சிபியை மிஞ்சிய சிறுவன்

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். சிபிச் சக்கரவர்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அவர் ஒரு மன்னர். இந்தியத் திருநாட்டின் பெரும்பகுதியை நீதி நெறியுடன் ஆட்சி செய்தவர். ‘இல்லை’ என்று கேட்பார்க்கு ‘இல்லை’ என்று கூறாது கொடுக்கும் பண்புள்ளவர். உயிர்களிடத்து அதிக இரக்கம் கொண்டவர். அவரது ஆட்சி காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்தது. வருடம் மூன்று முறை நெல் விளைந்தது. மக்கள் மிகவும் நிம்மதியாக வாழ்ந்தனர். அவரது புகழ் எங்கும் பரவியது. இப்படிப்பட்ட ஆட்சியையே காந்தி இராமராஜ்ஜியம் என்றார். ஆம், மக்களை நிம்மதியாக வாழச் செய்வதுதான் ராமராஜ்யம்.

இப்படி ஆட்சி செய்த சிபியின் குணத்தை சோதிக்க நினைத்த தேவர்கள் இருவர் இரு பறவைகளாக உருமாறினர். இந்திரன் கழுகாகவும், அக்கினி பகவான் புறாவாகவும் மாறினர். கழுகு புறாவைத் துரத்தியது. இன்னும் ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்தலாம் என்று சிந்தித்துக் கொண்டே அரண்மனை மாடத்தில் அமர்ந்திருந்தார் சிபி. புறா ‘என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் காப்பாற்றுங்கள்!’ என்று கதறிக் கொண்டே அவரது மடியில் தஞ்சமடைந்தது.

கழுகு அவரை நெருங்கி புறாவைக்  கவ்விச் செல்ல முயன்றது. சிபி கழுகைத் தடுத்தார். கழுகோ, ‘புறா எனக்கு உணவு. ஆகவே எனக்கு உணவு கிடைப்பதை தடை செய்வது பாவமாகும். ஆதலால் புறாவை என்னிடம் கொடுத்துவிடுங்கள்’ என வாதிட்டது. 

சிபியோ, ‘என்னிடம் அடைக்கலம் அடைந்தவர்களைக் காப்பது எனது கடமை. ஆதலால் அதன் எடைக்கு எடை வேறு உணவு கொடுக்கிறேன்’ என்றார். ‘எடைக்கு எடை உனது சதையைக் கொடுக்க முடியுமா?’ என்று கழுகு கேட்டது. சிபியும் ஒத்துக் கொண்டார். புறா ஒரு தராசு தட்டில் வைக்கப்பட்டது. அதே அளவு சதையை தன் காலிலிருந்து அரிந்து அடுத்த தட்டில் வைத்தார் சிபி. புறா இருக்கும் தட்டு தாழ்ந்தது. அடுத்த காலிலிருந்தும் சதையை அரிந்து வைத்தார். மறுபடியும் புறா இருந்த தட்டே தாழ்ந்தது. இப்படி பல முறை சதை அரிந்து வைத்தும் புறா இருந்த தட்டே தாழ்ந்தது. இறுதியில் தராசின் அடுத்த தட்டில் சிபியே உட்கார்ந்தார். இரு தட்டுகளும் சம நிலைக்கு வந்தன. ஆம், ஒரு புறாவைக் காப்பாற்ற தன்னையே கொடுக்க முன் வந்தார் சிபிச் சக்கரவர்த்தி. அதன் பிறகு இறையருளால் அவர் உடல் காயங்களெல்லாம் ஆறி பழைய நிலையை அடைந்தது. இது நடந்தது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆன்மீக சக்தியால் இது சாத்தியமே. இந்நிகழ்வை நீங்கள் உணர வேண்டுமென்றால் குறைந்தது ஐந்து வருடங்களாவது உண்மை பேசுங்கள். நேர்மையாக வாழுங்கள். பேசியதை செயல்படுத்துங்கள். ஆம், உண்மையே ஆன்மீகம். நேர்மையான வாழ்க்கையே ஆன்மீகம். 

ஆனால் இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள். எப்படித் திட்டமிட்டால் மக்கள் பணத்தை சுரண்டலாம் என்பதிலேயே பெரும்பாலான ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர். மக்களும் துன்பப்படுகின்றனர். ஏனெனில் இப்படிப்பட்ட ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்ததும் மக்கள் தானே. ஆம், மக்கள் தங்கள் தகுதிக்கேற்ப தலைவனைத் தேர்ந்தெடுக்கின்றனர். இயற்கையும் மக்களை வஞ்சிக்கிறது. மேற்கூறிய வரலாறு இந்திய இதிகாசங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பெருமை பெற்ற, இரக்க குணத்தின் உச்சம் தொட்ட சிபிச் சக்கரவர்த்தியையே மிஞ்சிவிட்டான் ஒரு சிறுவன். அவனது செயலைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

திரு.சேஷன் அவர்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த போது உத்திரப் பிரதேசத்தில் ஒரு சுற்றுலா தலத்திற்குச் சென்றார். அங்கு குருவி கூடுகள் நிறைந்த ஒரு மாந்தோப்பை பார்த்தார். பல மரங்களில் ஆங்காங்கே குருவிக் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர் தன் மனைவியுடன் அந்த தோப்பை இரசித்துக் கொண்டிருந்தார். திரு.சேஷன் அவர்களின் மனைவியோ அந்த குருவி கூடுகளில் இரண்டை வீட்டிற்கு கொண்டு போய் வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால் அந்தக் குருவி கூடுகளை ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் பாதுகாத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். இயற்கையை இரசித்துக் கொண்டிருந்தான்.

திரு.சேஷன் அவர்களின் மனைவியோ அச்சிறுவனை அழைத்து, ‘தம்பி, இந்த குருவி கூடுகளை நீதானே பாதுகாத்துக் கொண்டிருக்கிறாய்’ என்று வினவ அவனோ ‘ஆம், இது எங்கள் தோப்புதான்’ என்றான். அவனிடம் ‘இக்குருவிக் கூடுகளில் இரண்டை கொடுக்கிறாயா?’ என்று கேட்க அச்சிறுவனோ, ‘அதெல்லாம் தர முடியாது’ என்றான். வந்தவரோ, ‘நான் உனக்கு 10 ரூபாய் தருகிறேன்’ என்று கூறியும் சிறுவன் மறுத்துவிட்டான். அவருக்கோ அதிர்ச்சி மற்றும் வருத்தம். அவர் தன் கணவனிடம் இதை கூற அவரோ அச்சிறுவனிடம் சென்று ‘தம்பி நான் உனக்கு 10 ரூபாய் அல்ல 50 ரூபாய் தருகிறேன். இரண்டு குருவிக் கூடுகளை கொடுக்கிறாயா?’ என்று கேட்டார். அச்சிறுவனோ மறுபடியும் தர மறுத்துவிட்டான். 

இதனால் கோபமடைந்த ஐஏஎஸ் அதிகாரி தனது காவலர்களிடம், ‘நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. அம்மரத்திலிருந்து இரண்டு குருவிக் கூடுகளை வாங்கி வாருங்கள்’ என்றார். அவர்களோ அச்சிறுவனிடம் சென்று, ‘அவர் ஒரு பெரிய ஐஏஎஸ் அதிகாரி தெரியுமா? தற்போது அவர் தலைமை தேர்தல் அதிகாரி. அவர் கேட்டால் இரண்டு கூடுகளை தர மாட்டாயா?’ என்று மிரட்டினர். 

அச்சிறுவனோ அழுது கோண்டே திரு.சேஷன் மற்றும் அவர் மனைவியிடம், ‘ஐயா, நீங்கள் எவ்வளவு வற்புறுத்திக் கேட்டாலும்  இதில் ஒரு கூட்டை கூட தரமாட்டேன். ஏனென்றால் தாய் பறவை தன் குஞ்சுகளுக்கு உணவு தேடி வெளியே சென்றிருக்கிறது. அது திரும்பி வரும் போது கூடு இல்லையென்றால் மிகவும் கஷ்டப்படும். அது தவித்துப்போய்விடும். தன் குஞ்சுகளைக் காணாமல் கூடு இருந்த இடத்தையே சுற்றி சுற்றி வரும். அதன் தவிப்பை பார்க்க என்னால் முடியாது. அதற்கு பதில் நான் இறந்து போய் விடலாம். அதனால் நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் நான் கூட்டைத் தரமாட்டேன்’ என்று கூறினான். இதை கேட்ட அதிகாரி மற்றும் அவர் மனைவிக்கோ ஆச்சரியம். ‘இச்சிறு வயதில் இவன் எவ்வளவு பெரிய மனதுடன் இருக்கிறான். நமக்குக் கூட இது தோன்றவில்லையே’ என்று மிகவும் வருத்தப்பட்டனர். அச்சிறுவனிடம் மன்னிப்பு கேட்டு அவனைப் பாராட்டினர். தனக்கு குருவிக்கூடு வேண்டாம் என்று அவ்விடத்தை விட்டு அகன்றனர். இந்நிகழ்வு அவ்வதிகாரியை மிகவும் பாதித்தது. அவர் அதன் பிறகு பேசும் மேடையிலெல்லாம் பெரும்பாலும் இந்நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். எல்லா உயிர்களையும் சமமாக பார்க்க வேண்டும் என்று தனக்கு இந்நிகழ்வு உணர்த்தியதாகக் கூறினார். ஆம் இரக்க குணத்தில் சிபிச் சக்கரவர்த்தியையும் மிஞ்சிவிட்டான் சிறுவன். 

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் எனது மகன் மற்றும் மகளுடன் சென்னை விருகம்பாக்கத்தில் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு கடை முன்னே நின்று கொண்டிருந்தேன். சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அடிபட்ட பூனைக்குட்டியொன்று எங்கு செல்வது என்று அறியாது முச்சந்தி சாலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. பலரும் அதைக் கண்டும் காணாதவாறு சென்று கொண்டிருந்தனர். கார்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் மக்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமார் பதின்மூன்று வயதுள்ள சிறுவன் ஒருவன் அந்த பூனைக்குட்டி அருகே ஓடோடிச் சென்று அந்தப் பூனைக்குட்டியை அணைத்துக் கொண்டு நான் நின்றிருந்த கடை அருகே வந்தான். கடைக்காரரோ, ‘சிறுவனுக்கு இருக்கும் இரக்கம் கூட நமக்கில்லையே’ என்றார். நான் புன்னகைத்தேன்.

அந்தக் குட்டியை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான் சிறுவன். அச்சிறுவனும் அவனது அக்காவும் இரண்டு நாட்கள் அக்குட்டியைப் பாதுகாத்தனர். அதன் பின்னர் அவர்கள் அதைப் பராமரிக்கும் நிலையில் இல்லை. ஆதலால் பிராணிகள் நலம் காக்கும் இயக்கத்திடம் ஒப்படைத்ததாக பின்னர் அறிந்தேன். இப்படிப்பட்ட சிறுவர்களுக்கு இருக்கும் இரக்க குணம் கூட இன்று பெரும்பான்மையான பெரியவர்களுக்கு இல்லை. இப்படிப்பட்ட சிறுவர்களை வாழ்த்துவோம்.

இன்னொரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தார்.

ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். காரணம் அடிக்கடி அங்கு பூகம்பமும், சுனாமியும் ஏற்படுவதுண்டு.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும் போது வீட்டின் சொந்தக்காரர் இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கியிருப்பதை பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றிப் பார்த்தார். வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும் போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது என்பதைக் கவனித்தார். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆணி அடித்து குறைந்தது மூன்று வருடங்களாவது இருக்கும். எப்படி இந்த பல்லி மூன்று ஆண்டுகள் உயிருடன் இருந்தது? இதை நாம் கண்டுபிடித்தாக வேண்டுமென்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியைக் கண்காணித்துக் கொண்டிருந்தார் .

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார். அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு ஊட்டுவதைப் பார்த்தார். அவருக்கு தூக்கிவாரிப்போட்டது. மூன்று ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கியிருந்த தன் சக பல்லிக்கும உணவு அளித்து வந்துள்ளது. ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மூன்று ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும் போது நம்மால் முடியாதா… சிந்தித்துப் பாருங்கள் அன்பு நெஞ்சங்களே!

ஆனால் பெரும்பாலான மனிதர்களைப் பாருங்கள். விலங்குகள் மீதும், பறவைகள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் மீதும் இரக்கமில்லாமல் தன் சுய லாபத்திற்காக இயற்கையை எவ்வாறு அழிக்கிறார்கள். அதனால்தானே பூமி இன்று வெகுவாக தன்னிலையை இழந்து வருகிறது. மனிதனின் இரக்க குணம் அதிகரித்தாலே பூமியை நாம் காப்பாற்ற முடியும். ஆம், சிந்திப்பீர்கள் அன்பு நெஞ்சங்களே! பூமி நன்றாக இருந்தால்தானே நம் சந்ததியினர் சிறப்பாக வாழ முடியும். ஆதலால் நம்மால் முடிந்த வரை பூமியைக் காப்போம். அதற்காக முழுமூச்சுடன் செயல்படுவோம். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.