தோழியைக் காப்பாற்றுங்கள்

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்றைய கிருஷ்ணா கல்வி நிலையம் மிகவும் புகழ்பெற்று விளங்கியது.  பெரும்பாலும் சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளிலும் எனது மாணவர்களே முதலிடம் பெற்று விளங்கினர்.  எங்களது கல்வி நிலையத்தில் படிப்பதை மிகவும் பெருமையாகக் கருதினர்.  கல்வி நிலையச் சேர்க்கை விரைவில் முடிந்து பலர் சேர்க்கைக்காக காத்திருப்பர்.  காத்திருப்போர் பட்டியலும் வெளியிடப்படும்.  அந்த காலத்தே கிண்டி பல்கலைக்கழகம் மிகவும் புகழ்பெற்றது.  என்னிடம் படித்த பல மாணவர்கள் கிண்டி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தனர்.

1996-97ம் கல்வியாண்டு என்று நினைக்கிறேன்.  ஒரு நாள் காலையில் கிண்டி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த எனது முன்னாள் மாணவி விஜி அழுதுகொண்டே வந்தாள். 
என் தோழியைக் காப்பாற்றுங்கள்! என் தோழியைக் காப்பாற்றுங்கள்!’ என்று கூறி அழுதாள்.  ‘என்னம்மா, என்ன விஷயம்?’ என்றேன்.

‘என் தோழி தற்கொலைக்கு முயற்சிக்கிறாள்.  அவளை எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்றாள்.

அவளது பெற்றோரிடம் சொல்வதுதானே?’ என்றேன்.  ‘அவளது பெற்றோர் இருவரும் வெளியூரொன்றில் வேலை பார்க்கின்றனர்.  இவள் பாட்டியுடன் தங்கி சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறாள்’ என்றாள்.  ‘அவள் உனக்கு உறவினர் என்றால் உன் அம்மா, அப்பாவிடம் கூற வேண்டியதுதானே?’ என்றேன்.

‘அம்மா, அப்பாவிடம் கூறினேன்.  அவர்கள் ‘நீயெல்லாம் இதில் தலையிடாதே.  உன் வேலையை மட்டும் பார்’ என்று கூறிவிட்டனர்’ என்று கூறி அழுதாள்.

‘இன்று கல்லூரி இருக்கிறதுதானே?  கல்லூரிக்குச் செல்.  மாலையில் அவளை என்னிடம் அழைத்து வா.  நம்மால் முடிந்தளவு உதவுவோம்’ என்றேன்.

மாலை வேளையில் அவள் தோழியுடன் என்னைச் சந்தித்தாள்.  ‘என்னம்மா? உனக்கு என்ன பிரச்சனை? சொல்’ என்றேன்.

‘நான் பாட்டியுடன் தங்கியிருக்கிறேன்.  தினமும் பாடங்களை ஒழுங்காகப் படிப்பதில்லை.  தேர்வுக்கு முந்தைய நாள் தான் எல்லாவற்றையும் முயற்சித்தேன்.  இரவு சரியாக தூங்கவில்லை.  தேர்வு எழுதும் போது பெரும்பாலும் மறந்துவிட்டது.  கண்டிப்பாக தேர்வில் தோற்றுவிடுவேன்.  எல்லோரும் என்னைத் திட்டுவர். பயமாக இருக்கிறது.  அதனால் சாக விரும்புகிறேன்’ என்றாள்.

நான் பல விதமான நிகழ்ச்சிகளைக் கூறி, ‘உன்னை விட பலர் இன்னும் மோசமான சூழ்நிலைகளை அனுபவித்திருக்கின்றனர்.  அவர்களை ஒப்பிடும்போது உன் பிரச்சனை தூசி மாதிரி.  பிற்காலத்தில் அவர்கள் எவ்வளவோ சாதித்துள்ளனர்.  இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.  நாம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறி எனது முன்னாள் மாணவியிடம், ‘அவள் பெற்றோரை உடனடியாக சென்னை வரச்சொல்லி செய்தி அனுப்பு.  வந்தவுடன் கூடிய விரைவில் என்னை சந்திக்கச் சொல்.  அவர்களிடம் பேச விரும்புகிறேன்’ என்றேன்.

சில நாட்களில் பெற்றோருடன் என்னைச் சந்தித்தனர்.  நான் அவர்களிடம், ‘அவள் மனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  உடனே ஒரு மனநல நிபுணரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை கேட்டு முடிவு செய்யுங்கள்‘ என்று கூறி அனுப்பினேன்.

மூன்று நாட்களில் மறுபடியும் என்னைச் சந்தித்தனர்.  ‘நீங்கள் கூறியபடியே மனநல நிபுணரைச் சந்தித்தோம். அவர் கூறியபடி மாத்திரைகளை எடுத்துக் கொண்டோம்.  கொஞ்சமும் முன்னேற்றமில்லை.  நீங்கள் தான் எப்படியாவது எங்களுக்கு உதவ வேண்டும்’ என்றனர்.  ‘நான் என்ன செய்ய முடியும்.  நான் மருத்துவரல்ல’ என்றேன்.  ‘உங்கள் மீது எங்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது.  உங்களால் எங்கள் மகளை கண்டிப்பாக குணப்படுத்த முடியும்‘ என்றார்கள்.

‘என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா! கண்டிப்பாக உங்கள் மகளை காப்பாற்றுகிறேன்‘ என்றேன்.  ‘ஆனால் ஒரு மாதம் தினமும் இரண்டு மணி நேரம் எனது அலுவலகத்தில் சிகிச்சை நடைபெறும்.  சம்மதமா?’ என்றேன்.  அவர்களும் சம்மதித்தனர்.

‘அவர்களிடம் உங்கள் மகளின் பிரச்சனை என்ன தெரியுமா?

1. மனவலிமை குறைவு
2. தன்னம்பிக்கையின்மை. 

தன்னம்பிக்கையை மாத்திரைகளால் அதிகப்படுத்த முடியாது.  ஆதலால் சில வாரங்கள் நானே நேரடிப் பயிற்சி அளிக்க வேண்டும்.  உடல் வலிமை, மன வலிமையை அதிகப் படுத்த நான் கூறுவதைச் செய்வீர்களா’ என்றேன்.  ‘சொல்லுங்கள்.  கண்டிப்பாகச் செய்கிறோம்’ என்றனர்.

‘குறைந்தது மூன்று வேளை சத்துள்ள தேவையான உணவு, தினமும் 2-3 லிட்டர் தண்ணீர்.  அனைத்து சுவை காய்கறிகள், பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  பாகற்காய், சுண்டைக்காய் வாரம் இருவேளையாவது சேர்க்க வேண்டும்.  வாரத்திற்கு ஒருமுறை ஒரு குவளை வேப்பிலைச் சாறு கொடுங்கள்.  தினமும் 9 மணி நேரம் தூக்கம் அவசியம்.  தினமும் அரை மணி முதல் 3/4 மணிநேரம் ஓடியாடி விளையாட வேண்டும்.  சில யோகாசனங்கள் அவளுக்கு சொல்லித் தருகிறேன். 

அவற்றையும் பயிற்சி செய்யட்டும்.  மேற்கூறியவற்றை தினமும் ஒழுங்காகச் செயல்படுத்துங்கள்.  தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் பயிற்சியை தினமும் நான் அளிக்கிறேன்’ என்றேன்.  அவர்கள் சம்மதித்தனர்.

சீக்கிரம் ஒரு நல்ல நாளில் பயிற்சிகளை ஆரம்பித்தேன்.  தினமும் இரண்டு மணி நேரங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் பயிற்சிகளை அளித்தேன்.  அந்தக் காலத்தில் அமரர் மனநல மருத்துவர் வாசு கண்ணன் அவர்கள் எழுதி, நர்மதா பதிப்பகம் வெளியிட்ட ‘உள்மன ஆற்றல்கள்‘ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன்.  அவர் ஒருவரது தேக காந்த சக்தியை (அல்லது ஆன்மீக சக்தியை) அதிகரித்து, அதன் மூலம் மன நோயாளிகளை குணப்படுத்தும் முறையை பற்றி விளக்கியிருந்தார்.  அந்த காலத்தில் (1996 – 1998) இயற்கையிலிருந்து ஆன்மீக சக்தியை நேரடியாகப் பெறும் சக்தி எனக்கிருந்தது.  அதனால் தான், ‘உங்களால் குணப்படுத்த முடியும்’ என்று கூறியவுடன் நானும் ஒத்துக் கொண்டேன்.  மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை ஏற்கனவே தொடு சிகிச்சை மூலம் குணப்படுத்தியிருந்தேன்.  ஆனால் அவள் உடலிலிருந்து கெட்ட  சக்திகளின் அதிர்வுகள் என்னைத் தாக்கி கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கடுமையாக செயலிழக்கச் செய்தன.  ஆதலால் தொடு சிகிச்சையை கூடிய வரை தவிர்க்க வேண்டுமென  முடிவு செய்தேன்.

இயற்கையிலிருந்து பெற்ற ஆன்மீக சக்தியை பழங்கள், பிஸ்கட்டுகளில் செலுத்தி அவளை அடிக்கடி உண்ணச் செய்தேன் (கிருஷ்ணன், இயேசு, பாபா போன்றோர் தியானத்தின் மூலம் அபரிதமான ஆன்மீக சக்தியைப் பெற்று நோயுற்றவர்களை இப்படித்தான் குணப்படுத்தினர்.  ஆன்மீக ஆற்றலே பல நோய்களுக்கும் அருமருந்து).  சரியாக முப்பது நாளில் அவள் முழுவதும் குணமடைந்தாள்.  அவளிடம், ‘நீ எப்படி இருக்கிறாயென்ற தகவலை எனக்கு அடிக்கடி தெரியப்படுத்து’ என்றேன்.  அந்த வருடத்தில் அவள் மீண்டும் மூன்று அல்லது நான்கு முறை என்னைச்  சந்தித்து அவள் உடல் நலத்தை பற்றிய தகவலை கூறினாளென நினைக்கிறேன்.  மிகவும் நல்ல முன்னேற்றம்.  பிறகு வரவில்லை.  அடுத்த பருவத்தில் தேர்வெழுதி அடுத்த வருடம் நுண்ணறிவியல் பட்டப் படிப்பில் சேர்ந்து மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றாள்.

சில வருடங்கள் கடந்தன.  விஜி தனது திருமண அழைப்பிதழுடன் என்னைச் சந்தித்தாள்.  திருமணத்தில் கலந்து கொண்டேன்.  என் கண்கள்  விஜியின் தோழியை தேடின.  அவள் அகப்படவில்லை.  விஜியின் பெற்றோரிடம், ‘ விஜியின் தோழியைப் பார்க்க வேண்டும்.  அழைத்து வாருங்கள்‘ என்றேன்.  சில நிமிடங்களில் அவள் அழைத்து வரப்பட்டாள்.  ‘சார், எப்படி இருக்கீங்க?’  புன்னகையுடன் கேட்டுக் கொண்டே ஓடி அருகில் வந்தாள்.  நன்றாக வளர்ந்திருந்தாள்.  முகத்தின் வசீகரம் அதிகரித்திருந்தது.  ‘நான் நன்றாக இருக்கிறேன்.  நீ எப்படி இருக்கிறாய்?  பல வருடங்களாக உன்னைக் காண முடியவில்லையே?’ என்றேன்.  ‘நான் முதுநிலை நுண்ணறிவியல் நன்றாக முடித்து வேலையில் சேர்ந்துள்ளேன்.  நன்றாகச் சம்பாதிக்கிறேன்.  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்‘ என்றாள். எனக்கும் மிக்க மகிழ்ச்சி.  அவளிடம் விடை பெற்று திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.  எனக்குத் தெரிந்தவரை அவள் மறுபடியும் அப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கவில்லை.  இப்போது அந்த பெண் சென்னை போரூரில் தன் கணவன் மற்றம் குழந்தைகளுடன் மிகவும்  சிறப்பாக வாழ்ந்து வருகிறாள்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.