Click ▶ for audio
பேரரசன் விக்கிரமாதித்தர் வட இந்தியாவின் பல பகுதிகளை ஆண்டவர். நாட்டில் ஆறு மாதம், காட்டில் ஆறு மாதம் வசித்து தன் பணியை செவ்வனே செய்தவர். தனது மந்திரி பட்டியுடன் அவர் செய்த ஏராளமான சாகசங்களை கதைகளில் படித்திருப்பீர்கள். கூடு விட்டுக் கூடு பாய்தல் என்ற கலையில் வல்லவர். அதன் மூலமும் பல சாகசங்களை நிகழ்த்தியவர். விக்கிரமாதித்தர் வேதாளத்துடன் நிகழ்த்திய உரையாடல்களும் மிகவும் பிரபலம்.
சில வருடங்களுக்கு முன் வெளியான ‘போகன்‘ தமிழ் திரைப்படம் கூடுவிட்டு கூடு பாய்தலை மையமாகக் கொண்டது. இக்கட்டுரையை வடிவமைக்கும் சமயத்தில் இப்படியொரு திரைப்படம் வெளிவந்துள்ளது என்று தெரிந்து அதில் என்ன கொடுத்துள்ளார்கள் என்று தெரிந்துகொள்ள நானும் திரைப்படத்தை கவனித்தேன்.
ஆதித்தியாவாக நடித்த அரவிந்தசாமி கூடு விட்டு கூடு பாய்தல் கலையை உபயோகித்து பல தவறுகள் செய்ததை உங்களில் சிலர் திரைப்படத்தில் கண்டிருப்பீர்கள். அதை முறியடிக்க விக்ரமாக நடித்த ஜெயம் ரவி பட்ட கஷ்டங்களையும் கண்டிருப்பீர்கள். இதெல்லாம் சாத்தியமா என்று நீங்கள் நினைக்கலாம்.
தனது பயிற்சியால், சக்தியால் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலுக்குள் புகும் சக்தியை பல ஞானிகள், சித்தர்கள் பாரதத்தில் பெற்றிருந்தனர். தேவையின் பொருட்டுப் பிற உடலுக்குள் புகுந்து, பிறகு தனது உடலுக்குள் திரும்பினர். இதையே கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்று கூறுவர். இங்கே கூடு என்பது உடலைக் குறிக்கும். ஆம் உயிர் உறையும் வீடே இந்த உடலாகும்.
வரலாற்றில் பதிவாகியுள்ள பல நிகழ்வுகளில் இரண்டு நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஆதி சங்கரர் சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தலைசிறந்த யோகி. தத்துவ ஞானி. இந்து மதத்திற்கு மறுமலர்ச்சியூட்டியவர். அத்வைதத்தை பரப்பியவர். இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். தனது ஞானத்தால் பல பண்டிதர்களை வாதில் வென்றார். குமாரில பட்டர் என்பவரை வாதத்திற்கழைத்தார். அவரோ, ‘நான் செய்த தவறுகளுக்கு என்னை தண்டித்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் இறந்துவிடுவேன். நீங்கள் மந்தன் மிஸ்ராவை நாடிச் செல்லுங்கள். அவருக்கு நூற்றுக் கணக்கில் சீடர்களும் உண்டு. அவரை நீங்கள் வாதில் வென்றால் அவரது சீடர்களும் உங்களுக்கு சீடர்களாகிவிடுவார்கள்’ என்றார். அங்கு சென்ற சங்கரர் மந்தன் மிஸ்ரா என்ற பண்டிதரையும் தனது வாதத்தால் வென்றார். அவரது மனைவியான பாரதி என்பவள், மனைவி கணவனின் பாதி என்பது நமது தர்மம். ஆதலால் என்னையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாக அர்த்தம் எனக்கூறி சங்கரரை வாதுக்கழைத்தாள். சங்கரரும் ஒத்துக் கொண்டார். கணவன் மனைவியின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி பாரதி வினாக்களைத் தொடுத்தாள். சங்கரரோ பிரம்மச்சாரி. குடும்ப வாழ்க்கையைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. மந்தன் மிஸ்ராவுக்கோ, ஒரு பிரம்மச்சாரியிடம் மனைவி இப்படி கேட்பது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. ஆனாலும் அமைதி காத்தார். சங்கரரால் பதில் கூற முடியவில்லை. சில காலம் அவகாசம் கொடுக்கப்பட்டது. சில நாட்களில் அந்தப் பகுதியை ஆண்ட மன்னனின் ஆவி பிரிந்தது. இதை தனது சக்தியால் உணர்ந்தார் சங்கரர். தனது சீடர்களிடம் தனது உடலைப் பாதுகாக்கும்படிக் கூறி தனது உடலை விட்டு வெளியேறி அரசனது உடலுக்குள் புகுந்தார். அரசியிடம் இருந்து குடும்ப வாழ்க்கையின், அந்தரங்க வாழ்க்கையின் நியதிகளை, இரகசியங்களைக் கற்றார். மிகச் சிறப்பாக ஆட்சி செய்தார் சங்கரர். அரசனின் நடத்தையில் சிறப்பான மாறுதல்களைக் கண்ட மக்கள், மந்திரிகள் வியந்தனர். மந்திரி ஒருவர் சந்தேகப்பட்டார். சிந்தனையிலாழ்ந்தார். காவலர்களிடம், ‘சுற்று வட்டாரத்தில் எங்காவது இறந்த உடலைப் பாதுகாப்பாக வைத்துள்ளனரா என்று தேடுங்கள். கண்டுபிடித்தால் அதை அழித்துவிடுங்கள்’ என்று கட்டளையிட்டார். வீரர்கள் உடல் பாதுகாக்கப்பட்ட இடத்தைக் கண்டறிந்தனர். சந்தனக் கட்டைகளை அடுக்கி அவரது உடலை அதன் மீது கிடத்தி காவலர்கள் தீயிட்டனர். இதை அரசர் உடலுள்ளிருந்து சங்கரர் உணர்ந்தார். அந்த உடலை உகுத்துவிட்டு தன் சொந்த உடலுக்குத் திரும்பினார். பின்னர் தன் சீடர்களுடன் சென்று பாரதி என்ற அந்தப் பெண்ணை வாதில் வென்றார். மந்தன் மிஸ்ரா, அவரது மனைவி மற்றும் சீடர்கள் சங்கரரின் சீடர்களானார்கள். மந்தன் மிஸ்ராவைத்தான் பிற்காலத்தில் சங்கரர் உருவாக்கிய ஐந்து பீடங்களுள் ஒன்றான சிருங்கேரி பீடத்திற்கு அதிபதியாக்கினார்.
சுந்தரநாதர் நாயன்மார்களில் ஒருவர். இவர் நந்தி பெருமானின் சீடர். ஒரு நாள் வழக்கம் போல் காவிரியில் நீராடி இறைவனை வழிபடச் சென்றார். வழியில் மூலன் என்ற மாடு மேய்ப்பவன் இறந்து கிடந்ததையும், அவனது பிரிவைத் தாங்காத பசுக்கள் அவனது உடலை முட்டிக் கொண்டும், முகர்ந்து கொண்டும் பிரிவால் தவித்ததையும் கண்டு மனமிரங்கினார். அப்பசுக்களின் துயர்களைய கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்ற வித்தை மூலம் மூலனின் உடலில் புகுந்து, பசுக்களை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். தன் கணவன் வழக்கமான நேரத்தில் வீடு திரும்பாமையால் கவலையுற்றிருந்த மூலனின் மனைவி மிகுந்த ஆசையுடன் அவரை நோக்கி ஓடி வந்தாள். அவரை கட்டி அணைக்க அருகில் நெருங்கினாள் . அவர் விலகிச் சென்றார். இவ்வளவு பாசமுள்ள மனைவி மூலன் இறந்த செய்தி உடனே தெரிந்தால் மிகவும் துயரப்படுவாளே என்றுணர்ந்த சுந்தரநாதர் அவளுடன் சில காலம் வசிக்க முடிவு செய்தார். ஆனால் வந்தவர் நடவடிக்கை தன் கணவனின் நடவடிக்கையை விட மிகவும் வித்தியாசமாக இருக்க காரணத்தை வினவினாள். உண்மையைக் கூறியவர், ‘நான் சில தினங்களில் உன்னைவிட்டு விலகிவிடுவேன்’ என்றார். ஆனால் அவள் சுமங்கலியாக வாழ விரும்பி தன் கணவனுக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி ஊராரிடம் நியாயம் வேண்டி முறையிட்டாள். அவர்களிடம் பேசியவர், தான் அவள் கணவன் மூலனல்ல. பசுக்களின் துயர்களையவே இறந்த அவள் கணவனின் உடலில் புகுந்ததாகக் கூறினார். நடந்த அனைத்தையும் கூறினார். தீர்ப்பு வழங்கக் காத்திருந்தவர்களோ அதை உங்களால் நிரூபிக்க முடியுமா என்று கூற மூலனின் உடலிலிருந்து அவர் ஆன்மா வெளியேற அவன் உடம்பு கீழே சரிந்தது. மறுபடியும் அவ்வுடலில் புகுந்தார். மக்கள் மன்றமோ அவர் எப்போது வேண்டுமானாலும் திரும்பிச் செல்லலாம் என கட்டளையிட்டது. திரும்பி வந்த போது தன் சொந்த உடலைக் காணாது வருந்தினார். இது இறைவன் திருவிளையாடலே என உணர்ந்தார். திருவாவடுதுறை கோயிலின் அரச மரத்தடியில் மூலனின் உடலுக்குள்ளிருந்தே தியானத்தில் அமர்ந்தார். மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தை இயற்றினார். மூலனின் உடலைக் கொண்டிருந்ததால் திருமூலர் என்றழைக்கப்பட்டார். வணிகம் செய்யவும், மதத்தை பரப்பவும் வந்த ஐரோப்பியர்களால் திருமந்திரம் பல மொழிகளில் பிற்காலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் அருமையும் பெருமையும் உலகமெல்லாம் பரவியது. ஆம்! ஆன்மா தேவையான காரியங்களுக்காகத் தன் உடலைவிட்டு, பிற உடலில் புகுந்து, காரியம் முடிவடைந்தவுடன் உடலுக்குத் திரும்புவது சாத்தியமே! இதற்குக் காரணம் அபரிதமான மனோசக்தியும், பயிற்சியுமே! ஆம், இளைஞர்களே! மனோசக்தியால் பல அரிய காரியங்களை சாதிக்க முடியும். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
Today we don’t know anyone knows this. We have no refernce to such skill after people partially lost our tradition due to invasions of middle East and Western people and mixed with their culture.
Anyway thanks for the article
Thank you for your comments, Sir!
Good history’s
அன்புடையீர்,
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
கிருஷ்ணதாசன்