Click ▶ for audio
சில வருடங்களுக்கு முன் சென்னையின் பிரபலமான பள்ளியொன்றில் ‘பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனும், மாணவி ஒருத்தியும் வீட்டில் நகைகளை எடுத்துக் கொண்டு, நண்பனிடம் காரை வாங்கி விற்றுவிட்டு ஓடிவிட்டார்கள்’ என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இன்னொரு செய்தி, சில வருடங்களுக்கு முன் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சி. மாலை வேளையில் தனிப்பயிற்சி வகுப்பொன்றில் ஆசிரியை சமையல் அறைக்குள் சென்ற போது, இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவியிடம், ‘நாளை பட்டுச் சேலை கட்டிக் கொண்டு, நகைகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு வா. நாம் இருவரும் கல்யாணம் கட்டிக்குவோம்’ என்று கூறினானாம். சக மாணவி அவனின் மறு பக்கத்திலிருந்த பெண்ணை சுட்டி, ‘அப்போது அந்தப் பெண்?’ என்றாள். ‘அவளையும் கட்டிக்கிறேன்’ என்றானாம். ஆசிரியை திரும்பி வந்த பின் நடந்ததைக் கேள்விப்பட்டு மாணவர்களை கண்டித்திருக்கிறார்.
மேலும் ஒரு செய்தி, பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு மாணவி சக மாணவனிடம், ‘I love you’ என்று சொல்லியிருக்கிறாள். அவனுக்குப் புரியவில்லை. திரும்பத் திரும்ப தினமும் அந்தப் பெண் கூறவே தனது அம்மாவிடம், ”I love you’ என்றால் என்னம்மா?’ என்று கேட்டிருக்கிறான். அவனது அம்மா பள்ளிக்குச் சென்று இருவரையும் இடம் மாற்றி உட்காரச் செய்திருக்கிறாள். ஏழு வயதிலேயே இப்படியென்றால் பிற்காலம் எப்படியோ? இப்படி பல நிகழ்ச்சிகள்.
கல்யாணம், காதல் என்றால் இந்த ஏழு வயது சிறுவர்களுக்கு நிச்சயம் தெரியாது. பிறகு இதற்கெல்லாம் காரணம் யார்?
பெற்றோர்களே காரணம். பெரும்பாலும் அனைத்து சினிமாப் பாடங்களிலும் காதல், திருட்டுக் கல்யாணம். பெற்றோர் தொலைக் காட்சியை இரசிக்கும் போது தனது குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொள்கின்றனர். குழந்தைகள் தான் திரும்பத் திரும்ப பார்ப்பதை செயல்படுத்துகின்றனர். கேட்பதை சொல்கின்றனர், பாடுகின்றனர். இதைப் பார்த்து பெற்றோர்கள், ‘இந்த வயதில் எப்படிப் பாடுகிறான், ஆடுகிறான், நடிக்கிறான்‘ என்று சந்தோஷப்பட்டு அவர்களையும் ஊக்குவிக்கின்றனர்.
பல பெற்றோர்கள் சினிமா படத்தின் நாயகன், நாயகி செய்தது சரிதானே! அவர்கள் பெற்றோர்கள் ஏன் காதலுக்கு குறுக்கே நிற்க வேண்டும் என்று வக்காலத்து வாங்குகின்றனர். இதைக் கேட்கும் சிறுவர்களின் மனதில், ‘ஆகா! நம் பெற்றோர்கள் காதலை அங்கீகரிக்கின்றனர்‘ என்ற எண்ணம் ஏற்பட்டு தன் வாழ்க்கையிலும் செயல்படுத்த முனைகின்றனர்.
‘கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? ஓடிப்போயி தாலியத்தான் கட்டிக்கலாமா?‘ என்ற பாடல் சில வருடங்களுக்கு முன் பட்டி, தொட்டியெல்லாம் பிரபலம். அதை தன் குழந்தைகள் பாடுவதைக் கேட்கும், ஆடுவதைப் பார்க்கும் பெற்றோர்களுக்கோ பரவசம்.
சில வருடங்களுக்கு முன் சென்னையில் மாணவன் ஒருவன் பள்ளி ஆசிரியையைக் கத்தியால் குத்தினான் என்ற செய்தி மிகவும் பரபரப்பானது. சில மாதங்களுக்கு முன் ஏழாம் வகுப்பு சிறுமி 1ம் வகுப்பு பையனை கத்தியால் குத்தியதாக செய்தி வெளியானது. இச்செயலும் தொலைக் காட்சியின் தாக்கம் தான். இப்படிப்பட்ட எண்ணங்கள் சிறுவயதில் விதைக்கப்படுகின்றன.
மனவியலின் படி எதைத் திரும்பத் திரும்ப பார்க்கிறோமோ அதையேச் செய்கிறோம். எதை திரும்பத் திரும்ப கேட்கிறோமோ அதையே பேசுகிறோம்.
அடிக்கடி திரைப்படங்களை, பாடல்களை இரசிப்பவர்கள் தன்னை நாயகன், அல்லது நாயகியாகவே பாவிக்கின்றனர். ‘நான் அந்த இடத்தில் இருந்தால், எப்படி இருக்கும்‘ என்ற எண்ணங்கள், கனவுகள் மனதை ஆட்கொள்கின்றன.
ஆம், இப்படிப்பட்ட எண்ணங்கள் மனதில் ஆழப் பதியும் போது, பிற்காலத்தே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ‘செயலைப் பற்றிக் கவலைப்படாது, விளைவு வரும் போது நாம் மோசம் போய்விட்டோமே’ என்று புலம்புகின்றனர்.
இப்படிப்பட்ட பிரச்சனைகளைத் தடுப்பதெப்படி? எண்ணப் பதிவுகள் தாய் கருவுற்றவுடன் ஆரம்பித்துவிடுகின்றன. ஐந்து வயது முடியுமுன் 90 சதவீத பதிவுகள். ஆதலால், கருவுற்ற பெண்கள் தன் குழந்தையின் நல்வாழ்வுக்காக, தொலைக்காட்சியில் மிகவும் அத்தியாவசியத் தேவையான, நல்ல நிகழ்ச்சிகளையே இரசிக்க, கிரகிக்க வேண்டும். குழந்தை பிறந்த பின்பும் கண்டிப்பாக விரும்பினால் பார்க்க கேட்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் மற்ற நிகழ்ச்சிகளை பார்க்க விரும்பினால் குழந்தைகள் தூங்கிய பின்னரே பார்க்க வேண்டும். அதுவும் ஒலி அலைகள் சிறுவர் காதில் விழாதிருக்க வேண்டும். ஐந்து வயது முடிந்தவுடன் இன்னும் சில தேவையான நிகழ்ச்சிகளையும் அனுமதிக்கலாம்.
தன் வாரிசுகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர் தம் ஆசைகளைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையெனில் பிற்காலத்தே, ‘விதி! விதி!’ என்று தலையிலடித்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
ஏனென்றால், மனதில் ஆழப்பதிந்த எண்ணங்களே மனதை ஆட்கொள்கின்றன. வலிமையான எண்ணங்கள், வலிமையற்ற எண்ணங்களை அழுத்தி மேலெழும்புகின்றன. புறச்சூழலை உருவாக்குகின்றன.எண்ணங்களே செயல்களாகவும், தொடர்ந்து செய்யப்படும் செயல்களே குணங்களாகவும், நல்ல குணங்களே சமுதாய மேம்பாடாகவும் பரிணமிக்கின்றன.
ஆம், எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்கிறோம். ஆதலால், நல்ல எண்ணங்களை விதைத்திடுவீர். நன்மை அடைந்திடுவீர். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Good information.
Thank you very much for your comments, Sir!