யார் அம்மா சிறந்தவர்?

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பான தமிழ் நெஞ்சங்களுக்கு கிருஷ்ணதாசனின் அன்பு வணக்கங்கள்.  இன்றைய பதிவில் ‘யார் அம்மா சிறந்தவர்‘ என்ற தலைப்பில் சிறிது உரையாடுவோம்.

எங்கு திரும்பினாலும் மதச் சண்டைகள்.  ஒருவர் ‘என் மதம் தான் சிறந்தது’ என்கிறார்.  இன்னொருவரோ,  ‘என் மதம் தான் சிறந்தது‘ என்கிறார்.  மற்றொருவரோ ‘என் மதம் தான் சிறந்தது’ என்கிறார்.  பலரும் இப்படித்தான்.

வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு இடங்களில் தோன்றின. 

கடவுள் ஒருவரே.  வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு பெயர்கள்.

அவ்வளவுதான். 

இதை எழுதும் போது ஒரு கதை எனது நினைவுக்கு வருகிறது.  ஒரு இடத்தில் பலர் இருந்தனர்.  ஒருவன் ஒரு புட்டியில் இருப்பது என்ன? என்று குழுமியிருந்தவர்களிடம் கேட்டான்.  ஒருவன் அதை சுவைத்துப் பார்த்து, இது தண்ணீர் என்றான்.  இன்னொருவன் ஜலம் என்றான்.  மற்றொருவன் பானி என்றான்.  அடுத்தவன் வெள்ளம் என்றான்.  இன்னொருவன் வாட்டர் என்றான்.  அனைவரும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று வாதிட்டு தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினர்.  அங்கு புதிதாய் வந்த ஒருவர் என்னடா விஷயம் என்றார்.  அவர்கள் சொல்வதைக் கேட்டு, நீங்கள் அனைவர் சொல்வதும் சரிதான் என்றார்.  எல்லோரும் நிமிர்ந்து நோக்கினர்.  மலையாளத்தில் அதன் பெயர் வெள்ளம்.  தமிழில் தண்ணீர், சமஸ்கிருதத்தில் ஜலம், ஆங்கிலத்தில் வாட்டர்.  இந்தியில் பானி.  அவ்வளவுதான்.  உங்களுக்குள் சண்டையிடுவது உங்கள் அறியாமையே என்றார்.  

ஒரு நிகழ்வை பகிர்ந்துக் கொள்கிறேன்.  ஒரு நாள் நான் முதுநிலை இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி ஒன்றின் நிறுவனரின் மனைவியைச் சந்திக்கச் சென்றிருந்தேன் (நிறுவனர் ஏற்கனவே வயதாகி இறந்துவிட்டார்).  அந்த அம்மையாருக்கும் என்னை சந்தித்ததில் மகிழ்ச்சி (என்னுடைய நேர்மை, பயமின்மை, ஒழுக்கத்தால் அவர் மிகவும்  கவரப்பட்டார்).  இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம்.

‘ஐயா! நீங்கள் எங்கள் பள்ளியில் வேலை செய்யும் போது எனது மகன்களை நம் பள்ளியை விட்டு விலக்கி அடுத்த பள்ளியில் சேருங்கள்.  அதுதான் அவர்களுக்கு நல்லது என்று அடிக்கடி கூறுவீர்கள்.  அதனால் இப்போது எனது பேரன், பேத்திகளை வேறு பள்ளியில் தான் சேர்த்துள்ளோம்’ என்றார்.  (அவர்கள் பிள்ளைகள் சொந்தப் பள்ளியில் பயின்றதன் விளைவு மோசமாகவே அமைந்தது).

‘பள்ளியில் மாணவர்களின் ஒழுக்கம் சரியில்லை என்று கேள்விப்படுகிறேன்.  பல பள்ளிகளிலும் இதே நிலைமைதான்.  நீங்கள் ஏன் நன்னெறி வகுப்புகளை திறம்பட நடத்தக் கூடாது?  தேவையானால் நான் உங்களுக்கு உதவுகிறேன்’ என்றேன்.

அவரோ, ‘நாங்கள் நடத்திக் கொண்டுதானிருந்தோம்.  பலர் வந்து ‘நடத்தக் கூடாது’ என்று சண்டையிட்டனர்.  அதனால் நிறுத்திவிட்டோம்’ என்றார்.

நானோ, ‘நீங்கள் எங்கள் அம்மாதான் மிகச் சிறந்தவர், மற்றவர்களெல்லாம் மோசம்‘ என்று கூறியிருப்பீர்கள்.  யாருடைய அம்மா மிகச் சிறந்தவர் என்று கண்டுபிடிக்க ஒவ்வொரு அம்மாவிடமும் குறைந்தபட்சம் இரண்டு வருடமாவது வாழ்ந்துப் பாருங்கள்.  அப்பொழுதுதானே யார் அம்மா மிகச் சிறந்தவர் என்று கூற முடியும்.  எங்கள் அம்மா வல்லவர் என்று கூறிக் கொள்ளுங்கள்.  தவறில்லை.  மற்ற அம்மாக்கள் மோசம் என்று கூறுவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது’.

‘அதைப் போல் தான் நீங்கள் கிறிஸ்தவ மதக் கதைகள் மட்டுமே மாணவர்களிடம் கூறுகிறீர்கள்.  அதுதான் மிகச் சிறந்த மதம் என்றும் போதிக்கிறீர்கள்.  அதெப்படி நீங்கள் கூற முடியும்.  5 வருடங்கள் இந்து மதத்தை பின்பற்றுங்கள்.  5 வருடங்கள் இஸ்லாமைப் பின்பற்றுங்கள்.  5 வருடங்கள் புத்த மதத்தை பின்பற்றுங்கள்.  5 வருடங்கள் சீக்கிய மதத்தைப் பின்பற்றுங்கள்.  இப்போது எந்த மதம்  சிறந்தது என்று கூறமுடியும்.  வேறு மதக் கருத்துக்கள் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது.  அப்படியிருக்கும் போது எப்படி கிறிஸ்தவம் தான் சிறந்தது என்று கூறுவீர்கள்.  அனைத்து மதத்திலும் இருந்து நல்ல கருத்துக்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். 

அனைத்து மத நீதிக்கதைகளையும் மாணவர்களுக்குப் போதியுங்கள்.  மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். என்னுடைய கல்வி நிலையத்திலும் அப்படித்தான்.  நான் எல்லா மதங்களிலிருந்தும் நீதிக்கதைகளை என் மாணவர்களுக்கு சொல்லவதுண்டு.  இது மத நல்லிணக்கத்தை உருவாக்குவதில் மிகவும் துணை புரியும்.’

என்றேன். 

மேலும் ‘நான் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  அவற்றை ஒரு நாள் எடுத்து வருகிறேன்.  படியுங்கள் பிறகு ஒரு நாள் மறுபடியும் விவாதிப்போம்’ என்றேன்.

அவர், ‘நீங்கள் கூறுவது சரிதான்.  நானும் அதைப் பற்றி யோசிக்கிறேன்’ என்றார்.  இதை எழுதும் போது பள்ளியில் நடந்த இன்னொரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.  ஒரு நாள் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் வந்தார்.  நடந்த நிகழ்ச்சிக்குப் பின் பலர் அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர்.  நான் தீவிரமான கிருஷ்ண பக்தன் என்று தெரிந்திருந்தும் கிருஸ்தவரான துணைத் தலைமை ஆசிரியை என்னிடம், ‘சார்! நீங்களும் அவரிடம் ஏன் ஆசி பெறக்கூடாது’ என்று சீண்டினார்.

நான் மகிழ்ச்சியுடன் புன்னகைத்துக் கொண்டே மதபோதகரிடம் சென்றேன்.  இருகரம் கூப்பி வணங்கி தலைவணங்கினேன்.  அவரும் என்னை ஆசீர்வதித்தார்.  நான் துணைத் தலைமை ஆசிரியரிடம் சென்றேன்.  ‘நான் கிருஷ்ணபக்தன்.  உங்கள் மதபோதகரிடம் ஆசி பெற்றேன்.  உங்களால் அதைப் போல் ஒரு  இந்து சந்தியாசியிடம் ஆசி பெற முடியுமா?  முடியவே முடியாது. அது தான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்’ என்றேன்.  அவர் மெளனமாக வாயடைத்து நின்றார்.  பல வருடங்களாகியும் எங்கள் நட்பு இன்னமும் தொடர்கிறது. 

நான் கிருஷ்ணபக்தன் என்றாலும் இன்றுவரை எல்லா மதத்தினரையும் சமமாகவே பாவிக்கிறேன்.  எல்ல மதத்திலும்  எனக்கு நண்பர்கள் உண்டு.  பல மத மாணவர்களும் எங்கள் கல்வி நிலையத்தில் படித்திருந்தனர்.

நண்பர் ஒருவர் ஒரு நாள் முஸ்லீம்களின் புனித நூலான குர்ஆனை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்.    இதைப் போலத்தான் கிறிஸ்தவ மறையான பரிசுத்த வேதாகமும் என்னிடம் உள்ளது.  எப்போதாவது தேவைப்படும் போது வாசிப்பதுண்டு.

ஒரு நாள் எனது முன்னாள் மாணவியும் தீவிர விசுவாசியுமான விலங்கியல் துறை பேராசிரியை முனைவர் திருமதிஇந்திரா  தனது தந்தை மூலமாக எனக்கு கிறிஸ்தவ வேதாகமமான பழைய ஏற்பாடு புத்தகத்தை கொடுத்தனுப்பினார்.  தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள்.  உங்கள் பணிக்கு உதவியாயிருக்கும்’ என்றார்.  நானோ, ‘கண்டிப்பாக வாசிக்கிறேன்’ என்றேன்.ஒரு நாள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது.  புத்தகத்தை வாசித்தீர்களா? என்றார்.  நானோ, ‘கொஞ்சம் வாசித்தேன், நேரம் கிடைக்கும் போது வாசித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றேன்.  ‘கவலைப்படாதீர்கள் நான் உங்களை கிறிஸ்தவனாக மாற்றிவிட மாட்டேன்’ என்றார்.  நான் கலகலவென்று சிரித்தேன்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.