ஜாதகம் கணித்தல் உண்மையா? ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் எனது வணக்கம்.  இன்று ஜாதகம் கணித்தல்  உண்மையா?  ஏற்றுக் கொள்ளக் கூடியதா? என்ற தலைப்பில் எனது எண்ணங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்பு நெஞ்சங்களே! மனிதனுடைய குணங்களையும், செயல்களையும், மனம் மற்றும் உடல் நலத்தையும் நிர்ணயிப்பதில் கோள்களின் இயக்கம், சூரிய, சந்திரர்களின் இருப்பிடம் மற்றும் நட்சத்திர தொகுப்புகளின் இருப்பிடம் போன்றவையும் பெரும்பங்கு வகிக்கின்றன.  மனிதன் பிறக்கும் போது மேற் கூறியவற்றின் இருப்பிட நிலையை ஆராய்ந்து மனிதனுடைய வருங்கால செயல்பாடு எப்படி இருக்கும் என்று கணித்தலே ஜாதகம் கணித்தல் எனப்படும்.  ஜாதகம் கணிப்பவர் நேர்மையானவராக, நாணயமானவராக, திறமைசாலியாக அமைந்தால், அவரால் கணிக்கப்படும் ஜாதகம் கண்டிப்பாக துல்லியமான பலனைக் கொடுக்கும்.  இது விண்வெளி இயற்பியலின் (Astro Physics) ஒரு பகுதியேயாகும்.  ஆக, ஜாதகம் கணித்தல் நூறு சதவிகிதம் அறிவியலே ஆகும்.  நம் முன்னோர்கள் தியானத்தின் மூலமும், தொடர் ஆராய்ச்சிகளின் மூலமாகவும் இக்கலையை உருவாக்கி, மேம்படுத்தினர். 

மருத்துவர் தவறான மருந்தைக் கொடுத்தால் அது மருத்துவரின் பிழையேயொழிய மருந்தின் பிழையன்று.  அதைப்போல் ஜாதகம் கணிப்பவர் தவறாகக் கணித்தால், அது ஜாதகத்தின் பிழையல்ல கணிப்பவரின் பிழை.

பண்டைய இந்தியாவில் நடந்த சில நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் இன்றைய நேபாளம் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆண்டு வந்த மன்னர் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவரது பிற்காலம் எப்படி அமையும் என்று ஜோதிட வல்லுநரிடம் கணிக்கச் சொன்னார் மன்னர்.  ஜாதகம் கணித்தவர், ‘மன்னா, இப்பையன் அரண்மனையை விட்டு வெளியே சென்றால் துறவியாகிவிடுவான்’ என்று கூறினார்.  அக்குழந்தை அரண்மனைக்குள்ளேயே வளர்க்கப்பட்டான்.  சித்தார்த்தன் என்று பெயரிடப்பட்ட குழந்தை பெரியவனானதும் அழகான அரச குமாரி ஒருத்தியை திருமணம் செய்வித்தனர்.  இல்லற வாழ்க்கை இனிதே சிறக்க, மகன் பிறந்தான்.  நாடே விழாக்கோலம் பூண்டது.  இராகுலன் என பெயரிட்டார்கள்.  

ஒரு நாள் ஒரு அவசர வேலையாக சாரதியுடன் அரண்மனையை விட்டு இளவரசன் சித்தார்த்தர் வெளியேற வேண்டி வந்தது.  இயற்கையின் நிகழ்வுகள் அவருக்குத் தெரிய ஆரம்பித்தன.  வழியில் பல நோயாளிகள், குருடர்கள், முடவர்கள், தொழு நோயாளிகள் இப்படி பலரை சந்திக்க வேண்டி வந்தது.  இறந்த ஒருவரின் சடலத்தையும் சிலர் சுமந்து சென்று கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் பார்த்து ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது.  எனக்கும் இப்படி நடக்குமா? என்ற சிந்தனை அவர் மனதில் மேலோங்கியது.  நாளாக நாளாக இதன் காரணத்தைக் கண்டிப்பாக கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்கியது.  விரைவில் அரண்மனையை விட்டு வெளியேறி போதி மரத்தடியில் தியானத்திலாழ்ந்தார்.  சித்தார்த்தன் என்ற இயர் பெயர் கொண்ட அவர் கெளதம புத்தரானார்.  அறவழியை, அகிம்சை வழியை மக்களுக்கு போதிக்களானார்.

சில வருடங்களுக்குப் பின் கலிங்கநாட்டிற்கும் மகதநாட்டிற்கும் கடும் போர்.  போரில் மகதமன்னர் பேரரசர் அசோகர் வெற்றி பெற்றார்.  திரும்பிய இடமெல்லாம் வெட்டுண்ட, உயிரற்ற உடல்கள்.  மனம் வெதும்பினார்.  போரில் வெறுப்புற்றார் மன்னர் அசோகர்.  புத்த சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டார்.  அதனால் ஈர்க்கப்பட்டு புத்த சங்கத்தில் சேர்ந்தார்.  தன் மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த மதத்தைப் பரப்புவதற்காக பல வெளிநாடுகளுக்கும் அனுப்பினார்.  சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் புத்த மதம் பரவி செழிப்புற்றது.  இன்னொரு நிகழ்வை பகிர்ந்து கொள்கிறேன்.

குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று வரலாற்றில் படித்திருக்கிறோம்.  அக்காலத்தே பாஸ்கராச்சாரியர் என்ற மேதை வானியல் சாஸ்திரத்திலும், ஜோதிடக் கலையிலும் மிகவும் சிறப்புற்று விளங்கினார் (அவரைச் சிறப்பிக்கவே இந்தியா அனுப்பிய துணைக்கோள் ஒன்றிற்கு ‘பாஸ்கரா’ என்று பெயரிடப்பட்டது)

அவருக்கு லீலாவதி என்ற பெண் இருந்தாள்.  அவள் திருமண வயதை எட்டினாள்.  அவளுடைய ஜாதகத்தை ஆராய்ந்தார் தந்தை.  மிகவும் மட்டமாக இருந்தது.  திருமணம் நடந்தால் விதவையாகிவிடுவாள்.  என்ன செய்வது? என்று யோசித்தார்.  எல்லாவற்றையும் ஆராய்ந்து மிகச் சிறந்த முகூர்த்த நேரத்தை குறித்தார்.  அந்த நேரத்தில் திருமணம் நடந்தால் தோஷம் விலகி மகளுக்கு நன்மை ஏற்படும் என நினைத்தார்.  அவர் குறித்த நேரத்தில் திருமணம் நடந்தும் மகள் விதவையானாள்.  அவருக்கோ அதிர்ச்சி.  எனது கணிப்பு தவறா?  எப்படித் தவறு ஏற்பட்டது? தீவிரமாகச் சிந்தித்தார்.  தவற்றின் காரணம் புரிந்தது.  இயற்கையை, விதியை மீற முடியாது என்று உணர்ந்தார்.

தவற்றின் காரணமென்ன? என்று உங்கள் மனதில் கேள்வி எழுகின்றதல்லவா?  கூறுகிறேன்.

அந்தக் காலத்தே நேரத்தைக் கணிக்க நீர்கடிகை, மணல் கடிகை போன்வற்றை உபயோகித்தனர்.  நிழலின் நிலையைக் கணித்தும் நேரத்தை அறிந்தனர்.  பாஸ்கராச்சாரியரின் வீட்டில் நீர்க்கடிகை இருந்தது.  அதில் இரு குடுவைகள் மேலிருந்து கீழே சொட்டு சொட்டாக நீர் விழும் வகையில் அமைக்கபட்டிருந்தது.  இரு குடுவையிலும் சில குறியீடுகள்.  அவற்றை வைத்து நேரத்தைக் கணிப்பர்.  ஒரு நாள் லீலாவதி நீர்க்கடிகையின் அருகே சென்ற போது அவள் அணிந்திருந்த ஆபரணத்திலிருந்த முத்தொன்று நீர்க் கடிகையினுள் விழுந்து பாதையைச் சிறிது அடைத்துக் கொண்டிருந்தது.  அதனால் நீர் வடிவது சரியாக நடைபெறவில்லை.  அதைக் கவனிக்காது நேரத்தை தவறாக கணித்துவிட்டார்.  பாஸ்கராச்சாரியர் என்ற மாபெரும் ஜோதிட மேதையை இயற்கை எப்படி ஏமாற்றியது உணர்ந்தீர்களா?  ஆம்! விதியை வெல்வது மிகவும் கடினம்.  

மற்றுமொறு நிகழ்வையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  வட இந்தியாவில் ஒரு மன்னருக்கு (மன்னர் பெரும், நாடும் ஞாபகமில்லை) ஒரு பையன் பிறந்தான்.  ஒரு ஜோதிட மேதையிடம் (அவரது இயற்பெயர் தெரியவில்லை) குழந்தையின் எதிர்காலத்தை கணிக்கச் சொன்னார் மன்னர்.  ஜோதிடம் கணித்தவர் குழந்தை 13 வயதாகும் போது பன்றி குத்தி இறப்பான் (காட்டுப் பன்றிக்கு கொம்பு உண்டு) என்று கூறினார்.  அந்த வயது வந்ததும் மன்னர் அவனை மிகவும் பாதுகாப்பாக பல தளங்கள் கொண்ட அரண்மனையின் மாடியிலேயே வசிக்கச் செய்தார் (தரை தளத்திலிருந்தால் பன்றியால் ஆபத்து வரலாம் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம்).  அந்த அரசனுடைய சின்னமும் பன்றிதான்.  அந்த நாளும் வந்தது.  கடுமையான காற்று வீசியது.  அரண்மனையின் மேல்மாடத்தில் பையன் விளையாடிக் கொண்டிருந்தான்.  மாடியில் ஒரு கம்பத்தில் அரசனுடைய சின்னமான கொம்புடைய காட்டுப்பன்றி உலோகத்தால் செய்யப்பட்டு கம்பீரமாகக் காட்சியளித்தது.  வீசிய காற்றில் அப்பன்றி பெயர்ந்து பையன் மீது விழுந்தது.  உலோகப் பன்றியின் கொம்பு குத்தி பையன் மாண்டான்.  

விதியை யாராலும் வெல்ல முடியாது என்பதை மன்னர் உணர்ந்தார். இந்நிகழ்வை சரியாகக் கணித்த சோதிடரை அழைத்தார்.  அவருக்கு வராகமிஹிரர் என்ற பட்டப் பெயரை அளித்துச் சிறப்பித்தார்.  அவரது புகழ்பெற்ற சோதிட நூலே வராகசம்ஹிதை.

ஜோதிடக் கலை சில காலங்களில், சிலரால் தவறாக கையாளப்படுவதுமுண்டு.  ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முகலாயப் பேரரசு தென்னிந்தியாவில் பரவாமல் தடுத்து நிறுத்தியதில் விஜயநகரப் பேரரசிற்குப் பெரும்பங்குண்டு.  விஜய நகரப் பேரரசை கிருஷ்ணதேவராயர் ஆண்டு கொண்டிருந்த காலம்.  தெனாலியைச் சேர்ந்த ராமன் அவருடைய மந்திரிகளில் ஒருவர்.  தீவிர காளி பக்தரான தெனாலி ராமன் பல தடவை மன்னரை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றினார்.  

கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜய நாகரப் பேரரசு மிகவும் புகழ்பெற்றிருந்தது.  ஒரு தடவை மன்னர் மிகவும் கவலையுடன் காணப்பட்டார்.  மன்னர் கவலைப்படுவது மந்திரி தெனாலிராமனுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது.  மன்னனிடம் காரணம் கேட்டார்.  மன்னரோ, ‘தெனாலி ராமா, நாம் அண்டை நாடுகளின் மீது படையெடுத்து வென்று நமது பேரரசை விரிவுபடுத்தலாம் என்றிருக்கிறேன்.  ஆனால் ஜோதிடனொருவன், ‘துங்கபத்திரை நதியைக் கடந்து சென்றால் உங்கள் உயிருக்கு ஆபத்து’ என்று கூறுகிறான்.  அதனால் தான் கவலை’ என்றார்.

தெனாலி ராமன் அமைதியாகத் திரும்பினார்.  மன்னனுக்கு ஜோதிடம் சொன்ன ஜோதிடனை கண்காணித்தார் தெனாலிராமன்.  அவருக்கு ஜோதிடனின் நடவடிக்கை மேல் சந்தேகம் வலுத்தது.  ஒரு நாள் அரசவையில் அந்த ஜோதிடனும் இருந்தான்.  ஜோதிடனை அனுகிய தெனாலி ராமன் ஜோதினிடம், ‘நீ இன்னும் எத்தனை வருடங்கள் உயிர் வாழ்வாய்.  ஜோதிடத்தைக் கணித்துக் கூறு’ என்றார்.  அவனும் என்னுடைய ஆயுள் இன்னும் பல வருடங்கள் நீடிக்கும் என்று கூறினான்.  தனது உறையிலிருந்து வாளை வெளியிலெடுத்த தெனாலி ராமன் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜோதிடனை வெட்டிக் கொன்றார்.  

மன்னனோ, ‘தெனாலி ராமா?  என்ன செய்துவிட்டாய்? என்று பதற, ‘பொறுத்திருங்கள் அரசே!’ என்ற தெனாலி ராமன், ஜோதிடனின் பையை பரிசோதித்தார்.  அதிலிருந்து எதிரி மன்னனின் பல கடிதங்கள் கிடைத்தன.  அதாவது கிருஷ்ண தேவராயர் தம்மீது படையெடுப்பதை தடுப்பதற்காக போலியாக ஒரு ஜோதிடனை அதிகப் பணம் கொடுத்து கிருஷ்ண தேவராயரிடம் அனுப்பியிருந்தான் துங்கபத்திரையின் வடக்கு பக்கத்தில் அரசாண்ட ஒரு மன்னன்.

இதையெல்லாம் அறிந்த மன்னர் கிருஷ்ணதேவராயர் வெகுண்டெழுந்தார்.  உடனடியாக படையெடுத்து சென்று அந்த மன்னனை போரில் வீழ்த்தினார்.  தெனாலி ராமனுக்கு பல ஆயிரம் பொற்காசுகளைப் பரிசளித்தார். இன்றும் சில ஜோதிடர்கள் பணம் சம்பாதிப்பதற்காக மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.  ஆம், பரிகார பூஜை செய்பவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு மக்களை அவர்களிடம் அனுப்புகின்றனர் என்று நான் அறிய நேர்ந்தது.  ஆதலால் அன்பு நெஞ்சங்களே! திறமையான, நேர்மையான ஜோதிடரை மட்டும் நாடுங்கள்.   நன்றி.  வணக்கம் அடுத்த பதிவில் சந்திப்போம்.