கொரோன தீநுண்மி பீதியும், தீர்வும்…

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

இன்று கொரோனா தீநுண்மி (வைரஸ்) பீதி மக்களை ஆட்டிப் படைக்கின்றது.  நோய்தாக்கி நாமும் செத்துவிடுவோமோ என்று மக்கள் பலர் பயப்படுகின்றனர்.  மரணத்தைவிட மரண பயம் மிகவும் மோசமானது.  மக்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கொண்டிருப்பதால் பல்வேறு மனப்பிரச்சனைகள்.  பொருளாதாரப் பிரச்சனைகள்.

சில மாதங்களுக்கு முன் ஊரடங்கு சட்டம் முதன் முதலில் அமல்படுத்தப்பட்ட போது எனது மாணவர்களிடம் உரையாற்றினேன்.  அதன் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மாணவர்களே! உங்களிடம் சில விஷயங்களைப் பேச விரும்புகிறேன்.  சில நாட்களுக்கு முன் நான் எனது மகனிடம், ‘மகனே இந்த விடுமுறையில் உன்னை திருப்பூர் அனுப்பலாம் என்றிருக்கிறேன்.  நீயும் பல வருடங்களாகத் திருப்பூர் செல்ல வேண்டும் என்று என்னை வற்புறுத்திக் கொண்டிருக்கிறாய்’ என்றேன்.

அவரோ, ‘அப்பா கேரளாவிற்கு கொரோனா வைரஸ் (இந்தியாவில் முதல் வைரஸ் பாதிப்பு கேரளாவிலிருந்துதான் வெளிப்பட்டது) வந்து விட்டதாம்.  திருப்பூர் கேரளாவிற்கு அருகில் தானே இருக்கிறது.  எனக்கும் வைரஸ் வந்துவிட்டால் என்ன செய்வது’ என்றார்.  நானோ, ‘புவன், நீ மறுபடியும் மறுபடியும் பிறக்கிறாய்.  பிறகு ஏன் சாவைப்பற்றி கவலைப்பட வேண்டும்.  உனது கடமை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.  பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும், நல்லவர்களிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.  நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.  மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாதே!’ என்றேன். 

மாணவர்களே நீங்களும் அப்படித்தான்.  பயத்திலிருந்து வெளியே வாருங்கள்.  சில வருடங்களுக்கு முன் (2003) மறுபிறவி என்ற கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன்.  அப்புத்தகத்தில் நீங்கள் உங்கள் பழைய செயல்களின் விளைவுகளை எங்கு சென்று பிறந்தால் அனுபவிக்க முடியுமோ அங்கே பிறக்கின்றீர்கள்.  எந்த நாட்டில், எந்த மாவட்டத்தில், எந்த ஊரில், சாதியில், மதத்தில், ஆணாய், பெண்ணாய், சகோதர, சகோதரியாய், நண்பராய், உறவினராய், கணவன் மனைவியாய், குருவாய், சிஷ்யனாய், சிஷ்யையாய் பிறந்தால் அனுபவிக்க முடியுமோ அங்கே பிறக்கின்றீர்கள் என்று பதிவு செய்திருந்தேன்.  அதற்கு ஆதாரங்களைத் தேடி தீவிரமாகத் தியானித்தேன்.  வெகு விரைவில் எனக்கு, ”Many Lives Many Masters’ (by Dr. Brian Weiss)‘ என்ற புத்தகம் கிடைத்தது.  அதில் உள்ள செய்தியைக் கூறுகிறேன்.  கவனமாகக் கேளுங்கள்.  ஒரு பெண்ணுக்கு அப்போது வயது 28.  பல்வேறு உடல், மனப் பிரச்சனைகள்.  பல மருத்துவர்களைச் சந்தித்தும் பயனில்லை.  மிகவும் கவலையுடன் காலத்தைப் போக்கிக் கொண்டிருந்தாள்.  ஒரு நாள் ஒரு பெரியவர் அப்பெண்ணிடம் ‘அந்த மனோவசிய நிபுணரைச் சந்தித்துப் பார்.  உனக்கு குணமாகலாம்’ என்றார்.  அப்பெண்ணும் மேற்கூறிய மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற்றாள்.  நலமடைந்தாள்.  மனோவசிய சிகிச்சையில் சுமார் 86 பிறவிகளைப் நினைவு கூர்ந்ததை மருத்தவர் பதிவு செய்துள்ளார்.  இதில் வேடிக்கை என்னவென்றால் அம்மருத்துவர் ஒரு பிறவியில் அவளுக்கு குரு.  பெரியவர் இன்னொரு பிறவியில் அவளுக்கு அப்பா.  வேடிக்கைதானே. இதைப் பற்றி விளக்கமாக உலகம் ஒரு குடும்பம் என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளேன்.  ஆம், வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு மொழி பேசுமிடங்களில், வெவ்வேறு தேசங்களில், ஆணாய் பெண்ணாய் அவள் பிறந்ததைக் கூறியுள்ளார்.  ஆம்! நீங்களும் அப்படித்தான்.  எப்படி நீங்கள் ஆடை பழையதானால் அல்லது சிதைந்துவிட்டால் வெளியே வீசிவிட்டு புத்தாடை அணிந்து கொள்கிறீர்களோ, அதைப் போலவே இந்த உடல் பழையதானால் அல்லது சிதைந்துவிட்டால் ஆன்மா வேறு உடலைத் தேடிக் கொள்கிறது.  நீங்கள் மரண பயத்திலிருந்து வெளிவர வேண்டும்.  அதனாலேயே இதைக் கூறுகின்றேன்.

உங்கள் கடமை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதுதான்

  1. தினமும் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். 
  2. காலை, மாலை 30 நிமிடங்களாவது சூரிய ஒளியில் உலவுங்கள்.  அனைத்து நிற, சுவை உணவுகளையும் உட்கொள்ளுங்கள்.  கார்ப்பு, கசப்பு, துவர்ப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். 
  3. அனைத்து கீரை வகைகள், பழங்கள் சாப்பிடுங்கள். 
  4. மிளகு, இஞ்சி, சுக்கு, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 
  5. தினமும் எலுமிச்சை பழரசம் குடியுங்கள். 
  6. பூண்டு இரசம் (பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் தக்காளி) தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
  7. தினமும் இரண்டு முறையாவது தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு) சுவைப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. 
  8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
    இவற்றை பின்பற்றினால் நோய்கள் உங்களை எளிதில் அண்டாது.

மற்றும் எத்தனை பேர் விபத்தில் மடிகிறார்கள். சாலையில் நடந்து செல்லும்போது திடீர் விபத்து ஏற்படுகிறது.  வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்தவர் பலர்.  இதிலிருந்தும் நீங்கள் வெளிவர வேண்டும்.  உங்கள் சேவையை அதிகப்படுத்துங்கள்.  நல்லவர்களுக்கு உதவுங்கள்.  கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள்.  உண்மையே பேசுங்கள்.  நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.  சுருக்கமாகச் சொன்னால் பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை அதிகப்படுத்துங்கள்.  இப்போது உங்கள் கண்களுக்கு புலப்படாத மாபெரும் பாதுகாப்புக் கேடயம் உங்களைச் சுற்றி உருவாகிறது.  இதை நான் ஏற்கனவே உணர்ந்துள்ளேன்.  ‘இயற்கையின் நியதி‘ என்ற கட்டுரையைப் படித்தால் உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும்.  இது மட்டும் தான் உங்களைப் பாதுகாக்க முடியுமேயொழிய வேறு யாராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.  ஆதலால் உங்கள் கடமை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பாதுகாப்புக் கேடயத்தையும் பலப்படுத்த வேண்டும்.  அவ்வளவுதான்.

‘மேலும் இன்று நாம் வாழும் பூமி பேராபத்திலிருக்கிறது.  அதைக் காப்பாற்ற வேண்டுமாயின் இரு வழிகளே உள்ளது.  ஒன்று மனிதனின் சுயக்கட்டுப்பாடு அதிகரித்து, போதும் என்ற மனநிலை உருவாக வேண்டும் அல்லது பூமியின் மக்கள் தொகை பாதியாகக் குறைய வேண்டும்.  மனிதன் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறான்.  ஆதலால் இயற்கை இரண்டாவது வழி மூலம் சமநிலையை மேம்படுத்த முயல்கிறது’ என்றேன்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு ராக்பெல்லர் (உலக மகா கோடீஸ்வரர்), நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தார்.  உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவரும் கைவிரித்தனர்.  இன்றோ, நாளையோ சாகப் போகிறோம் என்ற நிலை.  தனது சொத்துக்களையெல்லாம் அறக்கட்டளை அமைத்து தான தர்மத்துக்காக எழுதி வைத்தார்.  ஒரு அதிசயம் நடந்தது.  அவர் உயிர் பிழைத்தார்.  அதன் பின் பல வருடங்கள் உயிர்  வாழ்ந்து வயதாகி இயற்கையாக மடிந்தார்.  ஏன் தமிழக முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் திரு. எம். ஜி. ராமசந்திரன் அவர்கள் அமெரிக்க மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்தது அவரது தான தர்மத்தாலும் ரசிகர்களின் பிரார்த்தனையாலுமே.  இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் உயிர் குடிக்கும்  நோயிலிருந்து மீண்டதும் அவரது தன்னலமற்ற சேவையால் கிடைத்த இறையருளால்தானே. ஆம்! வாசகர்களே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானால் தொற்று நோய்கள் உங்களை அண்டாது.  பாதுகாப்பு கேடயத்தை பலப்படுத்தினால் அனைத்துவித நோய்களிலிருந்தும் விபத்துக்களிலிருந்ததும் உங்களை பாதுகாக்கும்.  அதையும் மீறி மரணம் வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.  ஏனெனின் மரணம் என்பது பழைய ஆடையை அல்லது கிழிந்த ஆடையை வீசிவிட்டு புதிய ஆடை அணிவது போலத்தான்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.