சுயக்கட்டுப்பாடே சுதந்திரம்

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். எனது முன்னாள் மாணவர்களில் ஒருவரான திரு. விஜய் கோபாலகிருஷ்ணன் அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  சமூக சேவையில் தீவிர நாட்டமுடையவர்.  என்னிடம் தீவிரமான விசுவாசம் கொண்டவர்.  சில மாதங்களுக்கு முன் என்னிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘’மக்களில் பலர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்களே.  அது ஏன்?‘ என்று எனது நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார்.  நீங்கள் காரணம் கூற முடியுமா’ என்றார்.  ஆம், மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் அறியாமையும், சுயக்கட்டுப்பாடின்மையும் தான். மதுப்பழக்கத்தினால் வாழ்க்கையை வீணாக்கியவர் பலர்.  சீரழிந்த குடும்பங்கள் ஏராளம்.  அரசாங்கமோ, ‘மது வீட்டுக்கு கேடு நாட்டுக்கு கேடு‘ என்று சொல்லிக் கொண்டு வெட்கமில்லாமல் மது விற்பனையில் தீவிரம் காட்டுகிறது.  அதற்குக் காரணம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அறியாமைதான்.  

மது விற்பனை செய்வதை அரசு தடை செய்ய வேண்டும். மேலும் மக்களுடைய சுயக்கட்டுப்பாட்டை அதிகரிக்கும் பயிற்சிகளை அளிப்பது இதற்குத் தீர்வாகும். அபரிதமான அறிவியல் வளர்ச்சியும் சுயக்கட்டுப்பாட்டை சிதைக்கிறது. சுயக்கட்டுப்பாட்டை சிதைக்கும் நிகழ்வுகளை அரசு தவிர்க்க வேண்டும்.  நன்மையைச் செய்வதற்கும், தீமையை விலக்குவதற்கும் சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  நன்மை தீமையை அறிந்து கொள்தல் கடினமானது.  தர்மத்தின் பாதையை உணர்ந்து கொள்தல் மிகவும் கடினமானது.  ஒவ்வொரு மனிதனும் தான் செய்வதுதான் சரியென்று வாதிடுகின்றான்.  நன்மை, தீமையை அறிந்து கொள்தல் நமது மனப்பக்குவத்தைப் பொருத்தே அமைகின்றது.  மனப்பக்குவம் பயிற்சியைப் பொருத்தது.

சில பிரச்சனைகளையும் அவற்றின் காரணங்களையும் அலசுவோம்.  பல மாணவர்கள், ‘என்னுடைய பெற்றோர் படி, படி என்று திட்டுகின்றனர்.  வேளாவேளைக்குச் சாப்பிடு.  தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொள்.  ஏன் இப்படி ஊரைச் சுற்றி அலைகிறாய்?’ என்று கேட்கின்றனர்.  ‘நான் சிறு குழந்தையா?  என்ன தேவையென்று எனக்குத் தெரியாதா? நான் விரும்புவதைச் செய்ய எனக்கு உரிமையில்லையா?’ என முணுமுணுக்கின்றனர்.  சில மாணவர்கள், ‘ஆசிரியர் ஏன் படிக்கவில்லை’ என்று திட்டுகின்றார்.  தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றால் தண்டிக்கிறார்’ என்று கூறுகின்றனர்.  அலுவலகத்தில் வேலை செய்பவர்களோ, ‘மேலதிகாரிகள் எப்பொழுதும் தொந்தரவு செய்கின்றனர்.  வீட்டிலும் நிம்மதியில்லை.  அலுவலகத்திலும் நிம்மதியில்லை’ என முணுமுணுக்கின்றனர்.  ஆம்,  ஒவ்வொரு மனிதனும் தான் சுதந்திரப் பறவையாகவே சிறகடிக்க விரும்புகிறான்.  ஆனால் சுதந்திரம் என்பது என்ன?  போதையில் தள்ளாட, கொலை செய்ய, கொள்ளையடிக்க, பிறரை ஏமாற்ற, வசைபாடவா சுதந்திரம்?  அல்ல.  அல்ல.  ‘சுயக்கட்டுப்பாடே உண்மையான சுதந்திரம்‘ என்று வரையறுக்கலாம்.

ஆம்! மாணவர்கள் தங்கள் பாடங்களை ஒழுங்காகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றால் ஆசிரியர் போற்றுவரே!  அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்குச் சென்று ஒழுங்காக வேலை செய்தால் மேலதிகாரிகள் வாழ்த்துவரே!  பெற்றோர் நற்செயல்களைச் செய்யப் பணித்து அதற்கு ஒத்துழைத்தால் உங்களை உயர்த்துவரே! அப்படி நாம் ஏன் செயல்படக்கூடாது.

எவர் திட்டினாலும், பழித்தாலும், ‘ஏன் திட்டுகிறார்கள்? பழிக்கிறார்கள்?’ என்று சிந்தியுங்கள் இளைஞர்களே!  அப்போது அந்தத் தவற்றுக்குக் காரணம் நாமேயென்று உணர்வீர்கள்.  நீங்கள் திருந்துவதற்கு வழி பிறக்கும்.  தீவிரமாகச் சிந்தித்தால் மனமே அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும்.

இளைஞனே! நீயே உனது நண்பன்! நீயே உனது எதிரி.  உன் நண்பனும் எதிரியும் உனக்குள்ளே தான் இருக்கின்றனர்.  வெளியில் தேடி ஏமாந்து விடாதே!  உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே!  உன்னை நீ கட்டுப்படுத்தினால் உலகம் உனக்குக் கட்டுப்படும்.  உன்னை நீ கட்டுப்படுத்தவில்லையாயின் உலகம் உன்னைக் கட்டுப்படுத்தும்.  இதுவே உலக நியதி.

ஒரு நாள் மாதா அமிர்தானந்தமயி அன்னையைக் காணச் சென்றிருந்தேன்.  ஆயிரக்கணக்கான மக்கள் அவரைத் தரிசிக்க வரிசையில் நின்றனர்.  இதற்கெல்லாம் காரணம் அன்னையின் சுயக்கட்டுபாடும், உயிர்களிடத்து அவர்கள் கொண்டிருக்கும் அபரிதமான அன்பும் தானே!  மக்கள் அன்னையின் காலடியில் கொட்டும் பணத்தால் உலகெங்கும் இயங்கும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சேவை நிறுவனங்கள் தான் எத்தனை!  எத்தனை!

ஆம் இளைஞனே! நீ சுதந்திரமாக வாழ்வதும், அடிமையாக அலைவதும்  உன் கையிலேயே உள்ளது.  சில உதாரணங்களை கூறுகிறேன்.  

இரண்டாம் உலகப்போர்.  சுயக்கட்டுப்பாடின்மையாலும், ஆதிக்க வெறியாலும் பிற நாடுகளின் மீது படையெடுத்தான் ஹிட்லர்.  பல நாடுகள் அவனிடம் வீழ்ந்தன.  இறுதியில் உலக நாடுகள் பல ஒன்று சேர்ந்து அவனை கட்டுப்படித்தியதுதான் உனக்குத் தெரியுமே?

சில வருடங்களுக்கு முன் சென்னையை உலுக்கிய நிகழ்ச்சி.  கணினி பொறியியலாளரான, உணவு விடுதியில் நடனமாடும் ஸ்டெப்னா என்ற பெண்ணை வெறியுடன் விரட்டிச் சென்று, அவளது சாவிற்குக் காரணமாகிவிட்ட 16, 19, 21, 24 வயது இளைஞர்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம் அவர்களின் சுயக்கட்டுப்பாடின்மையே!

தவறு செய்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காதவன் தவறு செய்யாமலிருப்பதில் வியப்பில்லை.  அயோக்கியர்கள் மத்தியில் நல்லவனாக வாழ்பவனும், புகைப்பிடிப்பவர்களின் மத்தியில் அதைத் தொடாதவனும், பெண்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டு அவர்களிடம் தவறாக நடந்து கொள்ளாதவனும், இலஞ்சம் வாங்கிச் சம்பாதிக்கப் பல வழிகள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதும் அதை வாங்காதவனும் தான் சுயக்கட்டுபாடுடையவன்.  ஆம்! பெரும் பதவியிலிருந்தும் அதை சுயநலத்திற்கு  உபயோகப்படுத்தாதவனே மனக்கட்டுப்பாடுடையவன், சுயக்கட்டுப்பாடுடையவன்.

தசரத ராமனை உங்களுக்குத் தெரியுமே!  பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ள உரிமையிருந்த காலத்திலும் சீதையை மணந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறி, ‘இப்பிறவிக்கிரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்று வாழ்ந்து காட்டினாரே!  அந்தச் சுயக்கட்டுப்பாட்டிற்காகவும், தியாகத்திற்காகவும்தானே நம் உள்ளத்தே உயர்ந்து நிற்கின்றார்.

அரசியலில் அன்றிருந்த கட்டுப்பாடும், தியாகமும் இன்றில்லை.  சற்றே அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் அலசுவோம்.  தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மனைவிக்கு ஒருவர் தங்க ஆபரணமொன்றைப் பரிசளித்தார்.  காந்தியோ தன் மனைவியை, ‘அதை ஏன் பெற்றுக் கொண்டாய்?’ என்று கடிந்ததோடு, அதை திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.

இராஜாஜி சாகும்போது அவருக்கிருந்த ஒரே சொத்து அவரது கார்தான்.  அதை விற்றுத் தன் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளித்தார்.

காமராஜ் ஆட்சியிலிருக்கும்போது தன் அன்னைக்குச் சொற்பப் பணமே அனுப்புவது வழக்கம்.  அவரது அன்னை அவரிடம் சிறிய வீடும், சிறந்த கழிப்பிடமும் கட்டித் தருமாறு கேட்ட போது காமராஜ், ‘என்னால் முடியும்,  ஆனால் மற்றவர்கள் காமராஜ் பெரிய பங்களாவே கட்டிவிட்டானென்று தூற்றுவார்கள்’ என்று கூறியதோடு, தன் அன்னையின் ஆசைக்கும் தடையிட்டார்.  அவர் சாகும் போது அவருடைய சொத்து வெறும் 150 ரூபாய் மட்டுமே.

ஆனால் இன்றைய நிலையென்ன?  எண்ணிப் பாருங்கள்.  அரசியல்வாதிகளுக்கோ கோடிக்கணக்கான சொத்துக்கள்.  திரும்பிய இடமெல்லாம் பங்களாக்கள்.  காரணம்தான் உங்களுக்குத் தெரியுமே!

இத்தகைய தவறுகட்கெல்லாம் காரணமென்ன?  சுருக்கமாகச் சொல்லின் (1) பேராசை (2) அதிகப்பற்று (3) கூடாநட்பு.  ஆம்.  அறியாமையும் சுயக்கட்டுப்பாடின்மையுமே?  இன்றைய மாணவர்கள், இளைஞர்கள், அரசியலாளர்கள் நிலைமையே இதற்குச் சான்று.

இந்தச் சீரழிவிற்கெல்லாம் காரணம் யார்?  பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் செயல்பாடுகள், மற்றும் தவறான கல்வித் திட்டமும் இதற்குக் காரணம். பெற்றோர்களுக்குத்தான் பெரும் பங்கு.  ஏனெனில், ஒரு மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் 90 சதவிகிதம் 5 வயதைத் தாண்டுவதற்கு முன்பாகவே முடிந்துவிடுகின்றதென்று இன்றைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.  எனவே, பெற்றோர்களும், ஆசிரியர்களுமே சிறந்த மாணவர்களை, இளைஞர்களை, சமுதாயத்தை உருவாக்கக் கடமைப்பட்டவர்கள்.  இன்றைய குழந்தைகளே, இளைஞர்களே நாளைய அரசியலை, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பர்.  சிறந்த, தேவையான கட்டுப்பாடுடன், குறிக்கோளுடன் வளர்க்கப்படும் குழந்தைகள் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும்.

மராட்டிய வீரன் சிவாஜியை உருவாக்கியது அவரது அன்னையும், ஆசிரியருமே!  மகாத்மா காந்தியை உருவாக்கியது அவரது அன்னையின் வழிகாட்டலும், கட்டுப்பாடுமே!

பெரும்பான்மையான தவறுகள் வாலிப வயதில் தீய நண்பர்களின் சேர்க்கையால் நிகழ்கின்றது.  மனிதன் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும், மது, மாதுவிற்கு அடிமையாவதும் பெரும்பாலும் தீய நண்பர்களாலேயே.

நான்கு பேர் சேர்கின்றனர்.  ஒருவனுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கமில்லை.  மூவர் புகைக்கின்றனர்.  நான்காமவன் புகைக்குமாறு தூண்டப்படுகின்றான்.  மறுத்தாலோ, ‘நீயெல்லாம் ஆண் பிள்ளையா?’ என்ற கிண்டல்.  தான் ஆண் பிள்ளையென்று நிரூபிப்பதற்காக, ‘ஒரு தடவைதானே’ என்று புகைக்கின்றான்.  ‘நான் புகைக்கமாட்டேன், கூடாது’ என்ற கட்டுப்பாடு உடைக்கப்படுகின்றது.  பின்னர், ‘ ஒரு நாள் தவறு செய்துவிட்டோம்.  இன்னொரு நாள் புகைபிடித்தால் கெட்டுவிடுமா?’ என நினைக்கின்றான். இன்று ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மதுவினால் பாதிக்கப்படுவதை நாம் காண முடிகிறது.

மனிதன் பிற கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாவது இப்படித்தான்.  ஒரு நாள் தானே என்று ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றது.  மாறாக, நல்ல நண்பர்களின் தொடர்பு மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்துகின்றது.  நல்ல நண்பன், தன்   நண்பன் தன்னைவிட நன்றாக வாழ வேண்டுமென்றே நினைப்பான்.  ஆனால், சரியான குறிக்கோளை உணர்ந்து கொண்டு அதை அடைவதில் உறுதியாக உழைத்தால் கெட்ட பழக்க வழக்கங்கள் அவனை பாதிக்காது.  அவனது குறிக்கோளைத் தவிர வேறெதற்கும் அடிமையாகமாட்டான்.

குழந்தையின் வளர்ச்சி பெண் கருவுற்றவுடனே ஆரம்பித்துவிடுகிறது.  தாயின் செயல்கள், எண்ணங்கள் கருவிலுள்ள குழந்தையின் உடல், மனநிலையைப் பாதிக்கிறது.  மேலும், தாய் கருவுறும் நேரம் தாய் தந்தையரின் மனநிலை மிகவும் முக்கியமானது.  அவற்றை நிர்ணயிப்பதில் கோள்களின் நிலை, உடல் ஆரோக்கியம் போன்றவை பெரும்பங்கு வகிக்கின்றன.  தாய் சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கும் பயிற்சியை மேற்கொண்டால் குழந்தைக்கும் அதன் பலன் கிடைக்கிறது.  நல்ல இசையைக் கேட்கும் போது கருக்குழந்தை மகிழ்கிறது.  கெட்டவற்றைக கேட்கும் போது குழந்தை கலவரமடைகிறது.  மேலும், நல்ல இசை அதிர்வுகளால் குழந்தையின் ஞாபசக்தி, ஆளுமைத்திறன் அதிகரிக்கின்றதென்று இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குழந்தை கருவிலிருக்கும் போது தாய் இசையை இரசித்தால் பிற்காலத்தில் குழந்தை இசையை விரும்புகிறது.  கருவுற்ற தாய் எந்த மொழியைப் பேசுகிறாளோ அதை குழந்தை மிக விரைவில் கற்றுக் கொள்கிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். ஆம், எனக்கு வேண்டிய ஒரு பெண்ணுக்கு அவள் கருவுற்றிருக்கும் போது இசையைக் கேட்டு இரசிக்க ஏற்பாடு செய்தேன். அவரது மகள் இன்று மிக அருமையாகப் பாடுகிறாள். எனது மகளும் அப்படித்தான்.

சிறுவயது முதல் பெற்றோர்களால் நீதிக் கதைகள் மூலமாகவோ, வேறு படிப்பினைகள் மூலமாகவோ எது சரியானது? எது தவறானது? என்று குழந்தைகள் அறிவுறுத்தப்பட வேண்டும்.  தவறினால் உண்டாகும் ஆபத்துக்கள், பிரச்சனைகள், நற்செயலால் உண்டாகும் நன்மைகள் குழந்தையின் மனத்தில் ஆழப்பதிய வேண்டும்.  குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை கண்டிப்பதற்கும் மோசமான வார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.  பல பெற்றோர்கள் தம் குழந்தைகள் அனுபவத்தில் அறிந்து கொள்ளட்டுமென்று கட்டுப்படுத்துவதில்லை.  இது மிகவும் தவறானது.  நல்லது செய்யும் போது போற்ற வேண்டும்.  தவறெனில், தகுந்த முறையில் உணர்த்தி கட்டுப்படுத்த வேண்டும்.

தனது குழந்தைகட்கு இளமை முதல் பாலூட்டும் போதும், உணவூட்டும் போதும் உயர்ந்த எண்ணங்களை ஊட்டி வளர்க்க வேண்டும்.  ‘நீ நல்லவன், நல்ல செயல்களையேச் செய்திடுவாய்!  மகத்தான காரியங்களைச் செய்திடவே இப்புவியில் பிறந்திட்டாய்‘ போன்ற எண்ணங்களைக் குழந்தையின் மனத்தில் ஆழப்பதியச் செய்ய வேண்டும்.  இந்த எண்ணங்கள் மனதில் ஆழப்பதியுமானால் எந்தச் செயல்களால் உயர்ந்த நிலையை அடைய முடியுமோ, அந்தச் செயல்களால் மட்டுமே அவன் கவரப்படுவான்.

குறிக்கோளுடையவன் ஒரு தவறு செய்தால் குறிக்கோளில்லாதவன் ஆயிரம் தவறுகள் செய்வான்‘ என்பது முதுமொழி.  மேலும், குறிக்கோளை அடையும் வழிமுறை மிகவும் சிறந்ததாக அமைய வேண்டும் என்ற எண்ணங்கள் மனதை ஆட்கொள்ளச் செய்வது மிகவும் முக்கியம்.

ஒரு நாள் பெரியவர் ஒருவர் தன் ஒரு வயது பேரனுடன் என்னைக் காண வந்தார்.  நாட்டு முன்னேற்றம் பற்றி உரையாடினோம்.  ‘குழந்தைகள் முன்னேற்றத்தில் பெற்றோர்களின் பங்குதான் மிகவும் அதிகம்.  பிறர் செய்வதை குழந்தைகள் செய்கிறது.  பேசுவதைப் பேசுகிறது.  ஆகவே பெற்றோர் முன் மாதிரியாகத் திகழ வேண்டும்’ என்றேன்.  பெரியவர் அதை ஒத்துக் கொள்ளவில்லை.  என்னுடைய மேஜையில் இருந்த ஒரு பொருளை துணியால் சுத்தப்படுத்தி வைத்தேன்.  அதைக் கவனித்த குழந்தை, அந்தப் பொருளை எடுத்து, துணியால் அதைத் தேய்த்தான்.  அதைப் பெரியவரிடம் சுட்டிக்காட்டி, ‘இப்போது பார்த்தீர்களா உங்கள் பேரன் செய்வதை’ என்றேன்.  பெரியவரும் எனது கருத்தை ஏற்றார்.

ஆம், பெற்றோர் என்ன செய்கின்றார்களோ அதையே குழந்தைகள் செய்யும்.  என்ன பேசுகின்றார்களோ அதையே பேசும்.  ஆதலால் பெற்றோர் குழந்தைகளின் முன் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.  ஆனால் சில நேரங்களில் நமக்கு தெரிந்திருந்தும் நம்மையரியாமல் மைந்தர்களுக்கு முன் தவறாக நடந்து கொள்கிறோம். இதற்கு காரணம் ஊழ்வினை. புண்ணியச் செயல்களை அதிகரிப்பதன் மூலம் இப்படிப்பட்ட தவறுகளை குறைக்க முடியும். மேலும்  நல்லோர் தொடர்பு, நல்ல நூற்களைக் கற்றல், நற்செயல்களைத் தூண்டிடும்  திரைப்படங்களை அடிக்கடி இரசித்தல் போன்றவை அவர்களை உயர்த்தும்.  குறித்த நேரத்தில் படித்தல், விளையாடுதல், தூங்குதல் மேலும் தேவையான உடற்பயிற்சிகளும் சிறுவயது முதல் பெற்றோர்களால் ஒழுங்காகச் செயல்படுத்தப்படல் வேண்டும்.  பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சிகள், யோகாசனங்கள், தியானம் மற்றும் பிரார்த்தனை போன்றவை சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கும்.

பிறரிடமிருந்து இனாமாகவோ, அன்பளிப்பாகவோ தம் குழந்தைகள் எதையும் பெற்றுக் கொள்ளாதவாறு பெற்றோர்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.  (மிகவும் நல்லோர்களிடம் பெற்றுக் கொள்வது தவறல்ல) இனாமாகவும், அன்பளிப்பாகவும் பெற்றுக் கொள்ளுதல் மனிதனைப் பிறருக்கு அடிமையாக்குகிறது.  சோம்பேறித்தனத்தை வளர்க்கிறது.  மேலும் இனாமாக அடிக்கடிப் பெற்றுக் கொள்பவன், கொடுத்தவன் எதைச் சொன்னாலும் செய்யத் தயாராகின்றான். அரசாங்கமும் மக்களுக்கு இலவசமாக கொடுப்பதை தவிர்த்து அவர்கள் உழைத்து வாழ வழி செய்ய வேண்டும்.மேலும், சிறந்த சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டு, எவ்விதப் பாகுபாடுமின்றி செயல்படுத்தப்படல் வேண்டும்.  ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி‘ என்பது முதுமொழி.  ஆம், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மக்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும்.  இவ்வாறு செயல்பட்டால் செயலில் சிறந்த சுயக்கட்டுப்பாடுடைய சமுதாயம் உருவாக வழி பிறக்கும். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.