நான் கடவுளைக் கண்டால்…

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

அன்பு நெஞ்சங்களுக்கு இந்த இனிய நாளில் உங்கள் கிருஷ்ணதாசனின் அன்பான வணக்கங்கள். சில வருடங்களுக்கு முன் எனது பெண் படித்த பள்ளியில் ‘நான் கடவுளைக் கண்டால்’ என்ற தலையங்கத்தைக் கொடுத்தார்கள். எனது கட்டுரை பள்ளியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது. அந்த தலைப்பில் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் கடவுளைக் கண்டால், ‘இறைவா! மக்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்?’ என்று கேட்பேனா? ‘உண் படைப்பில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வுகள்?’ என்று கேட்பேனா? ‘கொலை, கொள்ளை, குண்டுவெடிப்புகள், விபத்துகள். ஏன் இந்த அவலங்கள்?’ என்று கேட்பேனா? ‘தற்கொலை, மணமுறிவு, மனச்சிதைவுகள் ஏன் நிகழ்கின்றன’ என்று கேட்பேனா? ‘பலவிதமான நோய்கள், ஒழுக்கச் சீர்கேடுகள். இவற்றைப் போக்குவது எப்படி?’ என்று கேட்பேனா? என்ன கேட்பேன்? என்ன கேட்பேன்?

ஒரு நிகழ்வு என் மனக்கண் முன் தோன்றுகிறது. ஒரு நாள் முருகன் ஒளவையிடம், ‘உயர்ந்தது எது? தாழ்ந்தது எது? சிறியது எது? பெரியது எது?’ என்று பல கேள்விகளைக் கேட்டான். ஒளவையும் பதில் சொன்னாள். ‘பாட்டி! பாட்டி! உலகத்திலேயே அரியது எது?’ என்று கேட்டான்.

ஒளவை முருகனிடம், ‘உலகத்தில் பல வகையான உயிர்கள் உள்ளன. புல், பூண்டு, ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன இன்னும் எத்தனையோ. இவற்றுள் மனிதனாகப் பிறப்பது மிகவும் அரிதாகும்.

‘மனிதர்களுள்ளும் உடல் ஊனமுற்றோர் பலர். கூன், குருடு, செவிடு, பேடு போன்ற உடல் குறையில்லாது பிறப்பது இன்னும் அரிதாகும்.’ 

‘உடல் ஊனமின்றி பிறந்தாலும் கல்வியும், ஞானமும் பெறுவது அதை விட அரிதாகும். கல்வியும், ஞானமும் பெற்றிருந்தாலும் தானமும் தவமும் செய்வது மிக மிக அரிதாகும்’ என்று கூறினாள்.

தவமென்றால் என்ன? புலனடக்கமே தவம். உண்மையே தவம். நேர்மையான வாழ்க்கையே தவம். புறங்கூறாமையே தவம். நாவடக்கமே தவம். சுருக்கக் கூறின் சுயக் கட்டுப்பாடே தவமாகும்.

தானமென்றால் என்ன? நாம் இந்நிலைக்கு உயர்வதற்கு பலர் காரணம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், சுற்றத்தினர், நண்பர்கள் இன்னும் பலர். அவர்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்தலே தானமாகும். நம் நாட்டின், ஏன் உலகின் தேவையைப் பூர்த்தி செய்தலும் தானமாகும், இவை மட்டுமல்ல. இறைவன் படைப்பில் ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு காரணமுன்டு. இன்றைய அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமே இயற்கைச் சமநிலை சிதைவதுதான்

புறச் சமநிலை மரங்களை அழிப்பதாலும், மலைகளை உடைப்பதாலும், நீர்வழிகளை சிதைப்பதாலும், சுற்றுச் சூழல் மாசுபடுவதாலும் சிதைகிறது. பெரும்பான்மையான இயற்கைச் சீற்றத்திற்கும், பேரழிவிற்கும் இதுவே காரணமாகும். உதாரணமாக சில வருடங்களுக்கு முன் இமயமலையின் கேதார்நாத்தில் நடந்த கடுமையான அழிவிற்கும், சென்னையின் பெருவெள்ளத்தின் சீற்றத்திற்கும், கேரளாவில் நடந்த பேரழிவிற்கும் இதுவே மூல காரணமாகும்.

இறைவன் எல்லாவற்றையும் சமப்படுத்தவே விரும்புகிறான். ஒவ்வொரு தொழிலிலும் நல்லவர்களும் வல்லவர்களும் தேவை. நமக்கு விதிக்கப்பட்டுள்ள தொழிலை விட்டு விருப்பாலோ? அல்லது வெறுப்பாலோ வேறு தொழிலுக்குச் செல்லும்போது அகச்சமநிலை சிதைகிறது. அதனால் மனப்பாதிப்புகள் ஏற்படுகின்றன. இன்று நடக்கும் கொலை கொள்ளை, விபத்துக்கள், தற்கொலை, மணமுறிவு, பாலியல் பலாத்காரங்கள் போன்றவை அகச்சமநிலை பாதிக்கப்படுவதால்தான் நடைபெறுகின்றன. இயற்கை தகுந்தவர்களை கருவியாக உபயோகித்து இதனைச் செய்கிறது.

உதாரணமாக, சில வருடங்களுக்கு முன் டெல்லியை உலுக்கிய பேருந்து பாலியல் பலாத்காரம், தமிழ்நாட்டில் விநோதினி மீது திராவக வீச்சு, காஞ்சிபுரத்தில்  தேர்வில் தோல்வியடைந்த இரு மருத்துவ மாணவர்கள் தேர்ச்சிக்கு தேவையான மதிப்பெண்கள் கொடுப்பதற்காக பேராசிரியருக்கு இலஞ்சம் கொடுப்பதற்காக திருடி சிறையிலடைக்கப்பட்ட சம்பவம், கணிப்பொறி வல்லுநர் உமா மகேஸ்வரி கொல்லப்பட்ட சம்பவங்களைச் சொல்லலாம். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்ததற்கும் இதுவே காரணம். மிகவும் நுண்மையாக ஆராய்ந்தால் மேற்கூறிய அனைவருக்குமே அவர்கள் தேர்ந்தெடுத்த துறை உகந்ததல்ல என்பது புலப்படும்.

நாம் அனைவரும் அறிந்த இன்னொருவரைப் பற்றி ஏழுதினால் அனைவருக்கும் நன்கு புரியும் என்று நினைக்கிறேன். பகவான் அரவிந்தரை அனைவருக்கும் தெரியம். ஆன்மீகப் பெருங்கடலில் மூழ்கி மக்களை உய்வித்தார் அரவிந்தர். மிகச்சிறந்த ஆத்மஞானி பகவான் அரவிந்தர். மிகஇளம் வயதில் அவரது தந்தை ICS (Indian Civil Service) படிப்பிற்காக இங்கிலாந்து அனுப்பினார். ஆங்கிலேய இந்தியாவில் அரசு அதிகாரிகளுக்கான மிக உயர்ந்த பதவி ICS. பதினான்கு வருடங்கள் கல்வி பயின்ற அவர் இறுதித் தேர்வுக்கு முந்தைய நாள் ஏற்பட்ட மனக்குழப்பத்தால் தேர்வில பங்கு பெற மறுத்தார். தந்தை அவரை நாட்டுக்கு திரும்புமாறு அழைத்தார். அவர் பயணச்சீட்டு பதிவு செய்த கப்பல் புயலின் சீற்றத்தால் கடலில் மூழ்சி அனைவரும் இறந்தனர். இதை வானொலி மூலம் அறிந்த அவர் தந்தை மகன் இறந்துவிட்டான் எனக் கருதி மாரடைப்பால் இறந்தார்.

ஆனால் இறைவனின் கருணையால் கப்பல் கிளம்பிய பிறகே அரவிந்தரால் துறைமுகம் சென்றடைய முடிந்தது. அடுத்த கப்பலில் இந்தியா திரும்பினார். தந்தை இறந்த செய்தி அவரை வாட்டியது. செல்வச் செழிப்பான குடும்பம் வறுமை நிலையை அடைந்தது. பரோடா சமஸ்தானத்தில் சில காலம் பணி செய்த அவர், விடுதலை வீரர் சித்தரஞ்சன்தாஸ் அவர்களின் உதவியால் கல்லூரிப் பேராசிரியரானார். அவரது எழுத்தாலும், பேச்சாலும் சுதந்திர உணர்ச்சியை ஊட்டினார். ஆங்கிலேய அரசு அச்சமுற்றது. அவர் வெளியில் இருந்தால் பேராபத்து என்று கருதியது.

அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் அரவிந்தருக்கு தொடர்பில்லை. ஆனால் அவரை குற்றஞ்சாட்டி சிறையிலடைத்தது. சிறையில் அரவிந்தர் தீவிரமாகச் சிந்தித்தார். ‘நானும் ஏற்றுக் கொண்டுதான் படிக்கச் சென்றேன். பலவருடங்கள் படித்தும் மனக்குழப்பத்தால் நாடு திரும்பினேன். இப்போது வெடிகுண்டு வழக்கில் எனக்குத் தொடர்பில்லை. ஆனால், நான் சிறையிலடைக்கப்பட்டுள்ளேன். ஏன்? ஏன்?’ எனச் சிந்தித்தார். தீவிரமாகத் தியானித்தார். இந்த காலகட்டத்தில் அவருக்கு மிருணாளினி என்ற அழகிய பெண்ணுடன் திருமணம் நடந்தேறியது.

ஒரு நாள் திரும்பிய இடமெல்லாம் கிருஷ்ணனைக் கண்டார். சர்வமும் கிருஷ்ணமயம். அப்போதுதான் இப்பிறவியின் நோக்கம் ஆன்மீகப் பணியே. அதைவிட்டு விலகியதால் இறைவன் ஆங்கில அரசு மூலம் தவறு செய்யாத நம்மைத் தண்டித்தான் என உணர்ந்தார். இனி ஆன்மீகப் பணியில்தான் ஈடுபடுவேன் என்று முடிவு செய்தார். நீதிபதி அரவிந்தர் மீது தவறில்லை என்று கூறி அவரை விடுவித்தார். பின்னர் பாண்டிச்சேரி வந்து தியானத்திலாழ்ந்தார். தனது அன்பு மனைவிக்கு, தன்னை மன்னித்து, மறந்துவிடுமாறு நீண்ட கடிதம் எழுதினார். பத்திரிக்கையிலும், ‘நான் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டுள்ளேன். இனி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடப்போவதில்லை. ஆதலால் ஆங்கில அரசு என்னைத் தேட வேண்டாம். கைது செய்ய முனைய வேண்டாம்’ என்ற தொனியில் வேண்டுகோள் விடுத்தார்.

இதே காலகட்டத்தில் பிரான்ஸ் தேசத்தில் மிர்ரா என்ற சிறுமிக்கு அடிக்கடி கனவு. கனவில் கிருஷ்ணன் வந்தான். இந்து மதம் சம்பந்தமுடைய ஒரு சின்னம் மற்றும் இன்னொருவரும் அடிக்கடி வந்தனர். காரணம் தெரியாமல் தவித்தாள் சிறுமி. வளர்ந்து பெரியவளானாள். ரிச்சர்ட் என்ற பத்திரிக்கையாளரை மணந்தாள்.

கணவருடன் பல நாடுகளுக்கு பயணம் செய்தாள். பாண்டிச்சேரி அந்த நாளில் பிரான்ஸ் தேசத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. தம்பதிகள் அங்கும் சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றி இரசித்துவிட்டு அரவிந்தர் தியானம் செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். அவரது முகத்தைப் பார்த்ததும் மிர்ராவுக்கு இன்ப அதிர்ச்சி. ஏனெனில் அடிக்கடி கனவில் கிருஷ்ணனுடன் தோன்றியது இவர்தான் என்றுணர்ந்தாள். மறுபடியும் பிரான்ஸ் சென்று திரும்பியதும் அர்விந்தருடன் சேர்ந்து தியான வாழ்க்கையில் ஈடுபட்டார். அரவிந்தருக்குப் பின் ஆசிரமத்து தலைவியானார். அதன் பின்னர் நடந்ததை நாடறியும். 

ஆம் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் கேட்டால், ‘மக்கள் என் சமநிலையை சிதைக்கிறார்கள். நான் அவர்களை சிதைக்கிறேன்’ என்ற பதில் இறைவனிடமிருந்து வருகிறது. ஆகவே, இறைச்சமநிலையை (அதாவது அகச்சமநிலை மற்றும் புறச்சமநிலைகளை) பேணிக்காப்பது, அதற்காகச் செயல்படுவது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆம் அதுவே மிகவுயர்ந்த தானமாகும். சேவையாகும்.
ஆம்! அன்பு நெஞ்சங்களே! நாம் நம் கடமைகளை ஒழுங்காகச் செய்தால் கடவுளிடம் கேட்கவேண்டியது எதுவுமே இல்லை. கடவுள் நம்மிடையே வந்துவிடுவார் அல்லது கடவுளையே அடைந்துவிடலாம். ஆகவே, நாம் கடவுளைக் கண்டால், ‘இறைவா! மக்கள் தம் கடமைகளைச் செவ்வனே செய்வதற்குத் தேவையான உடல் வலிமையையும், மனவலிமையையும் நற்குணங்களையும் அருள்வாய்’ என்று கேட்டால் போதுமானதன்றோ! நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.