Click ▶ for audio
அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் எனது வணக்கங்கள். சென்னை ஆழ்வார்திருநகரில் இயங்கிய எங்களின் கிருஷ்ணா ஆளுமை வளர் நிலையம் (SRI KRISHNA INSTITUTE of Individuality Development (SKIID)) மிகவும் புகழ் பெற்றிருந்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்வேறு பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் மாணவிகள் எங்களிடம் கல்வி பயின்றனர். பல்வேறு பள்ளிகளிலும் எங்களின் மாணவர்களே பெரும்பாலும் முதலிடங்கள் வகித்தனர்.
ஒரு நாள் காலை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் புகட்டிக் கொண்டிருந்தேன். உண்மையின் சிறப்புகளை, மேன்மைகளை, சக்திகளை மாணவர்களிடம் அடிக்கடி விவாதிப்பது எனது வழக்கம். அன்றும் அப்படியே. மாணவர்களிடம் ஒரு நிகழ்ச்சியை விவாதித்தபின், ‘ஆம், நீங்கள் எப்போதும் உண்மையே பேசினால், பேசுவதெல்லாம் உண்மையாகிவிடும். நீங்கள் எப்போதும் உண்மையே எழுதினால் எழுதுவதெல்லாம் உண்மையாகிவிடும்’ என்றேன். மேலும், ‘எத்தனை பேர் உண்மை பேசுகிறீர்கள்? கையை உயர்த்துங்கள்’ என்றேன். யாரும் உயர்த்தவில்லை. மறுபடியும், ‘யாராவது வருங்காலத்தில் உண்மை பேச விரும்புகிறீர்களா?’ என்றேன். யாரும் கையை உயர்த்தவில்லை. எனக்கோ கடுமையான கோபம்.
‘யாரும் உண்மை பேசக்கூட விரும்பவில்லை. இவ்வளவு காலமும் ஒழுக்கம், நல்ல நியதிகளைப் போதித்து என்ன பயன்? அடுத்த வருடம் பதினொன்றாம் வகுப்பு பாடங்களை உங்களுக்கு நடத்தப் போவதில்லை. ‘நீங்கள் வேறு கல்வி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம்’ என்று கூறினேன். எனது முடிவில் மிகவும் உறுதி காட்டினேன். சில மாணவர்கள் வேறு கல்வி நிலையங்களில் சேர்ந்துவிட்டனர். பல மாணவர்கள், பெற்றோர்கள் என்னை வகுப்புகள் ஆரம்பிக்குமாறு வற்புறுத்தினர். அப்போது 100 சதவிகிதம் உண்மை பேசிக் கொண்டிருந்தேன். அதாவது எப்போதும் உண்மையே பேசினேன் பேசியதைச் செயல்படுத்தினேன்.
இதனால் மிகவும் அதிகமான பொருளாதார இழப்பு. இருந்தாலும் என் நிலையில் இருந்து மாறவில்லை. அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரமுகரின் மனைவி என்னிடம் வந்து தன் மகளுக்காக, ‘கண்டிப்பாக நீங்கள் பதினோன்றாம் வகுப்பு பாடம் நடத்த வேண்டும்’ என்று கடுமையாக வாதாடினார். நான் மறுத்துவிட்டேன். இது அவர்களின் மனதை மிகவும் காயப்படுத்திவிட்டது. பிற்காலத்தில் அதே பகுதியில் அவர்கள் ஒரு கல்வி நிலையம் நடத்த இந்நிகழ்வும் தூண்டு கோலாய் அமைந்தது. இப்போது மறதி அதிகமாக இருப்பதால் பேசியதை சில சமயங்களில் செயல்படுத்த முடியவில்லை.
ஒரு வருடம் எனது முடிவில் உறுதியாக இருந்தேன். எங்கள் கல்வி நிலையத்தில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. நான் சற்றும் கவலைப்படவில்லை. ஏனெனில் சத்தியத்தின் பாதையில் நடந்தால் பல சோதனைகள் வரத்தான் செய்யும். இறுதியில் எல்லாம் நல்லபடியாகவே முடியும். ஆம்
செயல்கள் நன்றாக அமைந்தால் விளைவுகள் நன்றாகவே அமையும். செயல்கள் மோசமாக அமைந்தால் விளைவுகள் மோசமாகவே அமையும். செயல்கள் நன்றாக அமைந்து விளைவுகள் மோசமானால் அந்த மோசமான விளைவுகளும் பிற்கால நன்மைக்கே. செயல்கள் மோசமாக அமைந்து விளைவுகள் நன்றாக அமைந்தால் அந்த நல்ல விளைவுகளும் பிற்கால அழிவிற்கே.
உங்கள் பழைய செயல்களையும் விளைவுகளையும் நீங்கள் கூர்மையாக ஆராய்ந்தால் இவை உண்மை என்பது உங்களுக்கு புரியும்.
இப்படியே ஒரு வருடம் கடந்தது. பலரும் வகுப்புகள் ஆரம்பிக்குமாறு என்னை நிர்பந்தித்துக் கொண்டிருந்தனர். நான் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தனையிலாழ்ந்தேன். ஒரு நாள் புத்தருக்கும் அனந்தருக்குமிடையில் நடந்த உரையாடல் என் நினைவிற்கு வந்தது.
பெளத்த மதத்தை உருவாக்கிய சித்தார்த்தன் என்று இயற்பெயர் கொண்ட கெளதம புத்தர் ஒரு நாள் தன் உறவினரும் சீடருமான அனந்தரிடம் அருகில் ஓர் ஊருக்குச் சென்று மக்களிடம் தனது கருத்துக்களை உபதேசிக்கச் சொன்னார். அனந்தர் சென்று வெகு விரைவிலேயே அதாவது சுவரில் எறியப்பட்ட பந்து உடன் திரும்பி வருவது போல் திரும்பி வந்தார். அவர் புத்தரிடம், ‘அந்த ஊர் மக்களெல்லாம் மிகவும் மோசமானவர்கள். என்னால் அங்கு செல்ல முடியாது. அவர்களுக்கு நாம் உபதேசிக்க முடியாது. அவர்கள் மூடர்கள். நம்மைப் பின்பற்றமாட்டார்கள்’ என்றார். உடனே புத்தர், ‘நல்லவர்களுக்கெல்லாம் நாம் தேவையில்லை. கெட்டவர்கள், பாதை மாறுபவர்கள் போன்றவர்களை நல்வழிப்படுத்தவே நாம் தேவை. மறுபடியும் அவ்வூர் சென்று உமது பணிகளை மேற்கொள்ளுங்கள்’ என்றார். அனந்தரும் யோசிக்கலானார். தன் பணியைச் செவ்வனே செய்தார்.
இந்த எண்ணங்கள் நினைவுக்கு வந்ததும், நானும் தீவிரமாக யோசிக்கலானேன். ‘நாம் இத்துறையில் இருந்து நமது பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். நம்முடைய கடமைகளை நாம் செய்து கொண்டிருப்போம். மற்றவை இறைவன் விருப்பப்படி நடக்கட்டும்’ என்று ஒரு வருடத்திற்கு பின் அடுத்த வருடம் மாணவர் சேர்க்கையை ஆரம்பித்தேன்.
புத்தமதத்தின் தாக்கத்தைப் பற்றி வரலாற்றில் நீங்கள் படித்திருப்பீர்கள். சுமார் ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் மகத நாட்டிற்கும் கலிங்க நாட்டிற்கும் பெரும் போர் மூண்டது. மகத நாடு இன்றைய பீகார் மற்றும் அதை சுற்றியுள்ள சில மாநிலங்களின் பகுதியை உள்ளடக்கியது. கலிங்க நாடு இன்றைய ஒடிசா மற்றும் அதை சுற்றியுள்ள சில மாநிலங்களின் பகுதியை உள்ளடக்கியது. மகத மன்னர் ஆசோகர் போரில் மாபெரும் வெற்றி பெற்றார். திரும்பிய இடங்களிலெல்லாம் வெட்டுண்ட உடல்கள். மனம் வெதும்பினார். புத்த சமய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதனை தழுவினார். தன்னுடைய மகனையும் மகளையும் புத்த மதத்தைப் பரப்புவதற்காக பல நாடுகளுக்கும் அனுப்பினார். இதனால் சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் பெளத்தம் மிக வேகமாகப் பரவியது. புத்த மதம் அகிம்சையைப் போதிக்கிறது. உயிர் கொலையை வெறுக்கிறது. ஆனால் இன்று பல நாடுகள் தாங்கள் பெளத்த நாடுகள் என்று சொல்லிக் கொண்டு பெளத்த மதக் கருத்துக்களை பின்பற்றவில்லை. அரசுகள் அப்படி என்றால் மதத் தலைவர்களும் பெளத்தத்தை பின்பற்றவில்லையே. அதுதானே நமது அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டதற்கு மூல காரணம். புத்த மதத்தை சிங்களர்கள் பின்பற்றியிருந்தால் தமிழர்கள் நிம்மதியுடன் வாழ்ந்திருப்பார்கள். அந்நாடும் மேன்மை அடைந்திருக்கும். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.