Click ▶ for audio
அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். அவ்வப்போது கிருஷ்ண ஜெயந்தி அன்று எனது மாணவர்களிடம் ஆற்றிய உரையின் கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இளைஞனே! இன்று ஒரு பொன்னாள், பகவான் கிருஷ்ணன் அவதரித்த நன்னாள். ‘ஆசிரியரே! நம்முடைய கிருஷ்ணா கல்வி நிலையத்தில் இன்று விடுமுறை கிடையாதா?’ என வினவுகின்றாய். விளக்குகின்றேன்.
கிருஷ்ணன் தன்னுடைய பிறந்த நாளன்று. ‘உன் கடமையை மறந்து என்னை வழிபடு’ என்று கூறுவில்லை. மாறாக, ‘உன் கடமையைச் செய். உன்னுடைய கடமையில் என்னை வழிபடு’ என்றே கூறினான். மேலும், ‘என்னை வழிபடுவோனைக் காட்டிலும், நான் கூறியவற்றை, என்னுடைய கொள்கைகளை யார் பின்பற்றுகிறானோ அவனே எனக்குப் பிரியமானவன். என்னையும் வழிபட்டு என் கொள்கைகளைப் பின்பற்றுபவன் மிகப்பிரியமானவன்’ என்று கூறினான். உதாரணமாக, ஒரு ஆசிரியருக்குக் காலையும், மாலையும் தன்னை வணங்குபவனைக் காட்டிலும், வகுப்புக்கு ஒழுங்காகச் சென்று ஆசிரியரின் அறிவுரைப்படி பாடங்களைத் திறம்படக் கற்று, முதல் மாணவனாகத் திகழ்பவனையே மிகவும் பிடிக்கும்.
முதலாவதாக, நீ ஒரு மானிடன், தேவையான அளவு உண்பதும், உறங்குவதும், உடல், மனப் பயிற்சிகளைச் செய்வதும் உனது முதற் கடமை. இரண்டாவதாக, உன் பெற்றோருக்கு நீ மகன். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்தல் (தேவைதான், ஆசையல்ல) அடுத்த கடமை. மூன்றாவதாக, நீ ஒரு மாணவன். பள்ளிக்குச் செல்வதும், ஆசிரியர் போதிக்கும் பாடங்களைத் திறம்படக் கற்பதும், அதை வாழ்வில் கடைப்பிடிப்பதுமே மூன்றாவது கடமை. மற்ற நாட்களை விட, இன்று உன்னுடைய கடமைகள் திறம்படச் செய்யப்படல் வேண்டும். இன்று விடுமுறை என்றால் உண்மையில் கிருஷ்ணனின் எண்ணத்திற்கு மாறுபட்டதாகும். ஆதலால், கிருஷ்ணன் நிச்சயம் நம்மைத் தண்டிப்பான். மாறாக, அவனது எண்ணங்களுக்கு ஏற்ப உன் கடமையைச் செய்து அக்கடமையில் அவனை வழிபட்டால் நீங்காப் புகழ் பெறுவாய். வாழ்த்துக்கள்.
மக்களின் புலம்பல்கள்
மக்களைப் பார். ‘இறைவா! உன்னையே காலையும் மாலையும் வழிபடுகின்றேன், எனக்கா இத்தனைத் துன்பம்? நீ இருக்கிறாயா? இல்லையா? உனக்கு காதில்லையா? கண் இல்லையா?’ எனப் புலம்புகின்றனர். ஏன் இந்த நிலைமை? நன்கு ஆராய்ந்து பார். இறைவன் கூறியதை யாரும் பின்பற்றவில்லை. அவன் என்ன கூறினான்? மதம் என்ன கூறுகின்றது? ‘உண்மையே பேசு. பிறரை ஏமாற்றாதே, உழைத்து முன்னேறு என்பதே’.
ஆனால் நடைமுறையில் ‘உண்மை கிலோ எத்தனை ரூபாய்?’ என்று கேட்பர். ‘பிறரை ஏமாற்றாது எப்படி வாழ்க்கை நடத்துவது?’ என்று விவாதிப்பர். நல்லவனை, ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்று தூற்றுவர். அவன் தான் கூறி விட்டானே, ‘என்னை வணங்குபவர்களைக் காட்டிலும் நான் கூறியதைச் செயல்படுத்துபவர்களே எனக்குப் பிரியமானவர்கள்’ என்று. பிறகு எப்படி இறையருள் கிடைக்கும்?
கடமையே பெரிது
கடமையே பெரிது என்று உணர்த்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகின்றேன். கவனமாகக் கேள். ஒரு யோகி, காட்டில் தியனித்துக் கொண்டிருந்தார். கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டது. மேலே நிமிர்ந்தார். மரக்கிளையில் இருந்த கொக்கு எரிந்து சாம்பலானது. அருகிலிருந்த ஊருக்கு வந்தார். ஒரு வீட்டின் முன் நின்று, ‘அம்மா பிச்சை’ என்றார். வீட்டில் தலைவி தலைவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். கணவனே தெய்வம் அவளுக்கு. பிச்சை கொண்டு வரத் தாமதமானது. பெண்ணை எரித்துவிடுவது போல் பார்த்தார் யோகி. அப்பெண்ணோ, ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?’ என்று கூறினாள். ‘நம் பெயர் அவளுக்கு எப்படித் தெரியும். நாம் கொக்கை எரித்தது அவளுக்கு எப்படித் தெரியும்?’ என்று வியந்தார் யோகி. அவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பெண்ணோ, ‘இதைப் பற்றி மேலும் தெரியவேண்டுமாயின், அடுத்த ஊர்க் கோடியில் இருக்கும் கசாப்புக் கடைக்காரனான வியாதனைச் சென்று கேள்’ என்று கூறினாள்.
யோகியும் அவனிடம் சென்றார். அவன் தன் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தான். யோகியைக் கண்டுகொள்ளவேயில்லை. யோகிக்குக் கோபம் தலைக்கேறியது. அதைக் கண்ட வியாதன்,’ ஓ! அந்தப் பெண் உம்மை அனுப்பினாளா? சற்றுப் பொறும். பேசுகிறேன்’ என்று கூறி வியாபாரத்தை முடித்த பிறகு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவரைத் திண்ணையில் அமரச் செய்து தன் வயதான தாய், தந்தையரைக் கவனிக்க வீட்டினுள் சென்றான். அவர்களைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, யோகியைச் சந்தித்தான். ‘கடமையே மிகச் சிறந்தது. ஒவ்வொருவரும் தம்முடைய கடமைகளை ஒழுங்காகச் செய்தால், யாருக்கும் அச்சப்பட வேண்டியதில்லை’ என்று கடமையின் முக்கியத்துவத்தை அவருக்கு உபதேசம் செய்தான். அதுவே வியாத கீதை என்று பாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பற்றற்று கடமை
இன்று அரசியல்வாதிகள் பலர் காமராஜ் ஆட்சியமைப்போம் என்று மேடைகளில் பேசுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காந்தி கண்ட கனவுகள்-ராம ராஜ்ஜியம் தமிழ்நாட்டில் காமராஜ் அட்சிக் காலத்தில்தான் நனவானது. அது ஒரு பொற்காலம். காமராஜரைப் போல குணம் கொண்ட ஒருவரால்தான் அந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வர முடியுமே தவிர வேறு யாராலும் முடியாது.
பற்றற்று தொண்டு செய்த மாமுனிவர் காமராஜ். கிருஷ்ணன் காட்டிய வழிக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர் அந்தச் சிவகாமி புத்திரன். அவர் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சியை எழுதுகிறேன்.
காமராஜ் முதலமைச்சராக இருந்த போது அவரது சகோதரி பேரன் கதிர்வேல் என்பவர் ஒரு வழக்கில் தண்டனை பெற்றார். அப்போது காவல்துறை அமைச்சரான திரு.கக்கன் அவர்களும், மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரியான டயஸ் என்பவரும் காமராஜரை அணுகி, இந்த விஷயத்தைக் கூறி தண்டனையைக் குறைத்திட அவரால் இயன்ற உதவியைச் செய்யுமாறு வேண்யடினர். காமராஜரோ, ‘யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்’ என கூறி உதவ மறுத்துவிட்டார். இப்படி பற்றற்று தம் கடமையைச் செய்ததனாலேயே அவரால் மாபெரும் தலைவராக, கிங் மேக்கர் என்று உலகம் போற்றும்படி வளர முடிந்தது. ஆம், கிருஷ்ணன் காட்டிய வழிக்கு அவர் ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார்.
ஏழைப் படகோட்டியின் மகனான, வீடு வீடாக செய்தித்தாள் எடுத்துச் சென்று படித்த ஏழைச் சிறுவன் அப்துல் கலாம் இந்தியாவின் முதல் குடி மகனானது பற்றற்று கடமையைச் செய்ததனாலேயே.
கிருஷ்ண ஜெயந்தி
இளைஞனே! கிருஷ்ண ஜெயந்தி என்றால் உனக்குத் தான் எத்தனை உற்சாகம்? நீ எப்படிக் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றாய். அம்மா, இனிப்புப் பண்டங்கள் செய்து எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கின்றாள். புத்தாடை அணிந்து நீ மகிழ்ச்சியோடு நண்பர்களுடன் விளையாடுகின்றாய். கிருஷ்ணனை வழிபட்டு அவனுடைய பெருமைகளைப் போற்றுகின்றாய். ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி என்றால் இனிப்புகளும், திண்பண்டங்களும் நினைவுக்கு வருகின்றன. அப்படித்தானே.
கிருஷ்ண ஜெயந்தி மட்டுமா? இயேசு, காந்தி, முகம்மது, புத்தர் போன்றோரின் பிறந்த நாட்களையும் விமரிசையாகக் கொண்டாடுகின்றாய். என்றாவது ஒரு நாள் உன் பெற்றோரிடம், ‘நாம் ஏன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகின்றோம்?’ என்று கேட்டதுண்டா? சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒருவனின் பிறந்த நாளை நீ ஏன் கொண்டாடுகின்றாய். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மறைந்த இயேசுவின் பிறந்த நாளை நீ ஏன் கோண்டாடுகின்றாய்? சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் மறைந்த காந்தியின் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகின்றாய்? உன் தாத்தாவின் பிறந்த நாளைக் கூட நீ கொண்டாடுவதில்லையே ஏன்? என்றாவது சிந்தித்தாயா?
சிந்திப்பாய் இளைஞனே! கிருஷ்ணன் கடவுள் அதனால் கொண்டாடுகின்றேன் என்று கூறுகின்றாய், அப்படித்தானே. கிருஷ்ணன் பிறக்கும் போதே மக்கள் அவனைக் கடவுளாக வழிபடவில்லையே. தன்னுடைய செயல்களால்தானே மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டான். பகைவர்களை அழித்து, நல்லவர்களைக் காத்திட்டு, தர்மம் தழைக்கச் செய்தமையே அவனை மேல் நிலைக்கு உயர்த்தியது. அதற்காக அவன் ஈடுபட்ட போர்க்களங்கள் தான் எத்தனை? எத்தனை? தன்னுடைய பயிற்சியால் பகவத்கீதை என்ற மாபெரும் பொக்கிஷத்தை உலகிற்கு ஈந்திட்டானே. அதனாலன்றோ உலகின் மிகச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றான்.
கீதை சொல்லும் பாதை
அப்படிக் கீதையில் என்னதான் இருக்கின்றது என்று கேட்கின்றாய்? மனித சமுதாயத்தை மேமம்படுத்தும் திறவுகோலே, கீதையிடம்தான் உள்ளது. கீதையைக் குறித்து ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஆட்சியாளர்களில் ஒருவரான வாரன் ஹேஸ்டிங்ஸ் என்பவர், ‘இங்கிலாந்து ஒருநாள் இந்தியாவை இழக்க நேரிடலாம். ஆனால் இந்தியாவில் உதித்த பகவத் கீதையின் கோட்பாடுகளைப் பின்பற்றுமாயின், அது என்றென்றும் மேன்மையுற்று விளங்கும். உலக நாடுகளை வழிநடத்தும்’ என்று கூறினார். ஆம் தன்னுடைய அசாதாரணச் செயல்களாலும், தத்துவங்களாலும், மக்கள் சமுதாயத்திற்குச் செய்திட்ட சிறந்த தொண்டினாலுமே அவன் தெய்வமாகப் போற்றப்படுகின்றான்.
சில வருடங்களுக்கு முன் தீவிரவாதிகள் சிலர் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தான் கடத்திச் சென்றனர். அப்போது கிறிஸ்தவரான ஜார்ஜ் என்பவர் இந்தியாவின் இன்றைய தேவை ‘கிருஷ்ணன் காட்டிய வழி, அசோகன் வழியல்ல’ என்று எழுதினார்.
கீதையைப் பற்றி பெரும்பாலும் உனக்குத் தெரிந்திருக்காது. ஆதலால் சிறிது விளக்கலாம் என நினைக்கிறேன். குருஷேத்திரப் போர்க்களம். தன்னுடைய உறவினர்கள், ஆசிரியர்களில் பலர் எதிரணியில் அணிவகுத்து நிற்பதைப் பார்த்து, அவர்கள் மீது கொண்ட பற்றினால் கடமையை மறந்தான் காண்டீபன். அவன் கையில் இருந்த காண்டீபம் என்ற வில் நழுவியது. அதைக் கவனித்த, தர்மம் காக்க வந்த பகவான் கிருஷ்ணன், ‘பற்றற்து கடமையைச் செய்’ என்று அரச்சுனனுக்குப் பகவத்கீதையை உபதேசித்தார். அர்ச்சுனனும் காண்டீபத்தைக் கையிலெடுத்தான். அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டினான்.
பகவத்கீதையின் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்துபவை. மனத்தைச் செம்மைப்படுத்தினால்தான், மனிதனிடமிருந்து சிறந்த செயல்கள் உதிக்கும். மனத்தைச் செம்மைப்படுத்துவதற்கான வழிமுறைகளை, விதி முறைகளைக் கீதையில் விளக்குகின்றான் கிருஷ்ணன்.
அளவோடு சாப்பிடு. அளவோடு தூங்கு. சிறந்த உடற்பயிற்சிகளையும் மனப்பயிற்சிகளையும் தேவையான அளவு செய். மனம் பக்குவம் அடையும். உன் மனமே உன்னை வழிநடத்தும் என்கிறான் கிருஷ்ணன். இதுவே உலகின் மாபெரும் கண்டுபிடிப்பு.
மேலும் சாதிகள் எப்படி உருவாயின? அதன் தேவையென்ன? என்பதை விளக்கி சாதிச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளியிடுகின்றான். ‘பலனை எதிர்பாராது, பற்றற்றுக் கடமையைச் செய்’ என்கிறான். அனைத்து ஆட்சியாளர்களும், அரசு அலுவலர்களும், மற்றவர்களும், பற்றற்றுத் தன் கடமையைச் செய்தால், இந்தியா உலக நாடுகளை வழிநடத்தும் என்பதில் ஐயமுண்டோ? இன்று ஆட்சியாளர்கள், அதிகாரிகள் பலர் , தன் உயிரின் மீது உள்ள பயத்தாலோ, குழந்தைப் பாசத்தாலோ, பண ஆசையாலோ தம் கடமையில் இருந்து வழுவுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, சில வருடங்களுக்கு முன் காஷ்மீரத்தைச் சார்ந்த, மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த அமைச்சர் ஒருவரின் மகளைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுவிட்டனர். சில தீவிரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவித்தால்தான் அவளை வீடுவிப்போம் என பேரம் பேசினர். தன் மகள் மீதுள்ள பாசத்தால, அமைச்சர் கடமையை மறந்தார். தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
இது போன்ற செயல்களால் சமுதாயத்தில் குற்றவாளிகளின் ஆதிக்கம் பெருகிவிட்டது. அனைவரும் பற்றற்று தம் கடமையைச் செவ்வனே செய்தால் இந்தித் தாய் புனிதமடைந்துவிடுவாளே.
செயல்களால் உயர்ந்தோர்
மேலும் இயேசு, புத்தர், முகம்மது நபி, காந்தி போன்ற பலரும் தன்னுடைய செயல்களாலேயே போற்றப்பட்டனர். அண்ணல் நபியின் வரலாற்றை ஆராய்ந்தால் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க அவர் எவ்வளவு துன்பப்பட்டார், பாடுபட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். இவை மட்டுமா? நேருவின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகவும், இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகவும் நாம் கொண்டாடவில்லையா? எல்லோரும் தன் செயல்களால் உயர்ந்தவர்கள் தானே?
இப்படி, கிருஷ்ணன், இயேசு, முகம்மது நபி, காந்தி போன்ற பலரின் பிறந்த நாளை நீ கொண்டாடுகிறாய். ஏன் வருங்கால இந்தியா உன் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது. என்றாவது சிந்தித்தாயா! ஆம் வருங்கால பாரதம் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? சிந்திப்பாய் இளைஞனே! உன் சிந்தையில், செயலில் உறுதியிருந்தால் உன் பிறந்தநாள் நிச்சயம் வருங்கால இந்தியாவால் கொண்டாடப்படும். அதற்குத் தேவை சிறந்த செயல்களே.
ஆம், மக்களின் அத்தியாவசியத் தேவையென்ன? என்று தெரிந்து, திட்டமிட்டு, பல்வேறு தடைகளையும் தகர்த்திட்டு, மக்களுக்குக் கிடைத்திடச் செய். அதற்குத் தேவையான பயிற்சிகளை இன்றே மேற்கொள். வருங்கால பாரதம் பாரதமென்ன, உலகமே உன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதில் ஐயமுண்டோ? ஆம், அன்பு நெஞ்சங்களே! மேற்கூறியவை மாணவர்கட்கு மட்டுமல்ல. உங்களுக்கும் தான். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Arumai ..iya …vanakkam …nandri
தங்கள் கருத்துக்கு நன்றி!