Click ▶ for audio
குலசேகரன் பட்டினம், பாண்டிய மன்னன் குலசேகரன் நிர்மாணித்த நகரம். வங்கக் கடலின் ஓரத்தில் சுப்பிரமணிய சுவாமி ஆட்சி செய்யும் செந்தூருக்கு தெற்கில் அமைந்துள்ளது. அக்காலத்தே கடற்கரை ஓரம் அமைந்த நகரங்களை பெரும்பாலும் ‘பட்டினம்‘ என்றும் குளக்கரையில் அமைந்த நகரங்களை ‘பாக்கம்‘ என்றும் அழைப்பது வழக்கம். குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைத்தால், அது சிறப்பாக இருக்குமென்று மத்திய அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஞானாம்பிகை சமேத ஞானமூர்த்தீஸ்வரர் ஆட்சி செய்யும் அருமையான ஆலயம். கடற்கரையிலிருந்து சில அடிகள் தூரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தியாவில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற இடங்கள் இரண்டு. ஒன்று மைசூர். இரண்டாவது குலசேகரன் பட்டினம். தசரா திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கே கூடுவது வழக்கம். வங்கக் கடலுக்கருகில் மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சியளிக்கும். அங்கே நிகழ்ந்தவை பல அதிசயங்கள். அதிலொன்றை எழுதுகிறேன்.
திரு. நவீன் குமார் எனது சீடர்களில் ஒருவர். ஆன்மீகப் பணியிலும் சமுதாயப் பணியிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர். இறைபக்தியும் குருபக்தியும் மிகுந்தவர். பெற்றோருக்கும் தன் கடமையை செவ்வனே செய்பவர். என்னிடம் 2005 – 2006ம் ஆண்டு படித்த மாணவர். அதன் பின்னர் எமது கல்வி நிலையத்திலும் சில காலம் பணியாற்றினார். தற்போது ஆஸ்திரேலியாவில் பணி செய்துக் கொண்டே எமது சமூகப் பணியிலும், நாட்டுப் பணியிலும், ஆன்மீகப் பணியிலும் பெரும் பங்காற்றுகிறார். ஜனவரி 2020. தன் குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்திருந்தார். என்னை வந்து சந்தித்தார். மனைவி குழந்தையை உங்களிடம் அழைத்து வர வேண்டும். மனைவியும் உங்களிடம் பேச மிகவும் ஆவலாக உள்ளார். எப்போது வரலாம் என்றார். நானோ, ‘சில நாட்கள் ஓய்வெடுக்கட்டும், சீக்கிரமாய் அழைக்கிறேன்’ என்றேன்.
ஓரிரு நாட்களில், ‘குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லை. உடல்நிலை மோசமாக இருக்கிறது. மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்’ என்ற செய்தி கிடைத்தது. தொலைபேசியில் என்னை தெடர்பு கொண்டார். நோயின் கடுமையைச் சொன்னார். நோய்க்கான காரணங்களை அலசினோம்.
‘1. ஆஸ்திரேலியாவில் இப்போது கோடைக் காலம். இங்கோ கடுமையான குளிர். இப்போது குழந்தையை நீ அழைத்து வந்திருக்கக் கூடாது. வெப்பநிலை மாற்றத்தால் நோய் ஏற்பட்டிருக்கலாம். 2. கிருமிகளால் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இது மருத்துவமனை சென்றால் சரியாகிவிடும். 3. எண்ணத்தாக்கத்தாலும் இருக்கலாம். சுற்றி உள்ளவர்களின் எண்ண ஆற்றலும் பிஞ்சுக் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும். புண்ணியத்தை அதிகப்படுத்தினால் எண்ணத் தாக்கத்தினால் ஏற்படும் நோய் சரியாகிவிடும். இவை அனைத்திற்குமே அருமருந்து ஆன்மீக ஆற்றல்தான்.
அனைத்து வித நோய்களையும் குணப்படுத்தும் சக்தி ஆன்மீக ஆற்றலுக்கு உண்டு. தியானத்தின் மூலம் பிறருக்கு ஆன்மீக சக்தியை எப்படி அளிப்பது என்று முன்னரே உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஆழ்ந்து தியானித்து குழந்தையின் ஆன்மீக சக்தியை உயர்த்து. நோய் சீக்கிரம் குணமாகும். ‘நோய் குணமான பின் மனைவி மற்றும் குழந்தையுடன் என்னை வந்து சந்திப்பாய்’ என்றேன்.
சில நாட்களில் தன் மனைவி திருமதி. ஸ்வர்ணவேணி மற்றும் குழந்தையுடன் என்னை சந்தித்தார். சில விஷயங்களை பேசிக் கொண்டோம். அவரது மனைவிக்கும் மிக்க மகிழ்ச்சி. மனைவி மற்றும் குழந்தையுடன் மனைவியின் ஊருக்கு செல்லலாமென்றிருக்கிறோம் என்றனர். ‘சென்னையில் அதிக நாட்கள் தங்க வேண்டாம். உடனே உன் மனைவியின் ஊருக்கு குழந்தையை அழைத்துச் செல். அங்கு தங்குவதே சிறந்தது என எனக்கும் தோன்றுகிறது’ என்றேன்.
சில நாட்களில் குழந்தையுடன் திருநெல்வேலி மாவட்டம் சென்றனர். ஒரு நாள் தொலைபேசியில் தெடர்பு கொண்டேன். சீடனிடம், ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கும் அன்னதான திட்டத்திற்காக பணம் செலுத்து’ என்றேன். ‘நான் இன்றுதான் சுப்பிரமணிய சுவாமி கோவில் சென்றுவிட்டு குலசேகரன் பட்டினம் வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறேன்’ என்றார். ‘சீக்கிரம் மனைவி குழந்தையுடன் சென்று நீங்கள் கூறியதை நிறைவேற்றுகிறேன்’ என்றார். சொன்னதை செய்தார். குலசையில் அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பு. தெய்வ சன்னதியில் நான்கு மாத குழந்தை திடீரென்று இறைவன், இறைவியைப் பார்த்து
‘அம்மா! அப்பா!‘ என்று அழைத்தது.
அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. நான்கு மாதக் குழந்தை சன்னதியின் முன் சென்றதும், ‘அம்மா, அப்பா’ என்று தானே விளித்தது அதிசயம் தானே!
இப்படிப்பட்ட அதிசயங்கள் பல இடங்களில், பல மதங்களிலும் நடந்ததுண்டு. அதற்கு காரணம் “பக்தர்களின் நேர்மையும், நம்பிக்கையும்தான்”.
இன்னொரு உதாரணம் கூறுகிறேன். வடஇந்தியாவில் வசித்து வந்த (பல வருடங்களுக்கு முன் வாசித்தது. இடம், பெயர் மறந்துவிட்டது) இஸ்லாம் மதத்தைச் சார்ந்த ஒருவர் கடுமையான நோயினால் பீடிக்கப்பட்டார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியவில்லை. அவருக்கு தெரிந்த ஒருவர் ஒரு குறிப்பிட்ட கிருஷ்ணன் கோவிலைப் பற்றிக் கூறி ‘அங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நோய் குணமாகிவிடும்’ என்றார். இவரும் அங்கு சென்றார். இந்துக்களென்று சொல்லிக் கொள்ளும் சிலர் இவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. முஸ்லிம் பக்தரோ வெளியில் நின்று கொண்டே இறைவனைத் துதித்து சென்றுவிடுவார். சில மாதங்களில் அவரது நோயும் குணமானது. அக்கோவிலில் தேர்த்திருவிழாவின் போது இவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று இறைவனைத் தரிசிப்பது வழக்கம். ஒரு சமயம் தேர் திருவிழாவின் போது இவர் வெளியூர் சென்றமையால் இவரால் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. பதபதைப்புடன் ஓடி வந்துக் கொண்டிருந்தார். தேரோ இவர் வழக்கமாகத் தரிசிக்கும் இடம் வந்ததும் நின்றுவிட்டது. நகரவேயில்லை. சில மணித்துளிகள் கடந்து இவர் வந்து தரிசித்த பின்னரே தேர் மறுபடியும் நகர்ந்தது.
இன்னொரு நிகழ்வு. சேந்தனாரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தில்லை நடராஜர் ஆட்சி செய்யும் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியைச் சார்ந்தவர். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர். விறகு வெட்டி வாழ்க்கை நடத்துபவர்.
தினமும் காடுகளுக்குச் சென்று விறகு வெட்டி விற்ற பணத்தில் பொருட்கள் வாங்கினார். உணவு சமைத்தபின் சிவனடியார் ஒருவருக்கு உணவு கொடுத்த பின்பே தான் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதே காலகட்டத்தில் சோழ மன்னர் குலத்தைச் சார்ந்த கண்டராதித்தன் என்ற சிவ பக்தர் தில்லை நடராஜர் கோவில் மேற்கூரைக்கு பொன் தகடு வேய்ந்துக் கொண்டு தீவிரமாக சிவப்பணி செய்து வந்தார். அவர் பணியை மெச்சும் விதமாக தினமும் அவர் கண்ணயரும் போது சலங்கை ஒலி கேட்பது வழக்கம்.
ஒரு நாள் கடுமையான மழை. சேந்தனுக்கோ விறகு வெட்டச் செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்த கேழ்வரகை கொண்டு வீட்டின் கூரையைச் சிறிதளவு பிய்த்து எரியூட்டி களி செய்து முடித்தார். முதலில் உணவு படைப்பதற்காகச் சிவனடியாரைத் தேடிக் கொண்டிருந்தார். பல மணி நேரமாகியும் சிவனடியார் எவரும் வரவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. தனது பக்தன் கஷ்டப்படுவது இறைவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிவனடியார் வேடத்தில் சேந்தனின் வீட்டை நோக்கி நடந்தார். தூரத்தில் சிவனடியாரைக் கண்ட சேந்தனுக்கோ மிக்க மகிழ்ச்சி. அருகில் வந்ததும் அவரை வரவேற்று கால், கை அலம்பச் செய்து வீட்டினுள் அழைத்துச் சென்று களி உண்ணச் செய்தார். வந்தவர் இன்று கடுமையான மழை. இரவு உணவுக்கு என்ன செய்வதென்று கூறி மீதமுள்ள களியை துணியில் கட்டி எடுத்துச் சென்றார்.
கண்டராதித்த சோழன் திருப்பணியை மெச்சி தினமும் கண்ணயரும் போது ஒலிக்கும் சலங்கை ஒலி அன்று ஒலிக்கவில்லை. சோழனுக்கோ கடுமையான வருத்தம். ‘இறைவா! நான் தவறேதும் செய்துவிட்டேனா? வழக்கம்போல் கேட்கும் சலங்கை ஒலி இன்று கேட்கவில்லையே’ என்று மனமுருகினான். ‘எனது தவறைச் சொல்லுங்கள்’ என்று மன்றாடினான். சிவன் சோழனின் கனவில் தோன்றி,
‘இன்று எனது பக்தன் சேந்தனின் வீட்டிற்கு களி உண்ணச் சென்றிருந்தேன். அதனால் சலங்கை ஒலிக்கச் செய்யவில்லை’ என்றார்.
சோழனுக்கோ சேந்தனைக் காண வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
மறுநாள் காலை கோவிலைத் திறந்த அர்ச்சகர்களுக்கு அதிர்ச்சி. சிவனது ஆடை முழுவதும் அங்கங்கே களி. தரையிலும் அங்கங்கே களி சிதறிக் கிடந்தது. கண்டராதித்தரிடம் சென்று நடந்ததைக் கூறினர். அவருக்கு சிவன் நடத்திய நாடகம் புரிந்தது. சேந்தனைக் காண இன்னும் ஆவல் கொண்டான்.
சில நாட்களில் தில்லையில் தேராட்டம் நடைபெற்றது. மழை அதிகமாகப் பெய்தமையால் தேர்ச் சக்கரம் மணலில் சிறிது புதையுண்டது. மக்கள் தேரில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தும் தேர் நகரவில்லை. என்ன செய்வதென்று புரியாது திகைத்தனர். அச்சமயம் வானில் ஒரு ஒலி கேட்டது. ‘சேந்தா, பல்லாண்டு பாடு‘ என்ற குரல் வெளிப்பட்டது. சேந்தனோ, ‘ஐயனே! நானோ எழுதப்படிக்கத் தெரியாதவன். என்னால் எப்படி முடியும்?’ என்றான். ‘உன்னால் முடியும் பாடு‘ என்று மறுபடியும் கேட்டது. எழுதப்படிக்கத் தெரியாத சேந்தன் சிவனைப் போற்றி பாட ஆரம்பித்தான். தேர் நகர்ந்தது. கண்டராதித்த சோழர் சேந்தனார் நாயனாரைப் போற்றினார். துதித்தார். அவரை மிகவும் கெளரவித்தார். இந்து மதத்தில் தான் இப்படிப்பட்ட அதிசயங்கள் என்பதில்லை. எல்லா மதத்திலும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடப்பதுண்டு.
இந்துக்களில் சிலர் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருக்கும் காலங்களில் இஸ்லாமிய தர்காவுக்குச் சென்று நோய் நீங்கியதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்குக் காரணம் அந்த இடங்களில் ஆன்மீக ஆற்றல் செறிவு அதிகம் மற்றும் பயிற்சியால் தனி மனிதர்கள் இயற்கையிலிருந்து கிரகித்த ஆன்மீக ஆற்றலும் காரணம்.
உண்மையான, நேர்மையான, நாணயமான பக்தர்களின் மூலம் அவர்கள் எந்த மதமாயினும் இறைவன் அதிசயங்களை நிகழ்த்துகிறான். இறைவன் மதம், மொழி, சாதி எல்லாவற்றையும் கடந்தவன்.
Accepting the facts shared above sir…thanks for sharing…
தங்கள் கருத்துக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!