மனோ சக்தியின் மகத்துவம்

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

சிறந்த மாணவன்

அன்பு நெஞ்சங்களே! உங்களுக்கு விருப்பமான, தேவையான நிகழ்ச்சிகளைக் கூறுகின்றோம் கவனமாகக் கேளுங்கள். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குரு துரோணர் பலவித பயிற்சிகளோடு வில் வித்தையும் கற்பித்தார், ஒரு நாள் தன் மாணவர்களைச் சோதிக்க விரும்பினார். மரக்கிளை யொன்றிலிருக்கும் பொம்மைக் குருவியைக் கழுத்திலடித்து வீழ்த்த வேண்டும் எனக் கூறினார். தனது மாணவர்களை ஒவ்வொருவராகக் கூப்பிட்டார்.

துரியோதனனிடம், ‘என்ன காண்கின்றாய்?’ என வினவினார். ‘வானத்தைக் காண்கின்றேன், குருவியைக் காண்கின்றேன் மரத்தைக் காண்கின்றேன்’ என்று கூறினான். மேலும் பல மாணவர்களிடம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்தார். அனைவரும் பெரும்பாலும் மேற்கூறியது போலவே பதிலளித்தனர். இறுதியாக அர்ச்சுனனைக் கூப்பிட்டு, மரம் தெரிகின்றதா? என வினவினார். ‘இல்லை!’ என்று கூறினான். ‘கிளை, காய், கனி தெரிகின்றதா?’ என்று கேட்டார் மறுபடியும் ‘இல்லை!’ என்று பதிலளித்தான். ‘மரம், கிளை, இலை, காய், கனி எதுவுமே உன் கண்ணுக்குத் தெரியவில்லை உன் கண்ணுக்குத் தெரிவ தென்ன?’ என்று வினவினார். ‘குருவியின் கழுத்து மட்டுமே தெரிகின்றது!’ என்றான். ‘வீழ்த்து!’ என்றார் துரோணர். குருவி வீழ்த்தப்பட்டது! ஆம்! அர்ச்சுனனின் சிந்தை முழுவதும் அவனது குறிக்கோளி லேயே இருந்ததால் அவனால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது சிறந்த மாணவனாகக் குருவின் உள்ளத்திலும் இடம் பெற முடிந்தது.

விவேகானந்தர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள்

சுவாமிஜி அமெரிக்கா சென்றிருந்த சமயம். அங்கு ஒரு நீரோடையில் தத்தளித்துக் கொண்டிருந்த சில முட்டை ஓடுகளைச் சில இளைஞர்கள் துப்பாக்கியால் பல தடவை சுட முயன்று தோற்றனர். இதைக் கண்ணுற்ற விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். இதற்குமுன் துப்பாக்கியை அவர் தொட்டதேயில்லை முட்டையோடுகளைக் குறி பார்த்தார். ஒரே தடவையில் அவற்றைச் சுக்கலாக்கினார் மனம் குவிதலே இதற்குக் காரணம் என்றார்.

ஒருநாள் நூலகரிடம் ஒரு பெரிய புத்தகத்தைப் படிப்பதற்காக வாங்கிச் சென்றார். இரண்டே நாட்களில் புத்தகத்தைத் திருப்பிக் கொணர்ந்தார். நூலகர் அவரிடம் ‘இப்புத்தகத்தை வாசித்து முடிப்பதற்குப் பல நாள்களாகுமே! படித்து விட்டீர்களா?’ என்றார். விவேகானந்தரோ நூலகரிடம் ‘எந்தப் பக்கத்திலிருந்தும் கேள்வியைக் கேட்கலாம்’ என்றார். நூலகர் பல கேள்விகளைக் கேட்க, அனைத்துக் கேள்வி களுக்கும் சிறப்பாக பதிலளித்தார். மேலும், பக்க எண்ணையும், விடை எந்தப் பத்தியிலுள்ளது என்றும் தெளிவாகக் கூறினார். ஒரு பத்தியின் முதலாவது, இறுதி வரிகளைப் படித்தாலே, பத்தியிலுள்ளது எல்லாவற்றையும் கிரகிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். இதற்கெல்லாம் காரணம் அவரது மனம் குவிதலும், ஞாபக சக்தியுமே!

சக்தி வெளிப்பாடு

ஒரு குவி வில்லையை எடுத்துக் கொள்ளுங்கள். மதிய வேளையில் வில்லையின் ஒரு பக்கத்தில் சூரிய ஒளிபடுமாறு செய்து, மறு பக்கத்தில் அதன் குவியத்தில் சிறிதளவு பஞ்சு அல்லது செய்தித்தாளை வைத்தால் தீப்பற்றி எரிவதைக் காணலாம். இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பக்கதிர்களை ஒன்றாகக் குவிக்கும் போது, ஒருமைப்படுத்தும்போது அளவிலா ஆற்றல் வெளிப்படுகின்றது.

லேசர் கதிர்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பல்லாயிரக் கணக்கான ஒளிக்கதிர்களை ஒருமைப் படுத்துவதன் மூலம் அளவற்ற ஆற்றல் வெளிப்படுகின்றது. இக்கதிர்களுக்கு லேசர் கதிர்கள் என்று பெயர். இவற்றின் சக்தியால் உலோகங்களை வெட்டவும், துளையிடவும் முடியும். அறுவை சிகிச்சையில் லேசர் கதிர்களை உபயோகித்து இரத்தத்தை வீணாக்காது சிறந்த முறையில் பலன் பெற முடிகின்றது. இது மட்டுமா? பிற்காலத்தே போர்க்களத்தில் எதிரிகளின் மீது லேசர் கதிர்களைப் பாய்ச்சி அடியோடு அழித்துவிடும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஆம்! ஒளிக் கற்றைகளை, ஒளி அலைகளை ஒருமைப்படுத்துவதன் மூலம் அளவில்லா ஆற்றல் கிடைக்கின்றது.

புராணத்தில் சிவபெருமானைப் பற்றிப் படித்திருப்பீர்கள். சர்வவல்லமை படைத்த அவர், தனது நெற்றிக்கண்ணால் கயவர்களை அழித்ததாக வரலாறு. அப்படியொருவர் இருந்தாரா? இல்லையா? என்பது பிரச்சனையன்று. நெற்றிக்கண் என்பது என்ன? இது சாத்தியமா? என்பதுதான் கேள்வி.

சூரியன் ஒளி அலைகளை வெளியிடுவது போல மனிதன் எண்ண அலைகளை வெளிப்படுத்துகின்றான். இவற்றை ஒருங்கே குவியச் செய்யும்போது அளவில்லா ஆற்ற வெளிப்படுகிறது. இவ்வாற்றல் வெப்ப ஆற்றலாக பொருட்களை எரிக்கின்றது. கடுமையான பயிற்சியால் இது சாத்தியமே! இதனையே நெற்றிக்கண் என்றனர். ஆம் சக்தி வாய்ந்த மன ஆற்றலின் பிறப்பிடமே நெற்றிக் கண்ணாயிற்று.

நண்பனின் மனோசக்தி

எனது அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். கதிரவன் என் நெருங்கிய நண்பன். நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் போது ஒரு நாள் எனது மற்றொரு நண்பன் சேரன், கதிரவன் மீது கற்களை எறிந்தான். கதிரவனோ, தனது கால்களை பூமியில் அழுத்தி, மூச்சை அடக்கி முறைத்தான். கற்களோ கதிரவன் மீது படாமல் விலகிச்சென்றன. சில வினாடி களுக்குப்பின் தன் இயல்பான நிலைக்கு வந்தான், கற்கள் அவன் மீது விழுந்தன. நானும் சேரனும் வியந்தோம்.

அவனிடம், ‘உனக்கு இவ்வளவு சக்திகள் எங்கிருந்து கிடைத்தன?’ என்று நான் கேட்டபோதெல்லாம் ‘எனக்குத் தெரியாது!’ என்ற பதிலே கிடைத்தது. ஒன்றல்ல, இரண்டல்ல அவனுடைய அனுபவங்களை ஆயுள் முழுவதும் எழுதிக் கொண்டேயிருக்கலாம். நாம் பலமுறைத் தீவிரமாகச் சிந்தித்திருக்கிறோம். இது எப்படிச் சாத்தியம்? என்று ஆனால் எம் கண்கள் எம்மை ஏமாற்றாதே. பன்முறைச் சிந்தித்த எனக்கு ‘மனோசக்தியே அதற்குக் காரணம்‘ என்ற பதில் கிடைத்தது. இன்று மனவியல், மனத்தின் இயக்கங்கள் சக்திகள் போன்ற நூல்கள் வாசிக்கும் போது எமது நண்பன் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எம் மனத்தை ஆட்கொள் கின்றன.

மனோசக்தியின் மகத்துவம்

சில வருடங்களுக்கு முன் மனோதத்துவ மருத்துவர் வாசு கண்ணன் என்பவர் ஒரு திருமண மண்டபத்தில் நூற்றுக்கணக்கானோர் குழுமியுள்ள இடத்தில் மனோசக்தியின் மகிமையைப் பற்றிப் பேசினார். கூட்டத்தினரின் வேண்டு கோளுக்கிணங்க, கூட்டத்தி லிருந்து ஒரு பையனை மேடைக்கு வரவழைத்தார். மனோவசிய கட்டளைகள் மூலம் அவனைத் தூங்க வைத்து அந்தரத்தில் மிதக்க வைத்தார். சில நிமிடங்கள் வரை இதை காட்சிப் பொருளாக வைத் திருந்தார். பின்னர் பையனைத் தன் கட்டுக்களிலிருந்து விடுவித்து சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார். கரவொல் விண்ணைப் பிளந்தது. ‘உள் மன ஆற்றல்கள்‘ என்ற இவரது நூல் அன்றைய தமிழக அரசின் முதற் பரிசைப் பெற்றது.

சில வருடங்களுக்கு முன், சென்னையில் ஜாதுகர் ஆனந்த் என்பனவரின் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மேற்க்கூறியதைப்போல மனோவசிய கட்டளைகளால் ஒரு பெண்ணை அந்தரத்தில் தூங்கசெய்ததை பலரும் கண்டிருப்பீர்கள்.

சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கைகளில் படித்த செய்தி. கல்கத்தா இரயில் நிலையத்தை நோக்கி இரயில் வந்து கொண்டிருந்தது. பயணிகள் முண்டியடித்து இரயிலில் ஏற முயன்றனர். திடீரென்று இரயில் மறைந்துவிட்டது. மக்கள் வியந்தனர். ஆம், இரயில் வருவது போன்ற மாயத்தோற்றம் மாயாஜால நிபுணரொருவரால் செய்து காட்டப்பட்டது.

இப்படித்தான் மகாபாரதக் கிருஷ்ணன் செயலும் கிருஷ்ணன் கோபியருடன் நடனமாடிய போது, ஒவ்வொரு கோபியருடனும் தான் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கினான். ஒவ்வொரு ஆயர் குலப்பெண்ணும் கிருஷ்ணன் தன்னுடன் தான் இருப்பதாக நினைத்து, ஆனந்தப்பட்டனர். தன் பக்தைகளை மகிழ்விக்கவே இப்படியொரு மாயத்தோற்றத்தை உருவாக்கினான். ஆனால் பிற்காலப் புலவர்கள் இதனைப் புரிந்து கொள்ளாது தங்கள் எண்ணங்களை அவன் மேல் திணித்து கிருஷ்ணன் செயலைக் கொச்சைப்படுத்தி விட்டனர். மேற்கூறியவர்களின் சாதனைக்கெல்லாம் காரணம் அவர்களின் மனோசக்தியே!

மக்களின் புலம்பல்கள்

நாம் ஏன் இதையெல்லாம் எழுதுகிறோம்’ என்று நீங்கள் கேட்கலாம் இளைஞர்களின், ‘மனம் எங்கெல்லாமோ என்னை இழுத்துச் செல்கின்றது. மனம் போன போக்கெல்லாம் கால்களும் போகின்றன நான் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும்?’ என்ற முனகல்கள் எம் காதில் விழுகின்றன. ‘நான் நீண்ட நேரம் படிக்கின்றேன் ஐயா. நல்ல ஞாபகசக்தியிருந்தும் என்னால் எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை’ என்ற மாணவர்களின் கூக்குரல் எமது காதுகளில் எதிரொலிக்கின்றது. எனது மகனுக்கு நல்ல ஞாபக சக்தியுள்ளது. இரவும் பகலும் கண் விழித்துப் படிக்கின்றான். ஆனால், மதிப்பெண்களோ முப்பதைக் கூட தாண்ட முடியவில்லை என்று பெற்றோர்கள் வடிக்கும் கண்ணீர் எமது இதயத்தை நனைக்க முயற்சிக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் இளைஞர்களின், மாணவர்களின் மன ஒருமைப்பாடின்மையே. சிந்தை குவியாமையே! மனம் ஒன்றிக் காரியங்களில் ஈடுபடாத் தன்மையே! படிப்பதாயினும் எழுதுவதாயினும் அல்லது எந்த வேலை செய்யப்படினும் மனம் ஒன்றி அந்த வேலையில் ஈடுபட்டாலே அது முழுமை யடைகிறது. இதை விளக்க ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன்.

கிருஷ்ணன் பிரம்மச்சாரி

ஒரு நாள் கிருஷ்ணன் மனைவி ருக்மணியும் அவளது தோழியரும் யமுனையின் மறுகரையில் வசிக்கும் முனிவர் ஒருவரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டனர். யமுனையிலோ வெள்ளம் கரை புரண்டோடியது. யமுனையைக் கடப்பு தெப்படி? என்று சிந்தித்தனர். கிருஷ்ணனை நாடி தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

கிருஷ்ணன் அவர்களிடம், ‘கிருஷ்ணன் பிரம்மச்சாரி என்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும்!’ என்று கூறுங்கள். உங்களுக்கு வழி கிடைக்கும்’ என்று கூறினான். ருக்மணியும், அவள் தோழியரும் கிருஷ்ணன் கூறியவாறு யமுனையிடம் கூறினர். யமுனையில் பிளவுண்டாயிற்று திகைப்புடன் மறுகரையடைந்தனர். யமுனையில் பிளவு நீங்கி வெள்ளம் கரை புரண்டோடியது. அனைவரும் முனிவரை வணங்கி, பால், பழங்களைக் காணிக்கையாக்கினர். முனிவர் பகவானின் நாமத்தை உச்சரித்தபடி பாலருந்தினார். பழங்களையும் புசித்தார். பக்தைகள் திருப்தியடைந்தனர். ‘நாங்கள் திரும்புவதெப்படி?’ என்று முனிவரிடம் கேட்டனர்.

முனிவர் பெண்களிடம், ‘நாம் சந்தித்த முனிவர் பல நாட்களாக உபவாசமிருப்பது உண்மையானால் யமுனா தேவியே வழிவிடுவாய்! என்று கூறுங்கள்’ என்று கூறினார் முனிவரிடம் விடைபெற்றுத் திரும்பினர் யமுனையிடம் முனிவர் கூறியபடிக் கூறினர். யமுனையும் வழிவிட்டது அவர்களோ வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டனர். அங்கே கிருஷ்ணன் நம்முடன் வாழ்ந்து கொண்டே தம்மைப் பிரம்மச்சாரி என்று கூறிக்கொள்கிறான். இங்கே முனிவர் நாம் கொடுத்த பழங்களை உண்டு முடித்து, தாம் உபவாச மிருப்பதாகக் கூறுகிறார். அவர்கள் வார்த்தைக்குக் கட்டுப பட்டு யமுனையும் நமக்கு வழிவிட்டது. இது என்ன மாயம் கிருஷ்ணனிடம் இதற்கான காரணத்தைக் கேட்போம் என்று அளவளாவிக் கொண்டு கிருஷ்ணனை நெருங்கி தங்கள் சந்தேகத்தை வெளியிட்டனர்.

கிருஷ்ணன் புன்னகைத்துக் கொண்டே, ‘நான் உடலால்தான் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றேனே யொழிய உள்ளத்தால், மனதால் யாருடனும் பிணைக் கப்பட்டவனல்லன். என் மனம் எப்போதும் என் பக்தர்களைக் காத்திடவும், உலகத்தைக் காத்திடவும், சிந்திக்கிறதேயொழிய வேறொன்றில்லை. எந்தச் செயலையும் உடலும், மனமும் ஒன்றிச் செய்தால் தான் அது முழுமையடைகின்றது.

ஆதலால் நான் பிரம்மச்சாரியே அதே போல் முனிவரும் உங்களின் வேண்டுகோளுக்கிணங்க, உங்களைத் திருப்திப்படுத்த பாலை அருந்தி, பழத்தைப் புசித்தாரே தவிர உண்மையிலேயே அவருக்கு அதில் எந்தவித ஈடுபாடும் இல்லை அவர் மனம் எந்நேரமும் பகவானின் நாமத்தை உச்சரித்தும், சிந்தித்துக் கொண்டுமிருக்கிறதேயொழிய நீங்கள் கொடுத்த உணவின் சுவையை அறிந்திடவில்லை. ஆதலால் அவர் உபவாசமிருப்பதாகவே கருதப்படும்’ என்று விளக்கமளித்தான். இந்த விளக்கம் இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகப் பொருத்தமானதாகும்.

ஆம், பெரும்பாலான மாணவர்களின் கண்களோ புத்தகத்தில் பொதிய, மனமோ விளையாட்டு மைதானத் திலோ, கடற்கரையிலோ, சமையல் அறையிலோ நண்பர் களுடனோ சுற்றிக் கொண்டிருக்கின்றது. ஆம், புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு கற்பனையில் மூழ்கியிருப்பார். ஆதலால் உண்மையில் அவர்களால் வேலை செய்யம் படவில்லை . பிறகெப்படி நாம் பலனை எதிர்பார்க்க முடியும்? ஆதலால் இளைஞர்கள், மாணவர்கள் மனத்தை ஒருமைப்படுத்தும் ஆற்றலை வளர்த்துச் செயல்களை மனம் ஒன்றிச் செய்வராயின் நிச்சயமாக வெற்றியடைய முடியும்.

சில பயிற்சிகள்

கடவுள் வழிபாடு, பூஜை, பிராணாயாமம், சுயகட்டளைகள், தியானம், யோகப் பயிற்சிகள் போன்றவை மனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. உங்களுக்கு விருப்பமான செயலை நீண்ட நேரம் செய்வதன் மூலமும் மனம் ஒருமைப்படுகின்றது. விரும்பிய புத்தகங்களை வாசிப்பதன் மூலமும், பிடித்தமான விளையாட்டுகளை விளையாடுவதன் மூலமும் மனம் ஒருமைப்படுகின்றது.

உதாரணமாக, நீங்கள் பாடப்புத்தகத்தைப் படித்தால் இரவு 9 மணிக்கெல்லாம் கண்கள் கிறங்கும். ஆனால் கதை புத்தகமாயின் 12 மணி, 1 மணியென்றாலும் புத்தகத்தை முடித்துவிட்டுதான் கீழே வைப்பீர். இதைப் போலவே, பாடப்புத்தகத்தைப் படிக்கும்போது ஒரு கரண்டி கீழே விழுந்தாலும் அன்னையைக் கோபித்துக் கொள்வீர். ஆனால் கதைப் புத்தகமாயின் பக்கத்தில் குண்டு வெடித்தாலும் உங்களுக்குத் தெரியாதே! அதற்காகத் தினமும் 5 மணிநேரம் விரும்பிய கதைப் புத்தகத்தை வாசிக்க முடியாது. கூடாது மற்ற வேலைகள் பாதிக்கப்படும்.

மாலை பள்ளியிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ வந்தபின் அரை மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இறகுப் பந்து விளையாடுதல் மிகவும் நல்லது அதன்பிறகு இரண்டு மணிநேரம் உங்கள் வேலையைக் கவனித்து பின்னர் நீங்கள் மிகவும் விரும்பும் நல்ல புத்தகத்தை அரை மணிநேரம் வாசிக்கலாம்.

மேலும் பல்வேறு வகையான பயிற்சி முறைகள் உள்ளன. இவ்வழி தெரிந்தோரிடம் கற்றுணர்ந்து, சிறந்த முறையில் பயிற்சி செய்தால் கண்டிப்பாக உங்களால் சிறந்த சாதனை களைப் படைக்க முடியும் ஆம்! உங்கள் மனமே சக்தியின் பிறப்பிடம். பயிற்சியால் அச்சக்தியை வெளிப் படுத்துங்கள். வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்!