நீ அப்பா பிள்ளை!

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் என் தொலைபேசி ஒலித்தது.  கையிலெடுத்தேன்.  மறு முனையிலிருந்து, ‘உங்களை அவசரமாக சந்திக்க வேண்டும்!‘ என்று பெண் குரல் கேட்டது.  நேரம் ஒதுக்கி சந்திக்கச் சொன்னேன்.  அவள் ஒரு பட்டதாரி.  கல்லூரி வளாகத்திலேயே நேர்முகத் தேர்வுகள் நடத்திய ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது.  ஆனால் சில காரணங்களால் வேலையில் சேருவதற்கு அழைப்பு வரவில்லை.  வீட்டில் அவள் அம்மாவுடன் அடிக்கடி பிரச்சனைகள். தந்தையை இழந்தவள். இவளின் அம்மா அடிக்கடி இவளை தனியே விட்டு வேலை விஷயமாக சென்றுவிடுவார்கள்.  அவள் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டாள்.  காலையிலிருந்து இரவுவரை வீட்டிலேயே வேலையின்றி இருந்ததால் எதேதோ நினைத்துக் கொண்டு கவலை பட்டுக் கொண்டிருந்தாள்.  பல பெண்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர்.  காரணம் பெரும்பாலான குடும்பங்கள் மிகவும் சிறியதாகிவிட்டது.  கூட்டுக்குடும்ப வாழ்வெனில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தலையெடுக்காது.

அவள் என்னுடன் பேசியபோது அவளது பிரச்சனைகளை தெளிவாக தெரிந்து கொண்டேன்.  அவளுக்கு ஏதாவது வேலைகள் கொடுத்துக் கொண்டிருந்தால், தேவையில்லாத சிந்தனைகள் எழ வாய்ப்பில்லையென்று நினைத்தேன்.  தேவையான பணிகளை அவளுக்கு வழங்கி செயல்படுத்தச் செய்தேன்.  சில யோகாசனங்களும், தியானமும் கற்றுக் கொடுத்து பயிற்சி செய்ய வைத்தேன்.  இன்னும் சிறப்பாக  செயல்படுவதற்காக ஒரு யோகாசன நிபுணரிடம் பயிற்சி பெறுவதற்காக அனுப்பினேன்.  அவளுடைய செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது.

ஒரு நாள் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘என் அம்மா எப்போதும் ‘நீ அப்பா பிள்ளை!‘ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றாள்.  அவள் பிரச்சனையின் ஆணிவேர் அப்போது புரிந்தது.  பல பெற்றோர்களும், உறவினர்களும் இதை செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட பேச்சுக்களை பெற்றோரும், உறவினர்களும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.  இந்தப் பெண்ணை, ‘நீ அப்பா பிள்ளை, உன் தங்கை அம்மா பிள்ளை’ என்று கூறி வளர்த்திருக்கின்றனர்.  அப்பா இறந்ததனால் நமக்கு இனி யாருமில்லை என்ற எண்ணம் இவள் மனதை ஆக்கிரமித்திருக்கிறது.  அதனால் உண்டான மன பயம், மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறாளென்று எனக்கு புரிந்தது.  தன்னுடைய வருங்கால பாதுகாப்பை நினைத்து மிகுந்த கவலையுடனிருப்பதாக உணர்ந்தேன்.

‘நான் உன் அம்மாவை கூப்பிட்டு இந்த விஷயமாக பேசட்டுமா?’ என்றேன்.  ‘ஐயோ, வேண்டாம்.  அம்மா, ‘இதையெல்லாம் அவரிடம் சொல்லியிருக்கிறாயே’ என்று என்னை திட்டுவார்கள்’ என்றாள்.

நான் யோசித்து, அவளது தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மனோசக்தி, சேவை மனப்பான்மை போன்றவற்றை அதிகப்படுத்தும் பயிற்சிகளை தீவிரமாக்கினேன். 

அவளது பிற்கால பாதுகாப்பு பற்றிய பயத்தை சிறிது சிறிதாக தகர்த்தேன்.

எனக்கு எது நல்லதோ அதனாலேயே நான் கவரப்பட வேண்டும்‘ என்ற எண்ணத்தை தீவிரமாக எழுதவும், தியானிக்கவும் வற்புறுத்தினேன்.  ஏனென்றால் உள்ளத்தை செம்மைப்படுத்தும் பயிற்சிகளை சிறப்பாக செய்யும் போது புறத்தே விளைவுகள் சிறப்பாக அமையும்.  அதனால் தான் எனது மாணவர்களிடமும், சீடர்களிடமும் அடிக்கடி அகத்தை மாற்றுங்கள்!  அகத்தை மாற்றுங்கள்.  புறம்மாறும்!’ என்று நான் கூறுவது வழக்கம்.  அகப் பயிற்சிகளை அதிகரிக்க அதிகரிக்க அவளுடைய செயல்களில், மனப்பக்குவத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.  இன்னும் சில பிரச்சனைகள் அவளுக்கு இருப்பதை தெரிந்து கொண்டேன். இனியும் தாமதிக்கக் கூடாது என்றென்னி அவள் அன்னையை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.  நேரம் ஒதுக்கி என்னை சந்திக்க வருமாறு பணித்தேன்.  அவர்களும் என்னை சந்தித்தார்கள்.  பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்தேன்.  ‘உங்களுக்கு பிரச்சனை தீர்க்க எனது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள்’ என்றேன்.  அவரோ, ‘நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார்.  சில மாதங்களில்  ஒரு நல்ல பையனுடன் திருமணம் நடந்தேறியது.  நானும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்.  ஆம், பெற்றோர்களும், உறவினர்களும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.  எவ்வளவு தான் கவனமாக நடந்து கொண்டாலும் சில வேளைகளில் நம்மையும் மீறி பிரச்சனைகள் உருவாகிவிடுகிறது.  ஆம் விதி வலிது.  அதனை சமாளிக்க நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும். சேவைகளை அதிகரிக்க வேண்டும்.  தான, தர்மங்களை அதிகரிக்க வேண்டும்.  எந்த அளவுக்கு சேவைகளை அதிகரிக்கிறோமோ அந்த அளவுக்கு பிரச்சனைகள் விலகும்.  வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.