வாழ்க்கை

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

இளைஞர்களே! நவீன பாரதம் படைத்திடும் சிற்பிகளே! விழித்தெழுங்கள்! அன்னை இந்தியாவை உயர்த்திட அலைகடலெனத் திரண்டெழுங்கள்.  வருங்கால இந்தியா வையத்தை வழிநடத்த வகை செய்யுங்கள்.

நீங்கள் இப்பூவுலகில் பிறந்தது ஏன்? உங்கள்  உடலில்  உயிரோட்டம் இருப்பது ஏன்? மூச்சுக்காற்று ஓடுவது ஏன்?  நீங்கள்  நீங்காப் புகழ்பெற்று வாழ்ந்திடத்தானே! ஆம்?  எமக்குத் தெரியும்.  நீங்கள் புகழ்பெற்று வாழ்ந்திடவே விரும்புகின்றீர்!

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

என்ற வள்ளுவனின் வாக்கினை மெய்ப்பிக்கவே விரும்பிகின்றீர்.  எமது வாழ்த்துக்கள்.

இளைஞர்களே! வாழ்க்கை என்றால் என்ன? நன்றாகப் படிப்பது, நன்றாக உழைப்பது, உழைத்துக் கிடைக்கும் பொருட்களை அனுபவிப்பது என்று பெரும்பாலோர் நினைக்கின்றீர்.  உண்மையில் இதுதானா வாழ்க்கை?  இல்லை! இல்லை! வையத்துள் நீவிர் வாழ்வாங்கு வாழ வேண்டும்.  அதுதான் வாழ்க்கை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்,

என்பது வள்ளுவம்.

‘ஆம்! இவ்வுலகில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் வானுலகத்துத் தேவருக்கு இணையாகப் போற்றப்படுவான்’ என்பதாம்.  

இரண்டு வகையான வாழ்க்கை முறைகள் 

  1. இப்படிதான் வாழ வேண்டும்.
  2. எப்படியும் வாழலாம்.

நான்கு வகையான மனிதர்கள்

1. பிறர்க்காகவே வாழ்பவர்கள்

2. பிறர்க்காகவும் தமக்காகவும் வாழ்பவர்கள்.  

3. தமக்காகவே வாழ்பவர்கள்

4. பிறரைத் துன்புறுத்தியே வாழ்பவர்கள்.

இதில் நீவிர் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்?  எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்?  சிந்தனைச் சிற்பிகளே!  சிந்தித்துப் பாருங்கள்! நன்றாகவே உங்களுக்குப் புரியும்.  ஆனால், எம்மைக் கேட்டால், நீவிர் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வழிமுறையை வகுத்துக் கொண்டு பிறர்க்காகவே வாழ வேண்டும் என்று கூறுவோம்.  ஆம்! நீவிர் வாழ வேண்டிய முறைப்படி பிறர்க்காக வாழ வேண்டும்.  அதுதான் வாழ்வாங்கு வாழ்க்கை! கடினமானதுதான், இவ்வாழ்க்கையில் நீவிர் எத்தனையோ தடைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.  தடைகள் மலையாய் உம்மைத் தடுத்திடும்.  அதைக் கண்டு மலைத்துவிடாதீர்.  தடைகளைத் தைரியத்துடன், முழுவேகத்தோடு எதிர்கொள்வீர்.  மாபெரும் மலையுமே மண்ணோடு மண்ணாவதை உமது கண்ணாலேயேக் கண்டு மகிழ்வீர்.  ஆம்! உம்மால் முடியாததை உலகில் எவரும் சாதித்துவிடப் போவதில்லை.  வெற்றித் திருமகள் உமக்கே மாலையிடுவாள்.  ஏனெனில் நீவிர் வாழ்வது பிறர்க்காகவன்றோ? எமது  வாழ்த்துக்கள்.

‘பிறர்க்காக வாழ்வது என்றால் என்ன?’ என்று கேட்கின்றீர்.  சில உதாரணங்களைக் கூறுகின்றேன்.  பாரத நாட்டின் விடுதலைக்காக சத்தியத்தையும், அகிம்சையையும் ஆயுதமாகக் கொண்டு போராடிய தேசத் தந்தை மகாத்மா காந்தி, அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் படை நடத்திய சுபாஷ் சந்திர போஸ், மாவீரன் பகத்சிங், விடுதலைக்குப் பின் பல்வேறு துண்டுகளாகச் சிதறிய இந்தியாவை ஒருங்கிணைத்த இரும்பு மனிதர் வல்லபாய் படேல், தன்னுடைய கவிதையால் மக்களைத் தட்டியெழுப்பிய கவி சுப்பிரமணிய பாரதி, தமக்கு இருமுறை பிரதம மந்திரியாக வாய்ப்புகள் கிடைத்தும் பிறரை அப்பதவியில் அமர்த்திய தியாகச் செம்மல் காமராஜ் போன்ற எண்ணற்ற தியாகிகளை எண்ணிப் பாருங்கள்.  நாடு விடுதலை பெற வேண்டுமென்று தன்னலம் மறந்து, உறக்கம் மறந்து, பொது நலமே பெரிதென்று அவர்கள் பாடுபட்டதனாலன்றோ இன்று நாம் சுதந்திரப் பறவைகளாகத் திரிகின்றோம்.

அது மட்டுமா? கிருஷ்ணன், இயேசு, முகம்மது நபி, மகாவீரர், புத்தர், நாராயணகுரு போன்ற எண்ணற்ற தத்துவ ஞானிகளை எண்ணிப்பாருங்கள்.  தன்னுடைய பயிற்சியால், கொள்கையால், நடத்தையால் மனித குலத்திற்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தனரே.  அவர்களின் தியாகங்கள் தான் எத்தனை! எத்தனை! உம்மால் அதை அளவிட முடியுமா?  அதனாலன்றோ மக்கள் அவர்களைத் தம்மை காக்க வந்த கடவுளாக, உலக  இரட்சகராகப் போற்றுகின்றனர்.

தன்னலங்கருதாது பிறர்க்காக வாழ்ந்ததனாலன்றோ இன்று நம் உள்ளத்தே நீங்கா இடம் பெற்றுள்ளனர்.  அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள்தானே! அவர்கள் சாதித்ததை நாம் ஏன் சாதிக்கக்கூடாது?  சாதித்தேயாக வேண்டும்.  ஆம்! வெற்றி கிடைக்கும்  வரை போராடுவோம்.

நாம் ஏன் பிறர்க்காக வாழ வேண்டும்? யாருக்காக வாழ வேண்டும்? என்று கேட்கின்றீர்.  கூறுகிறேன்.  இளைஞர்களே! பாரத காவியத்தின் நாயகர்களே! நீவிர் இன்றிருக்கும் உயர்ந்த நிலைக்கு உம்மை உயர்த்தியவர் யார்?  சற்றே நினைத்துப் பாருங்கள்.  பத்துமாதம் உம்மை சுமந்து, பெற்றெடுத்து, கண்ணை இமை காப்பது போல் காத்து உம்மை, வளர்த்திட்ட உமது பெற்றோர்களை நினைத்துப் பாருங்கள்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

என்ற வாக்கிற்கிணங்க உம்மை உயர்த்துவதற்காக, தம் சுகம் மறந்து, உணவு மறந்து, தூக்கம் மறந்து உம்மை உருவாக்குவதையே தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்படும் உம்  தாய் தந்தையருக்காக, நீவிர் வாழ்ந்தேயாக வேண்டும்.

இருளகற்றி ஒளி புகுத்திடும் ஆதவனைப் போல் உம்முடைய அறியாமையை அகற்றிட்டு, அறிவொளிவூட்டி, அன்பு வழி நடத்தும் ஆசிரியர்கட்காக நீவிர் வாழ்ந்தேயாக வேண்டும்.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இருக்கண் களைவதாம் நட்பு

என்ற வாக்கிற்கிணங்க, உம்  துயர்களைய, இன்பத்திலும், துன்பத்திலும் உம்முடன் பங்கேற்கும், உம்முடன்  உழைத்திடும், உம்முடைய நண்பர்களுக்காக நீவிர் வாழ்ந்தேயாக வேண்டும்! அது மட்டுமா?  பல்வேறு வளங்களையும் உமக்கு அளித்திட்டு உம்மை உயர்த்திடும்  நீவிர் வாழும் சமுதாயத்திற்காக, ஏன் உமது தாய்த்திருநாட்டிற்காக நீவிர் வாழ்ந்தேயாக வேண்டும்!  அதுவே, உண்மையான வாழ்க்கை.

எது வாழ்க்கை?  ஏன் வாழ வேண்டும்? யாருக்காக வாழ வேண்டும்? என்று கூறிவிட்டேன்.  எப்படி வாழ்வது? என்ற வினா எழுகின்றது.  இதை எழுதும் போது எம் மனம் பின்னோக்கிச் செல்கின்றது.  கவனமாகக் கேளுங்கள்.

கோடைவெயில்.  தமிழ் மூதாட்டி ஒளவை நடந்து கொண்டிருந்தாள்.  வழியில் ஒரு நாவல் மரம் தென்பட்டது.  நிழலுக்காக ஒதுங்கினாள்.  மேலே பார்த்தாள்.  சிறுவன் ஒருவன் மரத்தில் உட்கார்ந்து கொண்டு நாவற்கனி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.  ஒளவை சிறுவனிடம், ‘தம்பி! தம்பி! எனக்கு சில பழங்கள் கொடேன்’ என்று கேட்டாள்.

சிறுவனோ, ‘பாட்டி! உனக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டான்.  ஒளவை, ‘பழமும் சுடுமோ?’ என்று வியக்க கிளையைப் பிடித்து வேகமாக அசைத்தான் சிறுவன்.  பழங்கள் கீழே விழுந்தன.  அதனைக் கையிலெடுத்த ஒளவை, மணலை ஊதிவிட்டு பழத்தை சாப்பிட்டாள்.  ‘பாட்டி பழம் சுடுகிறதா? அதனால்தான் ஊதி சாப்பிடுகின்றாயா?’ என்றான் சிறுவன்.  ஓளவையின் அகந்தை அழிந்தது.  சிறுவன் தமிழ்க் கடவுள் முருகனே என்றறிந்து வியந்தாள்.  முருகன் ஒளவையிடம், ‘பாட்டி! பாட்டி! உலகத்திலேயே மிக அரியது எது?‘ என்று கேட்டான்.  ஒளவை முருகனிடம்,

அரியது கேட்பின் வரிவடி வேலாய்!
அரிதரிது! மானிடராய்ப் பிறத்தலரிது
மானிடராயினும் கூன், குருடு, செவிடு
பேடு நீங்கிப் பிறத்தலரிது!
பேடு நீங்கிப் பிறந்தகாலையும் 
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும், கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தாஞ்செயலரிது
தானமும் தவமும் தாஞ்செய்வாராயின் 
வானவர் நாடு வழி திறந்திடுமே!

என்று கூறினாள்.

ஆம்.  பெறுவதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்ற நாம் நம்முடைய கொடைத்திறத்தாலேயே மக்களின் உள்ளத்தே வாழ முடியும்.  எப்போது நீங்கள் அள்ளி வழங்கத் தயாராக இருக்கின்றீர்களோ அப்போது தான் வாழ முடியும்.  மக்களுடைய இன்றியமையாத் தேவையைப் பூர்த்தி செய்பவரே மக்கள் மனத்தை ஆட்கொள்கின்றனர்.  கொடையாலேயே அது சாத்தியம்.  எதைக் கொடுப்பது? என்ற கேள்வி எழுகின்றது.  சிந்திப்போம், எடுத்துக்காட்டாக, சமுதாயப் பார்வையை மட்டும் எடுத்துக் கொள்வோம்.  மற்றவற்றை நீங்களே சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.  ஏனெனில், சுய சிந்தனையே உங்களை, உங்கள் ஆத்மாவை வளர்க்க கூடியது.  ஆம், நீங்கள் வளர்ந்தேயாக வேண்டும்.

சமுதாயத்தே இன்று புரையோடிப் போயிருக்கும் கெட்ட பழக்க வழக்கங்கள், வேலையில்லா திண்டாட்டம், கொலை, கொள்ளை, கையூட்டு போன்ற அனைத்திற்குமே மூல காரணங்கள் மன ஒருமைப்பாடு, தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, தியாக மனப்பான்மை போன்ற குணங்களின் தட்டுப்பாடே.  ஆதலால், எந்த வழிகளிலெல்லாம் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த முடியும், சுயக்கட்டுப் பாட்டை அதிகரிக்க முடியும், மன ஒருமைப்பாட்டை உயர்த்திட முடியும், தியாக மனப்பான்மையை வளர்த்திட முடியும் என்று சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.  உங்கள் சேவையால், சமுதாயத்தை முன்னேற்றுங்கள்.  மக்கள் உள்ளத்தே நீங்கா இடம் பெறுவீர்.  வாழ்த்துக்கள்!

உதாரணமாக, பிச்சையெடுப்பவனுக்கு ஒரு நேரம் உணவிட்டால் மறுநேரம் அடுத்தவரிடம் கையேந்தித்தான் ஆக வேண்டும்.  ஆனால், அவன் உழைத்திட வாய்ப்புகள் கொடுத்தால் பிரச்சனைகள் நிரந்தரமாகத் தீருமன்றோ?  இளைஞர்களே! பெரும்பாலோர் எனக்கொரு வேலை வேண்டும்.  எப்படியாவது அடைந்து விட வேண்டும்.  அதைக் கொண்டு நன்றாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றுதான் துடிக்கின்றார்களேயொழிய, நாம் ஏன் மற்றவர்கட்கு வேலை கொடுக்கக்கூடாது? என்று சிந்திக்கின்றார்களா? இல்லை.  ஆனால் நீங்கள் சிந்தியுங்கள்.  பிற்காலத்தே நாம் ஏன் பலருக்கு வேலை அளிக்கக்கூடாது.  அதற்காக நமக்குத் தேவையென்ன?  சிறந்த தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும்.  அதற்காகப் பெரும் பணம் வேண்டும்.  தொழிற்சாலையை நிர்வகிக்க சிறந்த அனுபவம் வேண்டும்.

ஆம், நிறையப் பணமும், அனுபவங்களும் எனக்குத் தேவை! அதனால், பணத்தையும், அனுபவங்களையும் சம்பாதிப்பதற்குச் சிறந்த வேலை தேவையென்று சிந்தியுங்கள்.  பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நன்கு வேலை செய்யுங்கள்! பெரும் பணம் சம்பாதியுங்கள்.  நல்ல அனுபவங்களைப் பெற்றிடுங்கள்.  தொழிற்சாலை ஆரம்பியுங்கள்.  நீங்கள் உயர்வீர்கள்.  பசி தீர்ந்து மக்கள் உங்களை வாழ்த்துவர்.  நாடும் உயர்வடையும் அல்லது மாபெரும் மருத்துவ மேதையாகி மக்கள் சேவையில் ஈடுபடுங்கள்.  ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை உணவு, உடை, இருப்பிடம் சுகாதாரம்.  இவற்றை பூர்த்தி செய்யும் வகையில் இயற்கையை பாதிக்காது தொழில்சாலைகளை ஆரம்பிப்பது மிகவும் சிறப்பாகும்.

இயற்கைச் சமநிலை

எல்லோருமே பொறியாளராகவோ, மருத்துவராகவோ முடியாது.  கூடாது.  ஏனெனில் இயற்கை எல்லாவற்றையும் சமப்படுத்தவே விரும்புகிறது.  ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், சட்ட வல்லுநர்கள், அதிகாரிகள், விவசாயிகள், வியாபாரிகள் இப்படி பல துறைகளிலும் மிகவும் நற்குணங்கள் கொண்ட வல்லவர்கள் தேவை.  உங்களுக்கு எது உகந்தது என்று உணர்ந்து அந்தத் துறையில் உயர்வு பெறுங்கள்.  உணர்வதற்கான பயிற்சிளை மேற் கொள்ளுங்கள்.  (அந்த பயிற்சிகளை பற்றி விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்).  இயற்கை முறையில் பொருட்களை விளைவிப்பது  மிக மிகச் சிறந்த தொழிலாகும்.

உங்கள் பெற்றோர் அனைவருமே நீங்கள் புகழ்பெற்று வாழ்ந்திடவே விரும்புகின்றனர்.  ‘இவனைப் பெற இவன் பெற்றோர்  என்ன தவம் செய்தனரோ’ என்று போற்றப்படவே விரும்புகின்றனர்.  பிறர்க்காக வாழ்பவரே உண்மையில் வாழ்கின்றனர்இது தான் சமுதாயம் கண்ட உண்மை.  ஆம், உங்கள் சேவையால், உங்களை, சமுதாயத்தை, நாட்டினை வளப்படுத்துங்கள்.  மக்கள் உள்ளத்தே நீங்கா இடம் பெறுவீர்.  வாழ்த்துக்கள்.

எது வாழ்க்கை?  ஏன் வாழ வேண்டும்? யாருக்காக வாழ வேண்டும்?  எப்படி வாழ்வது? எதை வழங்குவது? என்று கூறிவிட்டேன்.  எப்போது வழங்குவது? (வாழ்வது) என்ற கேள்வி  எழுகின்றது. உம்மிடம் இருப்பதைத்தான், நீவிர் பிறருக்குக் கொடுக்க முடியும்.  அதனால், முதலில் உங்களை  உயர்த்திக் கொள்ளுங்கள்.  ஒழுக்கத்தால், கல்வியால், அறிவால், ஞானத்தால், பொருளால், செல்வத்தால், நம்பிக்கையால் உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்.  வாரி வழங்குங்கள்!  நீங்கள் வாழ்வீர்கள்! கடினம்தான்! முயன்றால் முடியாததொன்றில்லை!  வாழ்த்துக்கள்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.