தேவையைக் காதலியுங்கள்!

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

இன்று நம் நாட்டில் மணமுறிவுகளும், தற்கொலைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.  குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டே வருகின்றன.  இதற்கு மூல காரணம் தகுதியில்லாதவர்களை காதலிப்பது.  மனப்பக்குவம் இல்லாத நிலையில் காதலிப்பது மற்றும் திருமணம் செய்வது பெரும்பாலும் தோல்வியில் முடிவடைகிறது.  சிலர் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர்.  துணைக்குத் தகுதியில்லை என்று தெரிந்தவுடன் பெற்றோரிடம் சொல்லவும் தயக்கம். தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர்.  குடும்ப நல நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றன.  அறிவியல் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தற்கொலைகளும், மணமுறிவுகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  மக்கள் நிம்மதியிழந்து வருகின்றனர்.  காரணம் அறிவியல் வளர்ச்சியால் புற வளர்ச்சி அதிகமாகிவிட்டது.  அகவளர்ச்சியை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.  கல்வித் தரமும் சரியில்லை.  இதனால் பிற்காலத்தில் இன்னும் மனபாதிப்புகள் அதிகரிக்கும்.  இவர்கள் தங்கள் பாதிப்பிலிருந்து வெளிவர இறைவனை இறைஞ்சுவோம்.  

கொரோனா வைரஸ் பிரச்சனையை உலகம் சரியாக கையாளவில்லை.  தொற்று நோய்களுக்கு மருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே.  அந்த வழி செல்லாமல், மாணவர்களை வீட்டில் இருக்கச் செய்து வலைதளங்கள் மூலம் வகுப்புகள் நடத்தச் செய்ததும் மன அழுத்தத்தால் சிலரை காதல் வலையில் வீழ்த்திவிட்டது.  ஒரு நாள் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  ‘மாணவர்களே! ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  நன்றாக கவனியுங்கள்.  ஒரு பிரபல பள்ளியில் வேலை பார்த்த இந்தி ஆசிரியரின் பையன் பாலர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.  ஒரு நாள் ஆசிரியர் அவர் மனைவி இருந்த அறைக்குள் நுழையும் தருணத்தில் பையன் தந்தையிடம், ‘அப்பா! அம்மாவை லவ் பண்ணப் போறியா?’ என்றான்.  அவருக்கோ அதிர்ச்சி.’

‘இன்று ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களே சக மாணவியிடம் காதல் கடிதம் கொடுப்பது அதிகரித்துவிட்டது.  காரணம் அறிவியல் வளர்ச்சி.  அவர்கள் எதை திரும்பத் திரும்ப பார்க்கிறார்களோ அதை செய்கிறார்கள்.  எதை திரும்பத் திரும்ப கேட்கிறார்களோ அதைப் பேசுகிறார்கள்.  ஆம், திரைப்படங்கள் மற்றும் வலைதளத்தின் ஆதிக்கத்தால்தான் இந்த அவல நிலை உருவாகிவிட்டது.  பிற்கால பாதுகாப்பு பற்றிய பயமும் சிலரை இந்நிலைக்கு ஆளாக்குகிறது.  திரைப்படங்களில் காதலித்து, கல்யாணம் வரைதான் காட்டுகிறார்களேயொழிய அதன் பின்னர் நடக்கும் அவலத்தைக் காட்டுவதில்லை.  காதலிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக நீதிமன்ற வளாகத்திற்குச் சென்று வாருங்கள்.  அப்போது உங்களுக்கு தினம் தினம் எத்தனை பேர் மணமுறிவு கேட்டு நீதிமன்றத்தை அணுகுகிறார்கள் என்று புரியவரும்.  மணவிலக்குக்காக அடிக்கடி நீதிமன்றப் படியேறுகிறார்கள்.  எப்படி வக்கீல்களுக்கு லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவரும்.  இதனால் வாழ்க்கையை தொலைத்தவர் பலர்.  காதலித்தவன் கைவிட்டு விட்டு ஓடிவிட குழந்தை வளர்க்க முடியாது கஷ்டப்படும் பெண்களும் உண்டு.’

‘திருமணத்திற்கு முன் உனக்காகவே நான் பிறந்தேன்.  எனக்காகவே நீ பிறந்தாய்’ என்று சினிமா வசனம் பேசும் இவர்கள் திருமணத்திற்குப் பின் ‘ஐய்யய்யோ! ஒரு பேயை அல்லவா திருமணம் செய்திருக்கிறேன். ஒரு உதவாக்கரையை அல்லவா திருமணம் செய்திருக்கிறேன்’ என்று விலகி ஓடுவதும் உண்டு.’

‘அப்பா! அந்தப் பையனை (பெண்ணை) திருமணம் செய்து வைக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று சில பெண்கள்(ஆண்கள்) பெற்றோரை மிரட்டுவதுண்டு.  பெற்றோரும் முதலில் மறுத்தாலும் பின்னர், ‘நமக்கிருப்பதோ ஒரே பெண் அவள் இறப்பதைவிட, அவள் விருப்பப்படிதான் விடுவோமே’ என்று மணம் செய்விப்பர்.  சில மாதங்களில் மணவாழ்க்கை கசந்தபின், ‘அப்பா! நான் தெரியாது தவறு செய்துவிட்டேன். என்னால் அவனுடன்(அவளுடன்) வாழ முடியவில்லை.  எப்படியாவது மணவிலக்கு பெற்றுக் கொடுங்கள்’  என கெஞ்சுகின்றனர்.  பெற்றோருக்கு அதையும் பின்னர் செய்ய வேண்டியுள்ளது.  ஆம் அறிவியல் வளர வளர நிம்மதி கெட்டுப் போய் மன உளைச்சல் அதிகரித்துவிட்டது.’

‘நான் காதலுக்கு விரோதியல்ல.  ஆனால் உங்களுக்கு இப்போது அது தேவையா என்று யோசித்துப் பாருங்கள்.  பெற்றோர்கள் உங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்திருப்பர்.  உங்களைப் பற்றி என்னவெல்லாம் கனவு கண்டிருப்பர்.  அவர்களுக்கு விரோதமாக நீங்கள் முடிவெடுத்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்.  அவர்கள் உங்களை சபிப்பார்கள்.  நீங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?  பெற்றோர், நல்லவர்கள் உங்களை வாழ்த்தினால் தான் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும்.  உங்கள் அப்பாவிற்கு இவ்விஷயம் தெரிந்து உங்களை, ‘வீட்டைவிட்டு வெளியேறு’ என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  அல்லது நீங்கள் காதலித்தவர் உங்களை கைவிட்டுவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  முதலில் உங்களை உயர்த்திக்கொள்ளுங்கள்.  நன்றாகப் படியுங்கள், நல்ல வேலையில் சேர்ந்து பணம் சேருங்கள்.  சிறந்த அனுபவங்களை பெற்றிடுங்கள்.  நல்லது கெட்டது எது என்று அப்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.  ஆதலால் உங்களை வளப்படுத்துவதும், வலுப்படுத்துவதும் தற்போதைய கடமை.  உங்களுக்கு இந்த வயதில் என்ன தேவையோ அதை காதலியுங்கள்.  புத்தகங்களை காதலியுங்கள்.  மதிப்பெண்களை காதலியுங்கள்.  எப்போது சுயமாக நீங்கள் சம்பாதித்து உங்கள் தேவையை பூர்த்தி செய்கிறீர்களோ அப்போது யாரை காதலிப்பது, யாரை திருமணம் செய்து கொள்வது  என்று முடிவு செய்யலாம்’ என்றேன்.

ஆம் மாணவர்களே! இந்த வயதில் என்ன தேவையோ அதைக் காதலியுங்கள்.  கண்டிப்பாக ஆழ்ந்து காதலியுங்கள்.  அதை விட்டுவிட்டு தேவையில்லாததைக் காதலித்தால் அது தோல்வியிலேயே முடிவடையும்.  உதாரணமாக ஒரு சின்ன குழந்தைக்கு திரவ உணவுகளே உடலுக்கு நல்லது.  அது விருப்பப்பட்டு அல்லது தெரியாமல் திட உணவை வாயில் திணித்துக் கொண்டால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள்.  உடல் நிலை மோசமாகும்.  இறப்புகூட நேரிடலாம்.  ஆம்!  தேவையைக் காதலித்தால் வாழ்வில் பெறும் வெற்றி பெறுவீர்கள்.ஆம் இளைஞர்களே! எப்போது நீங்கள் சுயமாக சம்பாதித்து மற்றவர்களை சாராது உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்கிறீர்களோ அப்போது உங்கள் திருமணத்தைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம்.  அதற்கு முன்னர் காதலிப்பது பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைகிறது.  படிப்பும் பாதிக்கப்படுகிறது.  ஆதலால் இளைஞர்களே! உங்கள் தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது சிறப்பானது.  பெற்றோர்களும் தம் மைந்தர்களுக்கு குடும்ப வாழ்க்கைக்கான தகுதியிருந்தால் மட்டுமே திருமணம் செய்விக்க வேண்டும் அல்லது தகுதி வரும் வரை தாமதிக்க வேண்டும். சிந்தித்து செயல்படுங்கள்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.