Click ▶ for audio
சில வருடங்களுக்கு முன் காலையில் எங்களது கிருஷ்ணா ஆளுமை வளர் நிலையத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் போதித்துக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. அலுவலக அறைக்குச் சென்று தொலைபேசியை காதில் பொருத்தினேன். மறு முனையிலிருந்து, ‘எனது மகள் இன்று வகுப்புக்கு வரமாட்டாள். அவளுக்கு உடம்புக்கு சரியில்லை‘ என்ற குரல் கேட்டது. பேசிய பின் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தேன். அவர்கள் இராமாபுரத்தில் குடியிருந்தனர். கோபாலபுரத்தில் உள்ள பிரபல பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.
எனது மனதில் சந்தேகக் குரல் ஒலிக்கத் துவங்கியது. பேசியது எனது மாணவியின் அன்னையா அல்லது மாணவியே தன் குரலை மாற்றிப் பேசினாளா? அன்று முழுவதும் அந்தக் குரலின் ஆதிக்கம் இருந்தது. அடுத்த நாள் காலை வகுப்புக்கு அந்தப் பெண் வந்திருந்தாள். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே மாணவர்களுக்கு கொஞ்ச நேரம் வேலை கொடுத்து விட்டு, அடுத்த அறையிலிருந்த தொலைபேசியில் அந்தப் பெண்ணின் அன்னையை தொடர்பு கொண்டேன்.
‘நேற்று நீங்கள் உங்கள் பெண்ணிற்கு விடுமுறை கேட்டீர்களா?‘ என்றேன். ‘நான் உங்களிடம் பேசவே இல்லையே‘ என்று அந்தப் பெண் கலவரமடைந்தார். நான் அந்த தாயிடம், ‘உங்கள் பெண்ணையும் அழைத்துக் கொண்டு, நாளை மாலை என்னை சந்தியுங்கள்’ என்றேன். தாயும், மகளும் கல்வி நிலையம் வந்தனர். தாயை அமரச் சொன்னேன். மகளோ என்னிடமிருந்து சுமார் நான்கடி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். ‘அடிக்கடி ‘பள்ளி செல்ல மாட்டேன்‘ என்று அடம் பிடிக்கிறாள். இரண்டு மூன்று தடவை தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை‘ என்று புலம்பினார் அந்த தாய். அந்த நேரத்தில் மாணவியிடம் இருந்து வெளிப்பட்ட அதிர்வுகள் என்னைத் தாக்கின. கெட்ட அதிர்வுகளின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே சென்றது. என்னால் இருக்கையில் நிம்மதியாக உட்கார முடியவில்லை. உடனடியாக மாணவியை ‘நீ வெளியே சென்று நில்!’ என்று கட்டளையிட்டேன். அவள் அறைக்கு வெளியில் சென்றாள்.
நான் அந்த தாயிடம் ‘ உடனடியாக சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று கணிசமான தொகையை நன்கொடையாக அளித்து வாருங்கள். அதன் பின் நாம் பேசலாம்’ என்றேன். ‘என்ன இராமகிருஷ்ணா மடம் என்று ஏன் குறிப்பாகச் சொல்கிறீர்கள்’ என்ற அர்த்தத்தில் கேட்டார்.
நானோ, ‘யார் சமுதாயத்திற்கு மிகச் சிறப்பாக சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் பணம் போய் சேர வேண்டும். இராமகிருஷ்ணா மடத்தினர் பல விதமான சேவைகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு உங்கள் பணம் போய்ச் சேர்வது மிகவும் நல்லது. உடனடியாக கணிசமான தொகையை மடத்திற்கு கொடுத்து அதன்பின் தங்கள் மகளுடன் என்னைச் சந்தியுங்கள்’ என்றேன். அவரோ, ‘என் கணவர் கூட இராமகிருஷ்ண மடம் நிர்வகிக்கும் பள்ளியில் தான் படித்தார்’ என்றார். நானோ, ‘பல பேர் செலுத்திய நன்கொடைகளால் தான் உங்கள் கணவர் இந்தளவுக்கு வளர முடிந்தது. ஆதலால் நீங்கள் கண்டிப்பாக நன்கொடை அளிக்க வேண்டும். ஆதலால் உடனடியாகச் சென்று வாருங்கள்’ என்றேன்.
சில நாட்களில் அந்தத் தாய் என்னைச் சந்தித்தார். ‘இராமகிருஷ்ணா மடம் சென்று நன்கொடை அளித்தேன்’ என்றார். நானோ ‘எவ்வளவு’ என்று கேட்டேன். அவரோ, ‘இரண்டாயிரம் ரூபாய்’ என்றார். நானோ, ‘போதாது. கண்டிப்பாக பத்தாயிரம் ரூபாயாவது செலுத்தி வர வேண்டும். அப்போதுதான் தங்கள் மகளை வகுப்பினுள் அனுமதிப்பேன்’ என்றேன். ‘அவ்வளவு பணத்திற்கு நான் என்ன செய்வேன்’ என்றார். நானோ, ‘சொந்த வீடு இருக்கிறது. சொந்தமாக கார் வைத்திருக்கிறீர்கள். நினைத்தவுடன் நகைகள், பட்டு சேலைகள் வாங்கிக் கொண்டு மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறீர்கள். இதற்கெல்லாம் எவ்வளவோ செலவு செய்ய முடிகிறது. ஆனால் எனக்கு மட்டும் கொடுக்க பணம் இல்லையா?’ என்று இறைவன் கேட்கிறான். ஆதலால் உடனடியாக செலுத்தி வாருங்கள். அது மட்டுமல்ல, அடுத்த மாதத்திலிருந்து மாதமொரு முறை கணிசமான தொகையை வழக்கமாக செலுத்தி வர வேண்டும். உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து விடும்’ என்றேன்.’இப்போது ரூபாய் ஐந்தாயிரம் மட்டும் கொடுக்கிறேன். மீதியை கூடிய விரைவில் செலுத்துகிறேன்’ என்று கூறிச் சென்றார்.
சில நாட்களில் மறுபடியும் என்னைச் சந்தித்த போது அவரது முகத்தில் மலர்ச்சி. ‘நீங்கள் சொன்னதைச் செய்தேன். எனக்கு வேண்டியவர் ஒருவர் என்னையும் எனது மகளையும் ரெட்ஹில்ஸிலுள்ள ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றார். அவர்கள் தியானித்து ‘இப்பெண்ணிற்குப் பேய் பிடித்திருக்கிறது. உடலில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவிகள் உள்ளன. அதனால் தான் உங்கள் மகள் இப்படி நடந்து கொள்கிறாள்’ என்று கூறி சில பூஜைகள் செய்தார். அவள் உள்ளிருந்த பேய்கள் வெளியேறிவிட்டன. இப்போது எனது மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்’ என்றார்.
‘வெளியே சென்ற பேய்கள் மறுபடியும் வந்தால் என்ன செய்வீர்கள்?‘ என்றேன். ‘அவைகள் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவை. அந்த ஆவிகளும் இனி கண்டிப்பாக வரமாட்டோம் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றன’ என்றார். நானோ, ‘இந்த பேய் போய்விட்டது. மற்ற ஏதாவது பேய் வந்தால் என்ன செய்வீர்கள்? ஆம்! ஒன்று போனால் இன்னொன்று வருமே?‘ என்றேன். அந்தப் பெண்மணியின் முகம் கலவரமடைந்தது. அதிர்ச்சியில் உறைந்தார்.
‘கவலைப்படாதீர்கள். பெரும்பாலும் ஒவ்வொரு ஆன்மாவும் அடுத்த ஆன்மாவை அடிமைப் படுத்தவே விரும்புகிறது. வலிமையான ஆன்மா வலிமையற்ற ஆன்மாவை அடிமைப் படுத்தி தன் காரியங்களை செய்கிறது. பாவ புண்ணிய நியதிக் கேற்பவும் இது நடைபெறுகிறது.
ஆகவே நிரந்தரமாக உங்கள் மகள் இப்படிப்பட்ட பிரச்சனைகளிலிருந்து வெளிவர வேண்டும். அதற்காக ஒன்று புண்ணியத்தை அதிகப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான வழி ஏற்கனவே சொல்லப்பட்டது. இரண்டாவது அவளது மனத்தையும், மூளை நரம்புகளையும் வலிமைப் படுத்த வேண்டும். மனம் வலிமையானால் புற ஆன்மாக்களால் அவளை அடிமைப்படுத்த முடியாது. ஆதலால் மனதை வளப்படுத்த, வலிமைப்படுத்த வேண்டும். அதற்கான பயிற்சி முறைகளை நான் கூறுகிறேன். அதைச் செயல்படுத்துங்கள். அவள் நிரந்தரமாக பிரச்சனைகளிலிருந்து வெளிவந்து விடுவாள்’ என்றேன்.
‘உங்கள் மகளின் மனவலிமை மிகவும் குறைவாக உள்ளது.
- தினமும் ஒன்பது மணிநேரமாவது தூங்க வேண்டும்.
- மூன்று வேளையாவது சத்துள்ள தேவையான அளவு உணவு சாப்பிட வேண்டும்.
- நிறைய பழங்கள், காய்கள் (அனைத்து சுவை) சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு இரண்டு நாட்களாவது பாகற்காய், சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மாதத்திற்காவது வாரமொருமுறை ஒரு குவளை வேப்பிலைச் சாறு அவசியம்.
- நரம்புகளை, மூளையை வலுப்படுத்த கசப்புச் சுவை அவசியம்.
- தினமும், அரைமணி முதல் முக்கால் மணி நேரம் இறகுப்பந்து விளையாட வேண்டும். மனதை ஒருமைப்படுத்தவும், உடலை வலுப்படுத்தவும் இது உதவும்.
- மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்த அர்த்த சிரசாசனம், ஹலாசனம், சர்வாங்காசனம் செய்து வர வேண்டும்.
மேற்கூறியவற்றை ஒழுங்காக செயல்படுத்தினால் மனமும், உடலும் வலுப்படும். உடல், மனதை பலப்படுத்தி சேவைகளின் மூலம் புண்ணியத்தை அதிகப்படுத்துங்கள். அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்’ என்றேன். மகிழ்ச்சியுடம் வீடு திரும்பினார். அவள் என்னிடம் படித்து முடிக்கும் வரை அவளுக்கு மீண்டும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாள்.
பேய் என்றால் என்னவென்று தெளிவு படுத்த விரும்புகிறேன். மரணங்கள் இரண்டு வகை. ஒவ்வொரு உயிருக்கும் குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. அக்காலம் முடிந்ததும் இறந்தால் இயற்கையான மரணம். அடுத்தது அகால மரணம். இரண்டாம் வகை மரணத்தில் ஆன்மா தகுந்த காலம் வரும் வரை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் (விபத்து, தற்கொலை போன்றவை). எந்த உடலில் புகுந்தால் தன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமோ அந்த உடலில் புகுந்து கொள்ளும். அதையே பேய் என்கிறோம். இது மனவலிமை குன்றியவரையோ பாவச் செயல்கள் அதிகம் செய்தவரையோ பாதிக்கும். மன வலிமையும் புண்ணியத்தின் பலமும் அதிகமாக இருந்தால் பேயால் பாதிப்பு ஏற்படாது.
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் பேய் ஓட்டுபவர் பேய் உண்மையாகவே இருக்கிறதென்று நிரூபிக்க முடியாது தோற்றுப் போனதைப் பார்த்திருப்பீர்கள். பேய் என்பது உண்மை. ஆனால் ஏற்கனவே கூறியது போல் பேய் மன வலிமை குன்றியவர்கள், பாவம் அதிகம் செய்தவர்களை மட்டும் தான் ஆட்டுவிக்கும். மனநலம் அதிகம் உடையவர்களிடமும், புண்ணியம் அதிகம் செய்தவர்களிடமும் அதனால் ஆதிக்கம் செலுத்த முடியாது. நிகழ்ச்சியில் தங்கள் மீது சோதனை செய்யலாம் என்றவர்கள் கண்டிப்பாக அதிக மன வலிமை உடையவராக இருந்திருப்பார்கள். அதனால் தான் அவர்கள் பாதிக்கப்படவில்லை. இந்த ரகசியம் தெரியாததால் தான் பேயோட்டுபவர் தோல்வியை தழுவ நேர்ந்தது. மன வலிமையை அதிகப்படுத்தி, புண்ணியத்தை அதிகப்படுத்தினால் கெட்ட ஆவிகள் மட்டுமின்றி கெட்டவர்களின் எண்ணத் தாக்கமும் ஒருவரைப் பாதிக்காது. மன வலிமையை அதிகரிப்பதில் பாகற்காய், சுண்டைக்காய் போன்றவை பெரும் பங்காற்றுகின்றன.
இன்னொரு சுவாரசியமான நிகழ்வு ஒன்றையும் பகிர்ந்து கொள்கிறேன். சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு மன்னனின் மகளுக்கு பேய் பிடித்துவிட்டது. இதிலிருந்து விடுபடுவதற்காக மன்னன் குரு யாதவ பிரகாசரை அழைத்தான். அவரும் சென்றார். அவருடம் அவருடைய சிஷ்யர்கள் குழுவும் சென்றது. அவர் எவ்வளவோ முயற்சித்தும் அப்பெண்ணின் உடலிலிருந்து பேயை விரட்ட முடியவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் அப்பேயிடமே கேட்டார். அதுவோ, அவரது சீடர்களில் ஒருவரை சுட்டிக் காட்டி, ‘அவரால் என்னை இந்த உடலிலிருந்து விரட்ட முடியும்’ என்றது. அவரும் முயற்சித்தார். அவர்கள் அப்பேயிடம், ”இப்பெண்ணின் உடலிலிருந்து நீ விலகிவிட்டாய்’ என்பதற்கு என்ன ஆதாரம்’ என்று கேட்டனர். அதுவோ, சற்று தெலைவில் உள்ள ஒரு மரத்தின் கிளையை சுட்டிக் காட்டி, ‘நான் விலகும் போது, அந்த கிளை முறிந்து கிழே விழும்’ என்றது. சிறிது நேரத்தில் அது கூறியது போலவே நடந்தது. மன்னனின் மகளும் குணமடைந்தாள். மன்னன் மகிழ்ந்தான். அந்த சிஷ்யரை கெளரவித்தான். அந்த சிஷ்யர் தான் 120 வருடங்கள் வாழ்ந்து, எல்லா சாதியினரையும் சமமாக பாவித்து, வைணவத் தொண்டாற்றி, அழியாப் புகழ் பெற்ற இராமானுஜர். சென்ற வருடம் தான் அவருடைய ஆயிரமாவது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதே போல் ஞானசம்பந்தர் வாழ்விலும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.இதற்கு காரணம் அவர்களிடம் உள்ள ஆன்மீக ஆற்றல். அதை பாதிக்கப்பட்டவர்கள் உடம்பில் செலுத்தியவுடன் பேய் அகன்றது. இதே போல் பல உதாரணங்களை கூற முடியும். அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்தால் உங்களுக்கு நன்கு புரியும்.
Very useful brother
அன்பு நண்பா!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
அன்புடன்,
கிருஷ்ணதாசன்
Great Article Sir….thank you….
அன்பு மாணவ!
உனது கருத்துக்கு மிக்க நன்றி!
அன்புடன்,
கிருஷ்ணதாசன்