ஆன்மீக முன்னேற்றம்

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். எனது முன்னாள் மாணவர்கள் பலர் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். அவர்களுள் ஒருத்தி சமூக சேவையில் மிகுந்த நாட்டமுள்ளவள். நாங்கள் அவ்வப்போது தொலைபேசியில் உரையாடுவதுண்டு.

அவள் ஒரு குழுவுடன் சேர்ந்து தியானப் பயிற்சி செய்து வருகிறாள். மற்றவர்களையும் அதில் இணைத்து தியானிக்கத் தூண்டிக் கொண்டிருக்கிறாள். என்னிடமும் அவள் தியான அனுபவங்கள் பற்றிப் பேசுவதுண்டு. ஒரு நாள் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘உனது ஆன்மீக முன்னேற்றம் எப்படி இருக்கிறது?’ என்றேன். சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை என்ற தொனியில் பேசினாள். ‘எப்போதும் உண்மையே பேசுகிறாயா?’ என்றேன். ‘அவ்வப்போது பொய் சொல்வதுண்டு’ என்றாள்.

நேர்மையான வாழ்க்கையே ஆன்மீகம். உண்மையே ஆன்மீகம். எப்போதும் உண்மை பேசினால்தான் ஆன்மீகப் பாதையில் முன்னேற்றம் ஏற்படும். உண்மை பேசுவதற்கு ஆசைகள் குறைவாக இருக்க வேண்டும். பேராசை கூடாது. சுயக்கட்டுப்பாடு மற்றும்  ஞாபகசக்தி அதிகமாக இருக்க வேண்டும். ஆக, சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கும் பயிற்சிகளை நீ மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் எப்போதும் உண்மை பேச முடியும்’ என்றேன்.

‘விளையாட்டுக்கு கூட பொய் சொல்லக் கூடாதா? அடுத்தவர் நன்மை அடைவதாக இருந்தால் கூட பொய் சொல்லக் கூடாதா? வள்ளுவர்,

‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்’ என்று கூறுவாரே’

என்றாள்.

‘அது அவ்வளவு சரியல்ல. இன்று பலர் சுய நலத்திற்காக பொய் சொல்கிறார்கள். சிலர் அடுத்தவர் நன்மைக்காக பொய் சொல்கின்றனர். பொய் சொல்வதன் மூலம் நீ உன்னை இழக்கிறாய். ஆன்மீகத்தில் சறுக்கிவிடுவாய். இதை நான் ஏற்கனவே அனுபவித்திருக்கிறேன். பிறர் நன்மைக்கு தானே என்று பொய் சொல்லி எனது ஆன்மீக முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்பட்டது’. அதிலிருந்து மீள்வதற்கு நான் மிகவும் துன்பப்பட்டேன். அதனால் பல பாதிப்புகள். இன்றும் அதன் பாதிப்புகள் உள்ளன.

‘ஒரு உதாரணம் கூறுகிறேன். ஒரு இளம் பெண் பயத்துடன் ஓடி உன்னைக் கடந்து செல்கிறாள். சில நிமிடங்களில் உடற்கட்டான ஒருவன் கொலை வெறியுடன் உன்னிடம், ‘ஒரு இளம் பெண் இங்கு வந்தாளா?’ என்று கேட்கிறான். உண்மையைச் சொன்னால் துரத்தி வந்தவன் அவளைக் கொடுமைப்படுத்துவான் அல்லது கொலை செய்வான். அதனால் உனக்கு பாவம் கிடைக்கும். இல்லை என்று சொன்னாலோ அதுவும் தவறு. ஆதலால் இன்னொரு வழியைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்’.

‘பொய் சொல்லக் கூடாது. ஆனால் நன்மை நடக்க வேண்டுமாயின் சில உண்மைகளை மறைக்கலாம். ஆம், ‘எதுவும் கூற விரும்பவில்லை. நீயே தேடிக்கொள்’ என்று நீ கூறலாமே. அதனால் ஒன்று அவன் உன்னை விட்டு விலகிச் செல்லலாம் அல்லது உன்னைக் கொடுமைப் படுத்தலாம் அல்லது உன்னைக் கொலை கூட செய்யலாம்’.

‘அதைப் பற்றி நீ கவலைப்படக் கூடாது. ஏனெனில் நாம் மறுபடியும், மறுபடியும் பிறக்கிறோம். ஆன்மா அழிவில்லாதது. இந்த உடல் பழுதடைந்துவிட்டால் புது உடலைப் பெறுகிறது. எப்படி புத்தாடை கிடைத்தால் நீ மகிழ்கிறாயோ அதைப்போல் புது உடல் கிடைத்தால் ஆன்மா மகிழ்கிறது. அடுத்த பிறவியில் உன் ஆன்மீக முன்னேற்றம் மிகவும் மேன்மையான வகையில் இருக்கும். ஆனால் நீ பொய் சொன்னால் உன் நிலையிலிருந்து வழுவுகிறாய். மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு பல வருடங்களாகும். அடைய முடியாமலும் போகலாம். ஆதலால் உண்மையே ஆன்மீகம். அதையே மேற்கொள். உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது’ என்றேன். அவளும் மெளனித்தாள்.
எனது அனுபவங்களில் இரண்டினை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு சென்னை தினத்தந்தி பத்திரிகை அலுவலகம் அருகில் அமைந்துள்ள அகர்வால் வித்தியாலயா மற்றும் இளநிலைக் கல்லூரியில் முதுநிலை இயற்பியல் ஆசிரியப்பணிக்காக விண்ணப்பித்திருந்தேன். அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியின் பேராசிரியர்கள் நேர்காணலை நடத்தினார்கள். இறுதியில் என்னைத் தேர்ந்தெடுத்தனர். சக ஆசிரியர்கள், ‘இங்கு இயற்பியல் ஆசிரியர்கள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எத்தனை வருடம் இங்கு வேலை செய்ய போகிறீர்கள்?’ என்றனர். ‘குறைந்தது ஒன்று அதிகபட்சம் இரண்டு வருடங்கள்’ என்றேன். ‘அதன் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்’ என்றனர். ‘சுய வேலைவாய்ப்பு’ என்று பதில் தந்தேன். ஏன் அந்த முடிவுக்கு வந்தேன் என்பதைப் பற்றி சுயவேலை வாய்ப்பும் வருங்கால இந்தியாவும் என்ற தலைப்பில் பின்னர் பகிர்ந்து கொள்வேன்.

பள்ளியில் சேர்ந்து சில வாரங்கள் கடந்தன. பள்ளி அலுவலர் ஒருவர் ஒரு ஒப்பந்த படிவத்தை என்னிடம் கொடுத்து கையெழுத்திட்டு கொடுக்குமாறு கோரினார். அதை வாசிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு விதியைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சி. உடனடியாக பள்ளி முதல்வரிடம் சென்று அந்த விதியைக் காட்டி, ‘ஐயா, ‘ஆசிரியர்கள் மூன்று மாணவர்கட்கு மேல் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது. நானோ, பல மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறேன். இதை முன்பே தெரிவித்திருந்தால் பள்ளியில் சேர்ந்திருக்க மாட்டேன். அவர்களை இனி நிறுத்த முடியாது. என்ன செய்யலாம்’ என்றேன். பள்ளியிலிருந்து விலகிவிடவா? என்ற தொனியில் பேசினேன். அவரோ அதன் பின்னால் இருந்த இன்னொரு வரியைக் காட்டினார். இதைப் பாருங்கள். ‘முதல்வர் அல்லது நிர்வாகத்தின் அனுமதியுடன் ஆசிரியர்கள் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்.  ஆதலால் நான் உங்களை அனுமதிக்கிறேன். நீங்கள் பள்ளியில் தொடர்ந்து கொண்டே வகுப்புகளையும் நடத்திக் கொள்ளலாம்’ என்றார். என்னால் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்துவதை முதல்வரிடமிருந்து மறைத்திருக்க முடியும். அதற்கு எனது மனசாட்சி இடந்தரவில்லை.

அதே பள்ளியில் எனது பணிக்காலத்தின் போது ஒரு முறை நானும் இன்னொரு ஆசிரியரும் தேர்வு நடத்துவதற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தோம். ‘மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்கு குறித்த நேரத்தில் வந்துவிட வேண்டும். பிந்தி வருபவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்று கட்டளை பிறப்பித்தோம்.

ஒரு மாணவன் தேர்வுக்கு பிந்தி வந்தான். தேர்வறைக்குள் அவனை அனுமதிக்க மறுத்துவிட்டேன். பள்ளி முதல்வர் திரு. சுப்பிரமணியம் அவர்களிடம் பையனை அனுப்பினேன்.
அவரோ, ‘பையனை தேர்வெழுத அனுமதியுங்கள்’ என்று எனக்கு பையன் மூலமாக குறிப்பெழுதி அனுப்பினார். அவர் எனக்கு மேலதிகாரி. அவருக்கு பணிவாக நடந்துகொள்ள வேண்டும். அதே போல் என்னால் சொல்லப்பட்டதையும் செயல்படுத்த வேண்டும். ‘என்ன செய்யலாம்’ என்று சிந்தித்தேன். பையனை, அறைக்கு வெளியே அமர்ந்து தேர்வு எழுதுமாறு பணித்தேன். அவனும் வெளியே உட்கார்ந்து தேர்வெழுதிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் பள்ளி முதல்வர் அவ்விடம் வந்தார்.

மாணவன் வெளியே உட்கார்ந்திருப்பதைக் கவனித்தவர், ‘நான் அவனை அனுமதிக்கச் சொன்னேனே. நீங்கள் எப்படி வெளியே உட்கார வைக்கலாம்’ என்று கூறி பலவாறு திட்டினார். நானோ, ‘பிந்திவரும் மாணவர்கள் தேர்வுக் கூடத்தில் அனுமதிக்கபட மாட்டார்கள் என அறிவுறுத்தினோம். நீங்கள் தேர்வெழுத அனுமதியுங்கள் என்று குறிப்பெழுதினீர்கள். இரண்டு பேருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டி வெளியே உட்கார்ந்து எழுதச் சொன்னேன். இதிலென்ன தவறு’ என்று வாதிட்டேன். அவர் திட்டிக் கொண்டே என்னை முறைத்துச் சென்றுவிட்டார். இப்படிப் பல நிகழ்வுகள் எனது பள்ளிப் பணியின் போது நடைபெற்றதுண்டு. என்னை அந்தப் பள்ளியில்  இருந்து வெளியே அனுப்புவதற்கு இந்த நிகழ்வும் ஒரு காரணம்.  ஆம், உண்மையை பேசுவதற்கும், செயல்படுத்துவதற்கும் பல தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் பின்னர் விளைவுகள் சிறப்பாகவே அமைந்தன. அந்த வருடம்தான் ஆழ்வார்திருநகர் காந்தி சாலையில் கிருஷ்ணா கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் செல்பாடுகள் போற்றத்தக்கவை. ஆயிரக் கணக்கான மாணவர்கள் அதனால் பலனடைந்தனர். எனது வருமானமும் பல மடங்கு பெருகியது. பல மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எமது கல்வி நிலையத்திலிருந்து உருவாயினர். இன்று உலகின் பல்வேறு நாடுகளில் அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். எங்கள் நாட்டுப் பணிக்கும், ஆன்மீகப் பணிக்கும் அவர்கள் சிறப்பாக உதவி வருகின்றனர்.

ஆம் அன்பு நெஞ்சங்களே! செயல் நன்றாக அமைந்தால் விளைவு நன்றாகவே அமையும். செயல் மோசமாக அமைந்தால் விளைவு மோசமாகவே அமையும். செயல் நன்றாக அமைந்து விளைவு மோசமானால் அந்த மோசமான விளைவும் பிற்கால நன்மைக்கே. செயல் மேசமாக அமைந்து விளைவு நன்றாக அமைந்தால் அந்த நல்ல விளைவும் பிற்கால அழிவிற்கே. 

ஆனால் உண்மையைச் செயல்படுத்துவதிலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது இறைவன் தடுத்தால் மட்டும் நாம் அதிலிருந்து விலகலாம். விலகுவது மிகவும் நன்மையைக் கொடுக்கும். சில வருடங்களுக்கு முன்பு இறைவன்  எச்சரித்தும், நான் பேசியதை செயல்படுத்த வேண்டும் என்ற தீவிர எண்ணத்தால், செயல்படுத்தி பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. ஆம்! அன்று இறைவன் சொன்னதை செயல்படுத்தியிருந்தால் பல துன்பங்களைத் தவிர்த்திருக்க முடியும். இதைப் பற்றி விளக்கமாக ‘விலக்கு’ என்ற பதிவு பிற்காலத்தில் பகிர்ந்து கொள்ளப்படும். ‘ஆனால் கர்ணன் ஏன் அப்படி விலகவில்லை?’ என்று நீங்கள் கேட்கலாம். அவன் துரியோதனனிடமிருந்து பல உதவிகள் பெற்றதால் செஞ்சோற்றுக் கடன் என்ற பெயரில் அவனால் விலக முடியவில்லை. ஆம் துரியோதனனிடம் இருந்து இலவசமாக பலவற்றைப் பெற்றதால் பாவம் அவனை இறுகப் பற்றிக் கொண்டது. கெட்டவர்களிடமிருந்து பணமோ அல்லது உதவியோ பெற்றுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். அவர்களின் உதவி அந்நேரம் வெற்றியைக் கொடுத்தாலும் பிற்காலத்தில் பல பிரச்சனைகளைக் கொடுக்கும்.

ஆம் அன்பு நெஞ்கங்களே, உண்மை பேசினால் மட்டுமே ஆன்மீகத்துறையில் முன்னேற முடியும்.  மேலும், நேர்மையான முறையில் சம்பாதிக்க வேண்டும். எந்த செயலுமே நன்மை மற்றும் தீமைகளின் கலவையாகவே அமையும். நன்மையல்லாத தீமையோ, தீமையல்லாத நன்மையோ உலகில் இல்லை. ஒருவருக்கு நன்மை, இன்னொருவருக்குத் தீமையாகலாம். ஆதலால் நேர்மையாக சம்பாதிப்பதில் ஒரு பகுதியை கண்டிப்பாக தான, தருமங்களுக்காக செலவிட வேண்டும். இப்படிச் செயல்பட்டால் உங்கள் ஆன்மீக முன்னேற்றம் மிகச் சிறப்பாக அமையும். ‘அப்படியென்றால், கோவில் சுற்றுதல், இறை வழிபாடு, விரதம், நீறு பூசுதல் போன்றவை தேவையில்லையா?’  என்று நீங்கள் கேட்கலாம். கண்டிப்பாக தேவை. இவை உங்கள் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துகின்றன. ஆதலால் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆம், உண்மையே ஆன்மீகம். நேர்மையான வாழ்க்கையே ஆன்மீகம். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.