Click ▶ for audio
கொரோனா தீநுண்மி (வைரஸ்) இன்று உலகை ஆட்டிப்படைக்கிறது. மனிதர்கள் பலருக்கு மரண பயம். ஆட்சியாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கிறார்கள்.
இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் போது பெரும் தொற்று நோய்களோ, கடுமையான இயற்கைச் சீற்றமோ (சுனாமி, பெருவெள்ளம், பூகம்பம், புயல் போன்றவை) அல்லது பெரும் போரோ நடைபெறுகிறது. எல்லாவற்றையும் சமப்படுத்தவே இறைவன் விரும்புகிறான். விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் சீரான அளவில் இருந்தால்தான் பல்லுயிர் பெருக்கம் சீராகும். இயற்கைச் சமநிலை பாதுகாக்கப்படும். கொரோனா தீநுண்மி ஏன், எப்படி தோன்றியது என்று ஆழ்ந்து சிந்தித்தேன். எனது மனதில் உதயமான எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மனிதனது பேராசையால், அதிகாரபோதையால், அறியாமையால் நிலம், நீர், காற்று எல்லாம் மாசுபட்டுவிட்டது. காடுகளின் பரப்பளவுகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிர்களின் கண்ணீர் ஒருபுறம். புழு, பூச்சிகள், வண்டுகள் போன்றவற்றின் பாதிப்பு மறுபுறம். அனைத்து உயிர்களும் பூமாதேவியிடம் முறையிட்டன. நிலம், நீர், மாசுபாட்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் பலர். காற்று மாசால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியோர்களின் எண்ணிக்கை பல கோடியைத் தாண்டும். அவர்களின் கூக்குரல்களும் பூமாதேவியின் காதுகளை எட்டின. கங்கை, காவிரி, அமேசான், நைல் போன்ற நதிகளும் பூமாதேவியை கண்ணீரால் நனைத்தன. கதறின. அவர்களுக்கு ஆறுதல் சொன்ன பூமாதேவி ‘நானும் மிகவும் வலியுடன் தான் இருக்கிறேன். என் மீதும் ஆழமாக துளையிடுகின்றனர். இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்க ஆழமாகத் தோண்டுகின்றனர். (பூமியின் வலியை சில வருடங்களுக்கு முன் நான் உணர்ந்தேன். அதைப்பற்றி காலம் வரும்போது எழுதுகிறேன்). எனது பொறுமையும் எல்லை மீறிவிட்டது. பூமியை மனிதர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டியது கடமையாகிறது. வாருங்கள். எல்லோரும் இணைந்து பேரண்டப் பரம்பொருளைத் துதிப்போம்’ என்று அவரைத் துதித்தனர்.
அவர்களிடம் தோன்றிய இறைவன் ‘கவலைப்படாதீர்கள். பூமாதேவி நீ ஏன் கண்ணீர் வடிக்கின்றாய். நாமிருவரும் இணைந்து பூபாரம் குறைக்க புதிய நுண்ணுயிரியை உருவாக்குவோம். ஏனெனில் பெரிய உயிர்களானால் மனிதன் அதை தன்னுடைய ஆயுதங்களால் அழித்துவிடுவான்.’ ஆம், கண்ணுக்குத் தெரியாத புதிய நுண்ணுயிரி உருவாக்கப்பட்டது. அதற்கு மனிதன் கொரோனா தீநுண்மி (வைரஸ்) என்று பெயரிட்டான்.
என்ன வாசகர்களே ‘கதை நன்றாக இருக்கிறது. இது சாத்தியமா’ என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் நூறு சதவிகிதம் இது சாத்தியமே. தொல்லைகள் எல்லை மீறிச் செல்லும்போது அதைத் தடுக்க, அழிக்க, மாற்றியமைக்க புதிய உயிர்களை இயற்கை படைக்கும் ஆற்றல் வாய்ந்தது. நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். நெகிழி (பிளாஸ்டிக்) மக்கவே செய்யாதென்று. ஆனால் நெகிழியை மக்கச் செய்யும் பாக்டீரியாக்களை இயற்கை உருவாக்கிவிட்டது. அதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்போது கொஞ்சம் பின்னோக்கிப் பயணிக்கலாம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் பெற்ற வரத்தினால் நல்லவர்களையும், தேவர்களையும் கொடுமைப் படுத்தினான் இரண்ய கசிபு. அவன் இறைவனிடம் பெற்ற வரம் என்ன வென்றால், ‘இரவிலோ அல்லது பகலிலோ, வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ, மனிதனாலோ அல்லது விலங்குகளாலோ, எந்த வித ஆயுதங்களாலோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது’ என்பதுதான். இதனால் தலைக்கனம் அதிகரித்தது. பல கொடுஞ் செயல்களைப் புரிந்தான். ‘நானே கடவுள். என்னையே அனைவரும் வழிபட வேண்டும்’ என்று பலரையும் துன்புறுத்தினான். அவனை அழிக்க வேண்டும் என்று இறைவன் முடிவு கட்டினான். மனித உடல், சிம்மத்தின் தலை (மனிதனும் அல்லாமல் விலங்கும் அல்லாமல்) கொண்ட ஒரு உயிர் உருவானது. அது தன் கூறிய நகங்கலால் (எந்த வித ஆயுதங்களும் இல்லாமல்) வீட்டு வாயிலில் (வீட்டுக்கு உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல்) வைத்து சரியாக சூரியன் மறையும் நேரத்தில் (பகலிலும் அல்லாமல் இரவிலும் அல்லாமல்) அவனைக் கிழித்துக் கொன்றது. இதுதான் நரசிம்ம அவதாரம் என்று மக்களால் துதிக்கப்படுகிறது. இது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக சாத்தியமே!
மாங்கனித் திருவிழா பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? 2020ம் வருடம் ஆனி மாதத்தில் காரைக்காலில் பக்தர்கள் அதிகமின்றி (கொரோனா பயத்தால்) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. (ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது) அது என்ன மாங்கனித் திருவிழா? கொஞ்சம் பின்னோக்கிப் பயணிப்போம்.
புனிதவதி காரைக்காலைச் சார்ந்தவள். சிவபக்தை. நாகையைச் சார்ந்த பரமதத்தன் என்ற வியாபாரிக்கும் புனிதவதிக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. ஒரு நாள் கடைக்கு வந்த ஒருவர் பரமதத்தனிடம் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தார். வேலைக்காரன் மூலமாக அதை மனைவியிடம் கொடுத்தனுப்பினார் பரமதத்தர். புனிதவதியோ சமைத்துக் கொண்டிருந்தாள். ‘அம்மா பசிக்கிறது’ என்று வெளியிலிருந்து குரலொன்று கேட்டது. வெளியே சென்றாள். அங்கே ஒரு சிவனடியார். ‘சாதம் இன்னும் தயாராகவில்லை, மாம்பழம் சாப்பிடுகிறீர்களா?’ என்றாள் புனிதவதி. அவர் ‘பசிக்கிறதம்மா. எதுவாகிலும் எடுத்துவா’ என்றார். மாங்கனிகளில் ஒன்றைச் சிவனடியாரிடம் கொடுத்தாள் புனிதவதி. அவர் பழத்தைச் சாப்பிட்டு, புனிதவதியை வாழ்த்திச் சென்றார்.
மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு விரைந்தார் பரமதத்தன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மாம்பழம் எங்கே? என்று வினவினான். அங்கிருந்த ஒரு மாம்பழத்தை அரிந்து இலையில் வைத்தாள் புனிதவதி. அதன் சுவையில் திளைத்த பரமதத்தன் இன்னொரு பழத்தையும் கொண்டு வர கட்டளையிட்டான். அந்தப்பழம்தான் சிவனடியாருக்கு கொடுத்தாயிற்றே, பயத்திலாழ்ந்தாள். ‘இதோ வருகிறேன்’ என்று பூஜையறைக்குச் சென்று சிவனைத் தியானித்தாள். என்ன ஆச்சரியம். அவள் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. அதை எடுத்து கணவனிடம் சென்று அரிந்து கொடுத்தாள். இதன் சுவையோ பன்மடங்கு அதிகம். ஒரே மரத்தின் இரண்டு பழங்கள், சுவையில் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம். இது எப்படிச் சாத்தியம் என நினைத்து மனைவியை விசாரித்தான். புனிதவதியோ நடந்ததை விவரித்தாள். அதைக் கேட்ட கணவன் சிவன் கொடுத்தாரா? என்ன காது குத்துகிறாயா? சிவன் கொடுத்தால், உன் சிவனிடம் இன்னொரு பழம் வாங்கி வா என்றான். அவள் பூஜை அறைக்குச் சென்று மன்றாட அடுத்த மாம்பழம் அவள் கையில் தோன்றியது. அதை எடுத்து கணவனிடம் கொடுத்தாள் புனிதவதி. கணவன் வாங்கியதும் பழம் மறைந்தது. மனைவியின் பெருமையை உணர்ந்தான். மனைவி மீது பக்தி ஏற்பட்டது. அவளுடன் குடும்பம் நடத்த விருப்பமில்லாது வீட்டைவிட்டு வெளியேறினான்.
புனிதவதியார் கணவரைத் தேடினாள். வெகு நாளைக்குப் பின் கணவன் வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு குழந்தை பெற்று அந்த பெண்ணுக்கு புனிதவதி என்று பெயரிட்டிருப்பதையும் அறிந்தாள். பல சேவைகள் செய்த அவள் கைலாய மலை நோக்கிச் சென்றாள். சிவன் அவள் முன் தோன்றி அம்மையே வருக. காரைக்காலம்மையே வருக என்றார். அவர் காரைக்காலம்மையானார்.
இப்பொழுது ஒரு கேள்வி, மாம்பழம் எப்படி உருவாகியது? நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களிலிருந்து மாம்பழத்திற்குத் தேவையான மூலக் கூறுகள் இறை சக்தியால் இணைந்து பழம் உரவாயிற்று. இப்படித்தான் உலகின் அனைத்து உயிர்களும் உருவாக்கப்பட்டன. உயிர்கள் இறைச்சக்தியின் படைப்பே ஒழிய பரிணாம வளர்ச்சியல்ல. இதைப் பற்றி மிக விளக்கமாக பின்னொரு பதிவில் காண்போம். ஆதி அந்தமற்ற எல்லாவற்றையும் உருவாக்கவும், அழிக்கவும் கூடிய சர்வ வல்லமை படைத்த பேரண்ட பரம்பொருளையே இந்துக்களில் பெரும்பாலோர் ஆதிபராசக்தி என்றும், கிறித்தவர்கள் கர்த்தா அல்லது பரமபிதா என்றும் முஸ்லிம்கள் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். ஆம் வெவ்வேறு இடங்களில் வாழும், வெவ்வேறு மொழி பேசும் மக்கள், வெவ்வேறு விதமாகக் கொண்டாடினர். இதை புரிந்து கொண்டால் மதச் சண்டைகள் குறைந்துவிடும். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
China created Covid 19 Corona virus
உருவாக்கியது யாராக இருந்தாலும், உருவாக்கவைத்தது இறைவன்! மேலும் விளக்கத்துக்கு நானே எல்லாவற்றையும் செய்கிறேன்! பதிவை உள்வாங்குங்கள்.
இவை அனைத்தும் உண்மையே.. இதை புரிந்து கொண்டால் எவ்வித இடையூறும் ஏற்படாது.
தங்கள் கருத்துக்கு நன்றி!
அருமையான விளக்கம்… நன்றி
தங்கள் பாராட்டுக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!