Click ▶ for audio
‘மைந்தர்களால் கைவிடப்பட்ட பெற்றோர் தற்கொலை’ என்ற செய்தி ஒரு நாள். ‘கைவிடப்பட்ட பெற்றோர் செய்வதறியாது திகைக்கின்றனர்’ என்ற செய்தி மறுநாள். ‘நாட்டில் முதியோர் காப்பகம் பெருகிவிட்டது என்று அறிவு ஜீவிகள் கவலை‘ என்ற செய்தி பல நாட்கள். இதற்கெல்லாம் காரணமென்ன? பெரும்பாலும் குழந்தைகள் காப்பகம் பெருகிவிட்டதே!
மனிதனின் ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்துவதில் 90 விழுக்காடு பயிற்சிகள் 5 வயது முடிவதற்குள்ளாகவே அளிக்க முடியும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?‘ என்பது முதுமொழி. அந்த வயதிற்குள்ளேயே அன்பு, அறிவு, அறம், பண்பு, பணிவு, பாசம், தேசப்பற்று, தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சேவை மனப்பான்மை போன்றவற்றை வளர்க்கும் எண்ணங்களை, பயிற்சிகளைப் பாலூட்டும் போதும், உணவூட்டும் போதும் ஊட்டி வளர்க்க வேண்டும்.
ஆனால், கணவனும், மனைவியும் பணம் அதிகம் சம்பாதிப்பதற்கென வேலைக்குச் செல்வதால் குழந்தைகளைக் காப்பகத்தில் ஒப்படைக்கின்றனர். ஊட்டச்சத்து மிக்க தாய்ப்பால் குழந்தைக்குக் கிடைப்பதில்லை. பல பெற்றோரின் முகங்களை வார நாட்களில் குழந்தைகள் பார்க்க முடிவதேயில்லை. குழந்தைகள் காப்பகங்கள் பெரும்பாலும் சேவை மனப்பான்மையின்றி பணத்துக்காகவே நடத்தப்படுகின்றன. அன்பு, பாசம், நேசம், அறமின்றி குழந்தைகள் வளர்கின்றனர். அன்புக்காக ஏங்குகின்றனர். மேற்கூறியன கிடைக்காமையால் மனம் மிகுந்த பாதிப்படைகின்றது. இதைப் பற்றிக் கவலைப்படாது பணமே முக்கியமென்று பெற்றோர் நினைக்கின்றனர்.
இச்சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் வளர, வளர பணம் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் அவர்கள் மனத்திலும் ஆழப் பதிகின்றது. பெற்றோர் பணத்துக்காக கடுமையாக உழைத்துப் பண்புகளை ஊட்ட மறந்துவிடுகின்றனர். இவர்களைக் கேட்டால் ‘நாங்கள் சம்பாதிப்பது அவர்களுக்குத்தானே. இந்தக் காலத்தில் இருவர் சம்பாதிக்காமல் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?’ என்று விவாதிக்கின்றனர். மேலும் இருவர் சம்பாதிப்பதால் பணப்புழக்கம் அதிகம். பல பெற்றோர் தன் குழந்தைகளுக்கு தேவையில்லாது அதிகப் பணம் கொடுத்து சிறு வயதிலேயே கெடுத்து விடுகின்றனர். சிக்கன வாழ்க்கையைப் போதிப்பதில்லை! அவர்களும் நன்றாகச் செலவு செய்து பணமே முக்கியம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது பக்கத்து வீட்டுக் குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கிறது.
ஆம், அவர்கள் பெரியவரானதும் பணம் அதிகமாகச் சம்பாதிக்க விரும்புவதால் தன் பெற்றோரைக் கவனிக்க முடிவதில்லை. மேலும், அன்பு, அறம், பாசமற்று வளர்ந்தவர்களிடம் இப்போது எப்படிப் பாசத்தை எதிர்பார்க்க முடியும். ஆம், பெற்றோர்கள் இப்போது முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்படுகின்றனர்.
அல்லது வீட்டிலுள்ள பெரியோர்களை பரிவில்லாது, பாசமில்லாது நடத்தும் தாய், தந்தையரைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்களில் இது போன்ற எண்ணங்கள் ஆழப்பதிகின்றன. இதை எழுதும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு கணவனும், மனைவியும் தன் குழந்தைகளுடனும், பெற்றோர்களுடனும் வசித்து வந்தனர். எவர் சில்வர் அல்லது வெள்ளித் தட்டிலோ உணவருந்தும் இவர்கள் தன் பெற்றோருக்கு மட்டும் மரத்தாலான தட்டில் உணவு கொடுத்து வந்தனர். ஒரு நாள் கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்று வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் தன் பையன் மரத்தட்டுசெய்து கொண்டிருப்பதைப் பார்த்தார். மனைவி சமையற் கட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். கணவன் திரும்பியதை உணர்ந்து மனைவியும் வெளியே வந்தாள். அவர் தன் பையனிடம், ‘ ஏனப்பா மரத்தட்டு செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று வினவினார். பையனோ, ‘ இன்னும் கொஞ்ச வருடத்தில் நீங்களும், அம்மாவும் வயதாகி தாத்தா பாட்டியாகிவடுவீர்கள். அப்போது உங்களுக்கு உணவு கொடுப்பதற்கு இந்த மரத்தட்டு உதவுமே என்று செய்து கொண்டிருக்கிறேன்’ என்று கூறினான். இதைக் கேட்டதும் கணவனும், மனைவியும் தம்மை யாரோ சம்மட்டியால் அடிப்பதைப் போல் உணர்ந்தனர். அவர்களும் திருந்தினர். ஆம், குழந்தைகள் காப்பகம் என்ற செயல் முதியோர் காப்பகம் என்ற விளைவைக் கொடுக்கின்றது. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுதான் என்ன? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகின்றது. சில விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்கிறேன்.
- தந்தையின் வருமானம் தேவையைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் தாய் கண்டிப்பாக ஐந்து வயது வரை வேலைக்குப் போவதைத் தவிர்த்து மேற்கூறிய பண்புகளை வளர்க்கும் பயிற்சிகளைக் குழந்தைகட்டு அளிக்க வேண்டும்.
- தந்தையின் வருமானம் குறைவு என்ற நிலையில் தாய் வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும். இந்தச் சூழ்நிலையில் கூட்டுக் குடும்ப வாழ்வு மிகச் சிறந்தது.
- மேலும், முதியோர்களை மதித்து அவர்களுக்குச் சிறந்த பணி செய்யப்படுவதைக் கவனிக்கும் குழந்தைகளின் உள்ளத்தில் நாமும் நம் பெற்றோருக்குச் சிறந்த சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகி வலுப்பெறும்.
இதைப் பகிர்ந்து கொள்ளும் போது ஒரு நிகழ்வு என் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு நாள் முடி திருத்தகமொன்றில் முடி திருத்தும் தொழிலாளி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரோ, ‘நான் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்தேன். எனக்கு நோய் என்பதே இல்லை‘ என்றார். இன்றைய நிலையென்ன பெரும்பாலான வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தைகள் பிறந்து சில மாதங்களில் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்கின்றனர். சத்துள்ள, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமான தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒழுங்காக கிடைக்காமல் பிற்காலத்தே பல உடல், மன நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளின் தனித்தன்மை சிதைக்கப்படுகிறது. பல பெற்றோர்களும் அறியாமல் தங்கள் குழந்தைகளின் தனித்துவத்தை சிதைத்துவிடுகின்றனர். இதைப்பற்றி விளக்கமாக பிற்காலத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.
சில பெற்றோர்கள் தன் மைந்தர்களை மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுகின்றனர். ‘என் பையன் வெளிநாட்டில் படிக்கிறான்‘ என்று மற்றவர்களிடம் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். அவர்கள் அங்குள்ள வசதிகளால் ஈர்க்கப்பட்டு திருமணத்திற்குப் பின் நாடு திரும்புவதில்லை. இப்போது ‘என் பையன் நான் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் அவன் இங்கு வருவதில்லை‘ என்று புலம்புகின்றனர். பல பெற்றோர்கள் இறுதிக் காலத்தில் தனிமையில் வாடுவதற்கு இதுவும் ஒரு காரணம். இதனாலும் முதியோர் காப்பகம் அதிகரிக்கின்றது. பெரியவர்களின் அனுபவங்கள் குழந்தை வளர்ப்பதில், இளைஞர்களுக்கு இதனாலும் கிடைப்பதில்லை.
சிறந்த குறிக்கோளுடன் வளர்க்கப்படும் குழந்தைகள்தான் பிற்காலத்தே நாட்டை நல்வழிப்படுத்துவர், பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பர். சிறந்த எண்ண விதைகளை விதைத்து, பயிற்சியளித்து வளர்த்தால் நல்ல பலன்களைக் காணலாம். ஆம், முதியோர் காப்பகத்தை ஒழிக்க வேண்டுமாயின் குழந்தைகள் காப்பகம் ஒழிக்கப்பட வேண்டும். தற்போது பல முதியோர்கள் விரும்பி முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுகின்றனர். முதியோர் இல்லம் நடத்துவது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இது நாட்டுக்கு நல்லதல்ல. ஏனெனின், முதியோர்களின் சிறந்த அனுபவங்கள் இளைய தலைமுறையினருக்கு கிடைக்காமல் ஆளுமை வளர்ச்சி கண்டிப்பாக பாதிக்கப்படும்.
நாட்டில் வன்முறைகள், குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதற்கு குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகங்களும் ஒரு காரணம். இதனால் பிற்காலத்தில் மனநல சிகிச்சை நிபுணர்களின் தேவை இன்னும் அதிகரிக்கும்.
நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Your vision is awesome sir!
The article is enlightening. Keep up the good work sir!!
Thank you very much!