Click ▶ for audio
அன்பு நெஞ்சங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள். மருத்துவ சாதி என்ற கட்டுரையின் சென்ற வார பதிவின் தொடர்ச்சியை இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்றைய நிலையைப் போன்று ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பும் சாதிப் பிரச்சனைகள் நாட்டில் நிகழ்ந்தன. குந்தியின் மகனான கர்ணன் தேரோட்டியிடம் வளர்ந்த காரணத்தால் சூத்திரனென்று எள்ளி நகையாடப்பட்டு, தகுதிகள் இருந்தும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படியே பலருக்கும் பிரச்சனைகள் இருந்தன. அதற்கு தீர்வு கொடுக்கும் விதமாக பகவான் கிருஷ்ணன் அருளிய பகவத் கீதையில் சாதிகளைப் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பதினெட்டாம் அத்தியாயம், 41, 42, 43 மற்றும் 44ம் பாடல்களை வாசித்தால் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறும் விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
‘ப்ராஹ்மண க்ஷத்ரியவிசாம் சூத்ராணாம் ச பரந்தப
கர்மாணி ப்ரவிபக்தானி ஸ்வபாவப்ரபவைர் குணை:’
பொருள்:
எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய தொழில்கள், அவரவர் இயல்பில் உதித்த குணங்களுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டிருக்கின்றன.
‘சமோ தமஸ்தப; செளசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச
ஞானம் விக்ஞானமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்’
பொருள்:
சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, சாஸ்திர ஞானம், சுயஅனுபவஞானம், கடவுள் நம்பிக்கை போன்ற இயல்புகளை உடையவனே பிராமணன்.
மேற்கூறிய குணங்களை உடையவர் யாராயினும் அவர் பிராமணராகவே கருதப்படுவர். சூத்திரன் மகன் கூட மேற்கூறிய குணங்களை பெற்றிருந்தால் அவன் பிராமணனே! ஒரு பிராமணனின் மகன் மேற்கூறிய குணங்களைப் பெற்றிராவிட்டால் அவன் பிராமணனல்லன்.
‘செளர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயனம்
தானமீ ச்வரபாவஸ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்’
பொருள்:
சூரத்தன்மை, துணிவு, உறுதி, புத்தி கூர்மை, போரில் புறங்காட்டாமை, கொடை, இறைமை ஆகிய குணங்களையுடையவனே சத்திரியன். ஆம், தம்முடைய செயல்களால், சிறந்த நிர்வாகத்தால் மக்களை காப்பவனே சத்திரியன்.
‘க்ருஷிகோரக்ஷ்யவாணிஜ்யம் வைச்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்’
பொருள்:
உழவும், கால்நடை காத்தலும், வணிகமும் வைசிய தொழில்களாகும். கொடுக்கப்பட்ட பணியை ஆற்றுவது சூத்திரனுடைய தொழிலாகும்.
ஆம், சாதிகள் குணத்தாலும் செயல்களாலுமேயன்றி பிறப்பால் அல்ல என்று கிருஷ்ணன் அழகாக விளக்குகின்றான். இப்படிச் செயல்களால் தோன்றிய சாதிகள், மைந்தன், தந்தையின் தொழிலையே பெரும்பாலும் செய்தமையால் பிறப்பாலேயே சாதிகள் என்று சொல்லும்படியாக மாறின. பிராம்மணன் மகன் சூத்திரனாகவும் சூத்திரன் மகன் பிராமணனாகவும் தங்கள் செயல்களால் மாறிட முடியும் என்றே கிருஷ்ணன் கீதையில் குறிப்பிடுகின்றான்.
சாதிகள் – ஒளவையின் கண்ணோட்டம்
வட இந்தியாவில் இப்படியென்றால் தென்னிந்தியாவிலும் சாதிகள் பல உண்டென்பது அனைவருக்கும் தெரியும். உலகின் மிக மூத்த மொழியாம், செம்மொழி என்ற தகுதியைப் பெற்ற தமிழ்மொழியில் மிக்க புலமை பெற்ற தமிழ் மூதாட்டி ஒளவையோ, ‘உலகில் இரண்டே சாதிகள் தான் உள்ளன’ என்று கூறுகிறாள்.
‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
என்பது ஒளவை வாக்கு.
நீதிவழுவா நெறி முறையில் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி’
ஆம், நேர்மையான முறையில் சம்பாதித்து அதில் ஒரு பகுதியை பிறருக்கு தானம் அளிப்போர் உயர்ந்தவர்கள். மற்றவர் இழிந்த குலம் அதாவது மோசமான குலத்தினர்’ என்பது இதன் பொருளாம்.
மருத்துவ சாதி
எனது அனுபவங்களிலொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் எனது அலுவலக தொலைபேசி சிணுங்கியது. அதை காதில் பொருத்தினேன். ‘ஐயா! என் மகள் ஒரு பிரச்சனையில் முடிவெடுக்க முடியாது மிகுந்த மனக் குழப்பத்தில் உள்ளாள். உங்களிடம் வருகிறாள். அவளுக்கு உதவுங்கள்’ என்று ஒரு பெண்ணின் அன்னை என்னை வேண்டினார். சிறிது நேரத்தில் அப்பெண் என்னை சந்தித்தாள். அவள் எனது முன்னாள் மாணவி. மிகச் சிறப்பாக மருத்துவத்தில் மேற்படிப்பு (M.D) பட்டம் பெற்றவர். என்னிடம் படிக்கும் போது மிகச் சிறந்த மாணவிகளில் ஒருத்தி. ‘நான் ஒருவரை காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். வீட்டில் அவர் கீழ் சாதியென்று மறுக்கிறார்கள். ஒரே பிரச்சனை. என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்று கூறி அழுதாள். ‘கவலைப்படாதே! அந்தப் பையன் நல்லவன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இருவருக்கும் ஒத்துப் போகுமா என்பதை கண்டறிய வேண்டும். இன்று பல காதல் திருமணங்கள் மணமுறிவிலோ, தற்கொலையிலோ அல்லது கெளரவக் கொலையிலோ முடிகின்றன. நீ நன்றாக வாழவே நான் விரும்புகிறேன். ஆகவே இறைவனின் விருப்பம் நீ அவனை மணம் செய்ய வேண்டும் என்றால் செய்துகொள். அவன் உனக்கு உகந்தவனானால் மணந்து கொள் அல்லது கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விருப்பு வெறுப்பிலிருந்து நீ வெளிவர வேண்டும். நான் சில பயிற்சி முறைகளை உனக்கு சொல்கிறேன். அதை குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பின்பற்று. நீ காதலிப்பவனையும் பின்பற்றச் சொல். அதை பின்பற்றினால் உனக்கு உகந்த துணையானால் மணந்து கொள்வாய் அல்லது விலகிவிடுவாய். எல்லாம் நல்லபடியாகவே முடியும்’ என்று கூறி பயிற்சி முறைகளையும் சொல்லி அனுப்பினேன்.
சில தினங்களில் அப்பெண்ணின் அப்பா வந்தார். அவரிடமும் செய்ய வேண்டியதைக் கூறினேன். அவர், ‘என் மனைவிதான் கண்டிப்பாக வேண்டாம். எப்படி காதலித்து மணம் முடிப்பது என்று கஷ்டப்படுகிறாள். கொந்தளிக்கிறாள்’ என்று கூறினார். நானோ, ‘உங்கள் மனைவியை என்னிடம் வந்து பேசச் சொல்லுங்கள்’ என்றேன். சில நாட்களில் அப்பெண்ணின் அம்மா என்னைச் சந்தித்தார். ‘என் பெண் இப்படிச் செய்துவிட்டாளே’ என புலம்பினார். ‘அவன் கீழ்சாதிப் பையன். எங்கள் வீடுகளில் வேலை செய்யும் சாதி. எப்படி ஏற்றுக் கொள்வது’ என்றார்.
‘கீழ்சாதி, மேல்சாதி என்று பேசுவதை விடுங்கள். அந்தப் பையன் நல்லவனா, நேர்மையானவனா, நம் பெண்ணுக்கு உகந்தவனா? அவர்கள் இருவரும் இணைந்தால் வாழ்க்கை சிறக்குமா? என்று மட்டும் யோசியுங்கள். நீங்கள் வேறு பையனை திருமணம் செய்வித்தால் மட்டும் உங்கள் பெண் நிம்மதியாக வாழ்ந்துவிடுவாளா? மற்றவர்கள் என்ன பேசுவார்களோ என்பதை பற்றிக் கவலைப்படாதீர்கள். சாதியை விட்டு வெளியே வாருங்கள். முற்காலத்தே சாதிகள் தொழிலையும், குணத்தையும் மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. இப்போது அவர்கள் இருவரும் மருத்துவ சாதி தெரியுமா?’ என்று கூறி புன்னகைத்தேன்.
‘உங்களால் எந்த அளவுக்கு சமூக சேவை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்யுங்கள் உங்கள் மனம் பக்குவமடையும். உங்கள் பெண்ணுக்கு தேவையான பயிற்சியை அளித்துள்ளேன். எல்லாம் நன்றாகவே முடியும்’ என்று கூறி அனுப்பினேன். காலம் உருண்டோடியது சில மாதங்களில் இருவர் குடும்பமும் இணைந்து திருமணமும் இனிதே நடந்தேறியது. தற்போது இருவரும் மருத்துவமணை ஆரம்பித்து மிகச் சிறப்பாக சேவை செய்து வருகின்றனர்.
தவறான பொருள் – சரியான விளக்கம்
பிராமணன் தலையிலிருந்தும், சத்திரியன் மார்பிலிருந்தும், வைசியன் வயிற்றிலிருந்தும், சூத்திரன் காலிலிருந்தும் பிறந்ததாக ஒரு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மேடைகளில் சிலர் விமர்சிப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். அது அவர்களின் அறியாமையைக் குறிக்கின்றது. தலையிலுள்ள மூளை வலிமையை உபயோகித்து காரியம் சாதிப்பவன் பிராமணன். மார்பு என்பது உடல் வலிமையைக் குறிக்கும். உடல் வலிமையால் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன் சத்திரியன். வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்காக விவசாயமும், வணிகமும் செய்பவன் வைசியன். கால் தலை, மார்பு, வயிறு போன்ற எல்லாவற்றையும் தாங்கி நிற்கிறது. இம்மூவருக்கும் உதவியாக இருப்பவன் (கால்) சூத்திரன் என்றே பொருள் கொள்வது பொருத்தமானது. உடல் வாழ்க்கை ஒன்றில் மட்டுமே கருத்து வைத்திருப்பவன் சூத்திரன். மேலான சிந்தையும், செயலும் உடையவன் செய்தொழிலுக் கேற்ப வைசியன், சத்திரியன் அல்லது பிராம்மணனாகிறான். ஆம், யாரெல்லாம் உண்மையே பேசி, நேர்மையாக வாழ்ந்து, நடுநிலைமையுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லோரும் பிராமணர்களே. பொய் பேசித் திரிந்து, நேர்மையாக வாழ்க்கை நடத்தாதவர்கள் பூணூல் அணிந்திருந்தாலும் பிராமணர் என்று கூற தகுதியற்றவர்கள். உண்மை பேசி, நேர்மையாக வாழ்ந்து, நடுநிலை வகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது நாடு மேன்மையுறும். வளமான, வலிமையான, நிம்மதியான இந்தியா உருவாக வழிபிறக்கும். உலக சமாதானம் ஓங்கும். ஆம், அன்பு நெஞ்சங்களே பயிற்சியால் உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். நலமடைவீர்கள். வாழ்த்துக்கள். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Excellent,
தங்கள் பாராட்டுக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
அருமையான விளக்கம். பொது வெளியில் காண கிடைக்காத மிக எளிய பலமான பதிவு. வாழ்த்துக்கள்.
அன்பு நண்பா!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
அன்புடன்,
கிருஷ்ணதாசன்