மறுபிறவி உண்மையா? சாத்தியமா?

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

எல்லாவிடத்திலும், எப்போதும் நிறைந்திருக்கும், வியாபித்திருக்கும் பேரண்ட சக்தியே கடவுள் என்று பகிர்ந்து கொண்டோம்.  கடவுள் என்றொரு சக்தி இருக்குமானால் எல்லா மனிதர்களையும் சமமாகவே பாவிக்க வேண்டும்.  கடவுள் நடுநிலை பேண வேண்டும்.  பிறகு ஏன் சிலர் பிறக்கும் போதே ஏழை, சிலர் பணக்காரர்கள்?  ஒருவருக்கோ ஊனம் மற்றவருக்கோ அனைத்து உறுப்புகளும் சிறந்து செயல்படுகிறது.  ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் என்ற கேள்வி எழுகின்றது.  இந்தக் கேள்வி உங்களுக்குள்ளும் எழுந்திருக்கலாம்.  ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே’ என்றொரு கவிஞர் பாடினார்.  பிறகு ஏன் இந்த ஏற்றத் தாழ்வுகள்? எனக்குள்ளும் இக்கேள்வியை பலமாக எழுப்பினேன். 

முன்வினைப் பயன், ஊழ்வினைப் பயன்

என்ற பதில் கிடைத்தது.

  ஆம், முற்பிறவியில் செய்த செயல்களின் விளைவுகளை எப்படி, எங்கே பிறந்தால் அனுபவிக்க முடியுமோ அப்படி, அங்கே பிறவி அமையும் என்ற பதில் கிடைத்தது.  ஆம், நாம் திரும்ப திரும்ப பிறக்கிறோம்.  மறுபிறவி நூற்றுக்கு நூறு உண்மை.  ஆதாரங்களை தேடியபோது எனக்கு கிடைத்தவற்றை அன்பு நெஞ்சங்களாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

மறுபிறவிசில ஆதாரங்கள்

  1. சுக்லா குப்தா

1955ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்திலுள்ள காம்பா என்னும் ஊரில் சுக்லா குப்தா என்ற ஒன்றரை வயது குழந்தை ஒரு தலையணையைத் தொட்டிலில் போட்டு ஆட்டி, ‘மினு, மினு’ என்று கூப்பிட்டாள்.  மினு யார்? என்று கேட்க, ‘என்னுடைய பெண்’ என்று கூறினாள்.  அடுத்த மூன்று வருடத்தில் அச்சிறுமி தன்னுடைய கணவன் மற்றும் மகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் அடிக்கடி பேசினாள்.  அவள், தான் மானா என்னும் பெண்ணின் மறுபிறவி என்று கூறினாள்.  அவளுடைய கணவன், மைத்துனர்கள் கேது, கருணா மற்றும் மினு ஆகியோர் ரத்தாலாவில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறினாள்.  சுக்லா தன்னை ரத்தாலாவிற்கு அழைத்துச் செல்லும்படிக் கோரினாள்.  ஆனால், சுக்லாவின் குடும்பமோ அவ்வூரைப் பற்றிக் கேள்விபட்டதேயில்லை.  சுக்லா, தானே அவர்களுக்கு வழிகாட்டுவதாகக் கூறினாள்.  பின்னர், சுக்லாவின் தந்தை ரத்தாலா என்ற ஊர் இருப்பதையும் அங்கு கேது என்பவர் வாழ்வதையும் அறிந்தார்.  மேலும், கேதுவிற்கு மானா என்ற அண்ணி இருந்ததாகவும் சில வருடங்களுக்கு முன்னர் மினு என்ற சிறு குழந்தையை விட்டுப் பிரிந்ததையும் அறிந்தார்.  சுக்லாவின் தந்தை இரு குடும்பமும் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

1959ஆம் ஆண்டு சுக்லா மற்றும் அவளுடைய பெற்றோர் ரத்தாலாவிற்குச் சென்ற போது அவளே தன் மாமனார் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.  அங்கு அவள் சென்ற பிறவியில் தனது உறவினர்கள் அனைவரையும் அடையாளம் காட்டினாள்.  இன்னும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மானா தன் மைத்துனனைக் கருணா என்று கூப்பிட்டாள்.  மற்ற அனைவரும் அவனை, குட்டி என்றுதான் கூப்பிடுவது வழக்கம்.  மிகவும் நெருங்கியவர்களுக்குக் கூட இப்பெயர் தெரியாது.  வீட்டிலிருந்த பல பொருட்களையும் அடையாளம் காட்டினாள்.  விசாரணையில் இவ்விஷயங்கள் உறுதி செய்யப்பட்டன.

  1. ஐஸ்வர்யா என்ற நான்கு வயது சிறுமி

உத்திரப்பிரதேசத்தில் காசியாபாத் சந்தனர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சவுகான்.  1999ஆம் ஆண்டு இவருக்குப் பிறந்த பெண்ணுக்கு ஐஸ்வர்யா என்று பெயரிட்டனர்.  நான்கு வயது வரை எல்லோரையும் போல் துடுக்குத்தனத்துடன் இருந்தாள்.  திடீரென தனது முற்பிறவியைப் பற்றிப் பேசினாள்.  ‘எனது தந்தை மாதன் சிங், தாய் சந்திராவதி.  நான் பிறந்தது புலந்த்சாகர் மாவட்டத்திலுள்ள கமல்பூர்.  எனக்கு இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.  நான் ராணி எண்பவரைத் திருமணம் செய்து கொண்டேன்.  எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.  நான் பரீதாபாத்தில் உள்ள தனியார் நிறுவனம்  ஒன்றில் வேலை செய்து வந்தேன்.  கடந்த 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் நான் இறந்துவிட்டேன்’ என்று தனது முற்பிறவியைப் பற்றி ஐஸ்வர்யா கூறினாள்.

முதலில் இதைக் கேட்டு அதிர்ந்த அவரது தந்தை முகேஷ் சவுகான் பின்னர் குழந்தை விளையாட்டாக இதைக் கூறியது என்று கருதினார்.  ஆனால் ஐஸ்வர்யா பல தடவை விடாமல் இதைப் பற்றிக் கூறவே கோபமடைந்த அவர் குழந்தையை அடித்து, இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார்.  ஆனால் ஐஸ்வர்யா மறுபடியும், மறுபடியும் கூறவே முகேஷ் சவுகான் சம்பந்தப்பட்ட அந்தக் கிராமத்திற்குச் சென்று விசாரித்துள்ளார்.  தனது குழந்தை ஐஸ்வர்யா கூறியது போலவே ஒரு குடும்பம் அங்குள்ளது அவருக்கு தெரிய வந்தது.  தனது குழந்தை கூறிய விவரத்தை அந்தக் குடும்பத்திடம் தெரிவித்த போது அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.  அந்த கிராமமே சம்பவத்தைக் கேட்டு அதிசயித்தது.

பின்னர் தனது மகளை அந்தக் கிராமத்திற்கு முகேஷ் கூட்டிச் சென்றார்.  அக்குழந்தை கிராமத்தில் தான் விளையாடிய இடங்கள், மற்றும் நண்பர்களையெல்லாம் அடையாளம் காட்டியது.  கிராமத்தினர் வியப்பின் எல்லைக்குச் சென்றனர்.  அது மட்டுமின்றி தனது, முற்பிறவி அத்தை, மாமா உள்ளிட்ட அனைத்து உறவினர்களையும் அடையாளம் காட்டியது.  ஐஸ்வர்யா கூறியதைப் போலவே அவளது முற்பிறவி மனைவி ராணி, கணவனை இழந்த விதவையாக பரிதாபாத்தில் இருக்கின்றார்.  அவருக்கு 3 குழந்தைகளும் உள்னர்.  குழந்தை கூறியதைப் போலவே ராணியின் கணவர் 1997ஆம் ஆண்டு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.  முகேஷ்சவுகான், குழந்தையை பரிதாபாத்துக்கும் அழைத்துச் சென்றார்.  அங்குச் சென்ற ஐஸ்வர்யா தனது மாஜி மனைவியுடன் தான் வாழ்ந்த நாட்களை நினைவுபடுத்த, கண் கலங்கினார் ராணி.  குழந்தை உருவத்தில் வந்த தங்களது தந்தையைப் பார்த்து குழந்தைகளும் மகிழ்ந்தனர்.  இந்தச் செய்திகள் பல பத்திரிக்கைகளில் சில வருடங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

ஆற்றல்பருப்பொருள் அழிவின்மை

எந்தவொரு ஆற்றலையும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.  ஒருவகை ஆற்றல் (Energy) மற்றொரு வகை ஆற்றலாக மாறுபாடு அடைகின்றது

என்பது பெளதீகவிதி

உதாரணமாக, காற்றாலையில் காற்றின் ஆற்றல் இயக்க ஆற்றலாக எந்திரத்தைச் சுழலச் செய்து அங்கு மின்னாற்றலாக மாற்றம் அடைகிறது.  இதைப் போலவே ஒருவகையான பருப்பொருள் மற்றொரு வகையான பருப்பொருளாக மாற்றம் அடைகிறது.  பருப்பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

இப்போது நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்.  இயங்கும் உடல் பருப்பொருள், (Matter) உடலை இயக்கும் ஆன்மா ஆற்றல்.  அது உடலின் ஒவ்வொரு அணுவிலிருந்தும் உங்களை இயக்குகின்றது.  ஆன்மா உடலை விட்டு நீங்கினாலும் காரண காரிய நியதிக்கேற்ப உடனடியாகவோ, சில காலம் கழித்தோ மறுபடியும் பூமியில் பிறக்கின்றது.  அல்லது மற்ற உடல்களில் புகுந்து அதை ஆட்டுவிக்கின்றது.  ஆம், மாற்றமடைகின்றது, அழிவதில்லை. உடலாகிய பருப்பொருள் இறந்தபின் பூமியில் புதைக்கப்படுகின்றது.  நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படுகின்றது.  தாவரங்கள் அதை உணவாகக் கொண்டு காய்களையும், கனிகளையும் கொடுக்கின்றது.  அதை விலங்குகளும், மனிதர்களும் புசிக்கின்றோம்.  உடல் வளர்கின்றது.  ஆம், ஒரு வகையான பருப்பொருள் மற்றொரு வகையான பருப்பொருளாக மாற்றம் அடைகின்றது.  அழிவதில்லை.  இப்படியே பருப்பொருள் மாற்றமும், ஆற்றல் மாற்றமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.  ஆம், நாம் அழிவற்றவர்கள்.  உதாரணமாக, நீங்கள் ஒரு ஆப்பிள் சாப்பிட்டதாகக் கொள்வோம்.  நீங்கள் என்ன செய்தீர்கள் பற்கள் மூலம் ஆப்பிளின் வடிவத்தை மாற்றினீர்கள்.  அந்த ஆப்பிள் உங்கள் வடிவத்தை மாற்றுகிறது.  அவ்வளவே.  ஆம், அன்பு உள்ளங்களே நாம் நம் முற்பிறவி செயல்களின் விளைவுகளை எங்கு சென்று பிறந்தால் அனுபவிக்க முடியுமோ அங்கே பிறக்கிறோம்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.