உங்களுக்கு பயப்படுங்கள்

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

இளைஞர்களே! பொதுவாக நீங்கள் பிறருக்கு பயப்படுகிறீர்கள்.  பெற்றோருக்கு, ஆசிரியர்கட்கு, மேலதிகாரிகளுக்கு என்று இந்த வட்டம் விரிந்து கொண்டே செல்கிறது.  ஆனால், ‘நீங்கள் பிறருக்கு பயப்படாதீர்கள்.  உங்களுக்கு பயப்படுங்கள்’ என்று சொல்வது பொருத்தமானது.

பெற்றோர், பெரியோர், ஆசிரியர், மேலதிகாரிகள் போன்றோரிடம்  பணிவு காட்டுங்கள், மரியாதை கொடுங்கள்.  நல்ல விஷயங்களில் கீழ்படிந்து நடந்து கொள்ளுங்கள்.  ஆனால் பயப்படாதீர்கள்.  பயம் வேறு! மரியாதை வேறு! பயம் வேறு! பணிவு வேறு!  அவர்கள் சொல்வது தவறு என்று தெரிந்தால் பணிவாக அவர்களிடம் சுட்டிக் காட்டுங்கள்.  தவறென்று தெரிந்தும் நீங்கள் அதைச் செய்தால் உங்கள் தனித்தன்மையை இழந்துவிடுவீர்கள்.  இது மிகவும் ஆபத்தானது.  இது உங்களுக்கும் நாட்டிற்கும் மிகுந்த தொல்லையையே கொடுக்கும்.

நீங்கள் உங்களுக்கு மட்டுமே பயப்பட வேண்டும்.  உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் பயப்பட வேண்டும்.  ‘உங்களுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்’.  ஏனென்றால், உங்களுக்குள் கடவுள் வீற்றிருக்கிறார்.  உங்களின் கடவுள் தன்மையை வெளிப்படுத்துங்கள்.  மரணத்தைவிட மரணபயம் மிகவும் அபாயமானது.  இன்று பல பிரச்சனைகளுக்கு பேராசையும் மரண பயமுமே காரணம்.  வாழ்க்கையைப் பற்றிய புரிதல் வரும் போது மரணபயம் தானாகவே விலகிவிடும்.

உங்கள் சுயக்கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, மனத்தூய்மை, தியாக மனப்பான்மையை மேம்படுத்துங்கள்.  இப்போது பிறருக்கு பயப்படுதல் குறைய ஆரம்பிக்கும்.  வெற்றியினை குவிப்பதற்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் இவை வழிகோலும்.

எனது நண்பன் கதிரவன்.  ஒரு பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தான்.  மிகவும் நேர்மையானவன்.  எல்லோரையும் சமமாகவே பாவிப்பான்.  பள்ளியின் தலைமை ஆசிரியை அவரிடம் ‘நீங்கள் யாருக்கும் பயப்படுவதில்லை.  உங்களை கட்டுப்படுத்த முடியவில்லையே! என்று புலம்புவார்.  அதற்கு கதிரவன், ‘நான் எனக்கு பயப்படுகிறேன்.  எனது மாணவர்களின் முன் தவறு செய்ய பயப்படுகிறேன்’ என்று கூறுவது வழக்கம்.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யுங்கள்.  எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யாதீர்கள்.  அப்போதுதான் வாழ்வின் குறிக்கோளை நீங்கள் உணர முடியும்.  அடைய முடியும்.  ஆனால் இறைவன் கட்டளையிட்டால் மட்டும் உண்மையை கூட தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.  ஏனென்றால் உங்களைவிட உங்களுக்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நல்லது எது என்று இறைவனுக்கு நன்கு தெரியும்.  நாம் தான் சில நேரங்களில் நல்லதை கெட்டதென்றும் கெட்டதை நல்லதென்றும் புரிந்து கொள்கிறோம்.    வாழ்வின் குறிக்கோளைப் பற்றியும் இறைவனின் விருப்பத்தை எப்படி உணர்வது என்பதை பற்றியும் கூடிய விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

கர்மவீரர், கருப்பு காந்தி என்று புகழப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சரான காமராசர் அவருக்கு மட்டுமே பயப்பட்டார்.  அதனால் தான் பல சாதனைகளை அவரால் புரிய முடிந்தது.  பல பத்தாண்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் மனதை ஆட்கொண்டுள்ளார்.

மகா அலெக்சாண்டர் மாவீரன். பல நாடுகளை வென்று இந்தியாவிற்குள் நுழைந்தார்.  வட இந்தியாவின் சில பகுதிகளை வெற்றி கொண்டார்.  திரும்பிச் செல்கையில் இந்திய யோகி ஒருவரை அழைத்து வருமாறு அவர் குரு முன்பே கேட்டிருந்தார்.

அலெக்சாண்டரின் ஆணைப்படி அவருடைய தளபதிகளிலொருவர் மரத்தின் நிழலில் தியானத்திலிருந்த யோகி ஒருவரிடம், ‘மகா அலெக்சாண்டர் உங்களை அழைத்து வரச் சொன்னார்’ என்றார்.

‘யாரவர்’ என்றார் யோகி.  ‘பேரரசர், சக்கரவர்த்தி அலெக்சாண்டர்’ என்றார் வந்தவர்.  ‘நான் வரமாட்டேன்.  அவர் விரும்பினால் இங்கே வரச்சொல்’ என்றார் யோகி.

செய்தியறிந்த மன்னர் கோபத்துடன் வாளை உருவிக் கொண்டு யோகியிடம் வந்தார்.  ‘நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உங்கள் தலையை வெட்டிவிட முடியும்’ என்றார் மன்னர்.

‘நீ யாராயிருந்தால் எனக்கென்ன? உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்.  நான்  என்றால் இந்த உடல் என்று நினைத்தாயா?  அல்ல மன்னா, ஆன்மா.  ஆன்மா அழிவில்லாதது.  அதை உன் வாளால் வெட்ட முடியாது.  தண்ணீரால் அடித்துச் செல்ல முடியாது.  நெருப்பு அதனை எரிக்காது.  முதலில் கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்.  உன் வாளை உறையில் போடு’ என்றார் சாந்தமாக.  யோகியின் முகப்பொலிவையும், கம்பீரத்தையும் கண்ட அலெக்சாண்டர் வியந்தார்.  அவர் முன் மண்டியிட்டார்.  ஆனால் இன்றைய நிலையென்ன? துறவி என்று சொல்லிக் கொள்ளும் சிலரை மேற்கூறிய துறவியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.  உண்மை நிலை உங்களுக்கே நன்றாக புரியும். ஆம், நாம் நமக்கு பயப்பட்டால், நம்முள் இருந்து ஆட்சி செய்யும்  இறைவனுக்கு  பயப்பட்டால், வேறு யாருக்கும் பயப்படத் தேவையில்லை.  நிம்மதியான வாழ்க்கைக்கு இதுவும் முக்கியம்.  ஒவ்வொருவரும் அவர்களுக்கு  பயப்பட ஆரம்பித்தால் நாட்டின் பிரச்சனைகள் சீக்கிரம் குறைந்துவிடும்.  ஏனெனில் தனக்கு பயப்படுபவர்கள் பெரும்பாலும் தவறிழைக்கமாட்டார்கள்.  மற்றவர்களுக்கு மட்டுமே பயப்படுபவர்கள் கண்காணித்து கட்டுப்படுத்துபவர் இல்லையெனில் தவறிழைக்க ஆரம்பித்துவிடுவர்.  ஆம், அன்பு நெஞ்சங்களே நீங்கள் உங்களுக்கு மட்டுமே பயப்படுங்கள்.  பிறருக்கு மரியாதை அளியுங்கள்.  வெற்றி நிச்சயம்.  வாழ்த்துக்கள்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.