மருத்துவ சாதி

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்புள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு எனது அன்பு வணக்கங்கள்.  இன்று மருத்துவ சாதி என்ற தலைப்பில் தங்களிடம் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக சாதிப்பிரச்சனைகள் எங்கும் தலைவிரித்தாடுகிறது.  மதப்பிரச்சனைகளுக்கடுத்து சாதி மோதல்கள் பல உயிர்களைக் காவு வாங்கிவிட்டது.  இதற்கு காரணம் சாதிகளைப் பற்றிய புரிதலும் தெளிதலும் இல்லாமையே.  ஆம், அறியாமையே இவற்றிற்கெல்லாம் மூல காரணம்.  சாதிகளின் தோற்றத்தைப் பற்றி சுமார் 25 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரையை தற்போது சற்று மேம்படுத்தி தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது சிந்தனை

சாதிகள் எப்படி உருவாயின?  அவற்றின் தோற்றம் எப்படிப்பட்டது?  என்று தெரிந்து கொள்வதற்காக தீவிரமாக சிந்தித்தேன்.  என் மனம் மிக வேகமாக பின்னோக்கிச் சென்றது.  சங்ககாலம், இதிகாசகாலம், வேதகாலத்தை தாண்டி கற்காலத்தில் காலடி எடுத்து வைத்தது.  ஆம்! மனித இனத்தின் ஆரம்ப காலத்திற்கு மனம் என்னை இழுத்துச் சென்றது. மனித இனத்தின் ஆரம்பம், சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, தேவை போன்றவை எனது மனத்திரையில் தெளிவாகத் தெரிந்தன.  அவற்றை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விரிந்து பரந்த ஆற்றுச் சமவெளி.  வானளாவிய மரங்கள்.  மலர்களை சுமந்து கொண்டிருக்கும் தாவரங்கள்.  அங்கே ஓர் ஆணும், பெண்ணும் உலவிக் கொண்டிருந்தனர்.  கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன.  மரங்களிலே பறவைகளும், காடுகளிலே விலங்குகளும் கூடிக்குலாவின. இயற்கையின் விநோதங்களை இரசித்தனர்.  இயற்கையால் உந்தப்பட்டு மெய் மறந்தனர்.  நாட்கள் உருண்டோடின.  தாய் தந்தையராயினர்.  தங்கள் குழந்தைகளுடன் காட்டிலும், மலையிலும் சுற்றி அலைந்தனர்.  காய், கனிகளையும் கிழங்குகளையும் புசித்துப் பசியாறினர்.  அக்குழந்தைகள் பெரியவராயினர்.  காட்டு விலங்குகளுக்கும், இயற்கையின் சீற்றத்திற்கும் அச்சப்பட்டு மலைக்குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வசித்தனர்.  சில சமயங்களில் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டனர்.  இதனால் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தனர்.  மக்கள் தொகை வேகமாகப் பெருகியது.  அப்போது அவர்களுக்குப் பெரும் பிரச்சனைகள் எழுந்தன.

குழு விவாதம்

ஒரு நாள் தங்கள் பிரச்சனைகளைப் பேசவும், அதற்கு தீர்வு காணவும் மக்கள் அனைவரும் ஒன்று கூடினர்.  முதியவர் ஒருவர் எழுந்தார்.  ‘மக்களே! நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம்.  உணவுக்காக வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது.  விலங்குகளாலும் பிற குழுக்களாலும் நமக்குத் தொல்லைகள் ஏற்படுகின்றன.  நம்முடைய சந்ததியினர் நன்றாக வாழ சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.  அதற்காக உங்களின் கருத்துக்களை கூறுங்கள்’ என்று கூறி உட்கார்ந்தார்.  வயதான, ஆனால் முக வசீகரமும், ஒளி பொருந்திய கண்களையுடைய  ஒருவர் எழுந்தார்.  ‘மக்களே நானும் வெகு காலமாக இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.  நான் கூறுவதை கவனமாகக் கேளுங்கள்’ என்று கூறி தொடர்ந்தார்.

‘முதலாவதாக விலங்குகளாலும், எதிரிகளாலும் நாம் அடிக்கடி துன்பப்படுகிறோம்.  நம்முடைய சந்ததியினர் பெரும்பான்மையாக அழிக்கப்படுகின்றனர்.  இதிலிருந்து நம்மை முதலில் காத்துக் கொள்ள வேண்டும்.  உடல் வலுவுள்ள, மனத்துணிவுள்ள இளைஞர்கள் எதிரிகளை வீழ்த்தவும், விலங்குகளிடமிருந்து தங்களையும், மக்களையும் காப்பாற்றுவதற்கும் தங்களை தயார் செய்ய வேண்டும்.  தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, நம் இனத்தை, மக்களை காக்கக் கூடிய மனோதிடமுள்ள இளைஞர்கள் இப்பணிக்கு முன் வர வேண்டும்’.

‘இரண்டாவதாக, நாம் பெற்ற அனுபவங்கள் நம் சந்ததியினருக்குப் பயன்பட வேண்டும்.  விலங்குகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் தங்களை காத்துக் கொள்ளவும் அவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.  பொறுமையும், அறிவுத்திறனும், சிறந்த அனுபவங்களும் உடைய இளைஞர்களும், முதியவர்களும் இப்பணியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.’

‘மூன்றாவதாக, உணவுக்காக நாம் மிகவும் கஷ்டப்படுகிறோம்.  பழங்கள், கிழங்குகள், காய்கறிகளை உண்டும், விலங்குகளின் மாமிசத்தைப் புசித்தும் வாழ்க்கை நடத்துகிறோம்.  நமக்கு தேவையான தானியங்களை நாம் ஏன் உற்பத்தி செய்யக்கூடாது?  தானியங்களை உற்பத்தி செய்யவும், இங்கே கிடைக்காத பொருட்களை வெளிப் பிரதேசத்திலிருந்து கொண்டு வரவும்  வேண்டும்.  இதற்காக ஒரு குழு தேவை’.

‘நான்காவதாக, இந்த மூன்று வகைக் குழுவினருக்கும் தேவையான பணிகளை செய்ய ஒரு குழு தேவை.  அறிவில் குறைந்தவர்களும், சுயமாக சிந்தித்து செயல்பட முடியாதவர்களும் இந்தக் குழுவில் இடம் பெறலாம்’ என்று கூறி அமர்ந்தார்.  அவரது ஆலோசனைகள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது.  ஆம்! மக்களின் குணங்கள், மன, உடல் தகுதியை அடிப்படையாகக் கொண்டு, நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டனர்.  நான்கு குழுக்களும் ஒற்றுமையுடன் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து வந்தனர்.

சாதிகளின் தோற்றம்

முதல் குழுவினர்  தங்களின் உடல்வன்மையை மென்மேலும் பெருக்கி மக்களை எதிரிகளிடமிருந்து காத்தும், காட்டு விலங்குகளை வேட்டையாடியும் தம் வீரதீரச் செயல்களால் மக்கள் மனதை ஆட்கொண்டனர்.  அவர்களே சத்திரியர்கள் என அழைக்கப்பட்டனர்.  பிற்காலத்தே நாட்டு நிர்வாகத்தையும் ஏற்றுக் கொண்டனர்.

இரண்டாவது குழுவினர் மனித சமுதாய மேம்பாட்டிற்காகத் தங்களை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டனர்.  பிற்கால சந்ததியினருக்குப் பயிற்சியளிப்பது மட்டுமின்றி, மனதையும், உடலையும் வளப்படுத்துவது எப்படி? வலுப்படுத்துவது எப்படி? எனத் தீவிரமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டனர்.

ஒலியினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், காய்கள், கனிகள், மாமிச உணவுகளால் உடலில், மனதில் ஏற்படும் மாறுபாடுகள் போன்றவற்றை தம் உடலிலேயே சோதித்தனர்.    இதனால் பலர் தன்னுயிரை இழந்தனர். (இன்றைய விஞ்ஞானிகள் விலங்குளை உபயோகிக்கின்றனர்.) உண்மையை கையாண்டு, பொறுமையின் உறைவிடமாக  விளங்கினர்.  தன்னுடைய பயிற்சியால் பெற்ற அனுபவத்தை வேதங்களாகத் தொகுத்தனர்.  மக்களும் இவர்களை தெய்வத்திற்கு சமமாகவே மதித்தனர்.  சத்திரியர்களும் பெரும்பாலும் இவர்களின் ஆலோசனையின்படியே செயல்பட்டனர்.  இவர்கள் பிற்காலத்தே பிராமணர்கள் அல்லது அந்தணர்கள் எனப்பட்டனர்.

மூன்றாவது குழுவினர் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை  உற்பத்தி செய்வதிலும், உற்பத்தி செய்ய முடியாத பொருட்களை வெளிப்பிரதேசங்களிலிருந்தும் கொண்டு வந்தனர்.  விவசாயமும், வணிகமும் இவர்களால் பெருகி வளர்ந்தது.  இவர்களே பிற்காலத்தில் வைசியர் எனப்பட்டனர்.

நான்காவது குழுவினர் சுயமாக சிந்தித்து வேலை செய்ய முடியாதவர்கள்.  மற்ற மூன்று குழுவினரும் இட்ட பணியை செவ்வனே செய்து வந்தனர்.  இவர்கள் பிற்காலத்தில் சூத்திரர் எனப்பட்டனர்.  மேற்கூறிய நான்கிலிருந்தும் பிற்காலத்தே பல கிளைச்சாதிகளும் தோன்றின.  ஆம் இளைஞர்களே! நாம் அனைவரும் சகோதரர்களே! தொழிலாலோ, குணத்தாலோ நாம் பிரிக்கப்பட்டிருக்கின்றோமேயொழிய பிறப்பால் அல்ல.

பிரம்மபுத்திரன்

இதை பகிர்ந்து கொள்ளும் போது என் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.  ஒரு நாள், என் நண்பரும் பெளதிக விஞ்ஞானியுமான திரு. பாபுஜி என்னிடம், ‘பிராமணர்கள் தங்களை பிரம்மதேவனின் புத்திரர்கள் என்று பொருள்படும் பிரம்மபுத்திரர்கள் என்று அழைக்கின்றனரே! அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார்.  ‘பிரம்மம் என்றால் இயற்கை என்று பொருள்.  இயற்கை உண்மையானது.  அதைப்போல் உண்மை பேசுபவர்களே பிராமணர்கள்.  அவர்கள் இயற்கைக்குச்  சமமானவர்கள்.  ஆதலால், இயற்கையின் மைந்தர்கள் என்று பொருள்படும் வகையில்  பிரம்மபுத்திரர்கள் என்று கூறப்படுகின்றனர்.  மேலும், இந்து மதம் ஒரு பிராமணனைத் துன்புறுத்தவதையே மிகப்பெரிய பாவமாகக் கருதுகிறது.  காரணம், உண்மையே பேசுகின்ற  பிராமணன் சபித்தால், அது அப்படியே நிகழ்கிறது.  ஒரு நிகழ்ச்சி மூலம் இதை விளக்க விரும்புகிறேன்.  சில வருடங்களுக்கு முன் சான்பிரான்ஸிஸ்கோ நகரின் நீதிமன்றமொன்றில் நடந்த நிகழ்ச்சி.  கடும் மழை காரணமாக வக்கீல்கள் தொடர்ந்து நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.  நீதிபதி கோபப்பட்டார்.  விளைவு, தான் தீர்ப்பு எழுதம் தாளில், ‘மழை உடனடியாக நிற்கட்டும்‘ என்று எழுதினார்.  உடனடியாக மழை பெய்வது நின்றது.  பல வருடங்களாக மழையில்லாது மக்கள் தண்ணீரும் கிடைக்காது தடுமாறினர்.  இறுதியில் காரணம் தெரிந்த போது மக்கள் வக்கீல்களுடன் நீதிபதியை சந்தித்து அவர்கள் தவறுக்காக மன்னிப்பு கோரினர்.  நீதிபதி உடனே, ‘மக்கள் மிகவும்  கஷ்டப்படுகின்றனர்.  மழை உடனே பெய்யட்டும்‘ என   எழுதினார்.  கரிய மேகங்கள் திரண்டன.  மழை பொழிந்தது.  மக்கள் மகிழ்ந்தனர்.  காரணம், நீதிபதி நேர்மையின் உறைவிடம்.  பல வருடங்களாக அவர் எழுதிய தீர்ப்புகள் அனைத்தும்  உண்மையானது.  ஆதலால், அவர் எழுதிய அனைத்தும்  உண்மையாகிவிட்டது.  இதுவே இயற்கையின்  நியதி. இதைப்போலவே ஒருவன் பல வருடங்கள் தொடர்ந்து உண்மை பேசினால், அவன் பேசுவதெல்லாம் உண்மையாகிவிடும்.  ஆம்.  பிராமணன் உண்மையே வடிவமானவன்.  அவன் கூறியபடியே நடக்கும்.  இது உண்மை பேசும் பயிற்சியாலேயோழியப் பிறப்பால் அல்ல.  இன்று எத்தனை பேர் உண்மை பேசுகின்றனர் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.  நானும் பல வருடங்களாக உண்மை பேசுபவர்களைத் தேடிக் கொண்டுதானிருக்கிறேன்.  இன்னும் என்னால் காணமுடியவில்லை’ என்று கூறினேன்.  சத்திரிய அரசனான விசுவாமித்திரர் தன்னுடைய பயிற்சியால் இராஜரிஷி பட்டம் பெற்றது உங்களுக்குத் தெரியுமே!  ஆம்.  சாதிகள் குணத்தையும், தொழிலையும் மையமாக கொண்டு தான் உருவாயின.  பிறப்பால் அல்ல.  அன்பு தமிழ் நெஞ்சங்களே! இதன் தொடர்ச்சியை இன்னும் ஆதாரங்களுடன் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.  நன்றி. வணக்கம்.  மீண்டும் சந்திப்போம்.