உன்னத நண்பன்

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

இளைஞர்களின் நிலை

இளைஞர்களே! நீங்கள் நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றீர்.  நண்பர்கள், உங்கள் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர்.  அனைத்து தீய பழக்க வழக்கங்களுக்கும் காரணம் கூடாநட்பே.

நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

என்றான் வள்ளுவன்.

ஆம்.  நீரினுடைய வண்ணம், தன்மை அது ஓடும் நிலத்தைப் பொறுத்தது.  அதைப்போலவே உங்களின் அறிவு, குணம், ஒழுக்கம் நண்பர்களின் சேர்க்கையைப் பொருத்தே அமையும் என்பதாம்.

பெரும்பான்மையான இளைஞர்கள் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே பாதிக்கப்படுகின்றீர்.  காரணம், நட்பு என்றால் என்ன? நல்ல நண்பர்களைத் தேர்வு செய்தல் எப்படி? என்று அறிவது கடினம்.  யார் உம்மை எப்போதும் புகழ்வானோ அவனையே உற்ற நண்பராக நினைக்கின்றீர்.  உங்கள் குற்றத்தை சுட்டும் யாரையும் பெரும்பாலும் நீவிர் விரும்புவதில்லை. 

வீட்டில் பெற்றோர்களோ அல்லது மற்றவர்களோ சுட்டினால் கூட பெரும்பாலோர், ‘எனக்கு எல்லாம் தெரியும்.  நீங்கள் கூறத் தேவையில்லை’ என்று கோபப்படுகின்றீர்.  உங்கள் மனம் போன போக்கில் கால்களும் போகின்றன.  முடிவுதான் உங்களுக்குத் தெரியுமே! ஆதலால் உண்மையான நட்பைப் பற்றியும், சிறந்த நண்பர்களை எப்படி அடைவது? என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

நட்பிற்கு இலக்கணம்

போரில் தோல்வியுற்ற கோப்பெருஞ் சோழன் உண்ணாது உயிர்துறக்க விரும்பி வடக்கிருக்கையில், பாண்டி நாட்டைச் சார்ந்த  நண்பர் பிசிராந்தையார் அருகிருந்தால் நன்றாக இருக்குமேயென்று நினைத்தான்.  அங்கே தொலைவில் பிசிராந்தையார் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.  அவர்களின் நட்பின் சிறப்புதான் என்னே!

கிருஷ்ணனுக்கும் குசேலனுக்கும் உள்ள நட்புதான் உங்களுக்குத் தெரியுமே!

பல்லாண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் அபூர்வமான, ஆரோக்கியத்தை, ஆயுளை நீட்டிக்கும் நெல்லிக்கனியினை தன் நண்பரான ஒளவையார் நீடித்து வாழட்டுமென்று அவருக்குக் கொடுத்து மகிழ்ந்தானே அதியமான்.  அவனின் நட்பின் ஆழத்தை அளவிட முடியுமா?

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை சுமார் ஒன்பது மணியளவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டிருந்த என் மாணவி ஒருத்தி அழுதுகொண்டே எனது வீட்டிற்கு வந்தாள்.  ‘இன்று நீ கல்லூரிக்குச் சென்றாயா? இங்கு நீ வந்தது உன் அன்னை, தந்தையருக்குத் தெரியுமா?’ என்று வினவினேன்.  ‘இங்கு வந்தது அவர்களுக்குத் தெரியாது.  கல்லூரிக்குச் செல்கிறேனென்று கூறித் தங்களைக் காண வந்தேன்.  ஏனெனில், தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்த என் தோழியைக் காப்பாற்றுமாறு என் பெற்றோரிடம் மன்றாடினேன்.  அவர்களோ, ‘உன் வேலையைப் பார்.  இந்தப் பிரச்சனையெல்லாம் உனக்குத் தேவையில்லை’ என்று கூறி என்னைத் திட்டினர்.  நீங்கள் தான் என் தோழியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்’ என்று கூறித் தன் தோழியைக் காப்பாற்ற பெரும்  முயற்சி எடுத்துக் கொண்டாள்.  முடிவில் வெற்றியும் பெற்றாள்.  தன் தோழியைக் காப்பாற்றிய அவளது நட்பைப் பாராட்டியே ஆக வேண்டும்.

கூடா நட்பு

கூடாநட்பால் பாதிக்கப்பட்ட பலரை உங்களுக்குத் தெரியும்.  ஏன், நான் கூட பாதிக்கப்பட்டிருக்கின்றேன்.  அவற்றைக் கூறி நம்முடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

உள்ளங்களின்  சங்கமம்

நட்புக்கு  வயது, வரம்பு கிடையாது.  தந்தை-மகன், தாய்-மகள், தாத்தா-பேரன் என்ற பாகுபாடு கிடையாது.  ஆண்-பெண் என்ற பேதம் கிடையாது.  மேல்வர்க்கம்-கீழ்வர்க்கம் என்ற பிரிவினை கிடையாது.  ‘நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு‘ என்று வள்ளுவன் கூறுவது போல் நட்பு  உள்ளத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டும்.  உணர்வு  பூர்வமாக இருக்க வேண்டும்.  ‘ஒத்த இரு உள்ளங்களின்  சங்கமமே மிகச் சிறந்த நட்பு‘ என்று கூறுவேன்.  இவர்களே ஒருவருக்காக மற்றவர்  தங்களைத் தியாகம் செய்வர்.

இன்றைய நிலை

இன்று நாம் யாரிடமாவது உதவியோ, ஆலோசனையோ கேட்டால் பெரும்பாலோர் அதில் அவர்களுக்கு என்ன லாபம் என்பதிலேயே குறியாக உள்ளனர்.  நமக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு நன்மை நடக்கும் வழியிலேயே மற்றவர்கட்கு வழிகாட்டுகின்றனர்.

இதை பகிரும் போது மகாபாரதக் கதையொன்று நினைவுக்கு வருகின்றது.  ஒரு பிராமணனுடைய சிறு வயது பையன் இறந்துவிட்டான்.  புதைப்பதற்காக காட்டிற்கு எடுத்துச் சென்றனர்.  அப்போது அங்கே ஒரு நரி வந்தது.  நரி அவர்களிடம், ‘நீங்கள் மிகவும் நல்லவர்கள், இப்போது புதைக்காதீர்கள்.  மாலைவரை காத்திருங்கள்.  கடவுள் தோன்றி உங்கள் மகனுக்கு திரும்பவும் உயிர் கொடுக்கலாம்’ என்றது.  நரி அருகிலுள்ள புதருக்குள் சென்றது.  அவர்களும்  புதைப்பதை நிறுத்தி விட்டு அருகிலுள்ள மரநிழலை நாடினர்.

அப்போது மரத்திலிருந்த பெரிய கழுகொன்று அவர்களிடம் வந்தது.  ‘அந்த நரி சொல்வதை நம்பாதீர்கள்.  கடவுளாவது இங்கு வந்து உயிர்கொடுப்பதாவது.  அது நடக்கிற காரியமா?  ஆதலால் புதைத்துவிட்டு உங்கள் வேலையைத் தொடருங்கள்’ என்றது.  அவர்களும்  புதைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.  கழுகு மரத்தில் சென்று அமர்ந்தது.

மறுபடியும் நரி வந்தது.  ‘அந்தக் கழுகு சொல்வதை நம்பாதீர்கள்.  கடவுள் வந்தாலும் வரலாம்.  இன்னும் கொஞ்சம் நேரந்தானே.  தாமதியுங்கள்’ என்று கூற அவர்களும் புதைக்கும் முயற்சியைக் கைவிட்டனர்.  இப்படியே பலமுறை நடந்தது.  அதைப் பார்த்து இரக்கப்பட்ட கடவுள் உண்மையிலேயே தோன்றி பையனுக்கு உயிர்கொடுத்துவிட்டார்.  கழுகும்,  நரியும்  ஓடி மறைந்தன.

நரி, கழுகின் மேற்கண்ட ஆலோசனைகட்கு காரணம் உங்களுக்குப் புரிந்ததா?  கழுகுக்கு இரவைவிட பகலில் நன்றாகத் தெரியும்.  ஆனால் நரி பகலைவிட இரவில் நன்றாகப் பார்க்க முடியும்.  பகலில் புதைத்தால் கழுகு அதிகமாகச் சாப்பிடலாம்.  ஆதலால் பகலில் புதைக்கச் சொன்னது.  மாலையில் புதைத்தாலோ நரி இரவில்  நன்றாகச் சாப்பிடலாம் கழுகை விரட்டிவிடலாம்.  ஆம், நரி, கழுகு இரண்டுமே தமக்கு சாதகமான செயலை செய்யச் சொல்லி வற்புறுத்தின.  ஆதலால், நீங்கள் யாரை உதவிக்காக அணுகினாலும் ஆழமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

நண்பர்களைத் தேர்தல்

உங்களுடைய இயல்பான வாழ்க்கைக்கு வருவோம்.  ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்துகிறார்.  வீடு திரும்பியவுடன் படித்து முடித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றீர்.

ஆனால், வீடு திரும்பியவுடன், ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று தாமதப்படுத்துகின்றீர்.  பசியோடு வீடு திரும்புகின்றீர்.  அம்மா சாதம் பரிமாறுகின்றாள்.  ஆனால் தொலைக்காட்சி முன் அமர்ந்து சற்று நேரத்திற்குப்பின் சாப்பிடுகிறேன் என்று அதனையும் தாமதப்படுத்துகின்றீர்.

இப்படி ஒவ்வொரு செயலையும் தாமதப்படுத்தும் நீவிர், உம்முடைய ஆடை உடலிலிருந்து நழுவும் போது என்ன செய்கின்றீர்?  சற்றே யோசித்துப் பாருங்கள்.  ‘போனால் போகட்டும்  சற்று நேரத்திற்குப் பின்  பற்றிக் கொள்கிறேன்’ என்று நினைப்பீரா?  அல்லது உடனே ஆடையை இறுகப் பற்றிக் கொள்வீரா?  மின்னல் வேகத்தில் ஆடையை இறுகப் பற்றிக் கொள்வீர்.  அப்படித்தானே! ஆம்.  உடலால் செய்யப்படும் மிகவும்  விரைவான செயல் இதுவே.

அதைப் போலவே உமது நண்பன் துயரப்படும் போது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், உடனே உதவ வேண்டும்.  இதுவே சிறந்த நட்பின் அடையாளம்.  அப்படி உமக்கு உதவுபவரையே உமது நண்பனாகக் கொள்ள வேண்டும்.

இதையே வள்ளுவன், 

உடுக்கை இழந்தவன்  கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’ என்று கூறினான்.

ஆம், இன்பத்தைவிட துன்பமே சிறந்த  நண்பர்களை உமக்கு அடையாளம் காட்டும்.

மேலும், நட்டல் விளையாடுவதற்காகவோ, சிரித்து மகிழ்வதற்காகவோ மட்டுமன்று.  உமது நண்பன் தவறு செய்தால் அவற்றை எடுத்துக் கூறி அவனைத் திருத்துவதேயாகும்.  இதையே வள்ளுவன்,

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

என்று கூறினான்

சிறந்த நண்பன்

நீவிர் நல்ல காரியங்கள் செய்யும் போது உம்மை எல்லோர் முன்னிலையிலும் புகழ்பவனையும், கெட்ட காரியங்கள் செய்யும் போது உம்மைத் தனியே அழைத்து உம் குற்றத்தை எடுத்துக் கூறி, உம்மை நேர்வழியில் செலுத்துபவனையும், நீவிர் துன்பப்படும் போது நீவிர் அழையாமலேயே உடனடியாக உமக்கு உதவி அத்துன்பத்திலிருந்து மீட்பவரையும் உமது நண்பனாகக் கொள்ள வேண்டும்.  நீங்களும் சிறந்த நண்பனாக விரும்பினால், இப்படித்தான் செயல்பட வேண்டும்.  ஆம்,

‘உனக்குப் பிறர் என்ன செய்ய விரும்புகிறாயோ அதையே நீயும் பிறருக்குச் செய்’

என்றார் இயேசு பிரான்.

ஆழ்மனமே அரிய நண்பன்!

நல்ல நண்பர்கள் அமைவது உலகில் மிகவும் அரிதாகவே உள்ளது.  அப்படியே அமைந்தாலும் உம்மை நிழல்போல் அவனால் பின் தொடர முடியாது.  உம்முடைய நன்மைக்கும், தீமைக்கும் அவன் பொறுப்பேற்க முடியாது.  உமது மிகச் சிறந்த நண்பனை இப்போது அடையாளம் காட்டுகிறேன்.  இறுகப் பற்றிக் கொள்வீர்.

உடம்பிற்கு சரியில்லை.  மருத்துவரிடம் செல்கின்றீர்.  ‘மருத்துவரோ குளிர்பானம் சாப்பிடக் கூடாது’ என்று கூறுகின்றார்.  வழியில் குளிர் பானம் விற்பனையாகின்றது.  கால்கள் அக்கடையை நோக்கிச் செல்கின்றது.  காரணம், நாவின் ஆசையை அடக்க முடியவில்லை.  ஆனால் அப்போது உமது ஆழ்மனம், ‘டேய், மருத்துவர் நேற்று குளிர்பானம் சாப்பிடக் கூடாதென்று கூறினார்’ என்று கூறுகிறது.  ஆம்! ஆழ்மனமே உமக்கு சிறந்த நண்பன்.  ஏனென்றால் எப்போதும் உம்முடன் இருப்பவன்.  அந்த  நண்பனின் வார்த்தையை ஏற்றுக் கொண்டால் மருத்துவச் செலவு மிச்சமாகும்.  ஆரோக்கியம் சீராகும்.  இப்படியே பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

உள்மனமே உன்னத நண்பன்

ஆழ்மன வழி காட்டுதல்கள் எப்பொழுதும் சரியாக இருக்குமென்று கூறமுடியாது.  புறமனதில் எதை திரும்ப திரும்ப கொடுக்கிறோமோ அதைத்தான் ஆழ்மனம் திரும்பச் சொல்கிறது.  ஆனால் உள்மன வழிகாட்டுதல்கள் எப்போதும் சரியாகவே இருக்கும்.  அந்த உள்மன வழிகாட்டுதலை  பெறுவதெப்படி?

தினமும் மூன்று வேலை தேவையான அளவு சத்துள்ள உணவு சாப்பிடுங்கள்.  தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள்.  வாலிப வயதில் தினமும் கண்டிப்பாக குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியம்.  குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அதிக தூக்கம் தேவை.  தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். 20 முதல் 30 நிமிடங்கள் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.  தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை ரசியுங்கள்.  நேர்மையாக சம்பாதியுங்கள்.  சம்பாதித்த பணத்தில் குறைந்தது 10 சதவிகிதமாவது சமூக பணிக்கு செலவிடுங்கள்.  நல்லவர்களுக்கு முடிந்த வரை உதவுங்கள்.  இச்செயல்கள் உங்கள் உடல்நிலையை மேம்படுத்தும், மனதை வளப்படுத்தும்.  மேலும்,

‘இறைவா! எனக்கு எது நல்லதென்று உனக்குத் தெரியும், அதையே நான் அடைந்திட செய்’

என்று தீவிரமாக சிந்தியுங்கள். 

இவற்றை நீங்கள் செவ்வனே செய்யும் போது நல்லவர்கள் உங்களை நோக்கி கவரப்படுவார்கள்.  கெட்டவர்கள் உங்களை விட்டு விலகிவிடுவார்கள்.  உங்கள் உள் மனம் மிகச் சிறப்பாக வழிகாட்டுவதை நீங்கள் உணர்வீர்கள்.  ஆம்! உங்களுக்கு மிகச் சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.