உள்ளேயும் குப்பை, வெளியேயும் குப்பை!

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

ஒரு நாள் முன் மாலைப் பொழுது. எனது உதவியாளர் திரு. விக்னேஷ் அவர்களுடன் இறகுப் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன்.  வளசரவாக்கத்தின் ஒரு பகுதியான பழனியப்பா நகரின்  பூங்கா அருகில் சோலைபோல் மரங்கள்  அடர்ந்த பகுதி.  கொளுத்தும் வெயிலிலும் நிழல் படர்ந்து குளுமையாக இருக்கும். அரசு, வேம்பு, பாதாம் மற்றும் பல மரங்கள் அருகிலுள்ள மூன்று, நான்கு மாடி கட்டிடங்களை எப்படியாவது மிஞ்சிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் வளர்ந்து கொண்டிருந்தன.  திரும்பிய இடங்களெல்லாம் பச்சைப்பசேலென்றிருந்தது.

ஒரு பெண் கையில் ஒரு நெகிழிப் பையில் குப்பையை அருகிலுள்ள மரத்தடியில் வீசினார்.  நான் எனது உதவியாளரிடம்  ‘உள்ளேயும் குப்பை, வெளியேயும் குப்பை’ என்று கூறிச் சிரித்தேன்.  அறிவியல் வளரவளர குப்பைகளும் அதிகரித்து விட்டன.  வெளிக்குப்பைகள் முன் காலத்தில் அனைத்தும் மக்கிவிடும் தன்மை உடையது.  அவை மக்கி உரமாகப் பயன்பட்டன.  ஆனால் இப்போதுள்ள குப்பைகள் நிலம், நீர், ஆகாயத்தை பாழடித்துக் கொண்டிருக்கின்றன.  அறிவியல் வளர்ச்சி புறக்குப்பைகளை அதிகப்படுத்தி மனிதனுடைய ஆரோக்கியத்தை பாதிக்கிறது.  இப்படியே போனால் பூமி மனிதகுலம் வாழத் தகுதியற்றதாகிவிடும். புறக்குப்பைகளான தூசி, புகை போன்றவைதான் இன்று உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனாவிற்கு மூல காரணங்கள். ஏனெனில் தூசியாலும், புகையாலும் இன்று அனைவருடைய நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது.  ஆதலால் கொரோனா போன்ற நுண்ணுயிரிகளிடமிருந்து நிரந்தரமாக விடுபட வேண்டுமென்றால் முதலில் நாம் தவிர்க்க வேண்டியது தூசியையும் புகையையுமே. அடுத்தது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

மாணவர்களிடம் சில வேளைகளில், ‘உங்கள் மூளைதான் உலகின் பெரிய குப்பைத் தொட்டி‘ என்பேன்.  இங்கே குப்பை என்பது தேவையற்ற எண்ணங்கள். ஆம், கெட்ட எண்ணங்கள்.  அறிவியல் வளர, வளர இந்தக் குப்பைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.  தொலைக்காட்சி, இணையம், வலைதளம் போன்றவை கெட்ட எண்ணங்களை விதைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை மனக்குழப்பத்திற்க்கும், மனச்சிதைவுக்கும் காரணமாக அமைகின்றன. ஏனெனில் மனக்குழப்பத்திற்குக் காரணம் எண்ணங்களின் மோதல் தானே!

ஒரு நாள் எனது மாணவர்கள் இருவர் (ஈஸ்வர் மற்றும் யோகித்) தேர்வு நேரத்தில் எனது கல்வி நிலையத்தில் படித்துக் கொண்டிருந்தனர்.  மாதுளை ஒன்றை நான்காகப் பிரித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி கொடுத்தேன்.  ‘நீங்களே எடுத்துச் சாப்பிடுங்கள்’ என்றேன். பழத்தைச் சாப்பிட்டுவிட்டு பழத்தின் கழிவுகளுடன் எழுந்தார் யோகித்.  நானோ, ‘குப்பையை குப்பையில் போடு’ என்று கூறி அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.  

‘என்ன புரிந்ததா?’ என்றேன் புன்னகையுடன்.

‘புரிந்தது’ என்று கூறி அவரும் புன்னகைத்தார்.

‘என்ன புரிந்தது? சொல்வாய்’ என்றேன் மீண்டும்.

‘மாதுளை கழிவுகளை வெளியே குப்பை கூடையில் போட வேண்டும்.  மனதின் குப்பைகளை…’ என்று கூறிப் புன்னகைத்தார்.

‘பரவாயில்லை! புரிந்து கொண்டாயே’ என்று நானும் புன்னகைத்தேன்.

ஆம், மனதின் கெட்ட எண்ணப் பதிவுகள் நம்மைத் தவறாக வழிநடத்துகின்றன.  மனக்குப்பைகளின் வகைகளைப் பற்றியும், அவற்றிலிருந்து எப்படி வெளிவருவது என்பதைப் பற்றியும் சற்றே அலசுவோம்.

மனக்குப்பைகள் மூன்று வகை 1. புறமனதில் உள்ள குப்பை 2. ஆழ்மனக்குப்பை 3. உள்மனக்குப்பை.  இன்று நடக்கும் வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள், கொலை, தற்கொலை, மணமுறிவு மற்றும் பல பிரச்சனைகளுக்கு இந்த குப்பைகள்தான் மூல காரணம்.

புறமனக்குப்பைகள் தற்போதைய புறச்சூழல்களால் மனதில் பதியப்படும் கெட்ட எண்ணங்களாகும்.  ஆழ் மனக்குப்பைகள் அம்மாவின் வயிற்றில் கருவாக இருந்த காலந்தொட்டு இப்போது வரை பதியப்பட்ட கெட்ட எண்ணங்கள்.  உள் மனக் குப்பை என்பது முற்பிறவிகளில் பதிவான கெட்ட எண்ணங்கள்.  முற்பிறவியின் பதிவுகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிய விரும்பினால் அமெிக்க மனோவசிய மருத்துவரான டாக்டர் Brian Weiss எழுதிய முற்பிறவி சம்பந்தப்பட்ட நூல்களை வாசியுங்கள்.  ‘எந்தக் குழந்தையும் நல்லக்குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே‘ என்று ஒரு கவிஞர் பாடினார்.  அந்த வரிகள் தவறானவை.  ஏனென்றால் மனிதன் பிறக்கும் போதே முற்பிறவிகளின் நல்லெண்ணங்களையும், கெட்ட எண்ணங்களையும் சுமந்து வருகிறான். ஆதலால் பிறக்கும் போதே எல்லா குழந்தைகளுமே நல்ல குழந்தைகள்தான் என்று உறுதியாகக் கூற முடியாது.  

இந்த மேற்கூறிய மூன்று வித  குப்பைகளால் ஒரு மனிதன் கெட்ட செயல்களைச் செய்ய உந்தப்படுகிறான்.  மனதில் விதைக்கப்பட்ட நல்ல எண்ணங்களால் நல்லதைச் செய்ய உந்தப்படுகிறான்.  இந்த மனப் போராட்டங்கள்  எல்லோர் மனதிலும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும்.  இதில் எந்த எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்துமோ அந்த செயல்களைச் செய்கிறான்.  நம்மைச் சுற்றி கெட்டவர்கள் அதிகமாகும் போது கெட்ட எண்ணங்கள் அதிகம் தூண்டப்படுகின்றன. நல்லவர்கள் அதிகமாகும் போது நல்லெண்ணங்கள் அதிகம் தூண்டப்படுகின்றன.  ஆம், நாம் யார் மத்தியில் வசிக்கிறோமோ அவர்களின் எண்ணத்தால் தாக்கப்படுகிறோம். அதனாலேயே வள்ளுவன்,

நிலத்தியல்பான் நீர் திரிந்தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்பதாகும் அறிவு

என்று கூறினான். 

மனக்குப்பையிலிருந்து தப்பிப்பது எப்படி? என்பதைப் பற்றி சிறிது அலசுவோம்.

1. ஆழ்ந்த தியானத்தின் மூலம் கெட்ட எண்ணங்களை வெளியேற்ற முடியும்.  அது அவ்வளவு சுலபமானதல்ல.  மிகவும் கடினமானது.  தவசிகளும், ஞானிகளுமே இக்குப்பையை எளிதில் வெளியேற்ற முடியாது கஷ்டப்படுகின்றனர்.  சாதாரண மனிதர்களுக்கு இது முடியாது.

2. சிறந்த மனோவசிய (hypnotist) நிபுணரால் ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கெட்ட  எண்ணப் பதிவுகளை நீக்க முடியும்.  அதற்கு மிகவும் செலவாகும்.  அப்படிப்பட்ட திறமையான, நல்ல நிபுணரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.  மனநல நிபுணர் நல்லவரில்லை என்றல் இச்சிகிச்சை மிகவும் ஆபத்தானது. கொஞ்ச கொஞ்சமாக அவருக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

3. கெட்ட எண்ணங்களை நல்ல எண்ணங்களைக் கொண்டும், புண்ணியச் செயல்களாலும், சமூகச் சேவையினாலும் வலிமை இழக்கச் செய்ய வேண்டும். பாவச் செயல்களைத் தவிர்க்க வேண்டும். இப்போது புண்ணியச் செயல்கள் பாவச் செயல்கள் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எச்செயல்கள் உங்களுக்கோ, சமுதாயத்திற்கோ, நாட்டிற்கோ இயற்கைக்கோ தொல்லை கொடுக்கிறதோ அவை எல்லாம் பாவச் செயல்கள். எவை நன்மை பயக்கிறதோ அவை புண்ணியச் செயல்கள். இவற்றை அனைவராலும் செயல்படுத்த முடியும்.  நம்பகமானதும் கூட.  இதை எப்படிச் செயல்படுத்துவது? அதைப் பற்றி தெரிந்து கொள்ள நமது வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மனக்குழப்பங்களுக்கான காரணங்களும், தீர்வுகளும் – பாகம் – 3 என்ற பதிவின் மூன்றாம் பாகத்தை உள்வாங்குங்கள்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.