தன்னம்பிக்கை

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாதார்

என்றார் வள்ளுவப் பெருந்தகை. 

ஆம், பிறரால் செய்வதற்கரிய காரியங்களைச் செய்பவரே பெரியவராவர்.  செயற்கரியச் செயல்களைச் செய்யாதவர்கள் உருவத்தில், வயதில் பெரியவராயினும் சிறிவராகவே எண்ணப்படுவர் என்பது இதன் பொருளாகும்.

பிறப்பின் நோக்கம்

நீங்களும், நாமும் இவ்வுலகில் பிறந்ததே செயற்கரிய செயல்களைச் செய்திடத்தான்.  பிறரால் நினைக்கக்கூட முடியாத செயல்களை உங்களால் செய்திட முடியும்.  செய்துதான் ஆக வேண்டும்.  அதற்குத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம்.  ‘முடியாது என்பது முட்டாள்களின் அகராதி‘ என்றான் நெப்போலியன்.  ஆம், உம்மால் முடியாதது உலகில் ஏதுமில்லை.  ஆனால்  உங்களுக்கு உகந்ததைத்தான் நீங்கள் செய்ய வேண்டும்.  இது மிகவும் முக்கியம்.  ஏனென்றால், உங்களுக்கு உகந்ததில்லை என்றால் தற்போது வெற்றியை கொடுத்தாலும், பிற்காலத்தில் பெரும் தோல்விக்கு அது அடிகோலும்.  உங்களுக்கு உகந்தது எது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை பிற்காலத்தில் பகிர்ந்து கொள்வேன்.  ஆம்! உங்கள் விதி உங்களாலேயே செயல்படுத்தப்படுகிறது.  

தன்னை நம்பியவன் தரணி ஆள்வான்

என்பது முதுமொழி.

தன்னம்பிக்கையால் உயர்ந்தோர் பலர்.  அவர்களில் சிலரைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.

ஒரு நாள் இயேசு தன் சீடர்களை நோக்கி, ‘உனக்கு மட்டும் நம்பிக்கையில் உறுதியிருந்தால் மலையை நோக்கி நீ நகர்ந்து போகுமாறு ஆணையிட்டாலும் அது நகர்ந்து போகும்’ என்றார்.  அவருடைய தன்னம்பிக்கையை என்னென்பது!  அதனாலேயே அவரால் மாபெரும் வழிகாட்டியாக உயர முடிந்தது.

மகாபாரத நாயகன் கிருஷ்ணனை உங்களுக்கு நன்கு தெரியுமே! தர்மத்தைக் காப்பதற்காக அவன் செய்த செயல்கள் தான் எத்தனை! ‘வானமும் பெயர்ந்து கீழே விழலாம், பூமியும் சிறு, சிறு துண்டுகளாக உடைந்து சிதறலாம், இமயமும் சிதைந்து போகலாம், பெருங்கடலும் வற்றலாம், ஆனால்  எம் வார்த்தைகள் ஒரு போதும் பொய்த்திடாது’ என்று முழங்கினானே கிருஷ்ணன்.  அவனது சாதனைகட்கெல்லாம் காரணம் தன்னம்பிக்கைதானே!

‘எனக்கு ஐம்பது அறிவுடைய இளைஞர்கள் போதும்.  ஆயிரம் முட்டாள்கள் தேவையன்று.  நவீன இந்தியாவைப் படைப்போம்’ என்று முழங்கி, உலகம் முழுவதும் பவனி வந்து, இந்து சமயத்தை வளர்த்திட்டு, இந்திய மக்களுக்கு நம்பிக்கையூட்டி, சுதந்திர  உணர்ச்சியைத் தூண்டிட்டாரே சுவாமி விவேகானந்தர்.  அவருடைய தன்னம்பிக்கையைத்தான் அளவிட முடியுமா?

இரண்டாம் உலகப் போரின் போது தனது பெரும்பகுதிகளை ஜெர்மனியிடமும், ஜப்பானிடமும் பறிகொடுத்த நேச நாடுகள், ‘வீரர்களே! இறுதி வெற்றி நமதே! உற்சாகமாகப் போரிடுங்கள்’ என்ற ரூஸ்வெல்ட், சர்ச்சில் போன்ற தலைவர்களின் எழுச்சிமிக்க பேச்சாலும், தன்னம்பிக்கையாலும் உந்தப்பட்டு வென்றதை நீங்கள் அறிவீர்களே!

ஆயுதப் போராட்டமின்றி, அகிம்சையாலேயே நாடு விடுதலை பெற்றிட முடியும் என்று நம்பி, விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமையேற்று கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வழிகாட்டி, விடுதலை பெற்றிட்டாரே தேசத்தந்தை மகாத்மா காந்தி, அந்த காந்தியின் மன உறுதியும், தன்னம்பிக்கையும் பயிற்சியினால் பெற்றதன்றோ!

கண் பார்வையே இல்லாத ஜான் மில்டன் ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியம் எழுதி அழியாப் புகழ் பெற்றது தன்னம்பிக்கையாலேயே!

வலிப்பு நோயால் வாழ்நாளெல்லாம் அவதிப்பட்ட ஜுலியஸ் சீசர் பல நாடுகளைத் தன் காலடியின் கீழ் கொணர்ந்தது அவரது தன்னம்பிக்கையாலேயே!

காது கேட்காத செவிடரான பீதோவன், சாகாவரம் பெற்ற சங்கீத ராகங்களை உருவாக்கியது அவரது தன்னம்பிக்கையினால் அன்றோ!

பில்கேட்ஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரரானது அவரது தன்னம்பிக்கையாலும், கடின உழைப்பாலுமே!

இளையராஜா, ரஹ்மான் போன்ற இசை மேதைகளின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் அவர்களின் கடின உழைப்பும், தன்னம்பிக்கையுமே!

விருதுபட்டியிலே ஏழை வியாபாரியின் மகனாகப் பிறந்து, சிறுவயதிலேயே தந்தையை இழந்தும் பிற்காலத்தே பாரதத்தின்  தலைவிதியை நிர்ணயிக்கும் மாபெரும் மேதையானாரே காமராஜர்.  அவரது வெற்றிக்குக் காரணம் கடின உழைப்பும், தன்னலமற்ற சேவையும், தன்னம்பிக்கையுமன்றோ!

இளைஞர்களே! தன்னம்பிக்கையின் மேன்மையையும், அவசியத்தையும் இப்போது உணர்ந்திருப்பீர்கள்.  தன்னம்பிக்கை உடையவர்களாலேயே மாபெரும் வெற்றிகளைக் குவித்திட முடியும் என நீங்கள் இப்போது நம்புகிறீர்கள்.  தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? என்ற கேள்வி உங்கள்  மனத்தில் எழுகின்றது.  அப்படித்தானே! தொடருங்கள்.

தன்னம்பிக்கையும், வெற்றியும்

தன்னம்பிக்கையும், வெற்றியும் பின்னிப்பிணைந்தவை.  வெற்றியடையும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும் போது மாபெரும் வெற்றிக்கு அதிபதியாவீர்.

வெற்றி என்பது என்ன? காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தால் எழுந்திருங்கள்.  8 மணிக்கு முன் சாப்பிட நினைத்தால் சாப்பிடுங்கள்.  மின் விளக்கை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் உடனே மாற்றுங்கள்.  ஆம், திட்டமிட்டதை முடித்துவிட்டீர்.  இதுவே வெற்றி.  இப்படிச் சிறு, சிறு வெற்றிகளே தன்னம்பிக்கையை அதிகரித்து, பெரும் வெற்றிக்கு அடிகோலும்.

நீவிர் வெற்றிபெற விரும்பினால் செய்யக் கூடியவற்றையே விரும்ப வேண்டும்.  செய்யக் கூடாதவைகளை அடைய முயலக்கூடாது.  அவை தற்போது நன்மைகளைக் கொடுத்தாலும், பிற்காலத்தே மோசமான விளைவுகளையே கொடுக்கும்.  இதையே,

செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமையானும் கெடும்

என்று கூறுகிறது வள்ளுவம்.

ஆம், செய்யத் தகுந்த செயல்களைச் செய்வது வெற்றி.  செய்யக் கூடாதவற்றைச் செய்வது தோல்வி.  செய்யக் கூடாதவை என்ன? என்று கேட்கின்றீர்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

என்று செப்புகின்றார் செந்நாப்போதார்.

ஆம், நம்மைப் பெற்ற தாயே பசியுடன் துடித்தாலும், கற்றறிந்த சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யக் கூடாதென்பது இதன் பொருளாம்.

திட்டமிடுங்கள்

வெற்றியடைவதற்குத் திட்டமிடல் மிகவும் அவசியம்.  சாதனையாளர்களின் பாட்டியலைப் புரட்டினால், அனைவரும் திட்டமிடும் கலையில் வல்லுநர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  எப்படித் திட்டமிடுவது?

இரவுத் தூங்கச் செல்வதற்குமுன் குறிப்பேட்டையும், பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள்.  பெரிய செயல்களைத் தொடங்குமுன், உங்களின் அன்றாடச் செயல்களைத் திட்டமிடுங்கள்.  காலையில் துயில் எழுதல், பல் தேய்த்தல், குளித்தல், இறைவழிபாடு, செய்தித்தாள் வாசித்தல், மூச்சுப்பயிற்சி, யோகாசனம், நடைப்பயிற்சி, உணவு உண்ணல், தொலைக்காட்சி இரசித்தல், விளையாடுதல், உறங்குதல் போன்ற அன்றாடச் செயல்களை அட்டவணைப்படுத்துங்கள்.  அதைச் செய்ய வேண்டிய காலம், கால அளவு போன்றவற்றையும் அட்டவணைப்படுத்தவும்.

சில நாட்கள் எழுதியதைச் சரியாக நடைமுறைப்படுத்துங்கள்.  இரவு தூங்குவதற்கு முன், திட்டமிட்டவற்றைக் குறித்த நேரத்தில் முடித்துவிட்டேனா என சரி பாருங்கள்.  அப்பப்பா! ஒரே நாளில் எவ்வளவு வேலை செய்திருக்கின்றோமென்று மலைப்பாக இருக்கும்.  உங்கள் மீது உங்கள் நம்பிக்கை உயர்வதைக் காண்பீர்.

பிறகு கொஞ்சம், கொஞ்சமாக வேலைப் பளுவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.  இதுவே தன்னம்பிக்கையை வளர்க்கும் அருமருந்து.  இச்சிறு வெற்றிகளே பிற்கால சாதனைகட்குப் படிக்கட்டுகள்.

பிரித்து வெற்றி காணுங்கள்

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.  ஒரு சந்நியாசி.  ஆற்றின் ஒரு கரையில் ஆசிரமம் அமைத்திருந்தார்.  மறுகரையிலிருந்து இருவர் தினசரி அவரை சந்தித்து உரையாடுவது வழக்கம்.  இருவரும் சந்நியாசியிடம் தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினர்.  அவரோ, இருவரில் ஒருவரைச் சீடராக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார்.  இருவரிடமும் 20 மூட்டைகள் அரிசியைக் கொடுத்து 20 நாட்களில் அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

ஒருவன் தினம் வரும்போது 1 மூட்டையைக் கொண்டு வந்தான்.  மற்றவனோ இன்னும் 20 நாட்கள் இருக்கிறதே, பார்த்துக் கொள்ளலாமென்று நினைத்தான்.  10 நாட்கள் கடந்தன.  இன்னும் 10 நாட்கள் உள்ளன, சில நாட்கள் சென்றபின் சேர்ப்பிக்கலாம் என நாட்களைக் கடத்தினான்.  1 நாள் மட்டுமே இருக்கையில், நாளை போகும் போது எல்லாவற்றையும் கொண்டு செல்லலாம் என்று அதையும் தாமதப்படுத்தினான்.  மறுநாள் சிலரின் உதவியுடன் மிகவும் கஷ்டப்பட்டு அனைத்து மூட்டைகளையும் படகில் ஏற்றினான்.  சிறிது காற்றடித்துக் கொண்டிருந்தது.  படகு, பாரம் தாங்காமல் ஆற்றில் மூழ்கியது.  சந்நியாசி யாரைத் தன் சீடனாகத் தேர்ந்தெடுத்திருப்பாரென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே!

இன்றைய மாணவர்களின் நிலைக்கு வருவோம்.  சிலருக்குத் தேர்வென்றாலே பயம்.  காரணம், தன்னம்பிக்கையின்மை.  தேர்வுக்கு முந்தைய நாள்தான் பெரும்பாலான மாணவர்கள் புத்தகத்தைக் கையிலெடுப்பர்.  அவர்களால் புத்தகத்தைப் படித்து முடிக்க முடியாது.

ஆனால், சில மாணவர்கள் தேர்வுக்கு பல நாட்கள் முன்பே வெகு நேர்த்தியாக திட்டமிட்டு, ஒவ்வொரு நாளும் என்னென்ன படிக்க வேண்டுமென்று எழுதிக் கொள்வர்.  பல நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு, வேலை பல பாகங்களாகப் பிரிக்கப்படுவதால் படிப்பது மிக எளிதாகிறது.  தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது.

எனது நண்பன் கதிரவன்.  அவனுடைய பள்ளியிலும், கல்லூரியிலும் ஆண்டு இறுதித் தேர்வுகளில் அவனே முதல் மாணவன்.  அவனுடைய வெற்றியின் காரணத்தை அவன் வாயாலேயேச் சொல்லக் கேட்போம்.

‘நான் இறுதித் தேர்வுக்கு சுமார் 40 நாட்களுக்கு முன்னரே திட்டமிடுவது வழக்கம்.  என்னுடைய மொத்த பாடங்களும் 25 பகுதிகளாகப் பிரிக்கப்படும்.  25 நாட்களில் எல்லாப் பாடங்களும் படித்து முடிக்கப்படும்.  அடுத்த 10 நாட்களில் இரண்டாவது தடவையாக திரும்பவும் படிக்கப்படும்.  மீதி 5 நாட்களில் மறுபடியும் மிக விரைவாக படிக்கப்படும்.  இப்போது எனது திருப்தியும், நம்பிக்கையும் மிகவும் அதிகமாகும்.  எந்தவித பயமும் இல்லாமல் தேர்வு மையத்திற்குச் சென்று தேர்வு எழுதுவது வழக்கம்.  தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் மற்ற மாணவர்களெல்லாம் மிகவும் பதட்டத்துடன் காணப்படுவர்.  நானோ, தேர்வு முடிவுகளைப் பற்றி கவலைப்படவே மாட்டேன்.  எனக்குத் தெரியும்.  நான் எப்போதுமே முதல் மாணவன்.

குழந்தையைக் கவனியுங்கள்!

உங்கள் வீட்டிலோ, அடுத்த வீட்டிலோ நடக்கும் நிகழ்ச்சி.  தவழும் குழந்தையை தீவிரமாக கவனியுங்கள்.  சில நாட்களில் எழ முயற்சிக்கின்றது.  தோல்வியடைகின்றது.  ஆனால், குழந்தை தன் செயலை நிறுத்திவிடுகின்றதா?  தன்னம்பிக்கையுடன் திரும்ப திரும்ப முயற்சிக்கின்றது.  திரும்பிப் பார்க்கின்றது.  அருகில் ஒரு கட்டில்.  அதனருகே தவழ்ந்து சென்று கட்டிலைப் பிடித்து எழுந்து நிற்கின்றது.

ஆகா! அதன் முகப் பொலிவுதான் என்னே! ஆம்! குழந்தையின் விடாமுயற்சி தன்னம்பிக்கையை அதிகமாக்கி வெற்றியைக் கொடுத்தது. ஆம் இளைஞர்களே! திட்டமிடுங்கள், செயல்படுங்கள்.  உங்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும் உயரும்.  ஒரு நாள் உலகம் உங்கள் கைகளில்.  வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்! வாழ்த்துக்கள்!  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.