கையில் என்ன கட்டு?

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

ஒரு ஞாயிற்றுக் கிழமை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.  கதவு மெல்லத் திறந்தது.  ஒரு புத்திசாலி சிறுவன் தலையை நீட்டினான்.  எனது கல்வி நிலையத்திற்கு அவன் அடிக்கடி வருவதுண்டு.  அவன் கையில் கட்டு போடப்பட்டிருந்தது.  அவன் கையை கவனித்த மாணவி ஒருத்தி, ‘கையில் என்ன கட்டு?’ என்று என்னை விளித்தாள்.

நானோ, ‘அவனைக் கேட்டால், ‘வேகமாக சறுக்கி கீழே விழப்போன ஒருவன் என் மீது விழுந்ததால் நான் அவனைக் காப்பாற்றிவிட்டேன்.  நான் தியாகியானேன்.  அவன் என் மீது விழுந்த வேகத்தில் நான் கீழே விழுந்து கையில் கீறல் விழுந்துவிட்டது’ என்பான்.  ஆனால் நான் அவனிடம் என்ன சொன்னேன் தெரியுமா?  ‘பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை அதிகரிக்கும் வழியைப் பார்‘ என்றேன்.  ‘எல்லாமே பாவ புண்ணிய விளையாட்டுத்தான்’ என்று கூறினேன்’ என்றேன்.

ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.  கவனமாகக் கேளுங்கள்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் ஒரு பகுதியான பாண்டி நாடு மிகவும் செழிப்புற்று விளங்கியது.  ஒரு பிராமணர் பிழைப்புக்காக தனது கர்ப்பிணி மனைவியுடன் பாண்டி நாட்டை அடைந்தார்.  நடந்த களைப்பு.  மனைவிக்கோ கடுமையான தாகம்.  மனைவியை ஒரு ஆலமர நிழலில் இளைப்பாறச் செய்து தண்ணீர் கொண்டுவரச் சென்றார்.  

அவர் திரும்பி வந்த போது அவரது கர்ப்பிணி மனைவி அம்பு பாய்ந்து இறந்து கிடந்தாள்.  சுற்றுமுற்றும் பார்த்தார்.  யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை.  சிறிது நடந்தபோது ஆலமரத்தின் அடுத்த பக்கத்தில் ஒரு வேடன் கையில் வில், அம்புடன் இளைப்பாறிக் கொண்டிருக்கக் கண்டார்.  அவனிடம், ‘நீதானே என் மனைவியைக் கொன்றாய்?’ என்று வினவ, அவனோ மறுத்தான்.

‘பாண்டியன் மீது ஆணை, பாண்டிய மன்னனிடம் செல்வோம்’ என்று அழைத்துச் சென்றார்.  பாண்டிய மன்னன் நீதி நெறியின்படி நடப்பவன்.  நடு நிலைமையுடன் செயல்படுபவன்.  அவன் எவ்வளவோ விசாரித்தும் வேடன், தான் அவளைக் கொல்லவில்லை, மற்றும் ‘கர்ப்பிணி மீது தைத்திருந்தது எனது அம்புமில்லை’ என்று சாதித்தான்.  கொலைக்கு எந்தவித சாட்சிகளும் இல்லை.  காவலர்களிடம், ‘தீர விசாரித்து முடிவு செய்வோம்.  அதுவரை வேடன் சிறையில் இருக்கட்டும்.  அந்தணரை நம் விருந்தினராக தங்கச் செய்யுங்கள்’ என்று கூறினான்.

மன்னன் தீவிரமான சிவபக்தன்.  சிவனை தீவிரமாக தியானித்தான்.  சிவன் மன்னன் கனவில் தோன்றி, ‘மன்னா! உண்மை தெரியவேண்டுமாயின் மாறு வேடத்தில் சூரியன் அடையும் நேரத்தில் நான் கூறுமிடத்தில் நடக்கும் திருமணத்திற்குச் செல்.  அமைச்சரையும், அந்தணரையும் கூட அழைத்துச் சென்று பின் வரிசையில் அமர்ந்து கொள்ளுங்கள்.  பின்னர் எல்லாம் உனக்கு புரியவரும்’ என்றார்.

மன்னன், மந்திரி மற்றும் அந்தணர் மூவரும் மாறு வேடத்தில் இருள் கவியும் நேரத்தில் திருமண வீட்டிற்குச் சென்றனர்.  திருமண சடங்குகளை கவனித்தனர்.  அப்போது பின்னால் இருளிலிருந்து சிலர் பேசும் குரல்கள் கேட்டன.

ஒருவர், ‘அந்த கல்யாண மாப்பிள்ளையைக் கொன்று விடலாமா?’ என்று கேட்க மற்றவரோ, ‘எப்படி?’ என்றார்.

‘அன்று ஆலமர இலையில் தைத்திருந்த அம்பை காற்றினால் விழச் செய்து பிராமணர் மனைவியைக் கொன்று, வேடன் மீது பழியை சுமத்தச் செய்தோமே அதைப் போல் மேள சத்தத்தால் மாட்டை மிரளச் செய்து கொம்பினால் மாப்பிள்ளையைக் குத்தச் செய்வோம்’ என்றார்.

இதை கேட்ட பாண்டிய அரசன் பிராமணரிடம், ‘உண்மையைப் புரிந்து கொண்டீரா? கிளம்புவோமா?’ என்று கேட்க, பிராமணரோ, ‘கல்யாண மாப்பிள்ளையை, மாடு கொம்பினால் குத்தினால்தான் நம்புவேன்’ என்றார்.  சிறிது நேரத்தில் அந்த அசம்பாவிதமும் நடந்தது.  மூவரும் அரண்மனையை அடைந்தனர்.  மன்னன் வேடனிடம் மன்னிப்பு கேட்டு, அவனுக்கு பெரும் பொருளை பரிசாகக் கொடுத்து விடுவித்தான். அந்தணருக்குத் தேவையானவற்றை கொடுத்து அனுப்பி வைத்தான்.  இந்நிகழ்வுகள் திருவிளையாடல் புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  புரிந்ததா மாணவர்களே! மனிதன் தன் முன்வினைப் பயனை அனுபவித்தேயாக வேண்டும்.  நடப்பதெல்லாம் பாவ, புண்ணிய விளையாட்டுக்களே! ஆதலால் பாவத்தை குறைத்து புண்ணியத்தை அதிகரிக்கும் செயல்களையே நீங்கள் செய்ய வேண்டும்.  நேர்மையான வழியில் செயல்பட்டால் புண்ணியம் பெருகும்.  நல்லவர்களுக்கு கீழ்படிந்து நடந்தால் புண்ணியம் பெருகும்.  நிம்மதி அதிகரிக்கும்.

மனிதனால் செயல்களின் விளைவுகளை முன்னால் ஏற்றுக் கொள்ளவோ அல்லது தாமதப்படுத்தவோதான் முடியும்.  செயல்களின் விளைவுகளிலிருந்து மனிதன் தப்பிக்க முடியாது.  ஒன்று அவன் அனுபவிக்க வேண்டும் அல்லது அவனுக்கு பதில் அவன் குருவோ அல்லது இறைவனோ அனுபவிக்க வேண்டும்.  இவற்றைப் பற்றி விளக்கமாக காலம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.

‘எனது வாழ்க்கையில் நடந்த அனுவங்களிலொன்றைக் கூறுகிறேன்.  கவனமாகக் கேளுங்கள்.  1997 – 98ம் கல்வியாண்டு.  பொறியியல், மருத்துவம், வேளாண்மை கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடலானேன்.  பல வித தடைகள்.  அதை மீறி செயல்பட்டேன்.  மார்ச் 8 (1998) எனக்கொரு விபத்து ஏற்பட்டது.  சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.  இரண்டு மாதம் ஓய்வெடுக்கச் சொன்னர்கள்.  குறுகிய கால வகுப்புகள்.  சிறப்பாக நடத்த வேண்டும்.  என்ன செய்வதென்று புரியவில்லை.  ‘பிற்காலத்தில் வேண்டுமானால் கையை எடுத்துக் கொள்ளலாம்.  இப்போது பாதிப்பிலிருந்து மீள வேண்டும்’ என்று இறைவனை ஆழ்ந்து தியானித்தேன்.  இரண்டு நாட்கள் பல மணிநேரம் தியானித்தேன்.  இறைவன் எனது குரலுக்கு செவி சாய்தான். இரண்டு நாட்களில் அதிசயம் நடந்தது.  கை பெரும்பாலும் குணமாகிவிட்டது.  பயிற்சி வகுப்புகளை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தோம்.  அன்றைய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களில் ஒரு பெண்ணைத் தவிர அனைவரும் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.  ஒரு பெண் மட்டும் விருப்பத்துடன் கணிதப் பாடத்தில் பட்டதாரியாகி பின்னர் நிர்வாகவியலில் முதுகலை பட்டதாரியானார்.  எனது கல்வி நிலையத்தில் சில வருடங்கள் சேவை செய்தார்.  அந்த  வகுப்பில் கலந்து கொண்ட மாணவி ஒருத்தி மருத்துவத்தில் பட்டமேற்படிப்பை மிகச் சிறப்பாக முடித்து தங்கப்பதக்கம் வென்றார்.  இன்று சென்னை ஆழ்வார்திருநகருக்கு அருகில் மருத்துவமனைகள் ஆரம்பித்து மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார்.  ஆனால் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளில் நான் சம்பாதித்த பணம் எனக்கு பெரும் தொல்லைகளை கொடுத்தது.  கிட்டதட்ட 20 வருடங்கள் கடந்த பின் 2018ம் வருடம் ஜனவரி மாதம் ஒரு விபத்தில் எனது இடது கை கிட்டத்தட்ட அதே போன்று பாதிக்கப்பட்டது.  உடன் எனக்கு பழைய நினைவுகள்.  முன்பு வலதுகை, இப்போது இடது கை அதுமட்டுமே வித்தியாசம்.  ஆம் செயல்களின் விளைவுகளை இறைவன் ஒத்துழைப்பால் 20 வருடங்கள் தாமதப்படுத்தினேன்.  இப்படி மனிதன் தன் செயல்களின் விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும்.  மனிதனால் செயல்களின் விளைவுகளை தாமதப்படுத்தவோ அல்லது முன்பே ஏற்றுக் கொள்ளவோ தான் முடியும்.  எல்லாம் பாவ புண்ணிய விளையாட்டுகள் தான்.  ஆதலால் மாணவர்களே! நீங்கள் உங்கள் பாடங்களைத் திறம்பட படிப்பது மட்டுமின்றி, பாவத்தை குறைத்து, புண்ணித்தை அதிகரிக்கும் செயல்களையும் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டும்’ என்றேன்.  ‘புண்ணியத்தை அதிகரித்து பாவத்தை குறைக்கும் போது உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு கேடயம் உருவாகிறது.  இது உங்களை பல வித விபத்துக்களிலிருந்தும் பாதுகாக்கும்.  நான் ஏற்கனவே இதை உணர்ந்திருக்கிறேன்’ என்றேன்.  ஆம், அன்பு நெஞ்சங்களே! உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள்.  தொற்று நோயிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.  பாவத்தைக் குறைத்து, புண்ணியத்தை அதிகரியுங்கள்.  விபத்துக்களிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.  இப்போது பாவ, புண்ணியத்தைப் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவல் என்று நினைக்கிறேன்.  கூடியவிரைவில் அதைப் பற்றி விளக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.  வாழ்க வளமுடன்.  நன்றி!  வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.