இறைவன் உதவி

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

இறைவன் ஒருவனே!  வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறான்.  அந்த இறைவனை முஸ்லிம்கள் அல்லா என்றும், கிறிஸ்தவர்கள் கர்த்தா என்றும், சைவர்கள் சிவன் என்றும், வைணவர்கள் விஷ்ணு என்றும் மற்றும் சிலர் ஆதிபராசக்தி என்றும் போற்றித் துதிக்கின்றனர்.  ஒரே இறைவன் பல இடங்களில் பல உருவங்களிலும் தோன்றுவதுண்டு.

இறைவன் நேர்மையானவர்களுக்கு, உண்மையானவர்களுக்கு, சத்தியசீலர்களுக்கு, அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும், துன்பத்தில் வாடும்போது எந்த வழியிலாவது உதவுகின்றான். 

எனக்குத் தெரிந்த நிகழ்சிகள் பலவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

விலங்கு, பூச்சிகள் மூலம் உதவி 

ரமணர்

திருவண்ணாமலை தவசீலர் ரமணர்.  ஒரு சமயம் மிகவும் பசியோடு நடந்துக் கொண்டிருந்தார்.  ஒரு அத்திமர நிழலில் இளைப்பாறினார்.  எங்கிருந்தோ பல குரங்குகள் ஓடி வந்தன.  அத்திமரத்தில் ஏறி கிளையை உலுக்கின.  பழங்கள் பொல, பொலவென்று கீழே விழுந்தன.  குரங்குக் கூட்டம் ஓடி மறைந்தது.  இறைவனின் கருணையைப் போற்றியவாறு பழத்தைச் சாப்பிட்டு பசியைப் போக்கினார் ரமணர்.

முகம்மது நபி

இறைத்தூதர் முகம்மது நபி அவர்கள் இஸ்லாம் சமயத்தின் விடிவெள்ளி.  உலகின் மிகச்சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர்.    தீர்க்கதரிசிகளில் மிகவும் சோதனை, வேதனைக்குள்ளானவர் அவரே.  அவரின் போதனைகள், வழிகாட்டலால் கவரப்பட்டு அரபு நாடுகளில் பலர் அவர் வழியைப் பின்பற்றினர்.  இஸ்லாம் வளர்வதையும், அவரின் செல்வாக்கு அதிகரிப்பதையும் அங்கு ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தியவர்களால் ஜிரணிக்க முடியவில்லை.  அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர்.  குடும்பத்திற்கொருவர் வர வேண்டும் என முடிவு செய்தனர்.

ஆனால் அவருக்கு வரும் ஆபத்தைப் பற்றி உள்ளொலி மூலம் முன்னறிவிப்பு செய்தான் இறைவன்.  அன்றிரவு வீட்டில் தங்குவதைத் தவிர்க்கும் படியும், யத்ரீப் நகருக்கு பயணப்படும் படியும் கட்டளையிட்டான் இறைவன்.

எதிரிகள் பலர் அவரைக் கொல்வதற்காக வாளெடுத்துக் கொண்டு அவர் வீட்டைச் சூழ்ந்தனர்.  ஆனால், நள்ளிரவில் பெண்கள் வாழும் வீட்டிற்குள் நுழைவது அவர்கள் வழக்கமன்று.  கதவிடுக்கு வழியே பார்த்தபோது பச்சை நிற போர்வைப் போர்த்திக் கொண்டு ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.  அது நபிகள்தான் என்று நினைத்துக் கொண்டு அடுத்த நாள் அதிகாலை அவரைக் கொல்வதற்காக திட்டம் தீட்டினர்.  

இறைக் கட்டளையை சிரமேற்கொண்டு அலி என்பவரை வீட்டில் தங்கச் செய்து முகம்மது நபியும், அபுபக்கர் என்பவரும் முன்னரே வீட்டை விட்டு வெளியேறி பாலைவன மணலில் நடந்தனர்.  தன் காலடியைப் பின்பற்றி எதிரிகள் வந்துவிடக் கூடாது என்பதற்க்காக விரல்களால் நடந்துச் சென்றனர்.  தெளர் என்னும் சிறிய மலைக்குகையை அடைந்தனர்.  மறுநாள் காலை நபிகள் வீட்டில் இல்லையென்பதை அறிந்த அவரது எதிரிகள் மிகுந்த கோபமடைந்தனர்.  ‘முகம்மதைக் கொல்லுங்கள்.  முகம்மதைக் கொல்லுங்கள்’ என்ற குரல்கள் எல்லா திசைகளிலும் ஒலித்தன.  அவரைத் தேடி கூலிப்படையினர் கொலை வெறியோடு நாலா திசைகளிலும் பறந்தனர்.  ஒரு குழுவினர் அவர் தங்கியிருந்த மலைப்பக்கம் வந்துவிட்டனர்.  அங்கு கால் நடைகள் மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் ‘இந்தப் பக்கம் யாராவது வந்தார்களா?’ என்றனர்.  அந்தச் சிறுவன், ‘இந்தப் பக்கம் நான் யாரையும் காணவில்லை.  வேண்டுமென்றால், அருகிலிருக்கும் மலைக்குகைகளில் தேடிப் பாருங்கள்’ என்றான்.

இதைக் கேட்ட அபுபக்கர் நடுங்கினார்.  அதைப் பார்த்த நபிகள், அபுபக்கரிடம், ‘நாம் இருவர் மட்டுமே இங்கிருப்பதாக நினைக்க வேண்டாம்.  அல்லாவும் நம்முடன் இருக்கிறார்‘ என்றார்.  எதிரிகள் குகையை நோக்கி நடந்தனர்.  அந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.  ஒரு சிலந்தி மிக விரைவாக குகைவாயிலில் வலையைப் பின்னிவிட்டு மறைந்தது.  எதிரிகளில் ஒருவன் குகையினுள் நுழைய முற்பட்டான்.  மற்றவன் அவனைத் தடுத்து, ‘ஏன் வீணே உள்ளே செல்ல வேண்டும்.  இந்த சிலந்தி வலையைப் பார்த்தால் பல வருடங்களுக்கு முன் பின்னப்பட்டது போல் தோன்றுகிறது’ என்றான்.  எதிரிகள் திரும்பிச் சென்று மற்ற இடங்களில் தேட ஆரம்பித்தனர்.  நபிகளும், அபுபக்கரும் இறைவனின் கருணையை வியந்தனர்.  நபிகள் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே‘ என்று இறைவனைப் போற்றினார்.

இதைப் போன்று ஒரு நிகழ்வு பாண்டி நாட்டில் கடுங்கோன் என்ற இளைஞனைக் காப்பாற்ற களப்பிரர் ஆட்சியின் போது நடைபெற்றது.  அந்த கடுங்கோனே பிற்காலத்தில் பாண்டிய மன்னனானான்.

பொருட்களை அனுப்பி உதவி 

காரைக்கால் அம்மையார்

காரைக்காலில் வாழ்ந்த தனதத்தன் என்ற வணிகரின் மகள் புனிதவதி.  புனிதவதிக்கும் நாகையைச் சார்ந்த வணிகர் பரமதத்தனுக்கும் திருமணம் நடந்தது.  இல்லற வாழ்க்கை இனிதே நடந்தது.  புனிதவதி சிறந்த சிவபக்தை.

ஒருநாள் பரமதத்தன் கடையிலிருக்கும் போது ஒருவர் இரண்டு மாம்பழங்களை அவருக்குக் கொடுத்தார்.  தன் வேலையாள் மூலமாக அந்தப் பழங்களை வீட்டுக்குக் கொடுத்தனுப்பினார் வணிகர்.  புனிதவதி உணவு சமைத்துக் கொண்டிருந்தாள்.  அந்தச் சமயம் ஒரு சிவனடியார் பசியோடு வந்து அவளிடம் ‘அம்மா பசி.  உணவளியுங்கள்’ என்றார்.  அவரின் பசியைத் தீர்க்க மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்குக் கொடுத்தாள் புனிதவதி.  பசி தீர்ந்து வாழ்த்திச் சென்றார் அவர்.

புனிதவதியின் கணவர் மதியச் சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வந்தார்.  சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு மாம்பழத்தை அரிந்து இலையில் வைத்தாள் புனிதவதி.  அந்தப் பழம் மிகவும் சுவையாக இருந்தது.  ‘இன்னொரு பழம் எங்கே?’ என்று மனைவியைக் கேட்டார்.  உண்மையைச் சொன்னால் கணவர் கோபித்துக் கொள்வாரோ என்று பயந்தாள் புனிதவதி.  பூஜையறைக்குச் சென்று ‘இறைவா! இப்போது நான் என்ன செய்வது?’ என்று இறைஞ்சினாள்.  

என்ன ஆச்சரியம், உடனே அவளது கைகளில் ஒரு மாம்பழம் தோன்றியது.  சிவனின் அருளை வியந்தவாறு மாம்பழத்தைக் கணவனிடம் அளித்தாள்.  அதைச் சுவைத்தான் கணவன்.  ‘இந்தப் பழத்தின் சுவை பல மடங்கு அதிகமாக உள்ளதே.  ஒரே மரத்தில் கிடைத்த கனிகளில் இவ்வளவு வேறுபாடு இருக்காதே.  உண்மையைச் சொல்’ என்றான் கணவன்.  நடந்த அனைத்தையும் கணவனிடம் கூறினாள்.  கணவனுக்கோ சந்தேகம்.  ‘என்ன, என்னை ஏமாற்றுகிறாயா? சிவனாவது, பழம் கொடுப்பதாவது? சிவன் கொடுத்தாரென்றால் இதைப் போல் இன்னொரு பழத்தைப் பெற்று வா’ என்றான் கணவன்.

மறுபடியும் பூஜையறைக்குச் சென்று ‘ஐயனே! நான் என்ன செய்வது?’என்று சிவனை இறைஞ்சினாள்.  மறுபடியும் அவள் கைகளில் மாம்பழம் தோன்றியது.  அப்பழத்தை கணவனிடம் கொடுத்தாள்.  அவன் கையிலிருந்த மாம்பழம்  சிறிது நேரத்தில் மறைந்தது.  மனைவியின் சிவபக்தியின் மகிமையை உணர்ந்தான் கணவன்.  அந்தப் புனிதவதியே பின்னாளில் காரைக்கால் அம்மையார் என்று புகழ் பெற்றார்.  அவரைப் போற்றும் வகையில் இன்றும் வருடந்தோறும் மாங்கனித் திருவிழா நடந்து வருகிறது.

பக்தர்கள் மூலம் உதவி

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.  கந்தலாடை அணிந்திருந்தார்.  மதிய வேளை.  கடுமையான பசி.  எதிரில் அமர்ந்திருந்த இருவர் சுவாமியைக் கிண்டல் செய்து கொண்டு சாப்பிட்டனர்.  சுவாமிஜி அவர்களின் அறியாமையை நினைத்து மனம் வருந்தினார்.  சில நிமிடங்களில் ஒருவர் நல்ல உணவு வகைகள், பழங்களுடன் சுவாமி பயணம் செய்த பெட்டியினுள் நுழைந்தார்.  சுவாமியின் அருகில் வந்து, சுவாமியிடம் ‘உங்களுக்குத் தான் உணவு கொண்டு வந்திருக்கிறேன்.  சாப்பிடுங்கள்’ என்றார்.  சுவாமி அவரிடம் ‘என்னப்பா, எனக்கு உன்னைத் தெரியாதே!  உன்னிடம்  உணவு கொடுத்தனுப்பியது யார்?’ என்றார்.

உடனே அவர் ‘மதியச் சாப்பாட்டிற்குப் பின் சிறிது கண்ணயர்ந்தேன்.  அப்போது இராமர் என் கனவில் தோன்றி உங்களுடைய முகத்தைக் காட்டி, ‘என் பக்தன் இரயிலில் சென்றுக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கு உணவு கொடு‘ என்றார்.  நானோ, ஏதோ மன பிரமையென்று திரும்பவும் தூங்கினேன்.  மறுபடியும் அவர் தோன்றி உடனே உணவு கொடுக்கக் கட்டளையிட்டார்.  அதனால் கொண்டு வந்தேன்’ என்றார்.  இறைவனின் கருணையை நினைத்து மகிழ்ந்தார் விவேகானந்தர்.  அவரை கிண்டல் செய்தவர்கள் அவரிடம் மன்னிப்புக் கோரினர்.

கூரத்தாழ்வார்

கூரத்தாழ்வார் திரு அரங்கத்தில் தன் மனைவியுடன் தங்கியிருந்தார்.  கடுமையான மழை.  இரவில் உணவு கிடைக்கவில்லை.  கணவனும் மனைவியும் பசியால் வாடினர்.  கோவிலில் பூஜைக்கான மணி ஒலித்தது.  கூரத்தாழ்வார் மனைவியோ, ‘ரங்கநாதா! உனக்கு நைவேத்யம் நடக்கிறது.  நன்றாகச் சாப்பிடுகிறாய்.  ஆனால் எங்களுக்கோ பசி.  நாங்கள் என்ன செய்வோம்?’ என்று மனமுருகினாள்.  சிறிது நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக் கதவை ஒருவர் தட்டினார்.  ரங்கநாதர் தங்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னதாகக் கூறி கொடுத்துச் சென்றார்.  கூரத்தாழ்வார் தன் மனைவியிடம், ‘என்ன! ரங்கனிடம் கேட்டாயா?’ என்றார்.  மனைவி தலையசைத்தாள்.  இறைவனின் கருணையை நினைத்து மெய்மறந்தனர்.  ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

அடியவர்களின் நோயை, விபத்தை, பாவத்தை தான் அனுபவித்தல்

ஷீர்டி சாயி பாபா

1910ம் ஆண்டு ஷீர்டி சாயி தன் பக்தர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.  திடீரென்று தன் கைகளை நெருப்பு குண்டத்திற்குள் விட்டார்.  அருகிலிருந்த அன்பர்கள் அவரை உடனே பின்னால் இழுத்தனர்.  பதட்டமடைந்தனர்.  வருத்தப்பட்டனர்.  பாபாவின் செயலுக்கான காரணத்தை அவரிடம் கேட்டனர்.

பாபாவின் பக்தனான கொல்லன் வெகு தொலைவில் வேலை செய்துக் கொண்டிருந்தான்.  கணவன் அழைத்ததும் இடுப்பில் குழந்தை இருப்பதை மறந்து அவன் மனைவி எழுந்து ஓடினாள்.  குழந்தை தவறி உலைக்களத்தில் விழுந்தது.  அந்தக் குழந்தையைக் காப்பாற்றவே பாபா நெருப்புக்குள் கைகளை விட்டிருக்கிறார்.  அவர் கைகள் வெந்த போதும் பக்தனின் குழந்தை காப்பாற்றப்பட்டதாக பின்னால் தெரியவந்தது.

இயேசு பெருமான்

இயேசு பெருமானை உங்களுக்குத் தெரியும்.  சாது. அகிம்சாவாதி.  சிலுவையில் அரையப்பட்டு இரத்தம் சிந்தினார்.  காரணம், தன் பக்தர்களின் பாவங்களை அவர் ஏற்றுக் கொண்டார்.

மனித உருவில் வந்து உதவி

ரோஸ் பீட்டர் என்ற பீட்டர் பாண்டியன்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ரோஸ் பீட்டர் என்பவர் சுமார் 16 வருடங்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராகத் திகழ்ந்தார்.  மதுரை மீனாட்சியம்மன் கோவில் மேற்பார்வையாளரும் அவரே.  அம்மன் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர்.  பல திருப்பணிகளைச் செய்தார்.  மக்கள் அவரை ‘பீட்டர் பாண்டியன்’ என்றே அழைத்தனர்.  ஒருநாள் இரவு அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டியது.  அந்த நேரத்தில் ஒரு சிறுமி அவரை கைதட்டி எழுப்பினாள்.  எழுந்த அவர் ‘நீ யாரம்மா?’ என்று கேட்கச் சிறுமியோ அவரை வெளியே வருமாறு சைகை செய்துக் கொண்டே வீட்டிற்கு வெளியே ஓடினாள்.  அவரும் சிறுமியைத் தொடர்ந்து வீட்டிற்கு வெளியே ஓடினார்.  அடுத்த வினாடி மின்னல், இடியால் தாக்கப்பட்டு வீடு இடிந்து தரைமட்டமானது.  சிறுமி யாரென்று தெரிந்துக் கொள்வதற்காக சிறுமியின் பின்னால் ஓடினார்.  சிறுமியோ மீனாட்சியம்மன் கோவிலுக்குள் சென்று மறைந்தாள்.  அன்னையின் கருணையை வியந்து மேலும் பல நற்பணிகள் செய்தார்.

ஆன்மீக ஆற்றல் மூலம் உதவி

சுந்தரர்

சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் கண்பார்வை இழந்தார்.  பின்பு சிவனை இறைஞ்சிப் பாடியபோது இயற்கையிலிருந்து ஆன்மீக ஆற்றல் அவர் உடலில் பாய்ந்தது.  கண்பார்வை பெற்றார்.

இயேசு 

இயேசு முடவர்களை நடக்க வைத்ததையும், குருடர்களை பார்க்க வைத்ததையும், ஊமையைப் பேச வைத்ததையும் கேள்விப்பட்டிருக்கின்றோம்.  ஆன்மீக ஆற்றல் எல்லா நோய்க்கும் அருமருந்து.  இயற்கையிலிருந்து ஆன்மீக ஆற்றலைப் பெற்று, அதை நோயாளிகளுக்குச் செலுத்தும் போது அவர்கள் நோய் குணமாகிறது.

கிருஷ்ணன்

இதைப் போல் தான், கிருஷ்ணன் கம்சனை சந்திக்கச் செல்லும் போது கூன் முதுகுக் கொண்ட ஒரு முதிய பெண் அவருக்கு உதவுகிறாள்.  கிருஷ்ணன் அவளைக் கட்டி பிடிக்கும் போது அவளது கூன் முதுகு நிமிர்ந்தது.  அவளும் சந்தோஷப்பட்டாள்.

பிராணிக் ஹீலிங், ரெய்கி சிகிச்சை முறைகளும் இப்படித்தான்.

வழிகள் பல

இன்னும் எத்தனையோ வழிகளில் தன் உண்மையான பக்தர்களுக்கு, அதாவது இறைவன் கூறியதைக் கடைப் பிடிப்பவர்களுக்கு இறைவன் உதவுகிறான்.  மேலும் சமுதாயம் கஷ்டப்படும் போது மகான்களை அனுப்பியும், அவதாரம் மூலமாகவும் இயற்கையின் மூலமும் சமநிலையை நிலை நிறுத்துகிறான் இறைவன். 

‘எப்படி நீங்கள் இவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்’ என்று நீங்கள் என்னைக் கேட்கலாம்.  எனக்கும் இதைப் போல் இறைவன் பல விதங்களில் உதவியிருக்கிறான்.  காலம் வரும் போது அவற்றை பகிர்ந்துக் கொள்கிறேன். ஆனால், எல்லா மதங்களிலும் ஏமாற்றுப் பேர்வழிகளும் உள்ளனர்.  பணம் வாங்கிக் கொண்டு போலியாக நோய் குணமாவது போல் நடிப்பவர்களும் உள்ளனர்.  அவர்களாலேயே ஆன்மீகம் தன் தரத்தை இழந்து வருகிறது.  இதிலிருந்து நாம் மீள வேண்டும்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.