Click ▶ for audio
தன்னம்பிக்கையை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது எனது நண்பனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் என்னை ஆட்கொண்டன. அதைப் பற்றி பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
1982-83ம் கல்வியாண்டு, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல் துறையில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். முதல் செய்முறை பயிற்சி வகுப்பில் எனது நண்பனுக்கு கிடைத்ததோ பரப்பு இழுவிசை (Surface Tension). குறிப்பிட்ட நேரத்தில் செய்முறை பயிற்சியை திறம்பட முடித்து, கணக்கீட்டை திறம்படச் செய்து ஆசிரியருடைய மேஜையில் வைத்துவிட்டுச் சென்றான் எனது நண்பன்.
அடுத்த பயிற்சி வகுப்பின் போது, ஏற்கனவே முந்தைய நாள் செய்து முடித்த செய்முறை பயிற்சியின் கணக்கீட்டு தாள் நண்பனிடம் கொடுக்கப்பட்டது. முதல் பக்கத்தை பார்த்தான் நண்பன். நாற்பதிற்கு 37 மதிப்பெண் கொடுக்கப்பட்டிருந்தது. மதிப்பெண்களைப் பற்றி அவன் எப்பொழுதுமே கவலைப்படுவதில்லை. சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது தான் அவன் இலக்கு. அடுத்த பக்கத்தை புரட்டினான். அங்கே சிவப்பு மையால் ஒரு வட்டம் போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் நண்பனுக்கு மிகுந்த கோபம். ‘நான் செய்ததில் தவறேற்பட்டுள்ளதா?’ என்ற எண்ணம் மனதில் உதித்தது. ஏனெனில் அவ்வளவு தன்னம்பிக்கை. செய்முறை பயிற்சி தாளை எடுத்துக் கொண்டு பேராசிரியர் திரு. ராமசேகரன் அவர்களிடம் சென்றான். ‘சார். இதில் என்ன தவறு? இப்படி வட்டமிட்டுருக்கிறீர்கள்’ என்றான். ‘திருகு அளவியில் (Screw gauge) இவ்வளவு பிழை வராது 0.96 மி.மீ பிழை வந்துள்ளது. அது கண்டிப்பாக 0.04 மி.மீ ஆக இருந்திருக்கும். அதை நீ தவறாக கணக்கிட்டிருக்கிறாய்’ என்றார் அவர்.
‘இல்லை ஐயா நான் செய்தது சரிதான்’ என்றான் நண்பன்.
‘இல்லை நீ செய்தது தவறு’ என்றார் அவர்.
இப்படியே விவாதங்கள் சில நிமிடங்கள் நீடித்தது. அனைத்து மாணவர்களும் பேராசிரியரையும் நண்பனையும் வேடிக்கைப் பார்த்தனர். பேராசிரியருக்கு வந்ததோ கடுங்கோபம். ‘நேற்று வந்த பையன் நீ, நான் 15 வருடங்களுக்கு மேலாக அனுபவம் உள்ள பேராசிரியர். தவறு செய்துவிட்டு என்னிடம் இப்படி விவாதிக்கிறாயே வெளியே போ!’ என்றார் கோபத்துடன்.
நண்பனும் ஆய்வகத்தின் ஒரு வாசல் வழியாக வெளியே சென்று இன்னொரு வாசல் வழியாக இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் நுழைந்தான். ஆய்வக உதவியாளரிடம், ‘பாலு சார் (உதவியாளர் பெயர் திரு. பாலசுப்பிரமணியம்), எல்லா திருகு அளவிகளையும் தயவு செய்து வெளியே எடுங்கள்’ என்றான். உதவியாளரும் அனைத்து திருகு அளவிகளையும் வெளியே எடுத்து மேஜையில் வைத்தார். நண்பனோ, அவன் அளவீடு எடுத்த அளவியை கையிலெடுத்துக் கொண்டு பேராசிரியர் திரு. இராமசேகரன் அவர்களை நோக்கி நடந்தான். அவரிடம் திருகு அளவியைக் கொடுத்து, ‘சார், தயவு செய்து திருகு அளவியில் பிழை எவ்வளவு என்று சரி பாருங்கள்’ என்றான். பேராசிரியரோ பிழையைச் சரிபார்த்தார். பிழை சரியாக 0.96 மி.மீ காட்டியது. ஆக, நண்பன் செய்தது மிகவும் சரி. இப்போது பேராசிரியருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நண்பனிடம், ‘இப்படிப்பட்ட திருகு அளவியை வைத்து செய்முறை பயிற்சிகள் செய்யக் கூடாது’ என்று கூறினார். ஆனால் அந்த திருகு அளவியை நண்பனிடம் கொடுத்ததே ஆய்வக உதவியாளர்தானே. அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் நண்பன் ஆய்வுகளை மிகச் செம்மையாகச் செய்து அட்டவணைப்படுத்தினான். எல்லா முடிவுகளும் மிகச் சிறப்பாக, துல்லியமாக இருந்தன. பேராசிரியர்கள் வியந்தனர்.
அதன் பிறகு பேராசிரியர் திரு. இராமசேகரன் அவர்கள் தான் செல்லும் அனைத்து வகுப்புகளுக்கும் நண்பனின் ஆய்வுக் குறிப்புகளையும், முடிவுகளையும் எடுத்துச் சென்று மாணவர்களிடம் காண்பித்து, ‘இதைப் பாருங்கள், ஒரு முதலாண்டு மாணவன், சின்ன பையன் எவ்வளவு அருமையாகச் செய்துள்ளான். நீங்களும் செய்கிறீர்களே! என்று நண்பனை மிகவும் புகழ ஆரம்பித்தார். அடிக்கடி இது நடந்து கொண்டிருந்தது. ஆம் முதலில் மோதல் பின்னர் காதலாகக் கனிந்தது. இயற்பியல், வேதியியல், கணிதம் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்கள் மத்தியில் நண்பன் மிகவும் பிரபலமானான்.
சில மாதங்களில் கல்லூரியில் முதல் பருவத் தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவுகள் வெளிவந்தன. நண்பனின் மதிப்பெண்கள் 83 சதவிகிதம் (கல்லூரியில் முதல் மதிப்பெண்). அதற்கடுத்த மதிப்பெண் 65 சதவிகிதம். கல்லூரி முதல்வர் திரு. கனக சபாபதி அவர்கள் நண்பனை அறைக்கழைத்துப் பாராட்டினார். மேலும், ‘உன்னால் இந்திய ஆட்சிப் பணித் தேர்வை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடு’ என்றார். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானான் நண்பன். இதில் சிறப்பு என்னவென்றால் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற நண்பனும், இரண்டாம் மதிப்பெண் பெற்ற நண்பனும் 12ம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்கள். கல்லூரியிலோ ஆங்கில வழிக் கல்வி. முதலில் மிகவும் சிரமப்பட்டனர்.
நண்பனின் இந்த அபாரமான தன்னம்பிக்கைக்கு காரணம் யார்? இருவர்.
- 1. நண்பன்.
- 2. அவனுக்கு 11, 12ம் வகுப்புகளில் இயற்பியல் பாடம் போதித்த ஆசிரியர் திரு. ஆசீர் தவமணி ராஜகுமார் அவர்கள்.
ஆசிரியர் மிகவும் நேர்த்தியாக செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தினார். வேதியியல் ஆசரியர் திரு. சுவிஷேஷ முத்து அவர்களும் மிகச் சிறப்பாக வேதியியல் ஆய்வகத்தில் பயிற்சியளித்தார். பொதுவாக இயற்பியல் செய்முறை பயிற்சி என்றால் ஒரு உபகரணத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உபயோகிப்பது வழக்கம். ஒரு மாணவன் ஒழுங்காகச் செய்ததை பெரும்பாலும் மற்ற மாணவர்கள் பார்த்தெழுதி சமாளித்துவிடுவர். பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் செய்முறைப் பயிற்சியில் மாணவர்களுக்கு முழு மதிப்பெண்களை கொடுத்துவிடுவதால் மாணவர்கள் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நண்பனோ இயற்பியல் ஆய்வகத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து உபகரணங்களையும் கையாண்டு அனைத்து பயிற்சிகளையும் அவனே முடிப்பது வழக்கம். மற்ற மாணவர்கள் செய்ய விரும்பினால் அவர்களுக்கு வழிவிட்டு, அவர்களிடம் பார்த்தெழுதாமல் அவர்கள் செய்து முடித்தவுடன் தானே செய்து கணக்கீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். கடினமான வேலைகளை முயற்சி செய்து மிகவும் நேர்த்தியாக செய்து முடித்ததால் அவனது தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்தது. கல்லூரியில் தன்னம்பிக்கையைச் சோதிப்பதற்காக ஒரு தேர்வு நடத்தினர். அதில் நண்பன் பெற்ற மதிப்பெண்கள் நூறு சதவிகிதம். ஆம்! செய்முறை பயிற்சிகள் மாணவர்களை செம்மையாக செய்யத் தூண்டினால், செய்ய வைத்தால் மாணவர்களின் தன்னம்பிக்கை மிகவும் அதிகரிக்கும்.
இன்றைய நிலையில் சில பள்ளிகளில்தான் செய்முறைப் பயிற்சிகளை ஒழுங்காக பயிற்சி செய்விக்கின்றனர். பல பள்ளிகளில் ஆசிரியர்களும், நிர்வாகமும் சேர்ந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண்களை பெற்றுத் தரும் நிலைமையே நடைமுறையில் உள்ளது. மாறாக மாணவனின் தகுதியை மேம்படுத்தி, தகுதிக்கு மதிப்பளித்தால் பிற்காலத்தே தன்னம்பிக்கை மிகுந்த, மிகச் சிறந்த சமுதாயம் உருவாக உறுதுணையாக அமையும்.
எனது முதுநிலை இயற்பியல் ஆசிரியப் பணியின் போது முதல் வருடம் ஏற்பட்ட அனுபவங்களில் ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 1988-89ம் கல்வியாண்டு. அரசாங்கம் 12ம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்விற்கு அட்டவணை அறிவித்தது. தேர்விற்கு முந்தைய நாள் ஒரு பெண்ணின் அப்பா என்னை சந்தித்தார். என்னிடம், ‘சார், நீங்கள் நினைத்தால் என் பெண்ணிற்கு நாளைய தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்றுத் தரலாம்’ என்றார். நானோ, ‘நாளை தேர்வு ஆரம்பித்துவிட்டால், தங்கள் பெண்ணிற்கு நான் உதவ முடியாது. வேண்டுமானால் இன்று ஆய்வகத்திற்கு அனுப்புங்கள். எல்லாவித சந்தேகங்களையும் அவள் தீர்த்துக் கொள்ளட்டும்’ என்றேன். அவரும் அனுப்பினார். அவளுடைய அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் செய்முறைத் தேர்வுகள் தொடங்கின. இன்னொரு பள்ளியிலிருந்து தேர்வு நடத்த ஆசிரியர் வந்திருந்தார். நான் அவரிடம், ‘எனது மாணவர்கள் அனைவருக்கும் தகுந்த பயிற்சிகள் அளித்துவிட்டேன். அவர்கள் தகுதியைப் பொறுத்து நீங்கள் மதிப்பெண் கொடுத்தால் போதும்‘ என்று கூறினேன். சிறிது நேரத்தில் பள்ளி முதல்வர் ஆய்வகத்தினுள் நுழைந்தார். தேர்வு அதிகாரியிடம் சென்று ஏதோ பேசினார். அவர் என்னை சுட்டி, ‘உங்கள் ஆசிரியரிடம் பேசுங்கள்’ என்று அனுப்பினார். முதல்வர் என்னிடம் வந்து, ‘சார், நம் மாணவர்கள். கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்’ என்றார். நானோ, ‘மாணவர்களுக்குத் தகுந்த பயிற்சிகள் அளித்துவிட்டேன். எந்த மாணவனுக்கும் காரணமில்லாமல் ஒரு மதிப்பெண் கூட குறைக்கவும் மாட்டேன். தகுதியை விட ஒரு மதிப்பெண்கூட அதிகமாக கொடுக்கவும் மாட்டேன்‘ என்றேன் அமைதியாக. அவர் தலை தாழ்த்திக் கொண்டு வெளியேறினார். அவருக்கும் நான் எப்படிப்பட்ட பயிற்சிகள் அளித்தேனென்று நன்றாகவே தெரியும். ஆம்! ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களும் சிறந்த, நேர்மையான முறையில் பயிற்சி கொடுத்து மாணவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதில் கவனம் செலுத்தினால் நாட்டிற்கு நல்லது. நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Nice post. Appreciate the honesty and fairness explained here
Thank you, Sir!