட்ட வாங்கிய கடன் என்று பல லட்சங்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. நடந்தே பல இடங்களுக்கும் சென்று வந்தார். மிகவும் வறுமையான நிலை.

ஒரு நாள் வழியில் ஒரு பணப்பை. நிறைய பணம் கிடைத்தது. காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாமா? அல்லது வீட்டிற்கு கொண்டு செல்லலாமா? என்று யோசித்தார்.

மனம் அலைபாய்ந்தது. இறுதியில் பணப்பையை எடுத்துக் கொண்டு வீடு நோக்கிச் சென்றார். இறை நம்பிக்கை மிகுந்த அவரது மனைவிக்கோ கடுங்கோபம். ‘அடுத்தவர் பணத்தில் நான் வாழ விரும்பவில்லை. உடனே இந்தப் பணம் யாருக்குச் சொந்தமோ அவரிடம் கொடுத்துவிட்டுத்தான் நீங்கள் வீட்டில் நுழைய வேண்டும்’ என்று கட்டளையிட்டாள். ‘உங்களுக்கு செலவுக்குப் பணம் வேண்டுமாயின் இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தாலியை கழற்றிக் கொடுத்தாள்.

பணப்பையைத் திறந்து பார்த்தார். அங்கு பணத்துக்குரியவரின் முகவரி காணப்பட்டது. முகவரியைத் தேடி சென்றார். அது ஒரு பெரிய பங்களா. வெளிக் கதவை திறந்து வளாகத்தினுள் நுழைந்தார். வீட்டினுள்ளிருந்து இறைப்பாடல் ஒலிப்பது காதில் விழுந்தது. அழைப்பு மணியை அழுத்தினார். நெற்றி நிறைய விபூதியுடன் ஒரு பெரியவர் வெளியே வந்தார். பெரியவரிடம் தனது நிலையையும், நடந்த அனைத்தையும் கூறினார்.

பெரியவரோ, ‘உங்கள் நிலையில் வேறு யாரும் இருந்தால் பணத்தை நிச்சயம் திருப்பிக் கொடுத்திருக்க மாட்டார்கள். உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன். உங்கள் மனைவியின் இறை நம்பிக்கை போற்றுதலுக்குரியது. எங்கள் கம்பெனியில் மேலாளர் பணி ஒன்று காலியாக உள்ளது. அதற்குத் தகுந்தவரை தேடிக் கொண்டிருக்கிறேன். அதை ஏற்றுக் கொள்கிறீர்களா?’ என்றார். வந்தவர் மனைவியை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். வேலையை ஏற்றுக் கொண்டார். அதன்பின் அவரது வாழ்வு மிகவும் சிறப்புற்றது.

இன்னொரு நிகழ்வு. பல வருடங்களுக்கு முன் நடந்தது. வினாயகர் கோவில் பூசாரி ஒருவர் தினமும் பூசை செய்து இறைவனை வழிபட்டு வந்தார். பிரசாதமாக அடிக்கடி கொழுக்கட்டை செய்யப்பட்டது. கொழுக்கட்டையில்லாமல் திரும்பி வரும் போது பையன் கேட்டால் ‘வினாயகர் சாப்பிட்டு விட்டார்’ என்று கூறுவது அவர் வழக்கம். அடிக்கடி இப்படி கூறவே பையன் வினாயகர் கொழுக்கட்டை சாப்பிடுகிறார் என்று தீவிரமாக நம்புகிறான். ஒரு நாள் பூசாரி வெளியூர் சென்றுவிட்டார்.

பூசாரியின் மனைவி கொழுக்கட்டை செய்து பையனிடம் கொடுத்து பூசை செய்து வரச் சொன்னார். பூசை செய்துவிட்டு பையன் வினாயகரிடம் ‘கொழுக்கட்டை சாப்பிடுங்கள் வினாயகரே!’ என்று கொழுக்கட்டையை வினாயகர் வாய்க்கருகில் கொண்டு சென்றான்.

வினாயகர் வாயைத் திறக்கவில்லை. பையன் எவ்வளவோ மன்றாடியும் வினாயகர் நிலையில் மாற்றமில்லை. பையனோ, ‘அப்பா கொடுத்தால்தான் சாப்பிடுவீர்களா நான் கொடுத்தால் சாப்பிட மாட்டீர்களா?’ என்று கூறி கண்ணீர் விட்டு அழுதான், கதறினான். ‘இனி சாப்பிடாவிட்டால் என் மண்டையை உடைத்துக் கொண்டு இங்கேயே இறந்துவிடுவேன்’ என்று அருகிலுள்ள கல்லில் முட்டப் போனான்.

ஒரு கரம் நீண்டு அவனைத் தடுத்தது. திரும்பி பார்த்தான். மறுகரம் கொழுக்கட்டையை வாயில் வைத்து சாப்பிட்டது. ஆம் அனைத்து கொழுக்கட்டைகளும் விரைவில் தீர்ந்துவிட்டன. பையன் மகிழ்ந்தான். வீட்டிற்கு வந்தான். அம்மா அவனிடம் ‘கொழுக்கட்டை எங்கடா?’ என்று கேட்க ‘வினாயகர் சாப்பிட்டுவிட்டார்’ என்றான் சிறுவன். ‘வினாயகர் சாப்பிட்டாரா? என்னடா உளறுகிறாய்’ என்று திட்டினாள் தாய். தந்தை வந்தவுடன் அவனை, ‘ஏண்டா பொய் சொல்கிறாய்’ என்று கடுமையாக அடித்தார். ‘நீங்கள் தானே அப்பா எப்போதும் வினாயகர் சாப்பிட்டுவிட்டார் என்று கூறுவீர்கள். என்னிடமும் சாப்பிட்டார்’ என்றான். அவர் அடிப்பதை நிறுத்தவில்லை.

பையனோ, நீங்கள் வேண்டுமானால் வந்து பாருங்கள் அப்பா என்று அழுதுகோண்டே கூறினான். அடிப்பதை நிறுத்தினார். போய்த்தான் பார்ப்போமே என்று அடுத்த நாள் தந்தை வினாயகரின் பின்னால் நின்று கொண்டார். பையன் கொடுக்க, வினாயகர் கொழுக்கட்டை வாங்கி சாப்பிட்டார். தந்தை வியந்தார். ஆம் பையனின் நம்பிக்கையால் இது நடந்தது. 

பிரகலாதனின் தீவிர நம்பிக்கைதானே தூணிலிருந்து நரசிம்மரை வரச் செய்தது. ஆம் இறைவனை நம்பும் நல்லோர் என்றுமே ஏமாற்றப்படுவதில்லை. அனைத்து மதங்களிலும் இதைப் போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.

என்ன அன்பு நெஞ்சங்களே! இப்படி கதை விடுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? இது முற்றிலும் நடந்த உண்மை. குறைந்தது ஐந்து வருடங்களாவது நீங்கள் தொடர்ந்து உண்மையே பேசி செயல்படுத்தி வந்தால் இதைப் போன்ற நிகழ்வுகளை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். வேண்டுமானால் முயன்று பாருங்கள்.

முகுந்தன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சிறுவன். இறைபக்தியும் நம்பிக்கையும் உடையவன். நேர்மையானவன். உண்மையே பேசுபவன். ஆனால் அவன் அண்ணன் அனந்தா அதற்கு நேர்மாறானவன். முகுந்தனின் இறைபக்தி, நம்பிக்கை, இறைத் தாகம் எல்லாவற்றையும் விமர்சிப்பவன். கேலி செய்தவன். ஆக்ராவில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்தான். முகுந்தனும் அவனது நண்பன் ஜிதேந்திராவும் அனந்தாவின் வீட்டிற்குச் சென்றனர்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தபின் அனந்தா, ‘உனக்கு இறைவன் மீது மிகுந்த நம்பிக்கையிருக்கிறது. ஒரு சோதனை செய்வோம். நீங்கள் பிருந்தாவன் செல்ல ஆசைப்படுகிறீர்கள். செல்வதற்கு மட்டும் பயணச்சீட்டு பெற்றுக் கொடுக்கிறேன். அங்கே சாப்பாட்டிற்கும், பிருந்தாவனத்தை சுற்றி பார்ப்பதர்க்கும் திரும்பி வருவதற்கும் இறைவன் உதவுகிறாரா என்று பா்க்கலாம். நீ வேறு யாரிடமும் எந்த உதவியையும் கேட்கக் கூடாது சம்மதமா?’ என்றான். முகுந்தனும் ஒத்துக் கொண்டான். பிருந்தாவன் செல்வதற்கு மட்டும் பயணச்சீட்டு பெற்றுக் கொடுத்தான் அண்ணன். இருவரும் புகைவண்டியில் புறப்பட்டனர். ஜிதேந்திராவிற்கோ மிகவும் பயமாக இருந்தது. நேரம் கடந்து கொண்டிருந்தது. இருவருக்கும் கடுமையான பசி. அவர்கள் பிருந்தாவன் சென்றடைவதற்கு முந்திய ரயில் நிலையத்தில் இரு இளைஞர்கள் அவர்களிடம் வந்தனர். அவர்களை வற்புறுத்தி ஒரு விருந்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கோ அவர்களுக்கு பலவித இனிப்பு, மற்றும் காரங்களுடன் மிகச் சிறப்பான விருந்து பரிமாறப்பட்டது. விருந்து முடிந்தபின் மண்டபத்திற்கு வெளியே உள்ள மரத்தடியில் நிழலுக்காக ஒதுங்கியிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஒரு இளைஞன் அவர்களிடம் வந்தான். நான் நேற்று ஒரு கனவு கண்டேன். அதில் நீங்களும் இன்னொருவரும் தெரிந்தீர்கள். உங்களை உபசரித்து தேவையான உதவிகள் செய்யும்படி எனக்கு இறைக் கட்டளை பிறந்தது. நீங்களே எனது குரு. நீங்கள் அடிக்கடி எனது கனவில் வருகிறீர்கள். வாருங்கள் உங்களுக்கு பிருந்தாவனத்தை சுற்றிக் காட்டுகிறேன் என்று முகுந்தனிடம் கூறினான். அவர்கள் இருவருக்குமே இன்ப அதிர்ச்சி. அவர்கள் மூவரும் பிருந்தாவனம் அடைந்து பல இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். திரும்பியவுடன் ரயில் நிலையத்தில் திரும்பச் செல்வதற்காக பயணச் சீட்டை எடுத்துக் கொடுத்தார் வந்தவர்.

‘நீங்களே எனது குரு. எனக்கு உபதேசம் செய்யுங்கள்’ என்றான் வந்தவன். ஆம் பதின்ம வயது சிறுவன் முகுந்தனுக்கு முதல் சீடன் அங்கே கிடைத்தான். அவனுக்கு கிரியா யோகத்தை உபதேசம் செய்தார்.

சீடன் குருவையும், குருவின் நண்பனையும் ரயிலில் ஏற்றிவிட்டு ‘இதை எனது காணிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று பணக் கட்டுகளையும் வைத்துச் சென்றான். முகுந்தனின் நண்பனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். இறைவனின் கருணையைப் போற்றினான். கொண்டாடினான்.

ஏற்கனவே அண்ணன் அனந்தா அறிவுறுத்தியபடி இரவு பன்னிரண்டு மணிக்குள் அண்ணன் வீட்டை அடைந்தனர். பணக்கட்டுகளை மேசையில் வைத்தனர். சிறுவர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படப் போகிறார்களோ என்ற எண்ணத்தால் நாள் முழுவதும் மூழ்கியிருந்த அண்ணனுக்கோ திகைப்பு. வியப்பு. ‘என்னடா எங்காவது திருடி வந்தீர்களா?’ என்றான். நடந்தவை அனைத்தையும் நண்பர்கள் கூறினர். இறைவனின் கருணையை வியந்த அனந்தா ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, ‘என்னை சீடனாக ஏற்றுக் கொள்வாயா தம்பி?’ என்று தம்பியைச் சரணடைந்தான். ஆம், முகுந்தனுக்கு இரண்டாவது சீடன் கிடைத்தான். அவனுக்கும் ஆக்ராவில் உபதேசம் நடந்தது. 

முகுந்தன் யாரென்று உங்களுக்கு புரிந்ததா? அச்சிறுவனே பிற்காலத்தில் பரமஹம்ச யோகானந்தா என்று புகழ் பெற்று கிரியா யோகத்தை உலகம் முழுவதும் பரப்பினார். ஆம், மகா அவதார பாபாஜியின் சீடர் லாகிரி மகாசயர். அவரின் சீடர் சுவாமி யுக்தேஸ்வர் கிரி. சுவாமி யுக்தேஸ்வர் கிரியின் ஒப்பற்ற சீடன்தான் பரமஹம்ச யோகானந்தர். இந்நிகழ்வுகள் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற அவரது நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் கடுமையான நெஞ்சுவலி. நானோ தியானத்திலாழ்ந்தேன். எனக்கு மருத்துவரிடம் செல்ல விருப்பமில்லை. நாம் திரும்ப திரும்ப பிறக்கிறோம். எங்கு சென்று பிறந்தால் நம் பழைய செயல்களின் விளைவுகளை அனுபவிக்க முடியுமோ அங்கு சென்று பிறக்கிறோம். நாம் எப்படி பழைய ஆடையைக் களைந்து புத்தாடை கிடைத்தால் மகிழ்வோமோ அதைப் போல் ஆன்மா பழைய உடலைக் களைந்து புது உடல் கிடைத்தால் மகிழும். ஆதலால் இறப்பைப் பற்றிய கவலை எமக்கில்லை. ‘நான் இந்த உடம்புடன் இன்னும் பணிகள் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எனக்கு உதவலாம். அல்லது என்னை எடுத்துக் கொள்ளலாம்’ என்று ஆழ்ந்து தியானித்தேன். சிறிது நேரத்தில் ‘பூண்டு சாப்பிடு. சரியாகிவிடும்’ என்ற குரல் எனக்குள்ளே ஒலித்தது. ஒரு கைநிறைய பூண்டு அரிசிகளை ஒரு குவளை பாலில் காய்த்து, பூண்டு அரிசிகளைச் சாப்பிட்டு பாலை அருந்தினேன். நெஞ்சவலி குணமானது. அன்றைய நெஞ்சு வலிக்குக் காரணம் வாயுத் தொல்லை என்றுணர்ந்தேன். இப்படி பல நிகழ்வுகள் என் வாழ்வில் நடந்துள்ளன. ஆம், இறைவனை முழுவதுமாக நம்பும் நல்லோர் காப்பாற்றப்படுகின்றனர், கைவிடப்படுவதில்லை. நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.