கடவுள் யார்? எங்கே உள்ளார்?

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

கடவுள் பெயரால் நாட்டிலும், உலகிலும் நடக்கும் கலவரங்களும், கொலைகளும் பலப்பல.  ‘எங்கள் கடவுள்தான் உயர்ந்தவர்’ என்று ஒவ்வொரு மதத்தினரும் மார் தட்டுகின்றனர்.  கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாமையே இதற்குக் காரணம்.

கடவுள், உள்ளத்தைக் கடந்தவர்.  மனதிற்கு அப்பாற்பட்டவர்.  கடவுள் யார்? எங்கே உள்ளார்?  எப்படி உள்ளார்?

கடவுள் சக்தி

கடவுள் மனிதனின் எண்ணங்கள் மூலம் செயல்படுகிறார்.  மனிதனின் எண்ணங்களை 25க்கும் மேற்பட்ட பிரபஞ்சத்திலுள்ள சக்திகள் ஆட்கொண்டுள்ளன.  (பிரபஞ்சம் என்பது பூமி, கோள்கள், சூரியன், நட்சத்திரங்கள் போன்றவற்றின் தொகுப்பு).  அவை அனைத்தும் ஒன்றாகச் செயல்படும் போது மாபெரும் ஆற்றல் பொருந்திய பிரபஞ்ச சக்தியாக வெளிப்படுகின்றது.  இந்தப் பேரண்ட சக்தியை காண முடியாது.  உணர மட்டுமே முடியும்.  அதனால் தான், ‘கடவுளின் அடியையும் முடியையும் காண முடியாது’ என்று கூறினர்.  மனிதனின் ஒவ்வொரு செயலிலும்  உணர்விலும், சுற்றத்திலும் இந்தச் சக்திகளின் தாக்கம் வெளிப்படுகின்றது.  அவை ஒரு மனிதனின் வாழ்க்கை முறையையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன.  அளவிட முடியாத இப்பிரபஞ்ச சக்திகளின் தொகுப்பையே கடவுள் என்கின்றோம்.  நமது எண்ணங்கள் செயல்கள் போன்றவை இயற்கையில் பதிவாகின்றன.  அதன் விளைவுகளை இறைவன் கொடுக்கிறார்.

யாரைக் கடவுளாக வழிபடுகின்றோம்?

‘சரி, கடவுள் அளவிட முடியாத பிரபஞ்ச சக்தி என்றால் சிவா, விஷ்ணு, இயேசு, புத்தர் இவர்களெல்லாம் யார்?’ என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.  யார் பெரும்பான்மையான மக்களின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்கின்றார்களோ அவர்களே மக்களால் கடவுளாக வழிபடப்படுகின்றனர்.  ஆம், இராமன், கிருஷ்ணன் போன்றோர் அக்காலத்தே, தர்மம் வலுவிழந்து அதர்மம் தலைதூக்கிய நிலையில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினர்.  ஆதலால் வழிபடப்படுகின்றனர்.  அதே போல் இயேசு, முகம்மது நபி, புத்தர், காந்தி போன்றோர் அவர்கள் வாழ்ந்த காலத்தின் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்தனர்.  இவர்கள் சுயக்கட்டுப்பாட்டின் வடிவமாக, தியாகத்தின் திருவுருவாக, தன்னம்பிக்கையின் சிகரமாகத் திகழ்ந்தனர்.  ஆதலால் மக்களால் பூஜிக்கப்பட்டனர்.  ஆம், நம்மை வழிநடத்தும் பிரபஞ்ச சக்தியே கடவுள். அச்சக்திக்கு உருவமில்லை, வடிவமில்லை.  உருவமில்லாத, வடிவமில்லாத, கடவுளை, நம் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்தவர்களின் உருவில் வழிபடுகின்றோம்.  ஆம், சிவன், விஷ்ணு, இயேசு, புத்தர், கிருஷ்ணன் போன்றோர் கடவுளன்று.  கடவுளை மேற்கூறிவர்களின் வடிவத்தில், உருவத்தில் வழிபடுகின்றோம்.  அவர்களை வழிபடும் போது, ஆராதிக்கும் போது, தியானிக்கும் போது அவர்களின் குணங்களை நாம் பெறுகிறோம்.  ஆதலால் நமக்கு நன்மையே!

மக்களின் வழிகாட்டி

நாம் மிகப்பெரிய துன்பத்திலிருக்கும் போது உடனடியாக உதவி செய்து அத்துன்பத்திலிருந்து மீட்பவரை உயிருள்ள வரை மறப்பதில்லை.  அவர்கள் நன்மைக்காக என்றும் தொழுவோம்.  சிறிய உதவிக்கே இப்படியென்றால், சமுதாய முன்னேற்றத்திற்காக தன் சுக துக்கங்களைப் பாராமல் பாடுபட்டு, எழுச்சியை, மகிழ்ச்சியை, விழிப்புணர்ச்சியை, மறுமலர்ச்சியை, முன்னேற்றத்தை உருவாக்குபவர்களை நாம் கடவுளாகப் போற்றுகின்றோம்.  அவர்களின் செயல்கள் அசாதாரணமானவை.  இதையே முகம்மது, புத்தர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர் ஆகியோர் நடைமுறைப்படுத்தினர்.

அரேபியாவில் முகம்மது நபி வாழ்ந்த காலத்தில் பரவியிருந்த  சமூகச் சீர்கேடுகள் ஒன்றிரண்டல்ல.  பெண்கள் துச்சமாக மதிக்கப்பட்டனர்.  பெரும்பான்மையான மக்கள் எப்போதும் போதையில் மூழ்கியிருந்தனர்.  ஒழுக்கச் சீர்கேடுகள் மிகவும் அதிகம்.  இப்படிப்பட்ட சமுதாயத்தைச் சீர்திருத்தி ஒரு புண்ணிய பூமியாக மாற்றிய பெருமை முற்றிலும் முகம்மதைச் சாரும்.  அவர் ஒரு தீர்க்கதரிசி.  எக்கைகள் அவரைக் கல்லால் அடித்ததோ, அக்கைகள் பிற்காலத்தில் அவர் பாதத்திற்கு நோகாமல் பூமாரிப் பொழிந்தன.

புத்தர் தாம் வாழ்ந்த காலகட்டத்தில் புரையோடிப் போயிருந்த பல சீர்கேடுகளை வேரோடு அழித்தார்.  சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டினார்.  வாழ்க்கைத் தத்துவங்களின் விளை நிலமாகத் திகழ்ந்தார்.  தன் இராஜபோக வாழ்வைத் துறந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதி பத்தொன்பதாம்  நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சார்ந்தது.  பெரும்பான்மையான மக்கள் அடிமையாக நடத்தப்பட்டனர்.  மன்னனும் அதற்கு உடந்தையாக இருந்தான்.  மக்கள் மிகவும் துன்பத்திற்குள்ளாயினர்.  வைகுண்டசாமி என்றழைக்கப்படும் முத்துக்குட்டி சாமி தன்னுடைய தவத்தால், மனோபலத்தால் மாபெரும்  மக்கள் எழுச்சியை உண்டாக்கி மக்களை அடிமைத் தளையிலிருந்து விடுவித்தார்.  சிறந்த சமுதாய சீர்திருத்தவாதியாக, தத்துவஞானியாக மக்கள் நல்லவாழ்விற்கு மாபெரும் தொண்டாற்றினார்.  தன் வாழ்நாளில் பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஷீரடியில் உதித்த மகான் சாய்பாபா தன்னுடைய தவத்தாலும் மக்கள் தொண்டினாலும் கடவுளாக வழிபடப்படுகின்றார்.  அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல.  அதனாலன்றோ இன்று உலகில் பல பாகங்களில் அவருக்கு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன.

கேரளாவில் சாதிக்கொடுமைகள் புரையோடிப் போயிருந்தன.  அவர்களை அதிலிருந்து மீட்டு மக்களுக்கு நல்ல பயிற்சிகள், ஞானம் கொடுத்து, மக்கள் எழுச்சியை உண்டாக்கினார், நாராணகுரு என்னும் தத்துவஞானி.  இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த மாபெரும் சீர்திருத்தவாதி.  வைக்கம் போராட்டத்தில் நாராயணகுருவுடன் இணைந்து தமிழகத்தின் பெரியார் பங்கேற்றார்.  ஆம், அந்தந்த காலக்கட்டங்களில் சமுதாயத்தின் அத்தியாவசியத் தேவையை  பூர்த்தி செய்தவர்கள் கடவுளாகப் போற்றப்பட்டனர்.  

எண்ணங்களின் சக்தி

பிரபஞ்ச சக்தியே கடவுள்’ என்று எழுதியிருந்தோம்.  இந்த பிரபஞ்ச சக்தி மனிதர்களின் மனம் வழியாகச் செயல்படுகின்றது.  மனத்தின்  சக்தியை ஒரே திக்கில் செலுத்தும் போது அளவிட முடியாத ஆற்றலாக உருவெடுக்கின்றது.  ஈசனின் நெற்றிக்கண் என்பது மனோசக்தியின் வெளிப்பாடே.  இதே போல் பலர் சேர்ந்து ஒரு செயலுக்காகப் பிரார்த்திக்கும் போது அச்செயல் நடைபெறுகின்றது.  பிரார்த்தனை மூலம் பல நோய்கள் குணமாவதும் உண்டு.

உதாரணமாக, ஒரு ஊரில் 1000 வீடுகள் இருக்கின்றன என்று கொள்வோம்.  அந்த ஊரில் கடையில்லை.  மக்கள் சாமான்கள் வாங்க நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது.  ‘நம் ஊரில் யாராவது கடை நடத்தினால் நன்றாக இருக்குமே’ என்று அனைவரும் எண்ணும் போது, அந்த எண்ணத்தின் சக்தியானது தகுந்த  ஒருவரை உந்தல் செய்து அச்செயலை செய்விக்கின்றது.

இயேசு, வைகுண்டசாமி, நாராயணகுரு போன்றோரின் பிறப்பும் இத்தகையதே.  ‘நாம் மிகவும் கஷ்டப்படுகின்றோம்.  மன்னனோ மிகவும் கொடுமைப்படுத்துகின்றான்.  நம்மைக் காப்பாற்ற, வழிநடத்த யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று மக்கள் ஆழ்ந்து சிந்திக்கும் போது அவர்களின் எண்ணங்களின் தாக்கத்தால், இயற்கை புண்ணிய ஆன்மாக்களுக்குப் பிறப்பு கொடுக்கின்றது.  அவர்கள் மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர்.  மக்கள் மனதில் வாழ்கின்றனர்.

கடவுள் வழிபாடு 

நம்மை வழிநடத்தும் கடவுளை நாம் மூன்று விதமாகப் போற்றி வழிபடுகின்றோம்.  அவை

1. உருவ வழிபாடு,

2. இசை வழிபாடு,

3. மானசீக வழிபாடு.

அலைபாயும், மனதை ஒருமுகப்படுத்த முடியாதவர்களுக்கு உருவ வழிபாடும், திட சிந்தனையுடன் மனதை எளிதில் குவிக்க, ஒருமைப்படுத்த முடிந்தவர்களுக்கு மானசீக வழிபாடும், இடைப் பட்டவர்களுக்குப் பாடல்கள், பஜனை, இசை வழிபாடும் சிறந்த பலனைக் கொடுக்கும்.  சிலர் உருவ வழிபாட்டைப் பழிப்பதுண்டு.  அது அவர்களின் அறியாமை.  உருவ வழிபாட்டின் மேன்மையை பிற்காலத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

உண்மையான பக்தி

கிருஷ்ணனை வழிபடுவதைக் காட்டிலும், இயேசுவை வழிபடுவதைக் காட்டிலும், அவர்கள் கூறியவற்றைப் பின்பற்றுவதே உண்மையான வழிபாடாகும்.  ‘என்னை வழிபடுபவனைக் காட்டிலும் நான் கூறியவற்றை யார் பின்பற்றுகின்றானோ அவனே எனக்குப் பிரியமானவன்.  என்னையும் வழிபட்டு, நான் கூறுவதை முழுமையாகப் பின்பற்றுபவன் எனக்கு மிகவும் பிரியமானவன்’ எனக் கிருஷ்ணன் கூறுகின்றான்.  ஆம், இயேசு கூறியதைப் பின்பற்றுபவன் கிறிஸ்தவன்.  முகம்மது கூறியதைப் பின்பற்றுபவன் முஸ்லீம்.  இந்து மதம் கூறுவதைப் பின்பற்றுபவன் இந்து.  இதுவே உண்மையான பக்தி.  இதைப் பின்பற்றாது கோவிலுக்கும், மசூதிக்கும், கிறிஸ்தவ தேவாலயத்திற்கும் மட்டும் செல்வது உண்மையான பக்தியாகாது.  உங்களுக்குத் தெரியும்.  மதத்தை, ஒரு சதவிகித மக்கள் கூடப் பின்பற்றவில்லை.  பின்பற்றுவதாக நடித்து, மதரீதியாக தங்களுக்குள்  சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

ஒரு நிகழ்வு எனது ஞாபகத்திற்கு வருகிறது.  இஸ்லாமியத் தீவிரவாதிகள், சிலரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.  ‘முஸ்லிம்கள் மட்டும் இந்த இடத்தை விட்டுச் செல்லலாம்’ என்றனர்.  ஒரு கிருஸ்தவரும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு முஸ்லிம்களுடன் சென்றார்.  தன்னையும் முஸ்லிம் என்றே அறிமுகப் படுத்திக் கொண்டார்.  எல்லாரிடமும் கூறியது போலவே தீவிரவாதிகள் இவரிடமும், ‘குரானிலிருந்து சில வரிகள் சொல்லுங்கள்’ என்றனர்.  இவரோ கிறிஸ்தவ வேதாகமமான பைபிளிலிருந்து சில வரிகளைக் கூறினார்.  தீவிரவாதிகள் அவரை விட்டுவிட்டனர்.  அவர் மனைவி அதைப் பற்றி வினவ அவரோ, ‘அவர்கள் குரானை படிக்கவில்லை.  குரானைப் படித்துப் பின்பற்றியிருந்தால் அவர்கள் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்’ என்றார்.  அதைப் போல்தான் கிறிஸ்தவ வேதாகமத்தை முழுமையாக பின்பற்றும் கிறிஸ்தவனும், பகவத் கீதையை முழுமையாகப் பின்பற்றும் இந்துவும் மதத் தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை.

நமது கடமை

கடவுளை எல்லையற்ற பிரபஞ்ச சக்தியாக வழிபட்டாலும் அல்லது தமக்குப் பிடித்தமானவர்கள் உருவத்தில் வழிபட்டாலும் சென்றடையும் குறிக்கோள் ஒன்றே.  எண்ணங்களின் தூய்மை, உள்ளத்தின் மகிழ்ச்சி, சமுதாய நன்மை.  இவர்களைச் சதா நம் சுக துக்கங்களுக்காக வழிபடுவதைக் காட்டிலும், அவர்கள் கூறியவற்றைப் பின்பற்றுவோம், நடைமுறைப்படுத்துவோம்.  சமுதாயத்தைச் சீர்திருத்துவோம், நாமும் மக்கள் உள்ளத்தில் வாழ்வோம்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.