குழந்தை யாரைப்போல் இருக்கிறாள்?

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

‘உங்கள் குழந்தை யாரைப்போல் இருக்கிறாள்?’ என்ற கேள்வி மக்களிடையே மிக பிரபலம்.  இந்தக் கேள்வி சரியல்ல.  இதற்கு மக்கள் கூறும் பதிலும் பெரும்பாலும் தவறானது.

அம்மா சாடை அல்லது அப்பா சாடை அல்லது மாமா சாடை அல்லது பாட்டி சாடை என்று ஏதாவது பதில் வரும்.  இப்படி திரும்பத் திரும்ப பதிலைக் கேட்கும் குழந்தை அவர்களது செயலை  உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறது.  உதாரணமாக, அம்மா சாடை என்று கூறினால், ‘நான் அம்மாவைப் போலா இருக்கிறேன்!’ என்று அம்மாவின் நடை, உடை பாவனைகளை பெரும்பாலும் திரும்ப திரும்ப கவனித்து பழக்கத்தில் கொள்கிறது.  அவர்களைப் போல் நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது.

இச்செயல் பிற்காலத்தில் அவர்களது சுயத்தை இழக்கவே துணை புரியும்.  ஏனென்றால் யாரைத் திரும்ப திரும்ப கவனிக்கிறதோ அவர்கள் குணங்களை குழந்தை அதிகமாக உள்வாங்குகிறது.  சுயத்தை இழப்பது மிகவும் ஆபத்தானது.  இன்று பல பிரச்சனைகளுக்கு மனிதன் சுயத்தை, சுயதர்மத்தை, தனது தனித்துவத்தை இழந்து வருவதும் முக்கிய காரணங்களாகும்.  குழந்தை யாரைப்போல் இருக்கிறாள் என்று கேட்பதைத் தவிர்த்து

தாயும், சேயும் நலமா? 
குழந்தை நன்றாகச் சாப்பிடுகிறதா?  தூங்குகிறதா?

போன்ற கேள்விகள் போதுமானதன்றோ! 

அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்காவில் ஒரு தம்பதியருக்கு பிறந்த குழந்தை கணவரின் நண்பரைப் போலவே அச்சு அசலாகத் திகழ்ந்தது.  கணவருக்கு மனைவி மீது சந்தேகம்.  ‘இது எனது குழந்தையா அல்லது எனது நண்பனின் குழந்தையா?’ என்ற கேள்வி அவரது மனதை ஆக்கிரமித்து அவரது தூக்கத்தை தொலைத்தது.  நிம்மதியிழந்தார்.  அடிக்கடி தம்பதியருக்குள் வாக்குவாதங்கள் நடந்தன.  மனைவியோ தன் மீது குற்றமில்லையென்று சாதித்தாள்.  பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றது.  அப்பெண்ணுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது.  குழந்தைக்கு தந்தை அவளது  கணவனே என்று உறுதிபடுத்தப்பட்டது.  பிறகெப்படி குழந்தை தந்தையின் நண்பரின் சாயலைப் பெற்றிருந்தது? என்ற கேள்வி உங்களைப் போல் அனைவரது மனதிலும் எழுந்தது.

கணவனுடைய நண்பர் ஒரு விளையாட்டு வீரர்.  நல்ல உடற்கட்டு வாய்ந்தவர்.  அவரது படங்கள் பல அவர்களது படுக்கையறையில் ஒட்டப்பட்டிருந்தன.  அதனை கர்ப்பிணிப் பெண்ணான அவனது மனைவி அடிக்கடி இரசிப்பது  வழக்கம்.  அதனால் அவளது குழந்தை கணவரின் நண்பரின் முகச் சாயலுடன் திகழ்ந்தது.  ஆம்! நாம் எதை ஆழமாக இரசிக்கின்றோமோ அதுவாகவே மாறுகிறோம்ஆம்! கர்ப்பிணிப் பெண் கேட்பதும், பார்ப்பதும் மிகவும் நல்ல விஷயங்களாக இருக்க வேண்டும்.

எனது வீட்டில் ஒரு நாள் எனது மகளுக்கும், மகனுக்கும் வாய் சண்டை.  மகள் மகனிடம் ஒரு பையனின் பெயரைச் சொல்லி, ‘நீ அவனைப் போல் இருக்கிறாயே’ என்று தம்பியை இழிவாகப் பேசியிருக்கிறாள்.  நான் வீட்டிற்குச் சென்றதும் புகார் சொல்லப்பட்டது.  நான் மகளை, ‘அப்படி பேசக்கூடாது’ என்று கடிந்து கொண்டேன்.  நானோ, ‘அப்படி ஒப்பிட்டுத் தவறாகப் பேசினால் நாளடைவில் அப்பையனின் குணத்தையே அதிகம் கவனிக்க ஆரம்பிப்பான்.  தம்பியின் செயல்களும், குணமும் மாறிவிடும்.  ஆதலால் இப்படிப் பேசுவதை இன்றோடு நிறுத்திக்கொள்’ என்று எச்சரித்தேன்.  அவளும் நிறுத்திவிட்டாள் என நினைக்கிறேன்.பல வருடங்களுக்கு முன் எனது துணைவியார் பேறு காலத்திற்காக தாய் வீடு சென்றிருந்தார்.  குழந்தை பிறந்தது கேள்விப்பட்டதும், எதிர் வீட்டு இளம்பெண் ஓடோடி வந்து, ‘சார் குழந்தை யாரைப் போல் இறுக்கிறாள்?’ என்றாள்.  நானோ,  ‘அவள் அவளைப் போலவே இருக்கிறாள்’ என்றேன்.  எதிர் வீட்டுப் பெண் திகைத்து நின்றாள்.  இப்படி பலரிடமும் மேற்கண்ட பதிலையே கூறினேன்.  நாம் எவ்வளவு திட்டமிட்டு செயல்பட்டாலும் பழைய செயல்களின் விளைவுகள் (கர்மா) நம்மை தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.  நல்லவர்களுக்கு உதவுவதன் மூலமும், நம்முடைய சேவையை அதிகரிப்பதன் மூலமும் விளைவுகளை செம்மைப் படுத்த முடியும்.  நம்மால் முடிந்தளவு நம்மை சுத்தப்படுத்திக் கொள்வோமே!  வாழ்க வளமுடன்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.