சின்ன வீடு பெரிய வீடு

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் எனது வணக்கங்கள். சில வருடங்களுக்கு முன் சென்னை (2018 முற்பகுதியில்) வளசரவாக்கத்தில் செயல்படும்   நற்சிந்தனை வட்டத்தின் சார்பில் காமகோடி நகரில், காமகோடி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்னை சிறப்புப் பேச்சாளராக அழைத்திருந்தனர்.  அரங்கு நிரம்பியிருந்தது. நிகழ்ச்சிக்கு மிகச் சிறந்த பேச்சாளரான முன்னாள் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியரும் தற்போதைய மயிலாடுதுறை தமிழ்ச்சங்கத் தலைவருமான திரு. ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.  நற்சிந்தனை வட்டத்தின் தலைவர் திரு. பாலன் அவர்கள் சிறந்த பேச்சாளர்.  தென்னக ரயில்வேயில் வேலை செய்து கொண்டே பல விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறார்.  பல வருடங்களாக இதைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். மக்களின் பணியில் மிகுந்த நாட்டமுள்ளவர்.

வாழ்வாங்கு வாழ்க்கை‘ என்ற தலைப்பில் பேசிக் கொண்டிருந்தேன்.  அதிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கு எழுத விரும்புகிறேன்.

சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் இனிப்பு பண்டமொன்றை எனது கல்வி நிலையத்திற்கு கொண்டு வந்தார்.  என்னிடம் கொடுத்து, ‘நீங்கள் சிறிது உண்டுவிட்டு, மீதியை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்றார்.  நானோ புன்னகையுடன், ‘எந்த வீட்டிற்கு’ என்றேன்.  அவர் நிமிர்ந்தார்.  ‘பல வீடுகள்  உள்ளன, தெரியுமா? எந்த வீட்டிற்கு’ என்றேன் மறுபடியும்.  அவர் திகைத்தார்.  ‘இவரா இப்படிப் பேசுகிறார்?’ என்று.  நான் அவரிடம், ‘பல விதமான வீடுகளைப் பற்றி கூறுகிறேன் கவனமாகக் கேளுங்கள்’ என்றேன்.

உயிர் உறையும் வீடு இந்த உடல்.  உயிரைத் தாங்கி  நிற்கும் உடல்  உறையும் வீடு நாம் வசிக்கும் வீடு. சொந்த வீடு, வாடகை வீடு, குத்தகை வீடு இப்படி சில வீடுகள்.  குச்சி வீடு, மச்சி வீடு, பங்களா வீடு இப்படி சில வீடுகள்.  பிறந்த  வீடு, புகுந்த வீடு என்று சொல்வார்கள்.  இப்படி இரண்டு வகை வீடுகள்.  சின்ன வீடு, பெரிய வீடு என்று இரு வகை வீடுகள்.

மற்றும் அறம், பொருள், இன்பம், வீடு என்று வள்ளுவன் கூறுவானே அப்படி  ஒரு வீடு.  அதாவது அறவழியில் பொருளீட்டி இன்பம் துய்த்தால் வீடு பேற்றை அடையளாம் (பேரின்ப பெரு வீடு).  அதாவது பிறவியாகிய பெருங்கடலை நீந்தி இறைவனடி சேருவதையே வீடு பேறு என்று சொல்வர்.  இதையே வள்ளுவன், 

‘பிறவிப் பெருங்கடல் நீத்துவார் நீந்தார் 
இறைவனடி சேராதார்’  

என்று கூறினான். 

இப்படி பல வகை வீடுகள்.  ‘எந்த வீட்டிற்கு இனிப்பை எடுத்துச் செல்ல வேண்டும்’ என்றேன்.  நண்பரோ வாய்விட்டுச் சிரித்தார்’ என்றேன்.  இதைக் கேட்ட அரங்கத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் நெகிழ்ந்தனர்.

ஆம்! இறைவன் நம்மை ஒரு காரணத்திற்காக படைக்கிறான்.  முதலில் இறைவனிடமிருந்து வரும்போது நமது மனம் மிகத் தூய்மையாக இருக்கிறது.  இங்கு வந்து சேர்ந்தவுடன் கொஞ்சம், கொஞ்சமாக மனதில் அழுக்கு சேர்ந்து விடுகிறது.  விருப்பு வெறுப்பால் தூண்டப்படும் நாம் வந்த வேலையை மறந்துவிடுகிறோம். 

நாம் வந்த வேலையை ஒழுங்காக முடித்து, நம்மை சுத்தப்படுத்தினால் தான் (உண்மை, நேர்மையான வாழ்க்கை) மறுபடியும் இறைவனை அடைய முடியும் (மிகப் பெரிய வீடு).  

‘புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்’

என்பது வள்ளுவம்.  

அது வரையில் திரும்ப திரும்ப எங்கு சென்று பிறந்தால் நம் பழைய, தற்போதைய செயல்களின் விளைவை அனுபவிக்க முடியுமோ அங்கே பிறக்க வேண்டும்.  நம்மை முழுவதும் சுத்திகரித்த பின் திரும்ப பிறக்க வேண்டிய கட்டாயமில்லை.  விரும்பினால் மறுபடியும் பிறக்கலாம் அல்லது இறைவனுடனே ஒன்றிணைந்துவிடலாம். அதுவே பேரின்பப் பெருவீடாம். இது எப்படி என்று விளக்க விரும்புகிறேன். ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தின் முதல் மாணவனாகத் தேறுகிறான் என்று கொள்வோம். அவனை எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வர். அல்லது படிக்க விருப்பமில்லாவிடினும் வீட்டிலேயே இருக்கலாம். அதைப் போல்தான் தன்னை மிகவும் சுத்தப்படுத்திய ஆன்மாக்கள் விரும்பிய இடத்தில் பிறக்கலாம். அல்லது இறைவனுடன் ஒன்றி விடலாம். ஆம் வள்ளுவன் கூறியது போல் அறவழியில் பொருளீட்டி இன்பம் துய்த்தால் மட்டுமே அப்பெரிய வீட்டை அதாவது இறைவன் திருவடியை அடைய முடியும். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.